வான்கா - Page 62
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“நன்றி. உட்காருங்க. பைப்புல போடுறதுக்கு இந்தாங்க புகையிலை. இன்னைக்கு நூத்தி அஞ்சு ஃப்ராங்க் கிடைச்சிருக்கு. இதை வச்சு சாப்பாடும், புகையிலையும், கான்வாஸும் வாங்கலாம்.”
மேஜைக்கு இரு பக்கங்களிலும் அவர்கள் அமைதியாக உட்கார்ந்து புகை பிடித்தார்கள்.
“ரூஸோ, ஆளுங்க உங்களை பைத்தியக்காரன்னு சொல்றாங்களே!”
“அது எனக்குத் தெரியும். தி ஹேகில் உங்களைக் கூட அப்படித்தான் நினைக்கிறாங்க!”
“உண்மைதான்!”
“அவங்க எப்படி வேணும்னாலும் நினைச்சிட்டுப் போகட்டும். ஒருநாள் என்னோட ஓவியங்கள் லக்ஸம்பரக்கில் வைக்கப்படும். அது மட்டும் நிச்சயம்.”
“என்னோட ஓவியங்கள் லூவரில் வைக்கப்படும்!”
இரண்டு பேரும் ஓருவரின் கண்களை இன்னொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
“மக்கள் அப்படிச் சொன்னதை ஒத்துக்கிட்டோம்ன்றதை கொண்டாடணும்ல! அதனால வெளியே போய் குடிப்போம். சரியா?”
அடுத்த புதன்கிழமை காகின், வின்சென்ட்டின் அறைக்கதவைத் தட்டினார். “உன்னை சாப்பாட்டுக்கு அழைச்சிட்டுப் போகும்படி தியோ என்கிட்ட சொன்னார். காலரியில் சாயங்காலம்வரை வேலை இருக்காம்.”
வின்சென்ட் ப்ரபாண்டிலும், தி ஹேகிலும் வரைந்த சில ஓவியங்கள் அறையில் இருந்தன. சில நிமிடங்கள் காகின் அவற்றையே உற்றுப் பார்த்தார். இடையில் ஏதாவது பேசுவதற்காக உதட்டை நனைத்தார். ஆனால், குரல் சரியாக வெளியே வரவில்லை. மனதில் உள்ளதை வெளியே சொல்வதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினார். கடைசியில் வின்சென்ட்டிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீ ஒரு நரம்பு நோயாளியா?”
வின்சென்ட் ஆடை மாற்றுவதற்கிடையில் திரும்பிப் பார்த்தான்: “என்ன சொன்னீங்க?”
“நீ ஒரு நரம்பு நோயாளியான்னு கேட்டேன்.”
“எனக்குத் தெரிஞ்சவரையில அப்படி இல்ல... அப்படி நீங்க கேக்குறதுக்குக் காரணம்?”
“அது... அது... இந்த ஓவியங்களைப் பாக்குறப்போ அது இந்தக் கான்வாஸை விட்டு தெறிச்சுடுமோன்னு மனசுல படுது. உன் கான்வாஸைப் பாக்குறப்போ என்னோட நரம்புகள் முறுக்கேறிப்போய் நிக்குது. இந்த ஓவியங்கள் வெடிச்சு சிதறலைன்னா, அதைப் பாக்குறவன் வெடிச்சு சிதறிடுவான். அப்படித்தான் என் மனசுல படுது. உன்னோட ஓவியங்களைப் பாக்குறப்போ என் வயித்துல என்னவோ செய்யுது. வயித்தைக் கலக்குற மாதிரி இருக்கு. நரம்பு முறுக்கேறிப் போய் நிக்கிற எனக்கு சொல்லப்போனா, சுய உணர்வையே இழந்தது மாதிரி ஆகிப்போகுது. என்னையே என்னால கட்டுப்படுத்த முடியல...”
“அப்படின்னா இனிமே வயிறை இளகச் செய்யிறதுக்கு நானே என் ஓவியங்களை மருந்தா பயன்படுத்த வேண்டியதுதான்”- வின்சென்ட் விளையாட்டாகச் சொன்னான்: “ஒரு ஓவியத்தை கக்கூஸ்ல மாட்டி வச்சிட வேண்டியதுதான். தேவைப்படுற நேரத்துல அதை வந்து பார்த்துக்கிட வேண்டியதுதான்!”
“நான் உண்மையாகவே சீரியஸா பேசுறேன், வின்சென்ட். உன் ஓவியங்களைப் பார்க்க என்னால முடியல. ஒரு வாரத்துக்கப்புறம் நிச்சயம் நான் பைத்தியமாயிடுவேன். அந்த ஓவியங்கள் கட்டாயம் என்னை அப்படி ஆக்கிடும்.”
வெளியே இறங்கிய அவர்கள் இருவரும் பார்க்கை நோக்கி போனார்கள். அங்கே பெஞ்ச் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு ஆளைப் பார்த்து காகின் சொன்னார்: “இதுதான் பால் ஸெஸான். பெஞ்ச்ல படுத்து தூங்கிக்கிட்டு இருக்கார். இந்த மேதை காலணியைத் தலையணையா வச்சுக்கிட்டு ஏன் தூங்குறார்னு எனக்கே தெரியல... வா... இவரை எழுப்புவோம்!”
