வான்கா - Page 24
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
அப்படி வாழ்ந்து உங்களுக்குப் பழக்கமும் இல்லை. இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு காலம் ரொம்பவும் மாறிப்போச்சு, ம்ஸ்யெ. இந்தக் காலத்துல பொதுவா முடிஞ்ச வரை நாம யாராக இருந்தாலும் வசதியா வாழுறதுக்குத்தான் வழியைப் பார்க்கணும். நீங்க ஒரு நல்ல மனிதர்னு இங்கே இருக்கிற எல்லோருக்கும்தான் நல்லா தெரியுமே!”
¤ ¤ ¤
வின்சென்ட் தான் எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்ய தயாராக இல்லை. வீட்டு சொந்தக்காரரான வியாபாரியை நேரில் பார்த்து வீட்டுக்கான வாடகைப் பணத்தை அவர் கையில் தந்து, புதிய வீட்டுக்கு மாறினான். சம்பளம் கிடைத்தபோது ஒரு மரக்கட்டிலும், பழைய ஒரு அடுப்பும் வாங்கினான். ரொட்டியும், புளித்துப்போன வெண்ணெய்யும், காப்பிப் பொடியும் வாங்கினான். மேல் கூரையிலிருந்த ஓட்டைகளை மண்ணைக் கொண்டு அடைத்தான். சுவரில் இருந்த வெடிப்புகளையும், இடைவெளிகளையும் சாக்கு துண்டுகளால் மறைத்தான். இப்போது தன் வாழ்க்கை இங்குள்ள தொழிலாளிகளின் வாழ்க்கையை ஒட்டி இருப்பதாக அவன் நினைத்தான். தான் அவர்களில் ஒருவனாக தற்போது ஆகிவிட்டதை அவனால் உணர முடிந்தது. தெய்வ வாக்கை அவர்களிடம் இனி சேர்ப்பிப்பது சற்று எளிமையாகக் கூட இருக்கலாம்.
¤ ¤ ¤
குளிர் நிறைந்த பிப்ரவரி மாதம். மலை மேலிருந்து கிளம்பி வரும் பேய் காற்று. வாஸ்மேயில் இருக்கும் பெண்கள் வெளியே போய் கரி பொறுக்கக் கூட முடியவில்லை. குழந்தைகள் வெளியே சென்று எங்கே குளிரில் மாட்டிக்கொண்டு விறைத்துப் போய் விடுவார்களோ என்று பெற்றோர்கள் அவர்களை வெளியிலேயே விடவில்லை. விளைவு – நாள் முழுவதும் அந்தக் குழந்தைகள் படுக்கையே கதி என்று கிடந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அடுப்பில் கரியில்லாததால், சூடான உணவையே அவர்களால் பார்க்க முடியவில்லை. உஷ்ணம் நிறைந்த சுரங்கத்திற்குள் நாளெல்லாம் கிடந்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டு வெளியே வரும் சுரங்கத் தொழிலாளர்கள் வெளியே நிலவும் கொடுமையான குளிரைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து நின்றனர். நிமோனியாவும், காச நோயும் வந்து அங்கிருந்த பலரின் உயிரையும் பறித்துச் சென்றன. வின்சென்ட்டுக்கு அந்த மாதம் முழுவதும் மரணச் சடங்குகளை நடத்தி வைப்பதே வேலையாக இருந்தது.
குளிர்காலம் வந்தவுடன், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவதும் நின்றுவிட்டது. மார்க்காஸில் இருக்கும் கரிக்குவியல்களில் இருந்து கரியைச் சேகரித்து வின்சென்ட் கஷ்டப்படுகின்ற தொழிலாளிகளுக்குக் கிடைக்கும்படி செய்தான். இப்போது தொழிலாளிகளில் ஒரு ஆளாக ஆக வேண்டும் என்பதற்காக முகத்தில் கரியைத் தேய்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமே அவனுக்கு இல்லை. வெளியே இருந்த வாஸ்மேக்கு வரும் யார் வின்சென்ட்டைப் பார்த்தாலும் நிச்சயம் அவர்கள் கூறும் வார்த்தைகள் இதுவாகத்தான் இருக்கும்: “ இதோ இன்னொரு கருப்பன்!”
கஷ்டப்பட்டு பாதி கோணி வரை கரியைச் சேகரித்த வின்சென்ட், அதைத் தூக்கிக்கொண்டு கிராமத்தை நோக்கி நடந்தான். சுரங்கத்திற்குப் பக்கத்தில் போனபோது, தொழிலாளிகள் அப்போது தான் சுரங்கத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள். சிலர் தாழ்ந்த குரலில் அவனைப் பார்த்து மரியாதை நிமித்தமாக என்னவோ சொன்னார்கள். மற்றவர்கள் குனிந்த தலை நிமிராமல் மண்ணைப் பார்த்தவாறு அமைதியுடன் நடந்து போய்க் கொண்டிருந்தனர்.
