வான்கா - Page 43
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
ஒரு வேளை கொஞ்சம் மதுவைக் குடித்தால், இந்த தனிமையுணர்விலிருந்து கொஞ்ச நேரத்திற்காவது விடுதலை பெறலாமே என்று நினைத்தான் வின்சென்ட்.
மதுவை மெதுவாக ருசித்த வின்சென்ட் தன்னைச் சுற்றிலும் பார்த்தான். அவனுக்கு நேர் எதிரில் ஒரு சாதாரண தொழிலாளி உட்கார்ந்திருந்தான். ஒரு மூலையில் கறுப்பு வர்ணத்தில் ஆடை அணிந்திருந்த ஒரு பெண்ணும், அவள் கணவனும் இருந்தார்கள். வின்சென்ட் அமர்ந்திருந்ததற்குப் பக்கத்து மேஜைக்கு அருகில் தனியாக ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
வெயிட்டர் அவளிடம் உரத்த குரலில் கேட்பது வின்சென்ட்டின் காதுகளிலும் விழுந்தது. “இன்னும் மது ஊத்தவா?”
“கையில காசு இல்லியே!”- அவள் சொன்ன பதில் இது.
வின்சென்ட் அவள் பக்கம் திரும்பினான்: “என் கூட ஒரு க்ளாஸ் குடிக்க தயாரா?”
ஒரு நிமிடம் வின்சென்ட்டையே உற்றுப் பார்த்த அவள் சொன்னாள்: “சரி...”
வெயிட்டர் மதுவைக் கொண்டு வந்து கொடுத்து, பணத்தையும் வாங்கிக் கொண்டு போனான்.
வின்சென்ட் அவளையே வெறித்துப் பார்த்தான். வயது குறைவு என்று சொல்ல முடியாது. அப்படி ஒன்றும் அவள் அழகியும் அல்ல. நடுத்தர வயது இருக்கும். உடம்பில் கஷ்டங்கள் உண்டாக்கிய மினுமினுப்பின்மை தெரிந்தது. இருந்தாலும், நல்ல உடற்கட்டைக் கொண்டிருந்தாள். ஒயின் க்ளாஸைப் பிடித்திருந்த கையின் உள்பகுதி காய்ப்பேறிப் போயிருந்தது. உழைக்கும் ஆணின் கையைப் போன்றிருந்தது அது. மூக்கிற்குக் கீழே ஒரு கோடு மாதிரி சிறு ரோமங்கள் முகத்தில் இருந்தன. கண்களில் சோகம் குடி கொண்டிருந்தது. அந்தக் கண்களில் ஒரு தைரியத்தின் நிழலாட்டத்தைக் காண முடிந்தது. அந்த மங்கிய விளக்கு வெளிச்சத்தில் அவள் ஒரு சார்டின் (ப்ரெஞ்ச் ஓவியர்) வரைந்த ஓவியம் உயிர் பெற்று வந்தது போல் இருந்தாள்.
“என் பேர் கிறிஸ்டின்”- வின்சென்ட்டின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்த பிறகு, அவள் கேட்டாள்: “உன் பேரு?”
“வின்சென்ட்.”
“தி ஹேகில் வேலை பார்க்குறியா?”
“ஆமா”
“என்ன வேலை...?”
“ஓவியரா இருக்கேன்.”
“அது ஒரு உப்புசப்பில்லாத வேலை ஆச்சே!”
“சில நேரங்கள்ல...”
“நான் துணி துவைக்கிறவ. உடம்புக்கு முடியிறப்போ வேலைக்குப் போவேன். எப்போதும் போவேன்னு சொல்ல முடியாது.”
“வேலைக்குப் போகாத நாள்ல என் செய்வே?”
“நான் கொஞ்ச காலம் தெருவுல இருந்தவதான். வேலை செய்ய முடியாதப்போ அங்கேயே திரும்பிப் போயிடுவேன்.”
“துணி துவைக்கிறது கஷ்டமான வேலையா?”
“நிச்சயமா. பன்னிரெண்டு மணி நேரம் வேலை செய்யணும். சம்பளம் கிடைக்கிறதோ ரொம்ப ரொம்ப கம்மி. நாள் முழுவதும் வேலை செஞ்சாலும் சில நேரங்கள்ல சாப்பாட்டுக்குக் கூட நாம வாங்குற கூலி போதாது. நான் அந்த நேரத்துல யாராவது ஆள் கிடைக்க மாட்டானான்னு தெருவுல இறங்கிடுவேன்.”
“உனக்கு எத்தனை குழந்தைங்க கிறிஸ்டின்?”
“அஞ்சு. இப்போ வயித்துல ஒண்ணு இருக்கு.”
“உன்னோட புருஷன் இப்போ இல்லியா?”
“இந்த குழந்தைங்க ஒவ்வொண்ணும் கண்ட கண்ட ஆளுங்களுக்குப் பொறந்தது.”
“இது தேவையா?”
அவள் தோளைக் குலுக்கினாள்: “செத்து போவோம்னு நினைச்சு யாராவது சுரங்கத்துக்குள்ள போகாம இருக்காங்களா?”
“இந்தக் குழந்தைகளோட அப்பன்மார்கள் யார் யார்ன்னு உனக்கு தெரியுமா?”
