வான்கா - Page 46
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8811
இப்படித்தான் இவன் எப்பவும் பேசுவான்”- அடுத்த நிமிடம் மவ்வின் வாயிலிருந்து படபடவென வார்த்தைகள் வெளியே வந்தன. அதைக்கேட்டு “ஆ... ஊ...” என்று கூச்சலிட்டு ரசித்துக் கொண்டிருந்தான் வெய்ஸன் ப்ரூக். அவன் சொன்னான்: “அவமானம்... அசிங்கம்... வான்கா... உன்னை இப்படித்தான் மத்தவங்க பாக்குறாங்க. உனக்கு தெரியுமா? நீ எப்படி நடக்குறே, எப்படி மத்தவங்களைப் பாக்குறே, எப்படி பேசுறேன்னு... கிட்டத்தட்ட ஒரு மிருகம் மாதிரியே இருக்கு உன் நடவடிக்கைகள் எல்லாம். மவ்... தாடியை இன்னும் கொஞ்சம் முன்னாடி நீட்டி பேசு. ம்... அப்படித்தான். தாடி ரோமத்தைக் கையால நல்லா சொறிஞ்சுக்கிட்டே பேசு.... ஹாஹாஹா... என்ன நடிப்புடா!”
வின்சென்ட் இதைப் பார்த்ததும் சாட்டையடி பட்டவன் மாதிரி அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான். கம்மிய குரலில் தொண்டைக்குள்ளிருந்து அவன் பேசினான்: “நீங்களும் என்னை மாதிரி தெருக்கள்லயும், போரினேஜின் வறண்டுபோன இடங்கள்லயும், பனி விழுந்துக்கிட்டு இருக்குற இரவு நேரங்கள்ல சாப்பிடுறதுக்கு உணவு இல்லாம ஜுரம் வந்து படுக்குறதுக்கு இடம் இல்லாம அலைஞ்சு திரிஞ்சிருந்தா உங்களோட உருவமும் குரலும் கூட என்னை மாதிரிதான் இருந்திருக்கும்.”
சில நிமிடங்களில் வெய்ஸன்ப்ரூக் அந்த இடத்தை விட்டு நீங்கினான். மவ் ஏதோ மயக்கம் வந்தவனைப் போல ஒரு நாற்காலியில் போய் சாய்ந்தான். வின்சென்ட் எதுவுமே பேசாமல் அங்கேயே நின்றிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு வின்சென்ட்டைப் பார்த்து மவ் கேட்டான்; “நீ இன்னும் போகலியா?”
வின்சென்ட் குரலைச் சற்று உயர்த்திக் கொண்டு கேட்டான்: “நம்ம ரெண்டு பேருக்கும் இடையில அப்படி என்ன தகராறு மவ் அண்ணே! நான் என்ன தப்பு பண்ணினேன்? சொல்லுங்க. ஏன் இப்படி என்கிட்ட நடக்குறீங்க?”
நாற்காலியை விட்டு எழுந்த மவ் தலைமுடியை விரலால் கோதி விட்டவாறு சொன்னான்: “உன்னோட நடவடிக்கைகள் எதுவுமே எனக்குப் பிடிக்கல. நீயே உழைச்சு சொந்தமா நாலு காசு சம்பாதிக்கக் கூடாதா? மத்தவங்கக்கிட்ட கடன் வாங்கி, வான்கா குடும்பத்தை அவமானப்படுத்தணுமா?”
ஓ... இதுதான் விஷயமா? தெர்ஸ்டீக்கிடம் கொஞ்சம் பணம் கடன் வாங்கி இருந்தான் வின்சென்ட். அதை அவன் மவ்விடம் சொல்லியிருக்க வேண்டும்.
“எனக்கு இனிமேல் ஓவியக் கலையைச் சொல்லித் தரமாட்டீங்களா?”
“மாட்டேன்.”
“சரி... அப்படின்னா நாம நண்பர்களாவே பிரிஞ்சிடுவோம். நீங்க செஞ்ச உதவிகளை வாழ்க்கையில என்னைக்கும் நான் மறக்க மாட்டேன். நன்றியுள்ளவனா இருப்பேன்.”
சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு மவ் மெதுவான குரலில் சொன்னான்: “வின்சென்ட், நான் சொன்னது எல்லாத்தையும் மனசுல வச்சுக்காதே. எனக்கு உடல் நிலை அவ்வளவு சரியா இல்ல. நான் என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்கு உதவுறேன். நீ கொண்டு வந்த படங்கள் எங்கே?”
“ஆனா... இப்போ... உங்களுக்கு?”
“கொண்டு வா... பாக்குறேன்.”
மவ் கலங்கிய கண்களுடன் அவற்றைப் பார்த்தான்.
“உன்னோட வரைவு இன்னும் சரியா வரல.”
“முன்னாடி அப்படி ஒரு கருத்தை நீங்க சொல்லலியே!”
“அன்னைக்கு நான் தப்பா சொல்லிட்டேன். ஓவியத்தைப் பத்தி கத்துக்கணும்னா ஆரம்பத்துல இருந்து முழுசா படிக்கணும். மூலையில ப்ளாஸ்டர் கால் இருக்கு. அதைப் பார்த்து வரை.”
