வான்கா - Page 54
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
நீ வரைஞ்ச படங்களைப் பார். உன்னோட ப்ரஷ் வரையும் வரைவுகளைப் பார்... மானேக்கு முன்னாடி இப்படி யாரும் வரைஞ்சது இல்ல... உன்னோட ஓவியங்கள்ல இருக்கிற முகங்களும், மரங்களும், வயல்ல வேலை பார்க்குற விவசாயிகளும் உன்னோட கற்பனையில இருந்து உருவானவைதானே! அதாவது- உன்னுடைய இம்ப்ரஸனில் இருந்து படைக்கப்பட்டவை அவை. முழுமையாக அது இருக்கா இல்லையான்றது வேற விஷயம். அது எப்படி இருந்தாலும், உன்னுடைய தனித்துவத்திலிருந்து உருவானவை அவை. மத்தவங்க வரையிறது மாதிரி வரையாம இருக்கணும்- இதுதான் இம்ப்ரஸனிஸத்தோட முக்கிய விஷயம். நீ இந்தக் கால கட்டத்தைச் சேர்ந்த ஓவியன். உனக்கு விருப்பம் இருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி நீ ஒரு இம்ப்ரஸனிஸ்ட் தான்!”
பாரீஸில் இருக்கும் இளம் இம்ப்ரஸனிஸ்ட்டுகளுக்கு தான் வரைந்த ஓவியங்களைப் பற்றி ஏற்கனவே தெரியும் என்று தியோ கூறியபோது, வின்சென்ட்டுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “தியோ... உன்னை எப்படிப் பாராட்டுறதுன்னே தெரியலடா...”- வின்சென்ட் ஆனந்தத்தின் உச்சியில் இருந்தான்.
“வா... நாம வெளியே போயிட்டு வருவோம்”- தியோ சொன்னான்: “ப்ராஸரி யூனிவேர்ஸல்ல அசல் சாத்தோப்ரியோன்ட் ஷாம்பெய்ன் கிடைக்கும். இன்னைக்கு பாரீஸும் வின்சென்ட் வான்காவும் ஒண்ணு சேர்ந்த நாள். அதை நிச்சயம் கொண்டாடியே ஆகணும்!”
¤ ¤ ¤
பாரீஸில் கோர்மன் ஸ்டுடியோ. கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அகலமான ஒரு அறை. வடக்குப் பக்கத்திலிருந்து சூரிய வெளிச்சம் அறைக்குள் விழுந்து கொண்டிருந்தது. நாற்காலிகளும், ஈஸல்களும் தாறுமாறாய் இங்குமங்குமாய்க் கிடந்தன. ஒரு மூலையில் நிர்வாணமாக ஒரு மாடல். ஓவியம் வரைவதில் மூழ்கிப் போயிருக்கும் சில மாணவர்கள்.
வின்சென்ட் அவர்களில் ஒருவன். மிகவும் கவனத்துடன் அவன் படம் வரைவதில் ஈடுபட்டிருக்க, திடீரென்று அறை வாசல் திறந்தது. தலையில் ஒரு பெரிய கட்டுடன், நாடிப் பகுதியைக் கையில் பிடித்தவாறு ஒரு பெண் அறைக்குள் நுழைந்தாள். நிர்வாணமாக நின்றிருந்த மாடலைப் பார்த்ததும், “அட கடவுளே!” என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள் அந்தப் பெண்.
“இந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்னை?”- வின்சென்ட் அருகில் அமர்ந்திருந்த ஆளிடம் கேட்டான்.
“ஓ... இது ஒவ்வொரு நாளும் இங்கே நடந்துக்கிட்டு இருக்குற பிரச்னைதான். பக்கத்துல ஒரு பல் வைத்தியர் இருக்கார். அவரைப் பார்க்குறதுக்காக இந்தப் பெண் வந்திருப்பா. உடம்புல துணியே இல்லாம நிர்வாணமா நின்னுக்கிட்டு இருக்கிற ஒரு ஆளைப் பார்த்ததும், எந்தப் பெண்தான் ஓடாம இருப்பா? அவளுக்கு இதைப் பார்த்ததும் ‘ஷாக்’ அடிச்ச மாதிரி இருந்திருக்கும். இதுல அவளுக்கு பல் வலி வேற. சொல்லவும் வேணுமா, இந்தப் பல் வைத்தியர் இந்த இடத்தை விட்டு வேற இடத்துக்குப் போறதுதான் நல்லது. அவனுக்கு ஒரு நோயாளி கிடைக்கணுமே! எல்லாருமே அரண்டு ஓடிக்கிட்டே இருந்தா? ஒரு நாள் நிச்சயம் ஒரு கத்தியை எடுத்துக்கிட்டு அந்த வைத்தியர் இங்க வரத்தான் போறான்!”- இதைச் சொன்ன அந்த ஆள் வின்சென்ட்டிடம் கேட்டான்: “இப்போதான் இங்கே நீ வந்திருக்கியா?”
“ஆமா... பாரீஸுக்கு வந்தே மூணு நாட்கள்தான் ஆகுது!”
“அப்படியா! உன்னோட பேரு?”
“வான்கா. உங்க பேர்?”
“ஹென்ரி துளுஸ்- லாத்ரெக். நீ அந்த தியோ வான்காவுக்கு ஏதாவது சொந்தமா?”
“அவன் என்னோட தம்பி!”
