வான்கா - Page 33
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“தியோ, ஒரு காலத்துல நீயும் நானும் எந்த விஷயத்தையும் ஒரே கோணத்துல நினைக்கக் கூடியவர்களா இருந்திருக்கோம். என்னோட பிரச்சினை இதுதான். நான் எதையும் வெறுக்கல. வேண்டாம்னும் சொல்லல. நீ என்னைப் பற்றிச் சொல்றதையும் தப்புன்னு சொல்லல. என்னோட வாழ்க்கையை அர்த்தமுள்ளதா ஆக்குறதுக்கான முயற்சியில தீவிரமா நான் ஈடுபட்டிருக்கேன். இதுதான் உண்மை.”
ஒரு குவளை நிறைய பாலைக்கொண்டு வந்து வின்சென்ட்டின் கையில் கொடுத்த தியோ சொன்னான்: “இதை முதல்ல குடி. நீ ரொம்பவும் களைச்சிட்டே!”
வின்சென்ட் ஒரே மூச்சில் அந்த பாலைக் குடித்தான். முகத்தைக் கூட துடைக்காமல் ஆவேசமான குரலில் தொடர்ந்து சொன்னான்: “நமக்குள்ள இருக்கிற எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் எப்போதாவது வெளியே காட்ட வழி இருக்கா? ஆத்மாவில் எரிஞ்சுக்கிட்டு இருக்கிற நெருப்பை யாராவது பார்க்க முடியுமா? இருந்தாலும் இந்த எரிஞ்சிக்கிட்டு இருக்கிற தீயை அணைஞ்சு போயிடாம பத்திரமா பாதுகாக்கணும். யாராவது என்னைக்காவது குளிர்ல இருந்து விடுதலை பெறுவதற்காக இந்தத் தீயைத் தேடி நிச்சயம் வருவாங்க. அதுவரை நாம காத்திருக்க வேண்டியதுதான். நான் என்ன சொல்றேன்னு உனக்குப் புரியுதா, தியோ?”
தியோ எழுந்து வந்து படுக்கையில் வின்சென்ட்டுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான்.
“இப்போ என் மனசுல எது ஞாபகத்துல வந்தது தெரியுமா, வின்சென்ட்?”
“தெரியல...”
“ரிஸ்விக்கில் அந்த பழைய மில். அங்கே ஓடிப்பிடிச்சு விளையாண்ட நம்மளோட இளமைக் காலம். என்னோட இளம் பிராயத்து நினைவுகள் எல்லாம் உன்னோடு சம்பந்தப்பட்டதுதான்.”
சகோதர்கள் இருவரும் சில நிமிடங்கள் ஒன்றுமே பேசாமல் மவுனமாக அமர்ந்திருந்தனர். கடைசியில் தியோ சொன்னான்: “வின்சென்ட், இதுவரை உன்னைப் பத்தி குறை நான் சொன்னதே இல்ல. நம்ம வீட்டுல இருக்க எல்லோரும் உன்கிட்ட இதை எல்லாம் கேட்கச் சொன்னாங்க. இந்த இடத்தை விட்டு உன்னை எப்படியாவது கிளப்பிட்டு வரச் சொல்லித்தான் அவங்க என்னை இங்கு அனுப்பிவிட்டுருக்காங்க!”
“அவங்க சொல்றது ஒரு விதத்தில பார்த்தா சரிதான், தியோ. ஆனா, உண்மையா பார்க்கப்போனா என்னை அவங்களால புரிஞ்சுக்க முடியல. பொருளாதார ரீதியா நான் கீழே போயிருக்கலாம். ஆனா, நீ உயர்ந்த நிலையில் இருக்கியே! எனக்கு அதுபோதும். நான் சும்மா பேச்சுக்காக சொல்ல. என்கிட்ட எது இல்லையோ அது உன்கிட்ட இருக்கே! அந்த விதத்தில எனக்கு சந்தோஷம்தான். ஆனா, அவங்க நினைக்கிற மாதிரியோ, சொல்லுற மாதிரியோ நான் ஒரு அடி முட்டாள் இல்லை. அதை நீ புரிஞ்சிக்கணும்.”
“அதை நாம இப்போ மறந்திடுவோம், வின்சென்ட்... உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நிச்சயம் ஒருநாள் எல்லாம் நல்லாவே நடக்கும்னு திடமாகவே நான் நம்புறேன். நீ சொல்றதில் இருந்து என்னவோ பெரிசா சாதிக்க நீ நினைச்சுக்கிட்டு இருக்கேன்றதை என்னால புரிஞ்சுக்க முடியுது. என்ன இருந்தாலும் சொல்லு. எனக்கு சமீபத்துல பதவி உயர்வு கிடைச்சிருக்கு. தேவைக்கு அதிகமாகவே பணம் இருக்கு. நான் உனக்கு உதவத் தயாரா இருக்கேன். உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அதைச் செய். உனக்கு என்ன பணம் தேவையோ அதை நான் அனுப்பி வைக்கிறேன். இப்போ சொல்லு... உன்னோட இலட்சியம்தான் என்ன?”
