வான்கா - Page 48
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8811
அடுத்த நாள் காலையில் இரண்டு பேரும் நடக்கத் தொடங்கினார்கள். சகோதரர்கள் இருவருக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு! ஒருவன் நவநாகரீகமாக உடையணிந்த பணக்காரன். இன்னொருவன் கிழிந்து போன பழைய ஆடையை அணிந்திருக்கும் ஏழை. ஒருவன் தன்னுடைய தவிட்டுநிற தாடியை அழகாக வாரிவிட்டு, மின்ன வைத்திருக்கிறான். இன்னொருவனுடைய தாடியோ சிவப்பு வர்ணத்தில் காடு போல வளர்ந்திருக்கிறது. ஒருவனுடைய நடை கம்பீரமாக- துள்ளலுடன் இருக்கிறது. இன்னொருவனோ கைகளை – காற்றில் இப்படியும் அப்படியுமாய் ஆட்டிக் கொண்டு குதித்து குதித்துக்கொண்டு நடக்கிறான்.
ஆனால், அவர்கள் இருவரும் இந்த வேறுபாட்டை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
¤ ¤ ¤
தியோ திரும்பிப் போன பிறகு, எண்ணெய் சாயம் கொண்டு படங்கள் வரையத் தொடங்கினான் வின்சென்ட். இரண்டு மூன்று படங்களை வரைந்தான். பாலத்திற்குப் பின்னால் வரிசை வரிசையாக வளர்ந்திருக்கும் அரளிச் செடிகளை ஓவியமாகத் தீட்டினான். இன்னொரு ஓவியம் – ஒரு கறுப்பான பாதை. மூன்றாவது ஓவியம் – ஒரு காய்கறித் தோட்டத்தில் நீல ஆடை அணிந்த ஒரு மனிதர் உருளைக் கிழங்கு பொறுக்கிக் கொண்டிருப்பது. காய்ந்து போன புல் நிறைந்திருக்கும் தரையில் வெள்ளை மணல். தூரத்தில் பச்சை பசேல் என்று மரங்கள். ஸ்டுடியோவிற்குத் திரும்பி வந்த வின்சென்ட் படத்தைப் பார்த்தான். அவன் மனதில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. யாரும் இந்தப் படத்தைப் பார்த்தால் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிற ஒரு ஓவியன் வரைந்த படம் என்று நிச்சயம் கூட மாட்டார்கள். ஓவியத்தின் முதுகெலும்பான வரைவுகள் எல்லாம் நன்றாகவே வந்திருக்கின்றன. அந்த ஓவியத்தில் வாழ்க்கையின் வெளிப்பாடு தெரிந்தது. ஆரம்பம் எப்போதும் தோல்வியில்தான் என்று எண்ணியிருந்த வின்சென்ட்டிற்கு இது மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது.
அடுத்து ஒரு இயற்கைக்காட்சியை மையமாகக் கொண்ட ஓவியத்தை வரைந்தான். செங்குத்தான ஒருமலைச் சரிவு. காய்ந்து போன இலைகளால் மரங்கள் நிலத்தில் உண்டாக்கும் நிழல்கள். தவிட்டு நிறம் கலந்த சிவப்பு ரேகைகள். நிறங்களின் ஆழத்தையும், பூமியின் கம்பீரத்தையும், அமைதியான சூழ்நிலையையும் ஓவியத்தில் எப்படி கொண்டு வருவது? இந்த இருண்ட நிழல்களுக்கு இடையே ஊடுருவிக் கொண்டிருக்கும் சூரிய வெளிச்சத்தை எப்படி ஓவியத்தில் தீட்டுவது?
வின்சென்ட்டின் உள்மனம் ஒவ்வொன்றையும் தீவிரமாக எண்ணிப் பார்த்து அசைபோட்டது. இளவேனிற்கால மாலை நேரத்தின் இளம் வெயிலில் மயங்கிக் கிடக்கும் நிலத்தில் தவிட்டு நிறமும், சிவப்பும் கலந்த நிழல் விழுகிறது. கம்பீரமாக நின்றிருக்கும் பீச் மரங்களின் ஒரு பக்கம் ஒரே இருட்டு. மரங்களுக்கும் தவிட்டு நிறம் கலந்த சிவந்த மண்ணிற்கும் பின்னால் நீலம் கலந்த சாம்பல் நிறத்தில் நிர்மலமான ஆகாயம் ஒளிமயமாக இருந்தது. வானத்தில் இளவேனிற்காலம் உண்டாக்கிய பொன் ரேகைகள். அங்குமிங்குமாய் அலைந்து திரியும் மனிதர்களின் இருண்ட உருவங்கள். மொத்தத்தில் கவித்துவமான வெளிப்பாடு அது.
“இந்த புதிர் நிறைஞ்ச - இளவேனிற்கால மாலைப்பொழுதின் உன்னதத்தை ஓவியமாத் தீட்டி முடிக்கிறவரை இந்த இடத்தை விட்டு நான் நகரமாட்டேன்” – வின்சென்ட் தனக்குத்தானே கூறிக் கொண்டான்.
