வான்கா - Page 65
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“இங்கே சாயம் அரைச்சு எனக்கு முதுகெலும்பே ஒடிஞ்சு போச்சு”- அவள் சொன்னாள்.
அவ்வளவுதான்-
வசனத்தை மழை என கொட்ட ஆரம்பித்துவிட்டார் காகின்:
“என் அருமை சாந்திப்பி... என்கிட்ட நீங்க இப்படி கடுமையா நடக்கலாமா? உங்களுக்கு ஒரு கலைஞனோட மனசு இருக்கு. அழகான உங்க முகத்தைப் பார்க்குறப்பவே இது தெரியுதே!”
“இந்த மனிதன் பணம் தேவையில்லாத ஒண்ணுன்னு சொன்னாரே! நான் இப்படி கஷ்டப்பட்டு சாயம் அரைச்சு கொடுக்கலைன்னா, இவர் இப்படி எல்லாம் தத்துவம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?”
“உங்களோட உழைப்பைப் பற்றியும், அழகைப் பற்றியும் பாரீஸ் முழுக்க நான் சொல்றேன்” – காகின் சொன்னார்.
“நீ ஒரு போக்கிரி, முகஸ்துதி செய்யக்கூடிய ஆள். அது எனக்கு நல்லா தெரியும். ம்... இந்தத் தடவை மட்டும் நான் சாயம் தர்றேன். பணம் சீக்கிரம் தரணும். புரியுதா?”
“என் சாந்திப்பி... நான் உங்களை ஓவியமா தீட்டப் போறேன். ஒரு நாள் அது லூவருக்கு போகத்தான் போகுது.... நம்ம ரெண்டு பேரையும் எல்லாக்காலத்திலும் ஞாபகத்துல வச்சிருக்கப் போறாங்க...”
¤ ¤ ¤
நண்பர்கள் எல்லோரையும் அழைத்து உபசரிக்க வேண்டும் என்பது தியோவின் விருப்பம். அவித்த முட்டையும், பிஸ்கட்டும், பீரும் வாங்கி வைத்திருந்தான். எல்லோரும் தியோவின் அறையில் வந்து கூடினார்கள்.
அறை முழுவதும் ஒரே புகை மயம். அதற்கு மத்தியில் ஆடி ஆடி நடந்து கொண்டிருந்த காகின் பனிப்படலத்துக்கு மத்தியில் போய்க் கொண்டிருக்கும் கப்பலை ஞாபகப்படுத்தினார். ஒரு மூலையில் பறவையைப் போல சாய்ந்து உட்கார்ந்திருந்த லாத்ரெக், தியோவிற்கு மிகவும் விருப்பமான நாற்காலியின் கைப்பகுதியில் முட்டையை உடைக்க, முட்டை ஓடுகள் நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடந்தன. கண்ணுக்குத் தெரியாத ஒரு இடத்திலிருந்து - யாரென்று தெரியாத ஒரு ரசிகை அனுப்பிய அருமையான நறுமணம் கமழும் காதல் கடிதத்தைப் பற்றி வாய் வலிக்காமல் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார் ரூஸோ (அந்தக் காதல் கடிதத்தை அவருக்கு எழுதி அனுப்பியதே காகின்தான்). தன்னுடைய புதிய கண்டுபிடிப்புகளை ஸெஸானிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஸெரா. கைகளை இப்படியும் அப்படியும் ஆட்டியவாறு உரத்த குரலில் பேசியவாறு அவர்களுக்கு பீரை ஊற்றிக் கொடுத்தான் வின்சென்ட். தியோவைப் பொறுத்தவரை, சரியாகச் சொன்னால் – இது நாகரீகமே இல்லாத ஒரு காட்டு மிராண்டிகளின் கூட்டம்.
அந்த அறையில் இருந்த ஒவ்வொருவருமே தங்களைத் தாங்களே பெரிய மனிதர்களாக எண்ணிக் கொண்டு, தங்களையே புகழ்ந்து கொண்டிருப்பவர்கள். சண்டை போடுவதென்றால் அவர்களுக்கு கொண்டாட்டம்தான்! இவர்களின் வெடிப்பேச்சுக்கும், தான் தோன்றித் தனமான நடவடிக்கைகளுக்கும் தியோவின் அந்தச் சிறிய அறை போதாதுதான்.
தன் தலையை யாரோ வெட்டிப் பிளப்பது போல் உணர்ந்தான் தியோ. அறையை விட்டு வேகமாக வெளியேறினான். அவன் மட்டும் தனியே மோன்மார்த்ரிக்கு நடந்தான். ஆஹா... எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது!
அறையில் அப்போதும் சூடுபிடித்த வார்த்தைச் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
“உங்களோட கான்வாஸ்கள் ஒரே குளிர்ச்சியானது ஸெஸான்”- காகின் அலறினார்: “பனியை விட குளிர்ச்சியானது. அதைப் பார்த்தாலே உடம்பெல்லாம் விறைச்சுப் போகுது. நீங்க தீட்டின ஒரு ஓவியத்துல கூட, உணர்வுகளைப் பார்க்க முடியல...”