“ஓ... அப்படியா? உன்னோட பேரு வின்சென்ட்தானே? தியோ ஒரு நல்ல மனிதர். அவர் மட்டும்தான் இங்கே இளைஞர்களுக்கு நல்ல உற்சாகத்தையும், வரவேற்பையும் தந்துக்கிட்டு இருக்காரு. அது மட்டுமில்ல. எங்களுக்காக போராடுறதுக்குக் கூட அவர் தயாரா இருக்காரு. பாரீஸ் என்னைக்காவது ஒருநாள் எங்களை ஏத்துக்கிடுச்சின்னா, அங்கீகாரம் கொடுத்ததுன்னா அதுக்கு முழு முதற் காரணம் தியோ வான்காதான். இதை எங்கே வேணும்னாலும் நான் சொல்வேன்.”
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.”
வின்சென்ட் லாத்ரெக்கையே உற்றுப் பார்த்தான். பெரிய தலையின் மேல் பகுதியைத் தட்டி சப்பையாக்கியதுபோல இருந்தான். மூக்கும், உதடும், தாடியும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. தாடியில் இருக்கும் முடி கீழ் நோக்கி வளர்வதற்குப் பதிலாக கம்பி மாதிரி எழுந்து நின்று கொண்டிருந்தது.
“இந்த இடத்துக்கு எப்படி வந்தே?”
“எங்கேயாவது ஒரு இடத்துல இருந்து வரைஞ்சுதானே தீரணும்? ஆமா... நீங்க எப்படி வந்தீங்க?”
“எப்படி வந்தேன்னு எனக்கே தெரியல. போன மாசம் மோன்மார்த்ரியில ஒரு விபச்சாரம் நடக்குற இடத்துல தங்கி இருந்தேன். அங்கே இருந்த சில பெண்களைப் படங்களா வரைஞ்சேன். உண்மையிலேயே அதுதான் சரியான வரைவு! ஸ்டுடியோவுல உட்கார்ந்து வரையிறதெல்லாம் சின்னப் பிள்ளைங்க விளையாட்டுன்னுதான் சொல்லுவேன்!”
“உங்க படங்களை நான் பார்க்கலாமா?”
“கட்டாயம் பார்க்கணும்னு விரும்புறியா?”
“நிச்சயமா...”
“எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன்- லூஸ்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. காரணம் என்னன்னா, நான் நடனம் ஆடுற பெண்களையும், கோமாளிகளையும், தேவடியாள்களையும் தான் பெரும்பாலும் ஓவியங்களா வரைஞ்சிருக்கேன். உண்மை என்னன்னா இவங்கக்கிட்டத்தான் பல்வேறு சுபாவங்களைப் பார்க்க முடியும்!”
“நான் அதை ஒத்துக்குறேன். தி ஹேகில் இருக்குறப்போ நான் ஒரு விபச்சாரி கூடத்தான் தங்கியிருந்தேன்!”
“அப்படியா? பரவாயில்லையே! வான்கா குடும்பம் அப்படி ஒண்ணும் மோசம் இல்லியே! நீ வரைஞ்ச படங்களை நான் பார்க்கட்டுமா?”
“நிச்சயமா. இதோ நாலு ஓவியங்கள் இருக்கு!”
சிறிது நேரம் வின்சென்ட் வரைந்த ஓவியங்களைப் பார்த்த லாத்ரெக் சொன்னான்: “நண்பனே, நீயும் நானும் நல்ல நண்பர்களா இருப்போம். நாம ரெண்டு பேருமே ஒரே மாதிரி சிந்திக்கக் கூடிய ஆளுங்கன்றது தெரிஞ்சு போச்சு. நீ வரைஞ்ச இந்தப் படங்களை கோர்மன் பார்த்திருக்காரா?”
“இல்ல...”
“அந்த ஆள் இதைப் பார்த்தார்னா உன்னை இந்த இடத்தை விட்டே விரட்டிடுவாரு. ஒருநாள் அந்த ஆள் என்கிட்ட சொல்றாரு: “லாத்ரெக், உன்னோட படங்கள் ஆச்சரியப்படுற அளவுக்கு இருக்கு. உன்னோட ஓவியங்கள் பெரும்பாலும் ‘கேரி கேச்சர்கள்’னு.”
“அப்போ நீங்க சொல்லி இருப்பீங்க ‘கோர்மன், அவை ‘கேரிகேச்சர்கள்’ இல்ல கேரக்டர்கள்’னு.”
வின்சென்ட் இப்படிச் சொன்னதைக் கேட்டதும், லாத்ரெக்கின் ஊசி முனை போன்ற கூர்மையான கறுப்பு விழிகளில் ஒரு இனம் புரியாத புத்தொளி!
“உனக்கு நான் வரைஞ்ச பெண்களோட படங்களைப் பார்க்கணும்போல இருக்கா?”
“நிச்சயமா!”
“அப்படின்னா வா. இந்த இடம் பிணங்களைப் பாதுகாக்குற இடம் போல இருக்கு!”
லாத்ரெக் எழுந்து நின்றான். தடித்துப் போன கழுத்து, விரிந்த தோள், புஷ்டியான கைகள். ஆனால், இடுப்புக்குக் கீழே மெலிந்து போன செயலிழந்த கால்கள். எழுந்து நின்ற பிறகும், உட்கார்ந்தபோது இருந்த உயரமே அவனுக்கு இருந்தது.