வான்கா - Page 18
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“சார்... உங்களுக்கு ஓவியத்தின் மேல் இவ்வளவு ஆர்வம் இருக்குன்னு நான் உண்மையிலேயே நினைக்கவே இல்லை.”
“நானொண்ணும் பெரிய ஓவியன் இல்லை. இந்த கலையைப் பொறுத்தவரை நான் ஒரு கத்துக்குட்டின்னுதான் சொல்லணும். நேரம் எப்பவாவது கிடைச்சால் மனசுக்குத் தோணுற எதையாவது வரைஞ்சு பார்ப்பேன். அவ்வளவுதான்”- பீட்டர்ஸென் சற்று குரலை இறக்கியவாறு சொன்னார்: “ஆனால், இந்த விஷயத்தை வேற யாரிடமும் சொல்லாதே”
உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறபோதும் பீட்டர்ஸென் பேசிக்கொண்டே இருந்தார். அவரின் பதினைந்து வயது மகள் அடக்கமே உருவமாகக் கொண்டிருந்தாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை விட்டு அவள் பார்வையை உயர்த்தவே இல்லை.
அடுத்த சில நிமிடங்களில் பீட்டர்ஸென் பேசுவதை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான் வின்சென்ட். அவர் என்ன சொல்கிறார் என்பதை ஆர்வத்துடன் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டான்.
“போரினேஜ் நிலக்கரிச் சுரங்கங்கள் நிறைந்த ஒரு இடம். அங்கே வசிக்கிற எல்லாருமே சுரங்கத் தொழிலாளர்கள்தாம். ஆயிரம் ஆபத்துக்களைச் சந்திச்சுக்கிட்டு அவங்க அங்கே வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. அவங்க தங்களோட வேலைக்கு வாங்குற சம்பளம் உயிரைக் காப்பாத்தவே போதாது. சின்னஞ்சிறு குடிசைகளில் அவங்களோட மனைவிமார்களும் குழந்தைகளும், குளிரையும், பசியையும் மறந்து தங்களோட வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்காங்க.”
“அந்த இடம் எங்கே இருக்கு?”
“தெற்கு பெல்ஜியத்தில். நான் கொஞ்ச காலம் அங்கே இருந்திருக்கேன். யாருக்காவது உபதேசம் செய்யணும்னோ, ஆறுதல் கூறணும்னோ ஒரு ஆளு வேணும்னா நிச்சயம் அவங்களுக்குத்தான்.”
இதைக் கேட்டதும் வின்சென்ட்டின் தொண்டையில் ஏதோ அடைத்தது. அதற்குமேல் அவனுக்கு சாப்பாடு உள்ளே செல்லவில்லை. பீட்டர்ஸென்னின் ஒவ்வொரு வார்த்தையும் அவனிடம் என்னவோ ஒரு மாற்றத்தை உண்டாக்கியது.
“வின்சென்ட், நீ ஏன் அங்கே போய் ஏதாவது செய்யக் கூடாது? உன்னோட ஆர்வத்தாலும், திறமையாலும் அங்கே பல நல்ல காரியங்களை உன்னால் செய்ய முடியும்.”
“என்னாலா? ஆனால், கமிட்டி...?”
“அது எனக்கும் தெரியும். உன்னோட அப்பாவுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். சரியான ஒரு வேலை கிடைக்கிற வரை உனக்கு உதவ தான் தயாரா இருக்குறதா எனக்கு அவர் கடிதம் எழுதி இருக்கார்.”
அவ்வளவுதான்-
உற்சாகத்துடன் எழுந்து நின்றான் வின்சென்ட்.
“அங்கே எனக்கு ஒரு வேலையை ஏற்பாடு பண்ணி தருவீங்களா?”
“நிச்சயமா. ஆனால், அதற்குக் கொஞ்சம் நாட்கள் ஆகும். கமிட்டி, அங்கே நீ எந்த அளவிற்கு நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டு இருக்குறேன்னு தெரிஞ்சதும், தன்னோட மனசை மாத்திக்கும். ஏதாவதொரு முக்கியமான விஷயமா ஜோங், ப்ரிங் ரெண்டு பேரும் என்னைக்காவது இங்கே வருவாங்க. அப்படி வர்றப்போ உன்னோட வேலை விஷயத்தை அவங்கக்கிட்ட நான் பேசி முடிக்கிறேன். அந்த ஊரைச் சேர்ந்த மக்களுக்கு உன்னைப் போன்ற ஒரு ஆள் இப்போ கட்டாயம் தேவைப்படுது, வின்சென்ட்.”
¤ ¤ ¤
போரினேஜிற்குப் போகிற புகை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தான் வின்சென்ட். வானளவு உயர்ந்து நிற்கும் பல குன்றுகளைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது புகை வண்டி. ஃப்ளான்டேர்ஸின் சமவெளிகளைத் தாண்டி பயணித்துக் கொண்டிருந்த வின்சென்ட்டிற்கு இந்த உயர்ந்த குன்றுகள் ஆச்சரியத்தைத் தந்தன.
