வான்கா - Page 60
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“ஒரு நாள் நிச்சயம் உடன்படுவோம்.”- ஸெரா கோட்டைக் கழற்றி தரையில் தான் வரைந்த படத்தைத் துடைத்தார்.
“இனி சாந்தமான ஒரு படத்தை வரையிறதா வச்சுக்குவோம். நான் வரையிற கோடுகள் ஒரே நிலையில இருக்கும். உஷ்ணமான வர்ணங்களும், குளிர்ச்சியான வர்ணங்களும் ஒரே தளத்தில், சமநிலையில் இருக்கும், புரியுதா?”
“ஜார்ஜ்... முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கக்கூடாது”- காகின் அவரைக் கிண்டல் செய்தார்.
“துக்கத்தை ஓவியத்துல கொண்டு வரணும்னா...”- ஸெரா தொடர்ந்தார்: “இதோ... கோடுகள் இப்படி கீழே இறங்கணும்... குளிர்ச்சியான – இருண்டு போன நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். இப்போ பாருங்க... துக்கத்தின் சாயல் – அம்சம் தெரியுதான்னு. ஒரு குழந்தைகூட இதை வரைஞ்சிட முடியும். இவற்றோட ஃபார்முலாக்களை ஒரு புத்தகத்துல கொண்டு வரணும். ஒரு ஓவியன் இந்தப் புத்தகத்தைப் படிச்சா போதும். படம் வரையணும்னா சாயத்தை வாங்கி, புத்தகத்துல என்ன சொல்லியிருக்கோ, அதன்படி வரைஞ்சா போதும். முழுமையான – விஞ்ஞான ரீதியான ஓவியக்கலையைக் கற்றுத்தேர்ந்த ஒரு ஆள்ன்ற பேரு அந்த ஆளுக்குக் கிடைக்கும். ராத்திரியோ, பகலோ – எந்த நேரத்திலும் அந்த மனிதன் படம் வரையலாம். சன்னியாசியோ, நாடோடியோ, ஏழு வயசுப் பையனோ, எழுபது வயசு வயோதிகனோ – யாராக இருந்தா என்ன... அந்த ஆளோட படைப்பிற்கு ஒரு பூரணத்துவம் – முழுமை கிடைச்சிருக்கும்ன்றது மட்டும் நிச்சயம்.”
ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாமல் வின்சென்ட் பேந்தப் பேந்த விழித்தான். காகின் உரத்த குரலில் வாய்விட்டுச் சிரித்தார்: “உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சோன்னு வின்சென்ட்டிற்கு சந்தேகம் வந்துடுச்சு!”
“அப்படியா ம்ஸ்யெ வான்கா?” – ஸெரா கேட்டார்.
“அய்யய்யோ... அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. என்னையே பலரும் கிறுக்கன்னு பல தடவை அழைச்சிருக்காங்க. அதனால அந்தப் பேரைக் கேட்டாலே எனக்குப் பிடிக்காது. ஆனா, நான் ஒண்ணு சொல்றேன்னு நீங்க தப்பா நினைக்கக்கூடாது. நீங்க சொல்றது ஒவ்வொண்ணும் அசாதாரணமானதா இருக்கு...”
“அதாவது – ஸெரா சொன்னதெல்லாம் சரின்னு நீ சொல்றே...”- காகின் சிரித்தார்.
அப்போது வாசல் கதவை யாரோ தட்டிய சத்தம் கேட்டது. “தெய்வமே, நாம அம்மாவை தூக்கத்தை விட்டு உசுப்பி விட்டுட்டோம்”- காகின் வருத்தமான குரலில் சொன்னார்: “நான் ராத்திரி நேரங்கள்ல இங்கே இருந்து போகலைன்னா, உதை கிடைக்கும்னு ஏற்கனவே அம்மா சொல்லி இருக்காங்க!”
அடுத்த நிமிடம்-
ஸெராவின் தாய் உள்ளே வந்தாள். தடிமனான ஒரு மேலாடையும், தலையில் ஒரு தொப்பியும் அணிந்திருந்தாள். “ஜார்ஜ்... ராத்திரி நேரத்துல வேலை செய்ய மாட்டேன்னு என்கிட்ட சத்தியம் பண்ணிக் கொடுத்தேல்ல...! அ... பால், நீயா? நீ ஒழுங்கா வாடகையைக் கொடுத்திருந்தா, ராத்திரி தங்க ஒரு அறை கிடைச்சிருக்கும்ல?”
“அம்மா... என்னை இங்கே தங்க அனுமதிச்சா, வாடகைப் பிரச்னை எந்தக் காலத்திலும் வராம பாத்துக்குறேன்.”
“அய்யய்யோ... வேண்டவே வேண்டாம். நீ சொன்னதுக்கு நன்றி. குடும்பத்துல ஒரு ஓவியனைத் தாங்குறதே பெரிய விஷயம். இங்க பாரு... நான் கொஞ்சம் காப்பியும், திங்கிறதுக்கும் கொண்டு வந்திருக்கேன். பால்... உனக்கு ஒரு குப்பி அப்ஸிந்த் கொண்டு வரட்டுமா?”