காகின் இடுப்பில் இருந்த பெல்ட்டைக் கழற்றி இரண்டாக மடக்கினார். அதை உறங்கிக் கொண்டிருந்த மனிதரின் காலடியில் இரண்டு முறை அடித்தார். அடுத்த நிமிடம் – ஒரு பெரிய அலறலுடன் திடுக்கிட்டு எழுந்து நின்றார் ஸெஸான்.
“காகின்... நாசம் பிடிச்ச சேடிஸ்ட்டே... இப்படித்தான் தமாஷ் பண்றதா? ஒரு நாள் நான் உன்னோட மண்டையைப் பொளக்குறேன்!”
“காலை இப்படி வெளியே நீட்டி வச்சு தூங்கினா, இப்படித்தான் அடி கிடைக்கும்” – காகின் சொன்னார்: “அந்த நாத்தம் புடிச்ச ஷுவைத் தூக்கித் தலைக்குக் கீழே வைச்சுக்கிட்டு ஏன் தூங்கணும்? அதைவிட தலைக்கு எதுவுமே வைக்காம தூங்கலாமே!”
ஸெஸான் காலில் காலணிகளை மாட்டியவாறு சொன்னார்: “நான் அதைத் தலையணையா உபயோகிக்கல. யாராவது அதைத் தூக்கிட்டு போயிடக் கூடாதுன்னுதான் அப்படிச் செய்யிறேன்.”
பத்தாய்ல் ரெஸ்ட்டாரெண்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஸெஸான் ஸோலாவிடம் தனக்கு உள்ள எதிர்ப்பைச் சொன்னார். இரண்டு பேருமே சிறிய வயது நண்பர்கள். ஆனால், ஸோலா தன் புதிய புத்தகமான ‘லேவ்ரி’யில் தன்னைத் தேவையில்லாமல் மோசமாக விமர்சித்திருப்பதாக ரொம்பவும் குறைப்பட்டுக் கொண்டார் ஸெஸான். ஸோலாவின் பணக்கார வாழ்க்கை முறை மீது ஸெஸானுக்கு அத்தனை மதிப்பு இல்லை என்பது அவரின் பேச்சிலேயே தெரிந்தது.
“பாரீஸ் எனக்கு வெறுத்துப் போச்சு”- ஸெஸான் சொன்னார்: “இனி என்னோட வாழ்க்கையின் மீதி பாகத்தை எக்ஸில் கழிக்கணும்னு நினைக்கிறேன். வெயில் வந்துட்டா பிரகாசம் சொறியும் அருமையான இடம்! அப்பப்பா... அங்குதான் என்னென்ன நிறங்கள்!” குன்றின் சரிவில் பைன் மரங்கள் நிறைஞ்ச ஒரு இடம் விற்பனைக்கு இருக்கு. நான் அதை விலைக்கு வாங்கி ஒரு ஸ்டுடியோ உண்டாக்கப் போறேன். சுத்தி கண்ணாடித் துண்டுகள் மேலே பதிச்ச பெரிய மதில்கள். வெளியுலகத் தொடர்பே நமக்கு வேண்டாம். அதுக்குப் பிறகு என் வாழ்க்கை நிரந்தரமா அங்கேதான்!”
“எக்ஸிலே சன்னியாசி! பேருகூட சொல்றப்போ நல்லாத்தான் இருக்கு!”- காகின் கிண்டல் பண்ணினார்.
¤ ¤ ¤
கலைஞர்களின் நிரந்தர சரணாலயமான கஃபே பத்தினோலில்தான் வின்சென்ட் ஸோலாவைச் சந்தித்தான். துளுஸ்- லாத்ரெக், ஸெரா, காகின் எல்லோரும் அப்போது உடன் இருந்தார்கள். ஸெஸானைத் தன் நாவலில் சித்தரித்திருந்ததற்கான காரணத்தை எல்லோருக்கும் விளக்கிக் கொண்டிருந்தார் ஸோலா. “அஞ்சு வயசு குழந்தை படம் வரையிறது மாதிரி படம் வரையிறான் ஸெஸான். அவன்... சொல்லப்போனா... ஒரு முழு பைத்தியக்காரனா இருக்கான்” என்றார் அவர். தான் எழுதிய ‘ஜெர்மினல்’ ஒரு புரட்சியையே உண்டாக்கும் என்று நம்பிக்கையான குரலில் சொன்னார் ஸோலா.
பேசிக் கொண்டிக்கும்போது வின்சென்ட் பக்கம் திரும்பிய ஸோலா கேட்டார்: “உங்களோட பேர் என்னன்னு காகின் சொன்னார்...?”
“வின்சென்ட்... வின்சென்ட் வான்கா. தியோ வான்கா என்னோட சகோதரன்.”
“ரொம்பவும் வித்தியாசமா இருக்கே!”
“எதைச் சொல்றீங்க?”
“உங்க பேரைத்தான் சொல்றேன். நான் ஏற்கனவே இந்தப் பேரைக் கேட்ட மாதிரி இருக்கே!”
“தியோ சொல்லி இருக்கலாம்...”
“இல்ல... இல்ல... ஒரு நிமிஷம்... ம்... இப்பத்தான் ஞாபகம் வருது. நீங்க நிலக்கரிச் சுரங்கம் பக்கம் போயிருந்தீங்களா?...”
“ஆமா... போரினேஜில் ரெண்டு வருடங்கள் இருந்தேன்.”
“போரினேஜ்... வாஸ்மே, மார்க்காஸ்...”- ஸோலா கண்களை அகல விரித்து அவனைப் பார்த்தார்.