வின்சென்ட் என்ன செய்வது என்றே தெரியாமல்- சுயநினைவே இல்லாமல் மூலையில் போய் உட்கார்ந்து ஓவியம் வரைய முற்பட்டான்.
ஒரு மயக்கத்திலிருந்து திடீரென்று எழுந்த மவ் வின்சென்ட் வரைந்த ஓவியங்களைப் பார்த்து முணுமுணுத்தான்: “சரியா இல்ல... இல்ல... இல்ல...”
வின்சென்ட் வரைந்த ஏழு படங்களையும் மவ் கிழித்து எறிந்தான். “அதே மோசமான பாணியில வரைஞ்சிருக்கே! வரைவுல கொஞ்சம் கூட பக்குவம் தெரியல. கண்ணால பாக்குறதை அப்படியே வரையத் தெரியாதா? வாழ்க்கையில ஒருநாள் கூட ஒழுங்கா- சீரா இருக்காதா உன்னோட வரைவு?”
“நீங்க ஏதோ ஓவியக் கல்லூரி ஆசிரியர் மாதிரி பேசுறீங்க?”
“நீ அங்கே ஓவியத்தைப் பத்தி படிச்சிருந்தா, நிச்சயம் ஒழுங்கா வரைஞ்சிருப்பே. இதைத் திருப்பி வரை பார்ப்போம்.”
மவ் மீண்டும் படம் வரைவதில் ஈடுபட்டான். வின்சென்ட் ஒன்றுக்குப் பின் இன்னொன்றாய் பிளாஸ்டிக் காலை பல தடவைகள் வரைந்து கொண்டே இருந்தான். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. இப்படிப் பல மணி நேரம் அங்கேயே உட்கார்ந்து அவன் வரைந்து கொண்டிருந்தான். கடைசியில் தளர்ந்து போய் மவ்விடம் தான் வரைந்த படங்களைக் காட்டினான்.
மவ் அவற்றைக் கையில் வைத்து சுருட்டினான்: “ஒண்ணு கூட சரியா இல்ல. ஓவியக் கலையோட ஆரம்பப் பாடத்தையே நீ தப்பா புரிஞ்சிருக்கே! இந்த ப்ளாஸ்டர் காலை வீட்டுக்கு எடுத்துட்டுப் போ. திரும்பித் திரும்பி வரை. படம் சரியா வந்தபிறகு, என்கிட்ட காட்டினா போதும்.”
“நான் போய் தொலையட்டா?”- வின்சென்ட் கோபத்துடன் கேட்டான். ப்ளாஸ்டர் காலைக் காலால் ஓங்கி ஒரு உதை கொடுத்தான். உதைத்த வேகத்தில் அது பல துண்டுகளாக நொறுங்கிப் போனது.
“என்கிட்ட இனிமேல் பிளாஸ்டரைப் பத்தி பேசவே கூடாது. என்னால இனியும் இதைக் கேட்டுக்கிட்டிருக்க முடியாது. உயிரோட உள்ள மனிதர்களோட கையும், காலும் வரையிறதுக்குக் கிடைக்காதப்போ, நான் ப்ளாஸ்டர் காலை வரையப் பாக்குறேன்.”
“உன் மனசுல அப்படி ஒரு எண்ணம் இருந்தா சரி”- மவ் மெதுவான குரலில் சொன்னான்.
“மவ் அண்ணே... ஒரு விஷயம் நான் சொல்றேன். செத்துப்போன, ஒரு பிரயோஜனமும் இல்லாத சட்டங்களை வச்சிக்கிட்டு அதுக்குள்ள நடமாடச் சொன்னா, உங்கள்ல யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். எனக்கு என்ன தோணுதோ, நான் எதைப்பார்த்து வரையணும்னு நினைக்கிறேனோ அதை வரைவேன். எப்படி வரையணும்னு தோணுதோ அப்படித்தான் நான் வரைவேன். நீங்க நினைக்கிற மாதிரி என்னால வரைய முடியாது.”
“இனிமேல் எனக்கும் உனக்கும் இடையே எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது”- ஒரு டாக்டர் பிணத்திடம் பேசுவது மாதிரி எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சொன்னான் மவ்.
¤ ¤ ¤
“அட கடவுளே!”- வின்சென்ட்டின் ஸ்டுடியோவிற்கு வந்த தெபோக், அங்கிருந்த கிறிஸ்டினைப் பார்த்து உரத்த குரலில் சொன்னான்: “இந்த சரக்குதான் உன்னோட வைப்பாட்டியா?”
“தெபோக், எனக்கு வைப்பாட்டின்னு யாரும் இல்ல. நீங்க இந்தப் பெண்ணைப் பத்தித்தான் பேசுறீங்கன்னு நான் நினைக்கிறேன்.”
நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே, முகத்தைச் சுளித்தவாறு கிறிஸ்டினைப் பார்த்தான் தெபோக்.
“இவ கூட எப்படித்தான் படுக்குறியோ தெரியல”
“இப்படி நீங்க கேக்குறதுக்கு காரணம்?”