வான்கா - Page 28
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
எங்கு போகிறோம் என்பது தெரியாமலே, வழியில் என்ன காட்சிகள் இருக்கின்றன என்பது கூடத் தெரியாமலே, அவன் இப்படி ஒரு போக்கை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். அதிக நேரம் நடந்ததால் தளர்ச்சி தோன்றினால் சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் நிற்பான். இல்லாவிட்டால் சில நேரங்களில் படுக்கக்கூட செய்வான்.
தனக்கு எப்போதும் அன்பை கணக்குப் பார்க்காமல் காட்டும் தம்பி தியோ கூட தன்னை மறந்துவிட்டானே என்று மிகவும் வேதனைப்பட்டான் வின்சென்ட். சில மாதங்களுக்கு முன்பு அவன் ஒரு கடிதம் எழுதியிருந்தான். ஒரு குறிப்பிட்ட தொகையையும் அனுப்பி வைத்திருந்தான். அதற்குப் பிறகு அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஒருவேளை தன்மீது மற்றவர்களைப் போல அவனும் நம்பிக்கை இழந்து விட்டானோ என்ற முடிவுக்கு வந்தான் வின்சென்ட். உறவினர்களோ நண்பர்களோ இல்லாத தனி மனிதனாக, வேற்றுநாட்டைச் சேர்ந்தவனாக, தெய்வம் கூட கை கழுவிவிட்ட ஒரு பரிச்சயம் இல்லாத இடத்தில் வழிப் போக்கனாக பரிதவித்துக் கொண்டிருந்தான் வின்சென்ட்.
குளிர்காலம் வந்தது. வாழ்க்கையில் என்ன செய்வது என்றே தெரியாமல் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக ஒவ்வொரு நாளையும் நீக்கிக் கொண்டிருந்த வின்சென்ட், தன் மனதை இன்னொரு பக்கம் செலுத்தினான். அதாவது – புத்தகங்களின் உலகத்தின்பால் தன் மனதைத் திருப்பினான். புத்தகங்கள் படிப்பது என்பது அவனுக்கு எப்போதுமே பிடித்தமான ஒரு விஷயம். இப்போது புத்தகங்களில் வருகின்ற மற்ற மனிதர்களின் வெற்றியையும் தோல்வியையும் படிப்பதன் மூலம் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் தோல்வியை சில மணி நேரங்களாவது அவனால் மறந்திருக்க முடிந்தது. `நான் தோல்வியைச் சந்திச்சிட்டேன்... ஆழமான பள்ளத்துல விழுந்துட்டேன்’ என்று கூறிக் கொண்டிருப்பதற்கு பதிலாக ‘நான் என்ன செய்தால் நன்றாக இருக்கும்? உலகத்தில் என்னோட இடம் எது?’ என்ற கேள்வி அவன் மனதில் சதா நேரமும் தோன்ற ஆரம்பித்தது. புத்தகம் படிக்க ஆரம்பித்ததன் மூலம் இதுவரை விரக்தி அடைந்து போயிருந்த மனதில் ஒரு புத்துணர்ச்சி உண்டாக ஆரம்பித்தது. எந்தவித இலட்சியமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த அவனின் வாழ்க்கையில் நம்பிக்கை ரேகைகள் இலேசாகத் தோன்ற ஆரம்பித்தன.
தந்தை அல்லது தியோ அவ்வப்போது அனுப்பி வைக்கிற பணத்தை வைத்து தன் வாழ்க்கை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் வின்சென்ட்.
¤ ¤ ¤
நவம்பர் மாதத்தில் ஒருநாள். வின்சென்ட் மார்க்காஸின் மதிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு துரும்பு பிடித்த வண்டிச் சக்கரத்தின் மேல் அமர்ந்து என்னவோ ஆழ்ந்த சிந்தினையில் ஈடுபட்டிருந்தான். அப்போது ஒரு வயதான பெரியவர் மெதுவாக மார்க்காஸில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தார். கண்களை மூடுகிற அளவிற்கு தொப்பி, இறங்கிப்போன தோள்பட்டை, பைக்குள் நுழைந்திருக்கும் கை... நடுங்கிக் கொண்டிருக்கும் கால் மூட்டு! அந்த வயதானவரிடமிருந்த ஏதோ ஒன்று வின்சென்ட்டை ஈர்த்தது. அடுத்த நிமிடம் – இயந்திரத்தனமாக அவனின் கை பாக்கெட்டுக்குள் நுழைந்தது. ஒரு பென்சிலையும், ஒரு கடிதத்தையும் எடுத்தான். படுவேகமாக கடிதத்தின் மறுபக்கத்தில் ஒரு தொழிலாளியை ஓவியமாகத் தீட்டினான். சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு இளைஞன் அந்தப் பக்கமாக வந்தான். அருமையாக தலை வாரி இருந்தான். மார்க்காஸில் இருக்கும் புகைவண்டிப் பாதையை நோக்கி சுறுசுறுப்பாக நடந்து போனான் அந்த இளைஞன். பார்வையில் இருந்து அவன் மறைவதற்கு முன்பே, வின்சென்ட் அவனையும் படமாக வரைந்தான்.