“கறுப்பு எகிப்து”- கண்களில் பட்ட பிரமிடுகளை உற்று நோக்கிய வின்சென்ட் தனக்குத் தானே கூறினான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆளிடம் அந்தக் குன்றுகளைப் பற்றி அவன் விசாரித்தான்.
“நிலக்கரிப் பொடியால் உண்டானவை அவை. ஒரு வருஷமா தினமும் அங்குலம் அங்குலமா அவை வளர்ந்து வர்றதை நான் பார்த்துக்கிட்டே வர்றேன்.”
பள்ளத்தில் அமைந்திருக்கும் வாஸ்மே நகரம். சூரியன் பழுப்பு நிறத்தில் காய்ந்து கொண்டிருந்தது. சுற்றுப் புறமெங்கும் நிலக்கரிப் புகை. பழமையாகக் காட்சியளிக்கும் செங்கல்லால் ஆன கட்டிடங்கள். அதைத் தாண்டிச் சென்றால் சின்ன வாஸ்மே என்றழைக்கப்படும் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வசிக்கும் கிராமம்.
கிராமத்தில் ஆள் நடமாட்டம் பெரிதாக ஒன்றும் இல்லை. அழகே இல்லாத சில பெண்கள் இங்குமங்குமாய் வீட்டு வாசல்களில் நின்று கொண்டிருந்தார்கள்.
பேக்கரி சொந்தக்காரன் தெனியைப் பார்த்தால், வின்சென்ட்டிற்கு அந்த ஆள் தங்குவதற்கு ஒரு இடம் ஏற்பாடு பண்ணித் தருவான் என்று ரெவ.பீட்டர்ஸென் சொல்லி இருந்தார். தெனியின் மனைவி வின்சென்ட்டைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். கிராமத்திலேயே ஒரே செங்கல் கட்டிடம் அது ஒன்றுதான். அறைகள் கூட சுத்தமாக வைக்கப்பட்டிருந்தன.
அந்த இடத்தை வின்சென்ட்டுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் அடுக்களையைத் தேடிப் போனான். அங்கு தெனியின் மனைவி நின்றிருந்தாள். வெளியே போய் ஊரை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லி விட்டு கிளம்பினான் வின்சென்ட்.
“சாப்பாட்டு நேரத்துக்கு முன்னாடி வந்திடுங்க”- தெனியின் மனைவி சொன்னாள்: “மார்காஸ்ல ஃபோர் – மேனா இருக்கிறவரு இன்னைக்கு இங்க வர்றாரு. அவர் உங்களுக்குத் தேவையான பல விஷயங்களைச் சொல்லித் தருவாரு.”
நிலக்கரிச் சுரங்கத்தில் இருக்கும் புகைக் குழாய்கள் இடைவிடாது வெளியேற்றிக் கொண்டிருக்கும் கரும்புகையால் அந்த கிராமமே கருத்துப் போய் இருந்தது. கிழக்குப் பக்கம் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் குடிசைகள் இருந்தன. இன்னொரு பக்கத்தில் நிலக்கரி குவித்து வைக்கப்பட்டிருக்கும் மைதானமும் அதற்குப் பக்கத்தில் மார்க்காஸ் சுரங்கத்தின் புகைக் குழாய்களும் இருந்தன. மைதானத்திற்குக் குறுக்கே போய்க் கொண்டிருந்த பாதையில் முள் செடிகள் மண்டிக் கிடந்தன. ஆங்காங்கே வயதான மரங்களின் வேர்கள் ஆடிக் கொண்டிருந்தன.
போரினேஜில் மிகவும் பழமையானதும், பயங்கர ஆபத்துக்களையும் கொண்ட ஒரு சுரங்கம் மார்க்காஸ். இதற்கு முன்பு அங்கு எத்தனையோ தொழிலாளர்கள் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டோ, வெடி விபத்தாலோ, தண்ணீருக்குள் மூழ்கிப் போயோ, சுவர் இடிந்து விழுந்தோ பல முறை இறந்து போயிருக்கிறார்கள். பள்ளத்தில் இருந்த இரண்டு செங்கல் கட்டிடங்களில் ஒன்றில் சுரங்கத்தில் இருந்து நிலக்கரியைப் பெயர்த்தெடுக்க பயன்படும் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்குதான் நிலக்கரியைத் தர வாரியாகப் பிரித்தெடுக்கும் வேலை நடப்பதும் புகைக்குழாய்களில் இருபத்து நான்கு மணி நேரமும் கரும்புகை “குப் குப்”பென வெளியேறிக் கொண்டே இருந்தன. எங்கு பார்த்தாலும் குடிசைகளும், முள் செடிகளும், சாணக்குவியல்களும், தூசுப் படலமும், புகையும்! மொத்தத்தில் – வெளிச்சம் அதிகம் இல்லாத தனிமை நிறைந்த இடம் அது.
‘இருண்ட கிராமம்’ என்று இந்த ஊரை அழைப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு? – தன் மனதிற்குள் கூறிக் கொண்டான் வின்சென்ட்.