வான்கா - Page 69
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
ஒரு பெண். மாநிறம். வெயிலில் மின்னிக் கொண்டிருந்த தலைமுடி. சாம்பல் நிறக் கண்கள். இளம் சிவப்பு நிற மேலாடைக்குள் இருந்து இலேசாக விம்மி பொங்கிக் கொண்டிருந்த மார்பகம். ஆர்ளின் மண் வாசனையை தன் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்தும் இளமைத் துடிப்பு!
காலையில் தனக்கு மாடலாக வந்துநின்ற அந்த இளம்பெண் உண்மையிலேயே வின்சென்ட்டின் மனதில் ஒருவித சலனத்தை உண்டாக்கிவிட்டாள். அவளின் முகம், அவனே நினைத்தாலும் அவன் மனதைவிட்டு அகல மறுத்தது. அவனுக்கு சொல்லப்போனால் உறக்கம் கூட வரவில்லை. ஒரு பெண்ணுடன் அவன் பேசி எத்தனை நாட்கள் ஆகிவிட்டன! இங்கு வருவதற்கு முன்பு தன் ஓவிய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஆர்ளில் உள்ள அழகு தேவதைகளைப் பற்றி அவர்கள் சொன்னதை இப்போது ஞாபகப்படுத்திப் பார்த்தான் வின்சென்ட்.
ர்யூ தெரிக்கொலெத்தில் இருந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் லூயி சொன்னார்: “என்கிட்ட ஒரு இளம் பெண் இருக்கா. பேரு – ரக்கேல். உங்களுக்கு இவளைப் பிடிக்கலைன்னா, வேறொரு பெண்ணைப் பார்ப்போம்.”
“எங்கே வரச்சொல்லுங்க... பார்ப்போம்”
வின்சென்ட் பைப்பை வாயில் வைத்து புகைத்தான். உள்ளே இருந்து ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது. ஒரு பெண் அழகாக நடந்து வந்து அவன் முன்னால் நின்றாள். அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். புன்னகை தவழ சொன்னாள்: “நான்தான் ரக்கேல்!”
“நீ ரொம்ப சின்ன பொண்ணா இருக்கியே!”- வின்சென்ட் சொன்னான்.
“எனக்கு இப்போ பதினாறு வயசு”- அவள் சொன்னாள்.
“நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே?”
“லூயிக்கிட்டயா? ஒரு வருஷம்.”
அவள் கேஸ் விளக்கிற்கு நேராக முகத்தை உயர்த்தினாள். உயிரோட்டமுள்ள அழகான முகம். கவித்துவத்தை வெளிப்படுத்தும் துடிப்பான கண்கள். சதைப்பிடிப்பான நாடிப்பகுதியும், கழுத்தும். கறுப்பு கூந்தல். பூக்கள் போட்ட ஆடை அணிந்திருந்தாள். காலில் செருப்பு. முலைக்கண்கள் குற்றம் சாட்டக் கூடிய விரல்களைப் போல அவனுக்கு நேராக நீட்டிக் கொண்டிருந்தன.
“ரக்கேல்... உண்மையிலேயே நீ பேரழகிதான்.”
அதைக் கேட்டதும் ரக்கேலின் கண்களில் ஒரு பிரகாசம். மனதில் உற்சாகம் கரை புரண்டோட, நின்ற இடத்தில் இருந்தவாறே ஒரு முறை சுற்றியவள் வின்சென்ட்டின் கையைப் பிடித்தவாறு சொன்னாள்: “நான் அழகா இருக்கேன்னு நீங்க சொல்றதைக் கேட்டு எனக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு. ஆண்கள் என்னை விரும்புறது, எனக்கு மிகவும் பிடிக்கும்.”
“உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?”
“நீங்க ஒரு நல்ல ரசிகன்... ஃபுரு...”
“ஏய்... என்னை உனக்குத் தெரியுமா?”
“நான் முன்னாடியே உங்களைப் பார்த்திருக்கேன். நீங்க ஏன் எப்பப் பார்த்தாலும் மாராப்பு மாதிரி கட்டிக்கிட்டு எங்கேயாவது ஓடிக்கிட்டே இருக்கீங்க? நீங்க ஏன் தொப்பியே தலையில வைக்கிறது இல்ல? சூரியன் உங்களைச் சுடலியா? அய்யோ... உங்க முகம் ஏன் இவ்வளவு செவந்து போய் இருக்கு...?”
அவள் பேசப்பேச, அதை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தான் வின்சென்ட். அவளின் வெகுளித்தனமான பேச்சு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
“நீ ஒரு நல்ல பொண்ணு ரக்கேல். நீ என்னோட உண்மையான பேரைச்சொல்லிக் கூப்பிடுறியா?”
“உங்க பேர் என்ன?”
“வின்சென்ட்.”
