வான்கா - Page 14
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
மெந்தெஸ்ஸைப் பார்க்கிறபோது இயேசு கிறிஸ்துவின் ஓவியம்தான் அவனுக்கு ஞாபகத்தில் வரும். உண்மையான யூதன் இப்படித்தான் இருப்பான் என்று எண்ணினான் வின்சென்ட். ஆழமான, எதையோ தேடிக் கொண்டிருக்கிற கண்கள், சாந்தமான முக பாவம், பிரகாசமான முகம், பழைய கால ரப்பிகளிடம் இருப்பது மாதிரியான கூர்மையான தாடி – இதுதான் மெந்தெஸ்.
ஒடுங்கிப் போன, காற்று சரிவர இல்லாத ஒரு இடத்தில் அமர்ந்து ஏழு மணி நேரம் லத்தீனையும், கிரேக்க மொழியையும், டச் வரலாறையும், இலக்கணத்தையும் தலைக்குள் கொண்டு போவது என்றால் சாதாரண சமாச்சாரமா என்ன? இது முடிந்ததும், ஓடிச்சென்று மெந்தெஸ்ஸுடன் ஓவியக் கலை குறித்து ஏதாவது பேசலாம் என்று வின்சென்ட் ஆசைப்பட்டது நியாயமான ஒன்றுதானே!
ஒருநாள் மாரீஸின் “ஞானஸ்நானம் – ஒரு பாடம்” என்ற ஓவியத்தை மெந்தெஸ்ஸுக்குக் கொடுத்தான் வின்சென்ட். மெந்தெஸ் தன் நீளமான விரல்களுக்கு நடுவில் அந்த ஓவியத்தைப் பிடித்தார். மேலே இருந்த ஜன்னல் வழியே வந்த சூரிய வெளிச்சம் அந்த ஓவியத்தின் மேல் விழுந்தது. அதையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார் மெந்தெஸ்.
“இந்த ஓவியம் மிகவும் சிறப்பாக இருக்கு. சர்வலோக மதத்தோட ஆத்மாவை இந்த ஓவியத்துல நம்மால பார்க்க முடியுது.”
அவ்வளவுதான்-
படு உற்சாகமாகிவிட்டான் வின்சென்ட். மாரீஸின் ஓவியக் கலையைப் பற்றி அதிகமான ஈடுபாட்டுடன் மெந்தெஸ்ஸுடன் அவன் பேசினான். மெந்தெஸ் அவன் பேசப் பேச தலையை ஆட்டியவாறு அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். தனக்கு ரெவ.ஸ்ட்ரிக்கர் பணம் கட்டுவது லத்தீனும், கிரேக்க மொழியையும் கற்றுக் கொள்ள மட்டும்தான். அதற்கு மேல்...
“மாரீஸைப் பற்றியும் கத்துக்கலாம். நல்லதுதான். ஆனால், எல்லாவற்றையும் கத்துக்கறதுன்னா எல்லாம் முடிய எவ்வளவு நாளாகிறது!”
ஜான் அங்கிள் ஹெல்வூர்த்திற்கு ஒரு வார காலம் பயணம் சென்றபோது, கேயும் வோஸும் வின்சென்ட்டைப் பார்க்க வந்தார்கள்.
“ஜான் அங்கிள் வர்றது வரை நீ எல்லா நாட்களிலும் வீட்டுக்கு வரணும்” – கே சொன்னாள்: “எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் எங்ககூட டின்னருக்கு வரலாமேன்னு அம்மா கேட்கச் சொன்னாங்க...”
¤ ¤ ¤
டின்னர் முடிந்த பிறகு எல்லோரும் உட்கார்ந்து சீட்டு விளையாடத் தொடங்கினார்கள். வின்சென்ட்டிற்கு சீட்டு விளையாடத் தெரியாது. க்ரூஸோன் எழுதிய ‘சிலுவைப் போர்களின் வரலாறு’ என்ற புத்தகத்தை எடுத்து, ஒரு மூலையில் போய் உட்கார்ந்து அதைப் படிக்கத் தொடங்கினான். அவன் இருக்குமிடத்தில் இருந்தவாறு பாரத்தால் கே தெளிவாகத் தெரிந்தாள். அவளின் வசீகரமான தோற்றத்தையும், அவளின் மயக்கத்தைத் தரும் சிரிப்பையும் இங்கிருந்தே பார்த்து ஆனந்த வயப்பட்டுக் கொண்டிருந்தான் வின்சென்ட்.
கே வின்சென்ட்டின் அருகில் வந்து அமர்ந்தாள்.
“என்ன படிச்சிக்கிட்டு இருக்கே, வின்சென்ட்?”
தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை அவளுக்குக் காட்டினான் வின்சென்ட். “இது எவ்வளவு அருமையான புத்தகம் தெரியுமா? மாரீஸோட ரசனையோட ஒட்டிப்போய் எழுதின மாதிரியே தோணும் இதைப் படிக்கிறபோது.”
அதைக் கேட்டு புன்னகைத்தாள் கே. வின்சென்ட் எப்போது பார்த்தாலும் இந்த மாதிரியான இலக்கிய விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் பேசுவான்.