“நான் உணர்வுகளுக்கு நிறம் கொடுப்பதில்லை”- ஸெஸான் வாதாடினார்: “இந்த விஷயத்தை நாவல் எழுத்தாளர்களுக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஆப்பிளையும் இறக்கையின் வனப்பையும் வரையிறதுதான் என்னோட வேலை.”
“உணர்வுகளை ஓவியங்கள்ல கொண்டு வராததற்குக் காரணம் – அதைக் கொண்டு வர உங்களால முடியாததுதான். கண்ணை வச்சுத்தான் நீங்க ஓவியம் வரையிறீங்க...”
“எல்லாரும் எதை வச்சு படம் வரையிறாங்க?”
காகின் சுற்றிலும் பார்த்துவிட்டு சொன்னார்: “லாத்ரெக் மூளையை வச்சு... வின்சென்ட் இதயத்தை வச்சு... ஸெரா மனசை வச்சு... ரூஸோ பாவனையை வச்சு...”
“நீங்க...?”
“நானா? எனக்கே தெரியாது. அதைப்பத்தி நான் அதிகம் சிந்திச்சது இல்ல...”
“அப்படின்னா நான் சொல்றேன்...” – லாத்ரெக் உரத்த குரலில் சொன்னான்: “நீங்க வரையிறது பிறப்பு உறுப்பை வச்சு...!”
¤ ¤ ¤
இந்தக் கூட்டத்தில்தான் தங்களின் ஓவியப் படைப்புகளை தாங்களே காட்சிக்கு வைக்கலாம் என்ற தீர்மானத்திற்கு எல்லோரும் வந்தது. ஓவியர்கள் அடங்கிய ஒரு க்ளப் ஆரம்பிப்பது – பெத்திபுல்வாரில் – கம்யூனிஸ்ட் ஆர்ட் க்ளப். நார்வின் ரெஸ்ட்டாரண்டில் ஓவியங்களைக் காட்சிக்கு வைப்பது. எல்லோரும் காட்சி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
ஆனால், ஓவியக் கண்காட்சி ஒரு பெரிய தோல்வியில் போய் முடிந்தது. உணவு சாப்பிட வந்த ஒரு ஆள் கூட ஓவியம் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. ஓவியத்தைப் பார்த்த ஒன்றோ இரண்டோ வழக்கமான வாடிக்கையாளர்கள் ஏதோ தங்களுக்குள் பேசி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டார்கள். அதற்குப்பிறகு, அவர்கள் கவனம் சாப்பிடுவதில் சென்றுவிட்டது. மக்களின் வரவேற்பு தங்களின் படைப்புகளுக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்காக ஆவலுடன் அங்கு காத்திருந்த ஓவியர்களுக்கு அவர்களின் இந்தச் செயல் ஏமாற்றத்தைத் தந்தது.
அதற்குப் பிறகுதான், வின்சென்ட்டிற்கு ஒரு புதிய எண்ணம் தோன்றியது. அதன்படி ஓவியர்களின் ஒரு விற்பனை நிலையம் – கம்யூனிஸ்ட் ஆர்ட் ஷாப். எல்லா ஓவியர்களும் தாங்கள் வரைந்த படங்களை இங்கு கொண்டு வர வேண்டும். தியோ குபில்ஸில் தான் இப்போது பார்க்கும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இங்கு வந்து மேனேஜராக வேலை பார்ப்பான். ஓவியங்கள் தேவைப்படுபவர்களுக்கு அவை விற்கப்படும். தியோவிற்கு இதைக் கேட்டதும் தலைவலியே உண்டாகிவிட்டது. ஆனால், மற்ற எல்லோருக்கும் வின்சென்ட் சொன்ன இந்த விஷயம் மிகவும் பிடித்திருந்தது.
அந்த நிமிடத்திலிருந்து வின்சென்ட் இந்த முயற்சியைச் செயல் வடிவத்திற்குக் கொண்டு வரும் வேலையில் இறங்கினான். பலருக்கும் கடிதங்கள் எழுத வேண்டும். நேருக்கு நேர் உரையாடல்கள் நடத்த வேண்டும். காலியாய் இருக்கும் வீடுகளைத் தேடிப் பிடிக்க வேண்டும். புதிதாய் வந்திருக்கும் ஓவியர்களுக்கு உற்சாகமூட்டி, அவர்களுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். இதற்கெல்லாம் பணம் அவசியத் தேவை. அதை உண்டாக்குவதற்கான வழிகளைச் செய்ய வேண்டும். இவ்வளவு விஷயங்களையும் தன் தலைமேல் போட்டுக் கொண்டிருந்தால், வின்சென்ட் எப்படி ஓவியம் வரைவான்?
அதிகாலை நான்கு மணிக்குத்தான் வின்சென்ட் உறங்கப் போனான். மதியம் எழும்போது, நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. தன்னுடைய ஸ்டுடியோவிற்குள் நுழைந்தான். ஈஸலின் மீது இருந்த கான்வாஸ் மிகவும் பழையதாக இருந்தது. பாலெற்றில் இருந்த நிறங்கள் காய்ந்து போய் விட்டிருந்தன. நிறங்களின் ட்யூப்களும் ப்ரஷ்களும் அறையில் சிதறிக் கிடந்தன.