வான்கா - Page 41
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
கே தன் வாழ்க்கையை விட்டு நிரந்தரமாகப் போய்விட்டாள் என்பதை உணர்ந்தான் வின்சென்ட். ‘இல்ல... நான் உன்னைக் காதலிக்கல.’ என்ற வார்த்தைகள் அவளின் இதயத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம். ஆனால், இப்போது அந்த வார்த்தைகள் வின்சென்ட்டுக்குச் சொந்தமாகிவிட்டன. அவன் தலைக்குள் அந்த வார்த்தைகள் சதா நேரமும் சம்மட்டி எடுத்து அடிப்பது மாதிரி முழங்கிக் கொண்டே இருந்தன- `இல்ல... நான் உன்னை காதலிக்கல.’ அவளை இனி பார்க்க முடியாது. அவளின் குரலைக் கேட்க முடியாது. அவளின் ஒளிமயமான கண்களும், மென்மையான தொடலும் இனி அவனைப் பொறுத்தவரை அன்னியமாகிப் போனவையே.
அவன் மனதில் துக்கத்தின் அலைகள் பெருகி மோதிக் கொண்டிருந்தன. அவனையும் மீறி அழுகை வெளியே வந்தது. அதை அடக்குவதற்காக கையால் வாயைப் பொத்தினான் வின்சென்ட். உதடுகள் விரக்தியில் உலர்ந்து போயிருந்தன.
¤ ¤ ¤
தி ஹேக்
அந்த வருடம் சலோனில் நடைபெறுகிற ஓவியக் கண்காட்சிக்கு ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான் மவ். ஓவியக்கலை படிப்பதற்காக வின்சென்ட் தி ஹேக்கிற்கு வருவான் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எல்லோருக்கும் வாழ்க்கையில் கொஞ்ச நாட்களாவது கலைஞனாக இருக்கவேண்டும் என்ற ஆசை மனதில் உண்டாவது இயல்பானதுதான். அந்த ஆசையும் மற்ற எத்தனையோ ஆசைகளைப் போல காலப்போக்கில் காணாமல் போய்விடுவதுதான் பலரிடமும் அவன் கண்ட ஒரு விஷயம்.
ஒருநாள் ஒரு ஓவியத்தை அவன் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் முன்னால் திடீரென்று வந்து நின்ற வின்சென்ட்டைப் பார்த்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போனான் மவ். “வின்சென்ட், கடைசில எப்படியோ தி ஹேக்கிற்கு வந்துட்டே. உன்னை நாங்க எப்படியும் ஒரு ஓவியனா ஆக்கிடுவோம். சரி... தங்குறதுக்கு ஏதாவது இடத்தைப் பிடிச்சிட்டியா?”- மவ் கேட்டான்.
வின்சென்ட் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்திலேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தான். அறை கொஞ்சம் சிறியதுதான். இருந்தாலும் சவுகரியமானதாக இருந்தது. சுற்றிலும் நல்ல இயற்கைக் காட்சிகள். அறைக்கு சற்று தூரத்தில் ஒரு மரக்கடை. அதைத் தாண்டினால் பச்சைப் பசேல் என்று புல்வெளி. அதைத் தாண்டிப் போனால் மணல் மேடுகள்.
“நான் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்திலேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருக்கேன்”- வின்சென்ட் சொன்னான்.
“அது ரொம்பவும் பக்கத்துலதான் இருக்கு. சரி... செலவுக்கு பணமெல்லாம் இருக்கா?”
“அப்படியொண்ணும் அதிகமா இல்ல. கையில இருந்ததை வச்சு ஒரு மேஜையும், நாற்காலியும் வாங்கிப் போட்டேன்.”
“படுக்குறதுக்கு?”- மவ்வின் மனைவி ஜெட் கேட்டாள்.
“ஒண்ணும் இல்ல. நான் பொதுவா தரையிலதான் படுப்பேன்.”
மவ் தன் மனைவியிடம் என்னவோ சொன்னான். அடுத்த நிமிடம் ஜெட் உள்ளே போய் ஒரு சிறு பையுடன் வந்தாள். அதிலிருந்து நூறு கில்டர் நோட் ஒன்றை எடுத்து வின்சென்ட்டின் கையில் தந்த மவ் சொன்னான்: “போய் ஒரு மெத்தை வாங்கிக்கோ. அப்படின்னாத்தான் ராத்திரியில நிம்மதியா தூங்க முடியும். வாடகை கொடுத்துட்டியா?”
“இதுவரை கொடுக்கல.”
“அதைப் பத்தி கவலைப்படாதே. பார்த்துக்கலாம். அறையில் வெளிச்சம் இருக்கா?”
“நல்ல வெளிச்சம் இருக்கு. ஆனா, தெற்கு திசை பார்த்து ஒரே ஒரு ஜன்னல்தான் இருக்கு.”
