வான்கா - Page 73
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“வேண்டாம்... உன்னோட ஆடையில அழுக்கு பட்டுரும்... இரு... என் கோட்டை நான் தரையில போடுறேன்... அதுக்கு மேல உட்காரு...”
தன் மிருதுவான கையால் வின்சென்ட்டைத் தடுத்த அவள் சொன்னாள்: “உன்னை நான் பின் தொடர்ந்து வந்த எத்தனையோ நாட்கள் என் ஆடையில அழுக்கு பட்டிருக்கு. சேறு பட்டிருக்கு. அது ஒரு பெரிய பிரச்னையே இல்ல...”
அவள் தன் கையால் வின்சென்ட்டின் முகத்தைப் பற்றினாள். விரலால் காதுக்குப் பின்னால் இருந்த கரிந்து போன ரோமங்களைத் தடவினாள்.
“நீ அழகில்லாதவன் இல்லை, வின்சென்ட். அழகான ஒரு மனிதன் நீ! உன் ஆத்மாவை உள்ளே அடக்கி வச்சிருக்குற இந்த உடம்பை நீ பயங்கர கஷ்டத்துக்கு உள்ளாக்கியிருக்கிறே. ஆனா, ஆத்மாவை உன்னால ஒண்ணுமே செய்ய முடியாது. நான் காதலிக்கிறது அதைத்தான். பலவித பிரச்னைகளால் இந்த உடம்பு அழிஞ்சாலும், உன் ஆன்மா தொடர்ந்து வாழ்ந்துக்கிட்டுத்தான் இருக்கும். நிரந்தரமா... அதோடு என் காதலும் வாழும்!”
சூரியன் ‘சுள்’ என்று காய்ந்து கொண்டிருந்தது. அதன் வெப்பம் தாங்காமல் ஆண்களும் பெண்களும் துடித்துக் கொண்டிருந்தனர்.
“வா...” வின்சென்ட் சொன்னான்: “போற பாதையில் இருக்குற ஸைப்ரஸ் மரங்களோட நிழல்ல உட்காருவோம்”
“உன்கூட இங்கே இருக்குறதுதான் சுகமா இருக்கு. நீ என் பக்கத்துல இருந்தா, வெயில்ல நடக்குறதுகூட எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு!”
“நீ ஆர்ளுக்கு வந்து ரொம்ப நாட்களாச்சா?”
“உன் கூட பாரீஸ்ல இருந்து நான் வந்ததுதான்!”
அவ்வளவுதான். கடுப்பாகிவிட்டான் வின்சென்ட். கோபத்தில் முக்காலியைக் காலால் எட்டி உதைத்து தூர எறிந்தான்: “நீ வஞ்சகி! யாரோ என்னைக் கெடுக்குறதுக்காக உனக்குப் பணம் தந்து இங்கே வேணும்னே அனுப்பி வச்சிருக்காங்க. ஒழுங்கா போயிடு. உன்கூட பேசவே நான் விரும்பல....” – வின்சென்ட் சொன்னான்.
அவன் இப்படிச் சொன்னதும் அவள் சிரித்தாள். “நான் வஞ்சகி ஒண்ணுமில்ல, வின்சென்ட். உன் வாழ்க்கையிலேயே உண்மைன்னு ஒண்ணு இருக்குன்னா, அது நான்தான். உன்மேல நான் கொண்டிருக்கிற காதல் சத்தியமானது. என்னைக்குமே அழியாதது.”
“பொய்... நீ என்னைக் காதலிக்கல... என்கிட்ட வேணும்னே விளையாடிக்கிட்டு இருக்கே! நான் அதை நிரூபிச்சுக் காட்றேன் பாரு...”
வின்சென்ட் அவளை மிருகத்தின் பலத்துடன் கட்டிப் பிடித்தான். அவள் முழு சம்மதத்துடன் அவன் மேல் சாய்ந்தாள்.
“ஒழுங்கா இந்த வேலையை எல்லாம் விட்டுட்டு ஓடிடு. இல்லைன்னா... நீ வேதனைப்பட வேண்டி இருக்கும்” – வின்சென்ட் கோபத்துடன் சொன்னான்.
“வேதனைப்படுத்து வின்சென்ட். நீ இதற்கு முன்னாடி பல தடவை இதைச் செய்திருக்கே! வேதனை கூட காதல்ல ஒரு பகுதிதான்.”
“அப்படின்னா சரி... உனக்கு நான் மருந்து தர்றேன்.”
வின்சென்ட் அவளை மேடாக இருந்த ஒரு இடத்தில் படுக்க வைத்தான். தன் உதடுகளை வெறித்தனமாக அவள் உதடுகளோடு பொருத்தி கவ்வினான்.
அவளின் மென்மையான அதரங்களில் இருந்து மது அரும்பி அவனின் வறண்ட உதடுகளில் வழிந்தது. அவளின் உடல் அவனின் உடலோடு பின்னிப் பிணைந்து கிடந்தது. இரு உடல்களும் ஓருடல் என்று கூறக் கூடிய அளவிற்கு சங்கமமாயின. அப்படியே சில நிமிடங்கள்...
வின்சென்ட் அவளை உதறித் தள்ளிவிட்டு, முக்காலியில் போய் உட்கார்ந்தான். கீழே – மண்ணில் உட்கார்ந்திருந்த அவள் வின்சென்ட்டின் கால்கள் மேல் தன் தலையைச் சாய்த்தாள். அவளின் தங்க நிற தலைமுடியை வின்சென்ட் தன் கையால் வருடினான்.