இருள் கவியத் தொடங்கியது. வின்சென்ட் வேகமாக வரைந்து கொண்டிருந்தான். தூரிகையின் வேகமான அசைவுகளைக் கொண்டு மனித உருவங்களை வரைந்தான். மரங்கள் எத்தனை ஆழத்தில் வேரூன்றி இருக்கின்றன! அதையும் வரைந்தால் என்ன என்று நினைத்தான் வின்சென்ட். ஆனால், தூரிகையால் அதைச் சரியாக வரைய முடியவில்லை. பல தடவைகள் அவன் முயற்சி செய்தும், வரைவு சரியாக வரவில்லை. இருள் அதிகமாகிக் கொண்டே வந்தது. தூரிகையால் பூமியின் அற்புதத்தை வரைய முடியவில்லை. என்ன நினைத்தானோ வின்சென்ட் தூரிகையைத் தூர எறிந்தான். ட்யூபில் இருந்து நேராக கேன்வாஸில் நிறங்களைப் பிதுக்கினான்.
மற்றொரு தூரிகையால் எண்ணெய் சாயத்தில் இருந்து வேர்களையும், கிளைகளையும் வரைந்தான்.
இப்போது வின்சென்ட்டைச் சுற்றிலும் ஒரே இருட்டு. பூமி இருளில் முழுமையாக மூழ்கிக் கிடந்தது. மன திருப்தியும், புத்துணர்ச்சியும் அடைந்த வின்சென்ட் உரத்த குரலில் சொன்னான்: “இப்போ மரங்கள் பூமியோட ஆழத்தில் வேர் விட்டிருக்கு. நிலத்தில் இருந்து அதுமேல் நோக்கி வளருது. நான் என்ன சொல்லணும்னு நினைச்சேனோ, அதைச் சொல்லிட்டேன்.”
¤ ¤ ¤
மறுநாள் வெய்ஸன் ப்ரூக் வின்சென்ட்டின் ஸ்டுடியோவிற்கு வந்தான். கடுமையான விமர்சனத்திற்குப் பெயர் பெற்ற மனிதன். பயங்கர முரட்டு சுபாவக்காரன். முன்னொரு தடவை வின்சென்ட் கடன் கேட்டதற்கு கலைஞன் பட்டினி கிடக்க வேண்டுமென்றும், சந்தோஷமாக இருப்பதை விட மேலானது துக்கம் என்றெல்லாம் உபதேசம் சொல்லி காசே தராமல் வெறும் கையுடன் அவனைத் திருப்பி அனுப்பிவிட்ட ஆள் அவன்.
“நீ வரைஞ்ச ஓவியங்களை எங்கே காட்டு, பார்க்கலாம்”- வெய்ஸன் ப்ரூக் கேட்டான்.
சமீபத்தில் தான் வரைந்த ஓவியங்களை எடுத்து வந்து காட்டினான் வின்சென்ட்.
“இவை விற்பனைக்காகத்தானே! அப்படின்னா, நானே வாங்கிக்கிறேன்”- ஓவியங்களைப் பார்த்துவிட்டு வெய்ஸன் ப்ரூக் சொன்னான்.
“என்கிட்ட விளையாடுறீங்களா?”- அவனின் குணத்தை நன்கு தெரிந்தவனாகையால், வின்சென்ட் சொன்னான்:
“ஓவியங்கள் விஷயத்துல நான் எந்தக் காலத்திலும் விளையாட மாட்டேன். சரி... என்ன வேணும்?”
எங்கே தன்னை கேலி செய்து விடுவானோ என்ற பயத்துடன், சற்று தயங்கியவாறே வின்சென்ட் சொன்னான்: “என்ன கொடுக்க பிரியமோ கொடுங்க.”
“ஒவ்வொரு படத்திற்கும் அஞ்சு ஃப்ராங்க் தர்றேன். அஞ்சு ஓவியத்திற்கும் சேர்த்து மொத்தம் இருபத்தஞ்சு ஃப்ராங்க்.”
அவ்வளவுதான்-
வின்சென்ட்டின் கண்கள் அகல விரிந்தன. “இருபத்தஞ்சு ஃபிராங்கா! என்னோட சித்தப்பாவே இந்த ஓவியத்திற்கு இரண்டரை ஃப்ராங்கிற்கு மேல தரமாட்டார்.”
“வின்சென்ட்... ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சுக்கோ. அந்த ஆளு அப்படி நடந்தா அவர் உன்னை ஏமாத்துறார்னு வச்சுக்கோ. சொல்லப்போனா எல்லா வியாபாரிகளுமே இப்படித்தான். யாருக்குத் தெரியும்- ஒருவேளை என்னைக்காவது ஒருநாள் ஒரு ஓவியம் அய்யாயிரம் ஃப்ராங்க்னு நானே விற்பனை செய்ய வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்.”
“வெய்ஸன் ப்ரூக்...”- வின்சென்ட் சொன்னான்: “என்னைப் பொறுத்தவரை நீங்க ஒரு கடவுளால அனுப்பப்பட்ட மனிதர்னுதான் நான் நினைக்கிறேன். சில நேரங்கள்ல நீங்க ஒரு பிசாசாகவும் இருக்கீங்களே! இதுதான் புரிஞ்சுக்க முடியாத விஷயம்.”
“அதுதான் வாழ்க்கையோட ரகசியம்”- வெய்ஸன் ப்ரூக் சிரித்தான்: “என் நண்பர்களுக்கு என்மேல எப்பவுமே வெறுப்பு வராது.”