“அது சரியா வராதே! நீ ஓவியம் வரையிறப்போ சூரிய ஒளி மாறி மாறி வந்தா, படத்தை அது பாதிக்குமே! அறைக்கு திரைச்சீலை இடுறது நல்லது.”
“உன்கிட்ட பணம் கடன் வாங்க எனக்கு என்னவோ போல இருக்கு. எனக்கு நீ ஓவியம் வரைய சொல்லித் தர்றதே பெரிய விஷயம்.”
“அதைப் பத்தியெல்லாம் பெரிசா நினைக்காதே, வின்சென்ட். வீடு வாடகைக்கு எடுத்து குடி போறதுன்னா சாதாரண விஷயமா? இருந்தாலும் அவசியத் தேவைகள்னு இருக்குற பொருட்களை நாம வாங்கி வச்சிக்கிறதுதான் நல்லது.”
“நீ சொல்றது சரிதான். நான் வரையிற படங்களை சீக்கிரம் விற்க முடியும்ன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அப்போ நான் வாங்கிய கடனைத் திருப்பித் தந்திர்றேன்.”
“தெர்ஸ்டீக் உனக்கு உதவுவார். என்னோட ஆரம்ப கட்டத்துல அவர் எனக்கு ரொம்பவும் உதவியா இருந்திருக்கார். ஆனால், நீ வாட்டர் கலரும் எண்ணெய்யும் பயன்படுத்த கத்துக்கணும். பென்சிலை வச்சு வரையிற ஓவியங்களுக்கு அவ்வளவா மதிப்பு கிடையாது.”
ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கொண்டிருந்த மவ் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். என்ன நினைத்தானோ, ஒரு பெட்டியைக் கொண்டு வந்து வின்சென்ட்டின் கையில் கொடுத்தான் அவன். “இந்தப் பெட்டியை வச்சுக்கோ. இதுல வாட்டர் கலரும் ப்ரஷ்ஷும், பாலெற்றும் (ஓவியர்கள் சாயங்களைக் கலப்பதற்காகப் பயன்படுத்தும் சிறு பலகை), எண்ணெய்யும், டர்பன்டைனும் இருக்கு. பாலெற்றை எப்படி பிடிக்கணும், ஈஸஸ் (ஸ்டாண்ட்) முன்னாடி எப்படி நிக்கணும்ன்ற விஷயங்களை உனக்கு நான் சொல்லித் தர்றேன்.” – மவ் சொன்னான்.
அவசியம் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்களை மவ் கூற, அவற்றை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டான் வின்சென்ட். தான் சொல்லிக் கொடுத்ததை உடனே செய்து காட்டிய வின்சென்ட்டைப் பார்த்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டான் மவ். அவன் சொன்னான்: “நீ கொஞ்சம் மந்தபுத்திக்காரன்னு நான் நினைச்சிருந்தேன். ஆனா, உடனே எல்லாத்தையும் செய்றியே! நல்லது. அப்படித்தான் இருக்கணும். ஒவ்வொரு நாள் காலையிலயும் இங்கே வந்திடு. ஆரம்பத்துல வாட்டர் கலரை வச்சு படம் வரையத் தொடங்கு. ஓவியர்களுக்குன்னு இருக்குற க்ளப்ல உன்னை தற்காலிக உறுப்பினரா சேக்குறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். அங்கே மாடல்களைப் பார்த்து வரையிறதுக்கு சவுகரியங்கள் இருக்கு. உன்னோட படங்களை விற்பனை செய்யக் கூடிய காலம் வர்றப்போ நிரந்தர உறுப்பினர் ஆயிடலாம்.”
அதைக் கேட்டதும் வின்சென்ட்டிற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அவன் சொன்னான்: “மாடல்களைப் பார்த்து வரையிறதுல எனக்கும் விருப்பம் அதிகம்தான். ஒரு தடவை உடலமைப்பை சரியா வரைஞ்சிட்டோம்னா, மத்த விஷயங்கள் அதுவாகவே சரியா வந்திடும்.”
மவ், வின்சென்ட் சொன்னதை உன்னிப்புடன் கேட்டுவிட்டு சொன்னான்: “நீ சொல்றது சரிதான். உடலமைப்பை ஒழுங்கா வரையிறதுதான் கஷ்டம். அதைச் சரியா வரைஞ்சிட்டா மரத்தையும், பசுவையும், சூரிய அஸ்தமனத்தையும் வரையிறதுல என்ன கஷ்டம் இருக்கு!”
¤ ¤ ¤
வில்லெம்ஸ் பார்க்கில் இருந்தது தெபோக்கிற்குச் சொந்தமான ஸ்டுடியோ. வளர்ந்து கொண்டிருந்த ஒரு ஓவியன் தெபோக். காண்போரை வசீகரிக்கக் கூடிய நடவடிக்கைகள். பெரிய பணக்காரன் அவன். இங்கிலாந்தில் உயர் கல்வி கற்றவன். குபில்ஸில் வைத்துத்தான் தெபோக்கை வின்சென்ட் பார்த்தான்.