வான்கா - Page 37
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
வின்சென்ட் திரும்பி வந்தபோது அவன் மனதில் யார் யாரோ இனிமையான இசையை மீட்டினார்கள். தேனினும் இனிய பாடல்களைப் பாடினார்கள். வீட்டிற்கு அவன் வந்தபோது, அங்கே கே வோஸ் இருந்தாள்!
¤ ¤ ¤
கணவனை இழந்த கேயின் தோற்றத்தில் அந்த இழப்பின் வலிமையையும், துக்கத்தையும் காண முடிந்தது. வோஸ் மீது அந்த அளவுக்குப் பெரிதாக அன்பு செலுத்தி வாழ்ந்திருந்த அவளுக்கு, அவன் இல்லை என்றதும் ஒருவித விரக்தி மனதில் உண்டானதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? எப்போதும் அவளிடம் காணப்படும் துடுக்குத்தனமும், உற்சாகமும் எங்கோ காணாமல் போய்விட்டன. தலைமுடியில் கூட பளபளப்பைக் காணோம். எப்போதும் பிரகாசமாகக் காணும் அவளின் நீல கண்களுக்குக் கீழே கவலையால், கறுப்பு வட்டங்கள் உண்டாகியிருந்தன. வசீகரமான அவளின் உடல் வனப்பு இப்போது எங்கு போனதோ தெரியவில்லை. இருந்தாலும், அந்த வேதனையில்கூட அவளிடம் ஒரு அழகு இருக்கவே செய்தது. கவலைப்பட்டு கவலைப்பட்டு, நாளடைவில் மனதில் கூட ஒரு பக்குவம் குடியேறிய மாதிரி இருந்தது. துக்கம் அவளுக்கு ஒருவித முதிர்ச்சியையும், ஆழத்தையும் தந்திருந்தது.
“கே, கடைசியில் நீ இங்கே வந்துட்டே. எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா!”
“நன்றி வின்சென்ட்.”
“ஜானைக் கொண்டு வரலியா?”
“ம்... அவன் தோட்டத்துல இருக்கான்.”
“ப்ரபாண்டிற்கு இப்பத்தானே முதல் தடவையா வர்ற? என்கூட வா. எல்லா இடத்தையும் சுத்திக்காட்டுறேன்.”
“நிச்சயமா”- சம்மதத்துடன் அதே சமயம் உற்சாகம் இல்லாத குரலில் கே சொன்னாள். அவளின் குரல் மிகவும் அடங்கிப் போயிருந்தது. அவளின் கணவனைப் பற்றி பேசி தேவையில்லாமல் அவளின் துக்கத்தை மேலும் அதிகமாக்க வின்சென்ட் விரும்பவில்லை. எதுவுமே பேசாமல் அருகில் சென்ற வின்சென்ட் அவளின் கைகளை ஆதரவாகப் பற்றினான். அவன் இப்படித் தோட்டதும், கே மனதிற்குள் அழுதாள். அவள் கண்களில் இலேசாக கண்ணீர் அரும்பியது. வின்சென்ட்டுடன் தான் பல விஷயங்களைக் குறித்து பேசிக் கொண்டிருந்த அந்த மாலை நேர பொழுதை இப்போது நினைத்துப் பார்த்தாள் கே. அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்த வின்சென்ட் தன் மனதிற்குள் கூறினான்: ‘துக்கத்திலும் ஒரு அழகு!’
¤ ¤ ¤
மறுநாள் அதிகாலையில் ஓவியம் வரைவதற்காக வின்சென்ட் வெளியே கிளம்பியபோது அவனுடன் கேயும் ஜானும் கூட போனார்கள். வின்சென்ட்டின் தாய் அவர்களுக்காக சுவையான மதிய உணவு தயார் பண்ணி கையில் கொடுத்தனுப்பினாள். வழியில் இருந்த சர்ச்சுக்கு முன்னால் வளர்ந்திருந்த ஒரு பெரிய சவுக்கு மரத்தின் உச்சியில் ஒரு குருவிக்கூடு இருந்தது. ஜான் பறவையின் முட்டை வேண்டுமென்று கேட்டான். பையனின் ஆசையை நிறைவேற்றும் வகையில், வின்சென்ட்டும் நிச்சயம் எங்காவது முட்டை பார்த்துத் தருகிறேன் என்றான். காலடியில் ‘பொசு பொசு’வென்று மென்மையாக இருந்த மண்மேல் கால் வைத்து நடந்து சென்ற அவர்கள் முட்கள் அடர்ந்திருந்த பைன் மரக்காட்டைக் கடந்து மஞ்சளும், வெள்ளையும், சாம்பல் நிறமும் கலந்த மணல் நிறைந்திருந்த ஒரு இடத்தை அடைந்தனர். அங்கு யாரோ எப்போதோ விட்டுச் சென்றிருந்த ஒரு கலப்பையும் வண்டியும் அனாதையாக நின்றிருந்தன. ஜானை அந்த வண்டிமேல் உட்கார வைத்த வின்சென்ட், அவனை ஓவியமாக வரைந்தான். கே சற்று தூரத்தில் அமர்ந்து ஜான் இங்குமங்குமாய் ஓடி மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருப்பதையே கண் குளிரப் பார்த்துக் கொண்டிருந்தாள். வின்சென்ட், எதுவுமே பேசாமல் மவுனமாக அமர்ந்திருந்த கேயையே வைத்து கண் எடுக்காது பார்த்தான். வேலை செய்கிறபோது பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்திருந்தால், அது எவ்வளவு சுகமான விஷயம் என்பதையே இப்போதுதான் தன் வாழ்க்கையிலேயே முதல் முறையாக உணர்ந்தான் வின்சென்ட்.
