வான்கா - Page 58
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
நெருப்பு மலையிலிருந்து புறப்பட்டு ஓடி வரும் கடல்! ஒரு தெய்வம்கூட வசிக்க முடியாத ஆகாயம்! வயதாகிப் போன, ஒழுங்கில்லாத கண்களில் யாருக்குமே புரியாத பல புதிர்களையும், ரகசியங்களையும் தேக்கி வைத்திருக்கும் மனிதர்கள்! இளம் சிவப்பும், வயலட்டும், கடும் சிவப்பும் கலந்து வரையப்பட்ட இயற்கைக் காட்சிகள்! மிருகங்களும் செடிகளும் சூரியனின் வெப்பம் தாங்காமல் அல்லல்படும் காட்சிகள்!
“நீங்க கிட்டத்தட்ட லாத்ரெக்கைப் போலத்தான்”- ஓவியங்களைப் பார்த்த வின்சென்ட் சொன்னான்: “பொதுவா எல்லாத்தையும் வெறுக்குறீங்க!”
“என்னோட ஓவியங்களைப் பாக்குறப்போ என்ன தோணுது?”
“சரியா எனக்குச் சொல்லத் தெரியல. இவற்றைப் புரிந்து கொள்ளணும்னா அதிக நேரம் வேணும். நான் இன்னொரு முறை வந்து இந்த ஓவியங்களைப் பார்க்கட்டுமா?”
“எப்போ வேணும்னாலும் வா. பாரீஸ்லயே ஒரே ஒரு ஓவியர்தான் என் ஓவியங்களைப் போல நல்லா வரையக்கூடியவர். அவர் – ஜார்ஜ் ஸெரா. என்னைப் போல ‘ப்ரிமிட்டிவிஸ்ட்’ அவர். பாரீஸ்ல இருக்குற மற்ற முட்டாள்களெல்லாம் ஒரு தனி ரகம்.”
“ஜார்ஜ் ஸெரா... நான் அவரைப் பத்தி கேள்விப்பட்டதே இல்லியே!”
“கேள்விப்பட்டதே இல்லியா? எப்படி கேள்விப்பட முடியும்? இங்கே ஜார்ஜ் ஸெராவோட ஓவியங்களை யாரும் கண்காட்சியில வைக்கிறதே இல்ல. ஆனா, பெரிய கலைஞன் அவன்.”
“அவரை நான் பார்க்கணும் – பழகணும்.”
“நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். ப்ரூவன்டில் நாம சாப்பிடுவோமா? கையில பணம் இருக்கா? என் கையில மொத்தமே ரெண்டு ஃப்ராங்க்தான் இருக்கு. ஒண்ணு செய்வோம். இந்தக் குப்பியையும் கையோட எடுத்துட்டுப் போயிடுவோம்!”
¤ ¤ ¤
ஸெராவின் வீட்டை அவர்கள் அடைந்தபோது அதிகாலை இரண்டு மணி.
“நாம தேவையில்லாம அவரைத் தொந்தரவு செய்றோம்னு நினைக்கிறேன். இப்போ அவர் அனேகமா நல்லா தூங்கிக்கிட்டு இருப்பாரு”- வின்சென்ட் காகினிடம் சொன்னான்.
“ஏய்... அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஆளு ராத்திரியும் பகலும் வேலை செஞ்சிக்கிட்டே இருப்பாரு. சரியா தூங்குறது இல்லைன்னு நினைக்கிறேன். இந்த வீடு ஜார்ஜோட அம்மாவுக்குச் சொந்தமானது. ஒருநாள் அந்த அம்மா என்கிட்ட சொன்னாங்க: ‘ஜார்ஜுக்கு ஓவியக் கலை மீதுதான் தணியாத தாகம். அவன் அதையே வாழ்க்கையில தொடரட்டும். எங்களைப் பொறுத்தவரை வாழுறதுக்குத் தேவையான பணம் என்கிட்ட இருக்கு. அவன் சந்தோஷமா வாழ்க்கையில இருக்கணும். அது ஒண்ணு போதும் எனக்கு.’ இப்பவும் அந்த அம்மா சொன்னது அப்படியே ஞாபகத்துல இருக்கு. ஜார்ஜ் அந்த அம்மாவுக்கு ஒரு நல்ல மகன். எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத ஆள். தண்ணி அடிக்கிறது இல்ல. புகை பிடிக்கிறது கிடையாது. கெட்ட வார்த்தைன்னு ஒண்ணு வராது வாயில. ராத்திரி நேரத்துல தேவையில்லாம ஊர் சுத்துறது இல்ல. பெண்கள் பின்னாடி சுத்தறது இல்ல. பணத்தைத் தேவையில்லாம செலவழிக்கிறது இல்ல. அவருக்குத் தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான். அது- பெயின்டிங். ஒரு பெண்ணுடன் அவருக்குத் தொடர்பு உண்டுன்னும், அவள் மூலம் ஒரு மகன் இருக்குறான்னும் சொல்லுவாங்க. ஆனா, ஜார்ஜ் இதுவரை அதைப்பத்தி ஒரு வார்த்தைகூட வாய்திறந்து சொன்னதில்லை...”
