வான்கா - Page 32
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“டேய்... ஏன்டா அழுவுறே? நான் சொன்னேன்ல கவலைப்படுற அளவுக்கு ஒண்ணுமில்லன்னு. நீ பாரீஸ்ல இருக்கிற விசேஷங்களைச் சொல்லு. எற்றனுக்குப் போயிருந்தியா?”
“இந்த குக்கிராமத்துல அத்தியாவசியப் பொருட்கள் ஏதாவது தேவைப்படுதுன்னா அதை வாங்குறதுக்கு கடை இருக்கா?”
“குன்றுகளைத் தாண்டி போனா கடைகள் இருக்கு. அது கிடக்கட்டும். நீ அந்த நாற்காலியை இழுத்துப் போட்டு இங்கே உட்காரு. உன்னைப் பார்த்து ரெண்டு வருடங்களாச்சே!”
தியோ வின்சென்ட்டின் முகத்தை விரல்களால் தடவினான். “நான் இப்போ என்ன செய்யப் போறேன் தெரியுமா? முதல்ல பட்டினி கிடக்குற உனக்கு இங்க கிடைக்கிறதிலேயே நல்ல உணவு வாங்கித்தரப் போறேன். அதுக்குப் பிறகு ஜுரத்துக்கு நல்ல மருந்து வாங்கிக் கொடுத்து நல்ல படுக்கையில படுக்க வைக்கப்போறேன். நான் இங்கே வந்தது எவ்வளவு நல்லாதப் போச்சு! இப்பவாவது நான் வந்தேனே! நான் திரும்பி வர்றது வரை நீ அசையவே கூடாது- தெரியுதா!”
படுக்கை, பாத்திரங்கள், உணவுப்பொருட்கள் எல்லாவற்றையும் இரண்டு பையன்கள் தலையில் ஏற்றி திரும்பி வந்தான் தியோ.
“இந்த அடுப்பை எப்படி பத்த வைக்கிறது?”- தியோ சட்டைக் கையை மேலே உயர்த்தியவாறு கேட்டான்.
“நான் சொல்லித் தர்றேன்” – வின்சென்ட் எழ முயற்சித்தான்.
“டேய் முட்டாள்... பேசாம அங்கேயே படுத்திரு... அந்த இடத்தை விட்டு எழுந்தே நான் சரியான உதை கொடுப்பேன்.”
தியோ இப்படிச் சொன்னதும், வின்சென்ட்டின் உதடுகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு புன்சிரிப்பு தவழ்ந்தது. அந்தச் சிரிப்பில் ஜுரம் இருப்பது கூட அவனுக்குத் தெரியவில்லை. தியோ முட்டை, பீன்ஸ், வெண்ணெய் எல்லாம் சேர்த்து உணவு தயார் செய்தான். கட்டிலுக்குப் பக்கத்தில் ஒரு மேஜையைக் கொண்டு வந்து போட்டு, பாத்திரத்தில் உணவைப் பரிமாறி ஸ்பூனைக் கையில் எடுத்தான்.
“நீ இப்போ வயிறு நிறைய சாப்பிடப்போறே. இப்போ இலேசா வாயைத் திற. நல்ல பிள்ளை இல்லே!”
“போதும் தியோ... போதும்... நானே என் கையால சாப்பிடுறேன்.”
தியோ ஸ்பூனில் உணவை எடுத்து வின்சென்ட்டின் உதட்டில் வைத்தான்: “ஒழுங்கா வாயைத் திற. இல்லாட்டி அடிதான்.”
உணவு சாப்பிட்டு முடிந்தவுடன், தலையணையில் தலை வைத்து படுத்த வின்சென்ட் சொன்னான்:
“சாப்பாடு நல்லா இருந்துச்சு. இதையெல்லாம் நான் மறந்துபோய் எத்தனை நாளாச்சு தெரியுமா?”
“இனி நிச்சயமா மறக்கமாட்டே!”
“இப்போ சொல்லு. குபில்ஸில் என்ன விசேஷங்கள்? நான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்.”
“அதை பிறகு சொல்றேன். கொஞ்ச நேரம் பொறுத்திரு. இப்போ நீ உறங்கு. சாப்பிட்டது ஜீரணமாகட்டும்.”
“ஆனா, தியோ... இப்போ எனக்கு உறக்கம் வரல. ஏதாவது பேசிக்கிட்டு இருக்கலாம்.”
“உனக்கு என்ன வேணும்னு இங்க இருக்க யாரும் கேட்கல இல்லியா? நான் என்ன சொல்றேனோ, அதை நீ கேட்டா போதும்.”
வின்சென்ட் மாலை நேரம் வரும்வரை நிம்மதியாக உறங்கினான். தூக்கம் நீங்கி எழுந்தபோது, தியோ அசிங்கமாக வளர்ந்திருந்த தாடியைச் சவரம் செய்து நீக்கினான். வின்சென்ட்டின் உடம்பை நீரால் சுத்தப்படுத்தினான். முடியை ஒழுங்காக வாரிவிட்டு, ஒரு புதிய சட்டையை எடுத்து அணிவித்தான். சுவையான இரவு உணவுக்குப் பிறகு பைப்பில் புகையிலையை நிறைத்து அவன் கையிலேயே தந்தான். எந்தவித கவலையும் இல்லாமல் உலகத்தை மறந்து, புகைவிட்டுக் கொண்டிருந்த வின்சென்ட்டைப் பார்த்த தியோவிற்கு தங்களின் இளமைக்கால நினைவுகள் ஞாபகத்தில் வந்தன.