தியோ ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்று வின்சென்ட் வரைந்த படங்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று தன் உள்ளுணர்வு முழுவதும் ஓவியங்களில் வெளிப்பட்டிருப்பதை தியோ உணர்ந்திருப்பான் என்ற நம்பிக்கையில் பிரகாசமான முகத்துடன் – அதே சமயம் தாழ்ந்த குரலில் வின்சென்ட் சொன்னான்:
“நான் இதுவரை சொல்ல நினைச்சது இதுதான்.”
தியோவின் கண்கள் ஓவியங்களில் மூழ்கின: “நானும் அதைத்தான் நினைச்சேன்.”
“அப்படின்னா... அப்படின்னா... எனக்கு முன்னாடியே நீ என்னைப் புரிஞ்சுக்கிட்டேன்னு அர்த்தம். முன்பெல்லாம் பெரிசா சிந்திக்க என்கிட்ட தைரியம் இல்லாம இருந்துச்சு. இப்பத்தான் என் பாதை என்னன்னே எனக்குத் தெரியுது. படம் வரையணும்ன்ற வேட்கை என்னோட உள் மனசுல என்னைக்குமே இருந்துக்கிட்டுதான் இருந்துச்சு. ஆனா, நான் பார்க்குற வேலைக்கு அது தொந்தரவா இருக்கும்னு நினைச்சு அதை மனசுக்குள்ளேயே அடக்கி வச்சிக்கிட்டு சும்மா இருந்தேன். வேலை! நினைச்சுப் பார்த்தா நான் எந்த அளவுக்கு குருடனா இருந்திருக்கேன்றதை இப்போ உணர்றேன். இவ்வளவு வருடங்களாகியும் என்னோட உன் மன குரலை நான் கேட்காமலே இருந்திருக்கேன்! நான் எவ்வளவு பெரிய பைத்தியக்காரன்!”
“வின்சென்ட், வாழ்க்கையின் இலட்சியத்தை அடையிறதுக்கான வலிமையும், திறமையும் உன்கிட்ட நிச்சயமா இருக்கு. போதாதற்கு உன் வயசும் குறைவுதானே?”
“பத்து வருஷத்துல பெரிய ஆளா வந்து காட்டுவேன். அதுக்கு மத்தியில எவ்வளவோ சாதனைகளைச் செஞ்சு காட்ட முடியும்.”
“நீ எங்கே வேணும்னாலும் போ. எத்தனை வருடங்கள் ஆனா என்ன, நம்பிக்கையோட, முன்னால் கால் வச்சு நடந்துபோ. உனக்கு தேவையான பணத்தை நான் தர்றேன்.”
“தியோ, இத்தனைக் காலமும் நான் இருட்டுல வழி எதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் எனக்கு வழியே தெரிஞ்சிருக்கு. ஒரு ஓவியனா வரணும் – இதுதான் என்னோட இலட்சியம். மற்ற எந்த வேலையா இருந்தாலும் அதுல நான் தோல்வியடைவதற்கு இதுதான் காரணம். என்னோட மனசின் உள்ளறையைத் திறந்துவிட்டது நீதான்!”
“நாம ரெண்டு பேரும் மீண்டும் ஒண்ணாயிருக்கோம், இல்லியா வின்சென்ட்?”
“ஆமா தியோ. இனி வாழ்க்கை முழுவதும் கடைசி வரை ஒண்ணாவே இருப்போம்.”
“சரி... நீ கொஞ்சம் ஓய்வு எடு. கொஞ்ச நாட்கள் செல்லட்டும். உன்னை எங்கே வேணும்னாலும் கூட்டிட்டுப் போறேன்.”
வின்சென்ட் அடுத்த நிமிடம் படுக்கையை விட்டு துள்ளி எழுந்தான்.
“கொஞ்ச நாட்கள்! நாம இப்பவே புறப்படுவோம். ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒன்பது மணிக்கு வண்டி இருக்கு!”
வின்சென்ட் வேகமாக உடையணியத் தொடங்கினான்.
“ஆனா, வின்சென்ட்... ராத்திரி நேரத்துல எப்படி பயணம் செய்ய முடியும்? உனக்குத்தான் உடல்நிலை சரியில்லையே!”
“உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கா? எனக்கா? அது பழைய கதை. இவ்வளவு ஆனந்தமா வாழ்க்கையில நான் எப்பவும் இருந்ததே இல்ல. தியோ... வாடா... பத்து நிமிடத்துல நாம ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போயிடலாம். சாமான்களைச் சீக்கிரம் பையில் எடுத்து வை. நாம இப்பவே புறப்படுவோம்!”