“மாரீஸ் இதுல ஏன் வர்றாரு?”- அவள் கேட்டாள்.
“இந்தப் புத்தகத்தைப் படிச்சுப் பாரேன். உனக்கே தெரியும். மலைப் பகுதியில் இருக்கும் ஒரு பழைய அரண்மனை. இளவேனிற்கால மாலை நேரத்தில் மூழ்கிப் போயிருக்கும் காடு. முன்னால் இருண்டு போய் கிடக்கும் வயலில் வெள்ளை குதிரையைப் பூட்டி உழுது கொண்டிருக்கும் விவசாயி. இதைப் படிக்கிறபோது மாரீஸோட ஓவியம் உன் ஞாபகத்துல வரலியா?”
“நீ சொல்றது ஒருவிதத்தில் சரிதான்”- அவன் சொன்ன பகுதியைப் படித்துப் பார்த்த கே அடுத்த நிமிடம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தாள். “எழுத்தாளனும் ஓவியனும் ஒரே மாதிரி, வேற வேற கலா ரூபங்கள் மூலமா சிந்திக்கிறாங்கன்னுதான் நாம எடுத்துக்க வேண்டி இருக்கு.”
வின்சென்ட் புத்தகத்தை எடுத்து ஒரு பக்கத்தை விரலால் சுட்டிக் காட்டினான்.
“இது மிச்லேயின் (ஃபிரெஞ்ச் வரலாற்று ஆசிரியர்) அல்லது கார்லைலோட (ஆங்கில எழுத்தாளர்) புத்தகங்கள்ல இருந்து எடுத்த மாதிரியே இருக்கு.”
“வின்சென்ட், வகுப்பறையில் நீ இருந்தது மிக மிகக் குறைவான நாட்கள். இருந்தாலும், எவ்வளவு விஷயங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கே! உண்மையிலேயே பார்க்க சந்தோஷமா இருக்கு. ஆமா... இப்பவும் நீ அதிகம் படிக்கிறியா?”
“இல்ல... நிறைய படிக்க ஆசைதான். ஆனால், அதுக்கு நேரம் கிடைக்கணுமே! அதுக்காக நான் கவலைப்படல. மற்ற எந்த புத்தகங்களில் இருந்தும் கிடைக்கிறதைவிட முழுமையாகவும் அழகாகவும் எல்லா விஷயமும் கிறிஸ்து வசனங்களில் இருக்குன்றது என்னோட அபிப்ராயம்.”
“நீயா அப்படிச் சொல்றே! வின்சென்ட், நீ இப்படி சொல்வேன்று நிச்சயமா நான் எதிர்பார்க்கல”- திடீரென்று எழுந்தவாறு சொன்னாள் கே.
அவள் என்ன சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வின்சென்ட்.
“மாரீஸோட கலையை ‘சிலுவைப் போர்களின் வரலாறு’ புத்தகத்தில் பார்க்கிறதா நீ சொன்னப்போ நீ எவ்வளவு பெரிய அறிவாளின்றதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. அதே நேரத்துல ஒரு பட்டிக்காட்டு பாதிரியாரைப் போல உபதேசங்கள் செய்யிற உன்னை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியல... ”
வோஸ் அப்போது அவர்களுக்குப் பக்கத்தில் வந்தான். “கே... வா உனக்கு சீட்டு போட்டிருக்கேன்.”
ஒரு நிமிடம் கே, வின்சென்ட்டின் தடித்துப் போன புருவங்களுக்குக் கீழே ‘ஜிவ்’வென்று எரிந்து கொண்டிருந்த கண்களையே உற்றுப் பார்த்தாள். அடுத்த நிமிடம் தன் கணவனின் கையைப் பற்றியவாறு அந்த இடத்தைவிட்டு அகன்றாள். நடந்து போய் மற்றவர்களுடன் சீட்டு விளையாட உட்கார்ந்தாள்.
¤ ¤ ¤
தன்னுடன் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதை வின்சென்ட் மிகவும் விரும்புகிறான் என்பதை தெரிந்து கொண்ட தகோஸ்தா பாட நேரம் முடிந்த பிறகு, அவனுடன் காலாற நடந்து செல்வதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொண்டார்.
ஒருநாள் அவர்கள் இருவரும் காற்றாலைகள் நிறைய இருக்கிற- தொழிலாளர்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஒரு பகுதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
“இங்கே ஒரு பாதிரியாரா இருக்கிறதுன்றது உண்மையிலேயே பெரிய ஒரு விஷயம்தான்”- வின்சென்ட் சொன்னான்.
தகோஸ்தா பைப்பில் புகையிலையை நிரப்பினார். புகையிலை பையை வின்செட்டின் கையில் கொடுத்தவாறு அவர் சொன்னார்: “நிச்சயமா... நகரத்துல இருக்கிறவங்களைவிட இந்த மாதிரி கிராமப் பகுதியில் இருக்கிறவங்களுக்குத்தான் அதிகமா கடவுள் தேவைப்படுது.”
அப்போது அவர்கள் இருவரும் ஜப்பானிய முறையில் அமைக்கப்பட்ட ஒரு மரப்பாலத்தை அடைந்திருந்தார்கள்.
“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு சரியா புரியல...” வின்சென்ட் கூறினான்.