கொஞ்சம் மணலை வாரி ஜன்னல் பக்கம் எறிந்து காகின், ஸெராவின் கவனத்தைத் திருப்ப முயற்சித்தார். கீழே வந்து வாசல் கதவைத் திறந்த ஸெரா உதட்டில் விரல் வைத்தவாறு சொன்னார்: “அம்மாவை எழுப்பிடாதீங்க... அமைதி.”
மேலே இருந்த விசாலமான அறையை அடைந்ததும், காகின் வின்சென்ட்டை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “ஜார்ஜ்... இது வின்சென்ட். தியோவோட அண்ணன். ஒரு டச்சுக்காரன் மாதிரி படம் வரைவான். அதை விட்டு பார்த்தால், ஆள் நல்லவன்.”
அறை முழுவதும், இன்னும் முழுமையாக முடிக்கப்படாத ஓவியங்களைக் கொண்ட கேள்வாஸுகள்.
“உங்களைப் பார்த்ததுல நான் ரொம்பவும் சந்தோஷப்படுறேன், ம்ஸ்யெ வான்கா. ஒரு நிமிஷம் மன்னிக்கணும். இதோ நான் வந்திர்றேன். அந்த கான்வாஸ் காய்ந்து போறதுக்குள்ள கொஞ்சம் அதுல நிறம் சேர்க்க வேண்டி இருக்கு.”
ஸெரா ஒரு கான்வாஸுக்கு முன்னால் முக்காலி போட்டு உட்கார்ந்தார். கேஸ் விளக்கு அறை முழுவதையும் மஞ்சள் வர்ணத்தில் மூழ்கச் செய்திருந்தது. முன்னால் சாயம் நிரப்பப்பட்ட சுமார் இருபது சிறிய பாத்திரங்கள் இருந்தன. ஸெரா ஒரு சிறிய ப்ரஷ்ஷை எடுத்து பாத்திரத்தில் தொட்டு கான்வாஸில் நிறங்களைப் பரப்பத் தொடங்கினார். சிறிய சிறிய பொட்டுகளாக வைத்தார். எந்தவித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து ஒருவித இயந்திரத் தனத்துடன் பொட்டுக்கு மேல் பொட்டாக வைத்துக் கொண்டிருந்தார். கையில் நேராகப் பிடித்திருந்த ப்ரஷ்ஷை சாயத்தில் தொடுவார். அடுத்த நிமிடம் அதைக் கொண்டு கேன்வாஸில் பொட்டு வைப்பார். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் நிறங்களின் அமர்க்களமான விளையாட்டு அங்கு தெரிந்தது.
வின்சென்ட், ஸெரா படம் வரைவதையே வைத்த கண் எடுக்காது- தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“முடிஞ்சிருச்சு”- ஸெரா சொன்னார்.
“அதை வின்சென்ட் கொஞ்சம் பார்க்கலாமா?”- காகின் கேட்டார்: “இந்த ஆளு இதுவரை இவன் இருந்த இடத்துல இருந்த ஆடு மாடுகளோட படங்களைத்தான் வரைஞ்சிருக்கான். போன வாரம் வரை மாடர்ன் ஓவியம்னா இந்த ஆளுக்கு என்னன்னே தெரியாது!”
“இந்த ஸ்டூல்ல வந்து உட்காருங்க, ம்ஸ்யெ வான்கா”- ஸெரா அழைத்தார்.
தன் முன்னால் கான்வாஸில் நிறைந்திருக்கின்ற காட்சியை வாழ்க்கையிலோ அல்லது வேறு யாருடைய ஓவியங்களிலோ இதுவரை வின்சென்ட் பார்த்தே இல்லை. வர்ணப் பொருட்களில் இருந்து வடிவத்தைப் பெற்ற மானிட உருவங்கள்! புல்வெளியும், ஆறும், படகுகளும், மரங்களும் – பல வர்ணங்களால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டிருந்தன. காகின், தெகா, மானே ஆகியோர் உபயோகித்த வர்ணங்களைவிட மிகவும் நேர்த்தியாகவும் – பொருத்தமாகவும் வர்ணங்களைக் கலந்திருந்தார் ஸெரா. அவர் வரைந்திருந்த முறை வின்சென்ட்டின் உள் மனதைச் சுண்டி இழுத்து இனம் புரியாத ஒரு மயக்க நிலயை உண்டாக்கியது. ஓவியத்தில் கண்ட உயிர்ப்பு, இயற்கையில் காணும் உயிர்ப்பை விட பல மடங்கு உயர்ந்ததாக இருந்தது. படத்தின் பின்புலம் ஒளி மயமாக இருந்தது. ஆனால், அந்த இயற்கைப் பிரதேசமெங்கும் ஒருவித அமைதி குடி கொண்டிருந்தது. வாழ்க்கையின் ஆர்ப்பாட்டங்களும், சலனங்களும் அடங்கிப்போனது போல அந்த ஓவியத்தில் அப்படியொரு அமைதி, உயிரோட்டத்துடன் படைக்கப்பட்டிருந்தது.
காகின் வின்சென்ட்டின் முகத்தில் தெரிந்த ஆச்சரியத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்: “பரவாயில்லை, வின்சென்ட். ஜார்ஜோட கேன்வாஸை முதன் முதலா பாக்குற யாருமே இப்படி ஆச்சரியப்பட்டுத்தான் நிற்பாங்க. இந்த ஓவியங்களைப் பத்தி என்ன நினைக்கிறே?”