¤ ¤ ¤
தெனியின் வீட்டிலிருந்து இலேசாகக் கிழிந்திருந்த வெள்ளைத் தாளையும், ஒரு தடிமனான பென்சிலையும் கண்டுபிடித்து எடுத்தான் வின்சென்ட். தான் காலையில் வரைந்த படங்களை மேஜைமேல் வைத்து, அவற்றையே இன்னொரு முறை வரைய முயற்சித்தான் அவன். ஆனால், அவனால் சரியாக வரைய முடியவில்லை. மனதில் நினைத்ததை தாளில் வரைய அவனுக்கு இயலவில்லை. அதை அழித்துவிட்டு, மீண்டும் வரையப் பார்த்தான். பென்சிலை விட, அழிக்கக் கூடிய ரப்பருக்குத்தான் இங்கு முக்கிய வேலை. திரும்பத் திரும்ப அழித்து, மீண்டும் அந்தப் படங்களை வரைய முற்பட்டான். படம் வரைவதில் தீவிரமாக ஈடுபட்டதால் இருள் அறைக்குள் பரவியதைக் கூட அவன் கவனிக்கவில்லை. தெனியின் மனைவி வாசல் கதவைத் தட்டி “சாப்பாடு தயாராக இருக்கிறது” என்று சொன்ன பிறகுதான் அவனுக்கு சுய உணர்வே வந்தது.
“சாப்பாடா?”
வின்சென்ட் ஆச்சரியத்துடன் கேட்டான்: “அந்த அளவுக்கு இருட்டிருச்சா என்ன?”
சாப்பிடும்போது தெனியிடமும், வீட்டில் உள்ள மற்றவர்களிடமும் உற்சாகமாகப் பேசினான் வின்சென்ட். அவன் கண்களில் இனம் தெரியாத ஒரு ஒளி தெரிந்தது. தெனியும் அவனின் மனைவியும் வினோதமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சாப்பிட்டு முடிந்து வேக வேகமாக அறைக்குள் வந்த வின்சென்ட் ஸ்கெட்சுகள் இரண்டையும் சுவரில் மாட்டி, சற்று தூரத்தில் நின்றவாறு அவற்றையே வைத்த கண் எடுக்காது பார்த்தான்.
“மோசம்!”- தனக்குள் அவன் சொன்னான்: “ரொம்ப மோசம். ஒரு வேளை நாளைக்கு இதைவிட நல்லா வரைய முடியலாம்.”
மண்ணெண்ணெய் விளக்கை படுக்கைக்கு அருகில் வைத்தவாறு வின்சென்ட் படுக்கையில் சாய்ந்தான். சற்று முன்பு சுவரில் தொங்கவிட்ட ஓவியங்களையே அவன் பார்த்தான். அப்போதுதான் அறையில் இருந்த மற்ற படங்கள் அவன் கண்களில் பட்டன. மாதக்கணக்கில் அந்தப் படங்களை அவன் மறந்தே போயிருந்தான். ஓவியங்களின் உலகத்திற்கு திரும்பச் செல்ல வேண்டும் என்ற தணியாத தாகம் மனதில் அப்போது உண்டானது. திடீரென்று தனக்கு உண்டான இந்த வேட்கையை எண்ணி அவனே ஆச்சரியப்பட்டான். என்ன இருந்தாலும் வின்சென்ட்டைப் பொறுத்தவரை ரெம்ப்ராண்ட், மில்லே (ஃப்ரெஞ்ச் ஓவியன்), த்யூப்ரெ (ஃப்ரெஞ்ச் ஓவியன்), மாரீஸ், தெலாக்ராய் (ஃப்ரெஞ்ச் ஓவியன்) – எல்லோருமே அவனுக்கு அறிமுகமே இல்லாதவர்கள் ஒன்றும் இல்லையே! முன்பு இவர்களின் எத்தனை ஓவியங்களை இவன் தன் கைகளில் வைத்திருக்கிறான்! லண்டனிலும், ஆம்ஸ்டர்டாமிலும் காட்சியகங்களில் தான் கண்ட இவர்களின் ஓவியங்களை ஒரு கணம் மனக்கண் முன் கொண்டு வந்து பார்த்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று அவன் சுகமாக - எந்தவிதக் கவலையும் இல்லாமல் உறங்கினான். மண்ணெண்ணெய் விளக்கொளி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி இறுதியில் திரி கருப்பாகி விளக்கு தானாகவே அணைந்தது.
¤ ¤ ¤
அதிகாலையிலேயே படுக்கையை விட்டு துள்ளி எழுந்தான் வின்சென்ட். பென்சிலையும், பேப்பரையும் சிறிய ஒரு மரப்பலகையையும் எடுத்துக் கொண்டு மார்க்காஸை நோக்கி நடந்தான். முதல் நாள் உட்கார்ந்த அதே வண்டி சக்கரத்தின் மேல் அமர்ந்து தொழிலாளிகளின் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான்.