வான்கா - Page 52
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
வரைந்த படத்தை ஒரு நாற்காலியின் மேல் வைத்தான். பைப்பிற்கு நெருப்பூட்டினான். மீண்டும் படத்தையே உற்றுப் பார்த்தான். அப்போதும் அது சரியாக வரவில்லை என்பதை உணர்ந்தான். இந்தப் படத்தில் வாழ்க்கையின் உயிரோட்டம் எங்கே? உண்மையிலேயே வின்சென்ட்டின் தோல்விதான் இது. இரண்டு வருடங்களாக ஓவியங்கள் வரைந்து என்ன பயன்? எல்லாமே வீண்.
வின்சென்ட் கட்டிலில் விழுந்தான். எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தான் என்பது அவனுக்கே தெரியாது. திடீரென்று எழுந்தான். கான்வாஸைச் சுருட்டி தூர எறிந்தான். ஒரு புதிய கான்வாஸை ஈஸலில் வைத்து, சாயங்களைச் சரியாக்கினான்.
‘உள்ளதை அப்படியே பார்த்து வரைவதாக இருந்தால், அது வீண். அது தோல்வியில்தான் முடியும். உள் மனதிலிருந்து புறப்பட்டு வரும் உணர்ச்சிகள் அமைதியாக, மெதுவாக படைப்பின் மீது இறங்க வேண்டும். அப்படி நடந்தால், இயற்கை தானே படைப்பிற்குப் பின்னால் வந்து நிற்கும்’- பீட்டர்ஸென் சொன்ன வார்த்தைகள் வின்சென்ட்டின் ஞாபகத்தில் வந்தன. தன் முன் மாடல் அமர்ந்திருந்தது, தன் பார்வையை திசை திருப்பியிருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். இயற்கையின் பிடிக்குள் தன்னையே உருக்கி அர்ப்பணித்தான் வின்சென்ட். இதுவரை இயற்கையை உருக்கி தன் பிடிக்குள் கொண்டு வர முயற்சித்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியம் என்று அவன் மனமே உணர்ந்தது.
ஓவியத்திற்கு நல்ல தூசு படிந்த, தோல் களையப்பட்ட உருளைக்கிழங்கின் நிறத்தைக் கொடுத்தான் வின்சென்ட். பளபளப்பான மேஜை விரிப்பு. புகை படிந்த சுவர். மேலே இருந்து தொங்கிக் கொண்டிருக்கும் மண்ணெண்ணெய் விளக்கு. சிறிய பெண்ணான ஸ்டின் தெக்ரூத் ஆவி பறக்கும் உருளைக் கிழங்கைத் தன் தந்தைக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறாள். தாய் கருப்பு காப்பியை ஊற்றிக் கொண்டிருக்கிறாள். மகன் காப்பி பாத்திரத்தை உதட்டில் வைத்து சுவைத்துக் கொண்டிருக்கிறான். எல்லோருடைய முகங்களிலும் சாந்தம் குடி கொண்டிருக்கிறது.
சூரியன் கிழக்கே உதித்தது. அறை முழுவதும் நல்ல வெளிச்சம். வின்சென்ட் மெல்ல எழுந்தான். மனம் மிகவும் அமைதியாக இருந்தது. பன்னிரெண்டு நாட்களாக வின்சென்ட்டை அலைக் கழித்துக் கொண்டிருந்த விஷயங்கள் முழுக்க முழுக்க இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டிருந்தன. வின்சென்ட் ஓவியத்தையே உற்றுப் பார்த்தான். பன்றி இறைச்சியின், புகையின், உருளைக் கிழங்கின் மணம் அந்த ஓவியத்திலிருந்து புறப்பட்டு வந்தன. கடைசியில் வின்சென்ட்டின் கடுமையான போராட்டத்திற்கும், முயற்சிக்கும், உழைப்பிற்கும் வெற்றி கிடைத்து விட்டது. இதோ... அந்த உழைப்பின் சின்னம்! அழியக் கூடியதை அழிவே இல்லாத ஓவியத்தில் கொண்டு வந்திருக்கிறான் வின்சென்ட்! படிப்பறிவில்லாத இந்த கிராமத்து மக்கள் இதோ சாகாவரம் பெற்றிருக்கின்றனர்!
கோழிமுட்டையின் வெள்ளைக் கருவில் ஓவியத்தைக் கழுவி, அடியில் ‘உருளைக்கிழங்கு உண்பவர்கள்’ என்று எழுதினான் வின்சென்ட். இந்த ஓவியத்துடன் தான் வரைந்த வேறு சில நல்ல ஓவியங்களையும் சேர்த்து வைத்தான். மீதிப் பொருட்களை வீட்டிற்குள் கொண்டு போய் வைத்தான்.
அடுத்த சில நிமிடங்களில்-
பாரீஸுக்குப் பயணமானான் வின்சென்ட்.
¤ ¤ ¤
பாரீஸ்
பாரீஸ்! ஐரோப்பாவின் தலைநகரம், கலைஞர்களின் சொர்க்கம்.
கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருக்கிற மக்கள் வெள்ளம். சிவப்பும், கறுப்புமாய் ஆடையணிந்த ஹோட்டல் ஊழியர்கள். கை இடுக்கில் ரொட்டிக் கட்டுகளை இடுக்கிக் கொண்டு போகும் வீட்டு அம்மாக்கள். நடைபாதையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் உந்து வண்டிகள். அடர்த்தியான காலணிகள் அணிந்த வீட்டு வேலைக்காரிகள். பன்றி மாமிசம் விற்கும் கடைகள். கேக் விற்கப்படும் கடைகள். பேக்கரிகள், துணிகளைச் சுத்தமாக்கித் தரும் கடைகள்- இப்படி எத்தனை எத்தனையோ கடைகள்! ர்யூமோன்மார்த்ரி, ப்ளேஸ் சாத்தோ டன், நோத்ரதாம் தே லோரத்- அங்குள்ள சில தெருக்களின் பெயர்கள் இவை! வின்சென்ட்டுக்கு பாரீஸைப் பார்த்த கணத்திலேயே மிகவும் பிடித்துவிட்டது.
“இந்த ‘சத்யம், சமத்துவம், சகோதரத்துவம்’ன்ற முழக்கத்தில் இங்கே உள்ள மக்களுக்கு நம்பிக்கை இருக்குதா, தியோ?”- வின்சென்ட் கேட்டான்.
“நம்பிக்கை இருக்குன்னுதான் நான் நினைக்கிறேன். ராஜாக்கள் வம்சத்தை ஆதரிக்கிறவங்க காலம் முடிஞ்சிடுச்சு. சோஷலிஸ்டுகள் தாம் ஆட்சிக்கு வரப் போறாங்க. அடுத்த புரட்சி ராஜாக்களுக்கு எதிரா இல்ல; முதலாளித்துவத்துக்கு எதிராகத்தான்னு எமிலி ஸோலா (ஃப்ரெஞ்ச் நாவலாசிரியர், ரேச்சுரலிஸத்தின் ஆதரவாளர்) சொல்லியிருக்காரு.”
“ஸோலாவை உனக்கு நேரடியாத் தெரியுமா? உண்மையிலேயே எவ்வளவு பெரிய விஷயம்?”
“பால் ஸெஸான்தான் என்னை அவர்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். பத்திங்ஙோல் கஃபேயில் நாங்க வாரத்துக்கு ஒரு தடவை சந்திப்போம். அடுத்த தடவை போறப்போ உன்னையும் கூட்டிட்டுப் போறேன்.”
ர்யூமோன் மார்த்ரி என்ற இடத்தில் இருந்தது தியோ வேலை பார்த்த குபில்ஸின் கேலரி. பழைய சட்டதிட்டங்கள்தான் இங்கு பின் பற்றப்பட்டன. என்றாலும், கேலரியின் உரிமையாளர்கள் மோனே, தெகா, பிஸ்ஸாரோ, மானே ஆகியோரின் ஓவியங்களை அங்கு காட்சிப் பொருளாக வைக்கவும் தியோவிற்கு அனுமதி அளித்திருந்தார்கள்.
கேலரிக்குள் நுழைந்த வின்சென்ட். அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்து அதிசயித்துப் போனான். தன் கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பார்த்தான். சிறுவயது முதலே இருண்டு போன, வர்ணமிழந்த, பழைய பாணியில் நிறங்களைக் கலந்து வரைந்த ஓவியங்களையே கண்டு சலித்துப் போயிருந்த வின்சென்ட், கண்கள் முன்னால் கண்ட நிறங்களின் இந்திர ஜாலத்தைப் பார்த்து உண்மையிலேயே சொக்கிப் போனான்.
பிரகாசமே இல்லாத வெளிறிப் போன பின்புலத்தில் வரையப்பட்ட படங்களும், சட்டதிட்டங்களுக்கு ஆட்பட்டு சுதந்திரமே இல்லாமல் தீட்டிய ஓவியங்களும், பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய ஓவியங்களுக்கென்றே இருந்த தவிட்டு வர்ணமும் திடீரென்று மறைந்து ஒழிந்து போனதாக உணர்ந்தான் வின்சென்ட். சூரிய வெளிச்சத்தில் புத்துணர்வு கொண்டு நர்த்தனமாடும், வெளிச்சமும் காற்றும் உயிரோட்டமும் ஒருங்கே சங்கமமாகி வெளிப்பட்டு நிற்கும் ஓவியங்களை அங்கு பார்த்தபோது என்ன செய்வதென்றே தெரியாமல் சிலை என நின்றிருந்தான் அவன். சிவப்பு, பச்சை, நீல நிறங்களில் வரையப்பட்ட, பழைய பாணி ஓவியங்களைச் சவால் விட்டு அழைக்கிற, பாலே நடனப் பெண்களின் ஓவியத்தின்மேல் தன்னையே இழந்து நின்றான் வின்சென்ட். படத்திற்குக் கீழே இருக்கும் கையெழுத்தைப் படித்தான்- தெகா.
அதற்கடுத்து இயற்கைக் காட்சிகளைக் கொண்டு வரையப்பட்ட பல ஓவியங்கள். வேனலின் இனிய ஒளியில் நீராடிக் கொண்டிருக்கும் இயற்கையின் பொக்கிஷங்கள். ஆகாயத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் சூரியன். அடியில் படத்தை வரைந்த ஓவியரின் பெயர்: மோனே. பிரகாசம் ததும்பும் இந்த ஓவியங்களில் தெரியும் தெளிவையும், உணர்ச்சிப் பெருக்கையும், மண்ணின் மணத்தையும் வின்சென்ட் இதுவரை வேறு எந்த ஓவியங்களிலும் – வேறு எங்கும் கண்டதே இல்லை.