“இப்போ உனக்கு புரிஞ்சு போச்சா?”- அவள் கேட்டாள்.
சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்த வின்சென்ட் கேட்டான்: “உனக்கு மாடப்புறாவைத் தெரியுமா?”
“ரக்கேல் ஒரு நல்ல பெண்...”
“உனக்கு அது ஒரு பிரச்னையா இல்லியா!”
“நீ ஒரு ஆண், வின்சென்ட். உனக்கு பெண் தேவைப்படுது. அன்னைக்கு நான் உன் முன்னாடி வந்து நிற்காததுனால, நீ இன்னொரு இடத்தைத் தேடிப் போக வேண்டியது வந்தது. ஆனா, இப்போ...”
“இப்போ...?”
“இனிமேல் நீ என்னை விட்டு, வேற எங்கேயும் போக வேண்டியதிருக்காது!”
“நீ சொல்றது...”
“ஆமா வின்சென்ட்... நான் உன்னைக் காதலிக்கிறேன்!”
“நீ ஏன் என்னை காதலிக்கிறே? பெண்களுக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காதே! சொல்லப்போனா, அவங்க என்னை ஏமாற்றத்தான் செஞ்சாங்க...”
“நீ காதலிக்கிறதுக்காக மட்டும் இருக்கிறவன் இல்ல... வேற பல காரியங்களையும் செய்றதுக்குத்தான் நீ இருக்கே...”
“என்ன பெரிய காரியம்? ஏய்... நான் எவ்வளவு பெரிய முட்டாள் தெரியுமா? நானும் வருடக்கணக்கா ஓவியங்கள் வரைஞ்சிக்கிட்டு தான் இருக்கேன். இந்த ஓவியங்களால என்ன பிரயோஜனம்? இந்த ஓவியங்களை இங்கே யார் கேட்டாங்க? யார் இதை வாங்குறது? இந்த ஓவியங்களைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை பேச இங்கே யார் இருக்குறாங்க? இயற்கையை நான் கொஞ்சமாவது புரிஞ்சிருக்கேன்னு சொல்றதுக்கு இங்கே யார் இருக்காங்க?”
“ஒருநாள் இந்த உலகமே அதைச் சொல்லும் வின்சென்ட்...”
“ஒருநாள்...! அந்த ஒருநாள் என்னைக்கு வர்றது? அப்படி ஒருநாள் வரும்ன்றது உன்னோட கனவு... நம்பிக்கை... நான் ஒருநாள் நல்ல ஆரோக்கியம் உள்ள ஆளா இருப்பேன், எனக்கு ஒரு குடும்பம் இருக்கும், ஓவியங்கள் வரைஞ்ச நான் நிறைய பணம் சம்பாதிப்பேன்... அப்படின்னு கனவுகள் காணுற மாதிரி இது ஒரு கனவு! அப்படித்தான் சொல்ல முடியும். நான் படம் வரைய ஆரம்பிச்சு எட்டு வருஷமாச்சு. இதுவரை ஒரு ஆள் கூட என் படத்தை வாங்கினதில்லை. உண்மையிலேயே நான் எவ்வளவு பெரிய முட்டாள்!”
“ஆமா, வின்சென்ட்... ஆனா, நீ ஒரு கம்பீரமான முட்டாள்! நீ போன பிறகு, நீ என்னவெல்லாம் உன் ஓவியங்கள் மூலம் சொல்ல நினைச்சேன்னு இந்த உலகம் பேசும். சொல்ல வந்ததைப் புரிஞ்சுக்கும். இன்னைக்கு ஒரு சல்லிக்காசுக்கு விற்க முடியாத உன்னோட ஓவியங்கள் எதிர்காலத்தில் கோடிக்கணக்கான ஃபிராங்கிற்கு விற்பனை ஆகும். நான் சொல்றதைப் பார்த்து நீ சிரிக்கிறியா? இப்போ நீ சிரிக்கலாம். ஆனா, நான் சொல்றது ஒவ்வொண்ணும் சத்தியமான உண்மை, வின்சென்ட். ஒருநாள் உன்னோட ஓவியங்கள் ட்ரெஸ்டனிலும், ம்யூனிச்சிலும், பெர்லினிலும், மாஸ்கோவிலும், நியூயார்க்கிலும் மக்களோட பார்வைக்காக வைக்கப்படத்தான் போகுது! அன்னைக்கு இந்த ஓவியங்களோட மதிப்பே பெரியதாக இருக்கும். உன்னோட கலைத்திறமையைப் பற்றி புத்தகங்கள் எழுதத்தான் போறாங்க. உன்னோட வாழக்கையை மையமா வச்சு நாடகங்களும், நாவல்களும் வரத்தான் போகுது. கலைமீது ஆர்வம் கொண்ட ரெண்டு பேர் ஒண்ணு சேர்ந்துட்டாங்கன்னா, அவங்க நிச்சயம் வின்சென்ட் வான்கான்ற பேரைக் கட்டாயம் பேசுவாங்க. அந்த அளவுக்கு உன்னோட பேரு ஒரு மரியாதைக்குரிய பேரா மாறத்தான் போகுது.”