கறுப்பு தொப்பிக்கு வெளியே காற்றில் இலேசாக ஆடிக் கொண்டிருந்த முடியைக் கையால் ஒதுக்கிய கே சொன்னாள்: “வின்சென்ட், நீ ஒரு பாதிரியாரா ஆகுறதுக்கான தகுதியே இல்லாதவன்னு எனக்கு அன்னைக்கே பட்டுச்சு”
“அப்பவே பிறகு ஏன் அதை என்கிட்ட சொல்லல?”
“அதைச் சொல்றதுக்கான அதிகாரம் எனக்கு இருக்கா என்ன?”
நடக்கிறபோது ஒரு வேர் பட்டு, கால் இடறிய கே வின்சென்ட் மீது சாய்ந்தாள். அவள் எங்கே கீழே விழுந்து விடுவாளோ என்று பதறிப்போன வின்சென்ட், அவளின் தோளின் மேல் கை வைத்து அவளை நேராக நிற்க வைத்தான்.
“நான் சொல்லி ஒண்ணும் ஆகப்போறதில்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்”- கே சொன்னாள்: “இதை, சொல்லப் போனா மத்தவங்கதான் சொல்லி சரிப்படுத்தி இருக்கணும்.”
“தான் உண்டு தன் வேலையுண்டுன்னு ஒரு கூட்டுக்குள்ள அமைதியா வாழ்ந்துக்கிட்டு இருக்க ஒருத்தன் பாதிரியாரா ஆகுறதுக்கு லாயக்கே இல்லைன்னு ஒரு கோடு போட்டு நீ அன்னைக்கு காட்டினதை இப்பவும் நான் மறக்கல.”
வின்சென்ட் புன்னகைத்தவாறு, கேயின் கண்களைப் பார்த்தான். அவற்றில் இப்போதும் ஏதோ துக்கம், நிழலாடிக் கொண்டிருப்பதை அவனால் காண முடிந்தது.
“நீ சொல்றது உண்மைதான், வின்சென்ட். எனக்கே தெரியாத பல விஷயங்களையும் எனக்கு வோஸ் சொல்லி புரிய வச்சிருந்தார்.”
வோஸின் பெயரை அவள் உதடுகள் உச்சரித்ததும், கேயின் தோள் மேல் இருந்த வின்சென்ட்டின் கை தானே நீங்கியது. அவர்கள் இருவருக்குமிடையில் இதுவரை இல்லாத - இனம் புரியாத ஒரு திரை வந்து விழுந்தது.
¤ ¤ ¤
கே பக்கத்தில் இருந்ததால் மிக மிக உற்சாகமாக ஓவியம் வரைந்தான் வின்சென்ட். பென்சில், தாளில் படு வேகமாக இயங்கியது. அவள் சமீபத்தில் இருக்கிற நொடிகளில், தன் மனதில் ஒளிக்கீற்றுகள் பல மடங்கு பெருகி, மகிழ்ச்சிக் கடலில் தான் மூழ்கிப் போயிருப்பதை அவனால் உணர முடிந்தது.
மதிய நேரம் வந்ததும், ஒரு ஓக் மரத்தினடியில் அமர்ந்து உணவு உண்டார்கள். அமைதியான – ஆனந்த சூழ்நிலை. ஓக் மரத்தின் அருமையான வாசனையுடன் லில்லி மலர்களின் நறுமணமும் சேர்ந்து ஒரு புதிய உலகமே அங்கு படைக்கப்பட்டிருந்தது. சாப்பாடு கொண்டு வந்த கூடையை நடுவில் வைத்து, ஒரு ஓரத்தில் வின்சென்ட் அமர, அவனுக்கு எதிரில் கேயும் ஜானும் அமர்ந்தார்கள். சாப்பாடு பரிமாறியது கேதான். அப்போது வின்சென்ட்டின் மனதில் சம்பந்தமே இல்லாமல் மவ்வின் இனிமையான குடும்ப வாழ்க்கை ஞாபகத்தில் வந்தது.