கடைசியில் வயதான ஒரு பெரியவர் நடந்து வந்து கொண்டிருந்தார். குளிர் காற்று அவர் உடலில் பட்டவுடன், அதைத் தாங்க முடியாமல் அவர் உடல் கிடுகிடுவென நடுங்கியது. குளிரின் கடுமை தாங்க முடியாமல் அவர் கீழே விழப் போனார். பிறகு காற்றை எதிர்த்து போராடியபடி நடந்து கொண்டிருந்தார். தலையில் ஒரு சாக்கு மூட்டையை வைத்திருக்கிறார். அதில் வெளியே எழுதப்பட்டிருக்கிறது. “ஜாக்கிரதை, சீக்கிரம் உடையக்கூடியது.”
வின்சென்ட் தான் இப்போது தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்து, தனக்கு அவசியம் தேவையான ஆடைகளைத் தவிர, எஞ்சியவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் கிராமத்திற்கு வந்தான். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அவற்றைப் பிரித்துக் கொடுத்தான்.தன்னிடமிருந்த துணிகளிலேயே நல்ல துணிகளாய் இருந்தவற்றைச் சற்று முன்பு பார்த்த பெரியவருக்குக் கொடுத்தான்.
மார்ச் மாதத்தில் குளிர் சற்று குறைந்தது. அதற்குப் பதிலாக பனி பெய்ய ஆரம்பித்தது. வின்சென்ட் தான் வாங்கிய சம்பளத்தை அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மருந்து வாங்கவும், உணவு வாங்கவும் செலவிட்டான். சரியான உணவு இல்லாமல் அங்குள்ளவர்கள் மிகவும் மெலிந்து போனார்கள். குளிர் அவர்கள் உயிரையே வாட்டி எடுத்தது. காய்ச்சல் உண்டாகி கண்கள் குழிக்குள் கிடந்தன. தலை, உண்டான வேதனையால் கனத்தது. கன்னத்திலும், கண்களுக்கு கீழேயும் கருப்பு படர்ந்தது.
தெக்ரூக்கின் சிறு குழந்தை ஒன்றுக்கு டைஃபாயிட் காய்ச்சல் வந்தது. வீட்டில் குழந்தையைப் படுக்க வைக்க ஒரு கட்டில் இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் படுக்க வைப்பது அவ்வளவு சரியாக இருக்காது. தெக்ரூக் எதிர்ப்பு தெரிவித்ததை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் வேகமாக தன் வீட்டுக்கு வந்த வின்சென்ட் அங்கிருந்த கட்டிலை எடுத்துக் கொண்டு போய் தெக்ரூக்கின் குடிசைக்குள் போட்டான். அவரின் குழந்தையை அந்தக் கட்டில்மேல் படுக்க வைத்தான்.
அன்று மாலையில் தெனியின் வீட்டைத் தேடிப்போன வின்சென்ட், தான் படுப்பதற்கு கொஞ்சம் வைக்கோல் வேண்டுமென்று கேட்டான். “நீங்க ஏற்கனவே இருந்த அறை இப்பவும் சும்மாதான் கிடக்குது. நீங்கள் வாடகை எதுவும் தர வேண்டாம். நாம எல்லோரும் தெய்வத்தோட குழந்தைகள்னு நீங்கதானே சொல்வீங்க! இங்கேயே நீங்க தங்கிக்கோங்க”- தெனியின் மனைவி மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.
ஜுரம் வந்து நடுங்கிக் கொண்டிருந்தான் வின்சென்ட். வாரக் கணக்கில் சரியான உறக்கம் இல்லாமல் இருந்ததாலும், முறையான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததாலும், கிராமத்தில் சந்தித்த அளவுக்கு அதிகமான கஷ்டங்களும் வின்சென்ட்டை மிகவும் பாதித்துவிட்டிருந்தன. மேலே கிடக்கும் படுக்கை எவ்வளவு மென்மையானது! இங்கு சாப்பிட்ட உணவு எத்தனை ருசியானது!
தெனியின் மனைவியின் அன்பான வார்த்தைகளில் சறுக்கி விழப்போன வின்சென்ட், அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டான். அவளைப் பார்த்து அவன் சொன்னான்: “கடவுள் உங்களுக்கு நன்மைகள் செய்யட்டும்.ஆனால், நான் தேர்ந்தெடுத்த பாதையில் இருந்து மாறுபட, தயவு செய்து கட்டாயப்படுத்த வேண்டாம். நீங்க இப்போ வைக்கோல் தரலைன்னா நான் வெறும் தரையில் படுத்து தூங்குவேன். அவ்வளவுதான்.”