“ஃபுருன்ற பேருதான் எனக்கு ரொம்பவும் புடிச்சிருக்கு. நான் `கிறுக்கா’ன்னு உங்களைக் கூப்பிடட்டா? எனக்கு ஏதாவது குடிக்க வாங்கித் தாங்க. லூயி ஒளிஞ்சு நின்னு பார்த்துக்கிட்டிருக்கார்.”
ரக்கேலின் அறையில் முழுவதும் விளையாட்டுச் சாமான்கள். அவள் வின்சென்ட்டிடம் ஒரு ஆண் பொம்மையையும், ஒரு பெண் பொம்மையையும் கொண்டு வந்து கொடுத்தாள். வின்சென்ட்டின் முகத்தில் தெரிந்த பிரதிபலிப்புகளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்: “நாம அம்மா அப்பா விளையாட்டு விளையாடலாமா, கிறுக்கா?”
“ரக்கேல்... நீ என்னைக் கிறுக்கன்னு கூப்பிட்டா, நானும் உனக்கு ஒரு பேரை வச்சு கூப்பிடுவேன்!”
ரக்கேல் அவன் சொன்னதைக் கேட்டு கைத் தட்டி சிரித்தாள். வின்சென்ட்டின் மடியில் போய் உட்கார்ந்தாள்.
“நான் உன்னை மாடப்புறான்னு கூப்பிடுவேன்”
“நீங்க ஏன் என்னை அப்படி கூப்பிடணும்னு நினைக்கிறீங்க?”- ரக்கேல் கேட்டாள்.
“உண்மையிலேயே நீ ஒரு மாடப்புறா மாதிரிதான் இருக்கே ரக்கேல்... புறாவுக்கு இருக்கிறது மாதிரியே கண்கள். புறாவின் வயிறைப் போலத்தான் உன்னோட வயிறும் இருக்கு!”
“புறாவா இருக்குறது நல்லதா?”
“நிச்சயமா. மாடப் புறா பாக்குறதுக்கு எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா? மாடப்புறாவை எல்லாருக்குமே புடிக்கும். உன்னையும் தான்...”
ரக்கேல் வின்சென்ட்டின் மேல் சாய்ந்து, அவன் காதில் முத்தம் கொடுத்தாள். அடுத்த நிமிடம் – வேகமாக எழுந்து சென்று இரண்டு கண்ணாடி டம்ளர், ஒரு குப்பி ஒயினுடன் வந்தாள்.
“கிறுக்கா... உங்களோட காது ரெண்டும் எவ்வளவு அழகா இருக்கு!”- ஒயின் ஊற்றிய டம்ளருக்குள் மூக்கை நுழைத்து சிறு குழந்தை மாதிரி குடித்துக் கொண்டே ரக்கேல் சொன்னாள்.
“உனக்கு என் காதுகளைப் பிடிச்சிருக்கா?”
“ம்... பருத்துப் போன ஒரு நாய்க்குட்டியோடது மாதிரி இருக்கு!”
“அப்படின்னா நீயே அதை வச்சுக்கலாம்!”
ரக்கேல் அதைக்கேட்டு பலமாக சிரித்தாள். டம்ளரை உயரத் தூக்கி உதட்டில் வைத்து உறிஞ்சினாள். என்னவோ நினைத்து நினைத்து சிரித்தாள். டம்ளரில் இருந்து வழிந்த ஒயின் அவளின் இடது பக்க மார்பகத்தின் வழியே இறங்கி வயிற்றில் பட்டு கீழே வழிந்து காணாமல் போனது.
“நீங்க எவ்வளவு நல்ல மனிதரா இருக்கீங்க ஃபுரு! எல்லாரும் உங்களைப் பைத்தியம்னு சொல்றாங்க. உங்களுக்கு அப்படி ஏதாவது பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன?”
“கொஞ்சம்...”
“அப்படின்னா... என்னோட காதலனா இருக்கீங்களா? ஒரு மாசமா எனக்கு காதலனே இல்ல... ஒவ்வொரு நாள் ராத்திரியிலும் என்னைப் பார்க்க வருவீங்களா?”
“அது எப்படி முடியும் மாடப்புறாவே?”
“ஏன் முடியாது?”
“ஒரு விஷயத்தை நீ புரிஞ்சிக்கணும். என் கையில காசு கிடையாது!”
ரக்கேல் வின்சென்ட்டின் காதைப் பிடித்துத் திருகினாள்: “அஞ்சு ஃப்ராங்க் உங்களால தர முடியலைன்னா இந்தக் காதை அறுத்து எனக்கு தந்திடுங்க. போதுமா கிறுக்கா? நான் அதைப் பத்திரமா என்னோட அலமாரியில வச்சிக்கிறேன்.”
“பணம் கிடைக்கிறப்போ கொடுத்தா, அதைத் திருப்பி தந்திடுவியா?”
“ஓ... என் அருமை ஃபுருவே! நீங்க எவ்வளவு நல்ல மனிதரா இருக்கீங்க! எல்லா ஆண்களும் உங்களை மாதிரியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!”