“முதல் நாயோட மகனைத் தவிர மத்தவன்களோட பேரு கூட தெரியாது.”
“இப்போ வயித்துல இருக்குற குழந்தையோட அப்பா...?”
“அது யாருக்கு தெரியும்? உடம்புக்கு முடியாம கிடந்தப்போ வேலைக்குப் போக முடியல. வழக்கம்போல தெருவைச் சுத்தினேன். அதனோட பலன்தான் இது. ம்... நடக்குறது நடக்கட்டும்...”
“இன்னொரு க்ளாஸ் ஒயின் சாப்பிடலாம்ல?”
“ஜின் குடிக்கிறேன்”- கையில் இருந்த ஒரு பையில் இருந்து ஒரு கறுத்த சுருட்டை எடுத்து பற்ற வைத்தவாறு கிறிஸ்டின் கேட்டாள்: “உன்னோட நிலைமையும் சுமார் மாதிரிதான் தெரியுது. உன்னோட ஓவியங்கள் விற்பனை ஆகுதா?”
“இல்ல... இப்பத்தான் நான் வரையவே ஆரம்பிச்சிருக்கேன்.”
“கொஞ்சம் தாமதமா வரையத் தொடங்கி இருக்கேன்னு நினைக்கிறேன்.”
“எனக்கு இப்போது முப்பது வயசு நடக்குது.”
“ஆனா, உன்னைப் பாக்குறப்போ நாற்பது வயசு ஆன மாதிரி தெரியுது. செலவுக்கு என்ன பண்றே?”
“என் தம்பி கொஞ்சம் பணம் அனுப்பி வைப்பான்.”
“என்ன இருந்தாலும் இந்த பாழாய்ப்போன துணி துவைக்கிற தொழிலை விட, உன்னோட வேலை பரவாயில்லைதான்.”
“நீ யார் கூட தங்கியிருக்கே கிறிஸ்டின்?”
“அம்மா கூட”
“நீ தெருவுல ஆள்தேடி அலையிறது உன்னோட அம்மாவுக்கு தெரியுமா?”
கிறிஸ்டின் உரத்த குரலில் வாய்விட்டு சிரித்தாள்: “அம்மாதான் என்னை அனுப்பிவிட்டதே. அம்மாவும் இதே தொழில் பண்ணிக்கிட்டு இருந்தவதான். அப்படிப் பண்ணி பொறந்தவங்கதான் நானும், என்னோட அண்ணனும்.”
“வாழ்க்கை இப்படி துயரம் நிறைஞ்சதா இருந்தா எப்படி கிறிஸ்டின்?”
“அதுக்காக அழுது என்ன பிரயோஜனம்? ஆமா... இதென்ன...?” - வின்சென்ட்டின் கருகிப் போயிருந்த கையைத் தன் கையில் எடுத்தவாறு கிறிஸ்டின் கேட்டாள்.
“நான்தான் கருக வச்சுட்டேன்.”
“ரொம்ப வேதனையா இருந்திருக்குமே! ஆமா... நீ ஏன் இங்கே வந்தே...? நண்பர்கள் யாரும் இல்லியா?”
“இல்ல... ஆனா, தம்பி இருக்கான். பாரீஸ்ல...”
“யாருமே பக்கத்துல இல்லாம தனியா இருக்கோமேன்னு தோணுதா?”
“பயங்கரமா தோணுது.”
“எனக்கும் அப்படித் தோணுறது உண்டு. வீட்ல அம்மா இருக்காங்க. அண்ணன் இருக்கான். பிறகு... என்கூட வர்ற கண்டவனும் இருப்பான். இருந்தாலும் தனியா இருக்கிறது மாதிரியே ஒரு உணர்வு. கூட ஆளுங்க இருக்காங்களான்றது முக்கியம் இல்ல. மனசைத் திறந்து அன்பு செலுத்த ஒரு ஆள் இருக்கான்றதுதான் முக்கியம்.”
சிறிது நேரம் மவுனமாக இருந்த வின்சென்ட் கேட்டான்: “நான் உன்கூட வரட்டா கிறிஸ்டின்? நான் தனியாதான் இருக்கேன்.”
“சரி... அப்படின்னா வேற யாரையும் நான் தேட வேண்டியது இல்லல்ல...?”
“கிறிஸ்டின்... நீ என்னோட கையைப் பிடிச்சல்ல... இப்படி பாசத்தோட ஒரு பெண் என் கையைப் பிடிச்சு எத்தனை வருஷமாச்சு தெரியுமா?”
“அதென்ன அப்படி சொல்ற? நீ பாக்குறதுக்கு அப்படி ஒண்ணும் மோசமான ஆளா தெரியலியே!”
“காதல் விஷயத்துல நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன்.”
வீட்டிற்கு போகும் வழியில் அவர்கள் இருவரும் ஏதோ சின்ன வயதிலிருந்தே ஒருவரையொருவர் நன்கு தெரிந்தவர்கள் போல பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டே நடந்தார்கள். கிறிஸ்டின் தன் வாழ்க்கையைப் பற்றி எதையும் மறைக்காமல் முழுவதையும் வின்சென்ட்டிடம் கூறினாள்.
“நீ எப்போவாவது ஓவியர்களுக்கு மாடலா நின்னுருக்கியா?”- வின்சென்ட் கேட்டான்.