“அம்மா... நீங்க அதைக் குடிச்சு காலி பண்ணாமலா இருப்பீங்க?”- அம்மாவைக் கிண்டல் பண்ணினார் காகின்.
“பால்... உதை விழுவதைப் பத்தி ஏற்கெனவே நான் சொன்னது ஞாபகத்துல இருக்கும்னு நினைக்கிறேன்...”
வின்சென்ட்டை ஸெரா தன் தாய்க்கு அறிமுகப்படுத்தி வைத்தான்: “இது என்னோட புதிய நண்பர் – வின்சென்ட் வான்கா!”
அம்மா வின்சென்ட்டின் கையைப் பிடித்து குலுக்கினாள்: “என் மகனோட நண்பர்கள்னா... இங்கே எந்த நேரத்திலும் – காலையில நாலு மணியா இருந்தாக்கூட தாராளமா வரலாம். உனக்குக் குடிக்க என்ன வேணும்?”
“காகினின் அப்ஸிந்த் கொஞ்சம் குடுங்க!”
“நிச்சயமா இல்ல...” – காகின் சொன்னார்: “அம்மா குடிக்கிற விஷயத்துல இங்கே ரேஷன் கணக்கு வச்சிருக்காங்க. ஒரு மாசத்துக்கு ஒரு குப்பி. வேற ஏதாவது குடி. உன்னோட அந்த கிராமத்து ருசிக்கு அப்ஸிந்த்துக்கும் ஓடையில ஓடுற தண்ணிக்கும் நிச்சயம் வித்தியாசமே தெரியாது.”
¤ ¤ ¤
பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் அறையை விட்டு வெளியேறினார்கள். பாரீஸ் நகரம் அப்போதுதான் இருட்டின் மூடு பனியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெற்றுக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளி ரேகைபோல ஸெய்ன் நதி ஓடிக் கொண்டிருந்தது. மோன்மார்த்ரியில் இருந்து ஸெய்ன் வரை, பிறகு ஸெய்ன் கரையோரத்திலிருந்து மோன் பார்ணாஸ் வரையுள்ள வீடுகள் சூரியன் உதித்து மேலே வர வர, ஒளி பெற்று வரிசையாக அழகு காட்டின. ஒருபக்கம் இன்னும் உறக்கத்தைவிட்டு எழுந்திராத பாதெ பொலோன் என்ற பச்சைப்பசேல் சமவெளி. பாரீஸ் நகரத்தின் முக முத்திரைகளான நாட்டர்டாம் சர்ச்சும் ஆர்க் தெ ட்ரையோம்ப்பும் ஆகாயத்தையே எட்டிப் பிடிக்கும் அளவிற்கு படு உயரமான- அதே நேரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தன.
அதற்குப் பிறகு வந்த பல நாட்களாக ர்யூ லாவலில் இருக்கும் அறை அமைதியின் வடிவமாக இருந்தது. கொஞ்சமும் எதிர்பார்க்காமல் தன்னுடைய அறையில் நிலவிய அந்த அமைதிச் சூழலுக்காக கடவுளுக்கு மனம் திறந்து நன்றி கூறினான் தியோ. ஆனால், இந்த அமைதி நிலை அதிக நாட்கள் நீடித்து நிற்கவில்லை.
வின்சென்ட்டிற்கு இப்ரஸனிஸ்ட்டாக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதுவும் – எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக. விளைவு – தன்னுடைய படம் வரையும் ஆற்றலை மேம்படுத்துவதற்குப் பதிலாக, கண்ணை மூடிக்கொண்டு இப்ரஸனிஸ்டுகளைப் பின்பற்றத் தொடங்கினான் அவன். அவன் வரையும் படங்கள் ஸெரா, துளுஸ் – லாத்ரெக், காகின் ஆகியோரின் படங்களின் அப்பட்டமான நகல்களாக மாறத் தொடங்கின. தான் கொஞ்சமாக வளர்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக அவன் நினைத்தான்.
ஒரு நாள் இரவு, தியோ வின்சென்ட்டைப் பார்த்து கேட்டான்: “என்ன பண்ணிக்கிட்டு இருக்கே நீ? உன்னோட பேர் என்ன?”
“வின்சென்ட் வான்கா.”
“உன் பேர். பால் காகின், ஜார்ஜ் ஸெரா அப்படின்னு ஒண்ணும் இல்லியே!”
“நீ ஏதோ மனசுக்குள்ள வச்சிக்கிட்டு பேசுறேன்னு நினைக்கிறேன், தியோ!”
“நீ ஒரு ஸெராவா ஆகணும்னு ஆசைப்படுறே. உலகத்துலயே ஒரே ஒரு லாத்ரெக்தான் இருக்க முடியும்ன்றதை உன்னால புரிஞ்சுக்க முடியலியா? அதே மாதிரி ஒரே ஒரு காகின்தான் உலகத்திலேயே இருக்க முடியும். அதற்காக நாம தெய்வத்துக்குத்தான் நன்றி சொல்லணும். அவங்களை அப்படியே காப்பி அடிக்கணும்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் தெரியுமா, வின்சென்ட்?”