சிறுவர்களாக இருந்தபோது மற்ற எல்லோரையும் விட வின்சென்ட்டின் மீதுதான் தியோவிற்கு விருப்பம் அதிகம். வின்சென்ட்டுடன் தான் கழித்த அந்த இளம் பிராயத்து நாட்களை அசைபோட்டுப் பார்த்த தியோவிற்கு வின்சென்ட்டின் மீது இன்னும் பாசமும், மதிப்பும், ஈடுபாடும் அதிகமானது. பாரீஸில் இருந்தபோது அந்த நாட்களைக் கிட்டத்தட்ட அவன் மறந்து போயிருந்தான். நிச்சயம் இனிமேல் தியோவால் அந்த இனிமையான நாட்களை மறக்கவே முடியாது. வின்சென்ட் இல்லாத வாழ்க்கை எந்த அளவிற்கு முழுமை இல்லாத ஒன்று என்பதை இப்போது உணர்கிறான் தியோ. தான் வின்சென்ட்டின் பாகம், வின்சென்ட் தன்னுடைய பாகம் என்று பரிபூர்ணமாக நம்பினான் தியோ. இருவருமே ஒன்றாக ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு, பல்வேறு இடங்களிலும் சுற்றி அலைந்து வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுபிடித்தவர்கள். இப்போது வின்சென்ட்டிற்கு தன் அருகாமை நிச்சயம் தேவை என்பதை உணர்ந்தே இருந்தான் தியோ. முதலில் அவனை இந்த இடத்தை விட்டு கிளப்பவேண்டும்.
“வின்சென்ட்”- தியோ உரத்த குரலில் சொன்னான்: “ஒண்ணு ரெண்டு நாட்கள்ல உன்னால ஒருவித பிரச்னையும் இல்லாம நடக்க முடியும்ன்ற நிலை வர்றப்போ உன்ன நான் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறதா இருக்கேன்.”
வின்சென்ட் சில நிமிடங்கள் ஒன்றுமே பேசாமல் மவுனமாக அமர்ந்திருந்தான். தியோவிற்கு தன் மனதில் உள்ள எண்ணங்களை எப்படி புரிய வைப்பது என்று அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.
“தியோ, இப்போ வீட்டுக்குப் போயி என்ன செய்யிறது? வீட்ல நான் யார் கூடவும் ஒட்டாம அன்னியனா இருக்க வேண்டிவரும். நான் என் மனசுக்கு என்ன சரின்னு படுதோ அதைச் சொல்வேன். செய்வேன். அவங்க ஒருவேளை நினைக்கலாம்- நான் எதுக்கும் லாயக்கில்லாத, தான்தோன்றித்தனமான ஆளுன்னு. மனசுல இருக்குற எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சரியான திசையில உபயோகிக்க நினைக்கிறேன் நான். ஓவியக்கலையை நான் உயிரைவிட பெரிசா நினைக்கிறேன். உணவு உண்பதைவிட ஓவியம் வரைவதில் நான் ஆர்வம் அதிகம் கொள்கிறேன். உன்னால என்னைப் புரிஞ்சுக்க முடியும்னு நினைக்கிறேன்.”
“அது எனக்குத் தெரியும் வின்சென்ட்.”- தியோ சொன்னான்: “ஆனால், ஓவியம் வரைவதும் புத்தகம் படிப்பதும் உன்னோட வயசுல வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும்தானே பயன்பட்டிருக்கு! அவற்றுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? அஞ்சு வருஷமா நீ வேலை எதுவும் இல்லாம இப்படி வெறுமனே அலைஞ்சுக்கிட்டு இருக்கே! இந்த கால கட்டத்துல வாழ்க்கை நிலையில நீ ரொம்ப கீழே இறங்கிட்டதா நீ உணரலியா?”
“நீ சொல்றது ஒருவிதத்துல பார்த்தா உண்மைதான்” கையிலிருந்த பைப் அணைந்து போயிருந்தது. அதைக்கூட கவனிக்காமல் சொன்னான் வின்சென்ட்.
“என் கையில பணம் கிடையாது. சாப்பாட்டுக்குக் கூட மத்தவங்களை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலை. எதிர்காலத்தை நினைச்சுப் பார்த்தா ஒரே இருட்டா இருக்கு. அதுக்காக நான் தேர்ந்தெடுத்த பாதையில முன்னோக்கி போகலைன்னு வச்சுக்கோ, உண்மையிலேயே என்னை நானே இழந்திடுவேன். அதை முதல்ல புரிஞ்சுக்கோ, தியோ!”
“நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு புரியல”- தியோ சொன்னான்.