வான்கா - Page 74
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
மேலே சூரியன் காய்ந்து கொண்டிருந்தான். குன்றின் சரிவையும், தாழ்வாரத்தையும் கூட அவன் விட்டு வைக்கவில்லை. வயல் வெயில் பட்டு, அனலாக தகித்துக் கொண்டிருந்தது. வின்சென்ட்டுக்கு அருகில் அமர்ந்திருந்த அவள் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரை மனதிற்குள் பூட்டி வைத்திருந்த உணர்ச்சிகள், நிறக்கூடுகளில் இருந்து நிறங்களாக, எழுத்துக்களாக, வாக்கியங்களாக பெருக்கெடுத்து வர ஆரம்பித்தன. அவனின் உடம்பு நேரம் செல்லச் செல்ல முறுக்கேறியது. நரம்புகளில் உணர்ச்சிகளின் பிரவாகம். உச்சிவேளை சூரியன் உடலைப் பொசுக்கும் அளவிற்கு பயங்கரமாக உஷ்ணத்தை உலகத்தின் மேல் அள்ளிக் கொட்டியது. உடல் வெப்பத்தின் விளைவால் சூடேறி நின்றது.
வின்சென்ட்டைத் தன் பக்கம் இழுத்த அவள் சொன்னாள்: “எனக்கு முத்தம் கொடு, வின்சென்ட்...”
வின்சென்ட் அவளின் இளம் சூடு உள்ள அதரங்களில் முத்தம் தந்தான். கண்களில், காதுகளில், மூக்கின்மேல், மேல் உதட்டில் என்று எல்லா இடங்களிலும் அவள் வின்சென்ட்டிற்கு முத்தம் தந்தாள். அவள் கையின் மென்மையான ஸ்பரிசம் பட்டு உலகையே மறந்தான் வின்சென்ட். அவளின் நீண்ட விரல்கள் அவனின் தாடியைத் தடவி, கழுத்தின் வழியே தோளுக்குக் கீழே வந்து நின்றன.
அவள் தந்த முத்தங்கள் அதுவரை அனுபவித்திராத உணர்ச்சிகளை வின்சென்ட்டிடம் உண்டாக்கின. உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அந்த முத்தத்தின் தாக்கத்தால் உத்வேகம் பெற்று நின்றன. முன்பு எப்போதும் எந்தப் பெண்ணும் இந்த அளவிற்கு அவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தது இல்லை என்பதே உண்மை. வின்சென்ட் அவளின் உடலைத் தன் உடலோடு இறுக சேர்த்து தன் வலிமையெல்லாம் திரட்டி அணைத்தான். இளமை தவழும் அவளின் மேனி பட்டு அவனின் உடலிலும், மனதிலும் நூறு சதவிகித சிலிர்ப்பு!
“நில்...”
அவள் வெள்ளியால் ஆன சங்கிலியைக் கழற்றி, அணிந்திருந்த ஆடையைத் தூர எறிந்தாள். முகத்தைப் போலவே அவளின் முழு உடலுமே அழகின் அடைக்கலமாக இருந்தது. அவளின் ஒவ்வொரு துடிப்பிலும் இளமை கொப்பளித்தது. இவ்வளவு அழகான ஒரு பெண்ணின் உடம்பை இப்போதுதான் வாழ்க்கையிலேயே முதல் தடவையாகப் பார்க்கிறான் வின்சென்ட். ஒரு பெண்ணால் இந்த அளவுக்கு உணர்ச்சிகளைத் தூண்டி விட முடியும் என்பதையும் இப்போதுதான் அவன் முதல் முறையாக உணர்கிறான்.
“என்னை இறுக அணைத்துக் கொள், கண்ணா... உனக்கு எப்படிப் பிடிக்க விருப்பவோ, அப்படிப் பிடிச்சுக்கோ” – காதில் அவள் கிசுகிசுத்தாள்.
ஆகாயத்தின் எதிர்திசைக்கு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டிருந்தான் சூரியன். பூமி படு உஷ்ணமாக இருந்தது. விதைத்த, வளர்ந்த, பாதிக்கப்பட்ட, அழிந்த பொருட்களின் – தானியங்களின் – செடிகளின் – கொடிகளின் – மரங்களின் – அருமையான மணம் எங்கும் வியாபித்திருந்தது.
வின்சென்ட்டின் உணர்ச்சிகள் விஸ்வரூபமெடுத்து பெருகி நின்றன. அவனின் உடலில் இருந்த ஒவ்வொரு அணுவும் புத்துணர்ச்சி பெற்று சிலிர்த்து நின்றது. அவள் தன் கைகளை விரித்து வின்சென்ட்டின் உஷ்ணத்தையும், ஆண்மையையும் தனக்குள் சேர்த்துக் கொண்டாள். பல வருடங்களாக அவனின் நரம்புகளே ஒடியும் அளவுக்கு தேங்கிக் கிடந்த உணர்ச்சிப் பிரவாகத்தை, அவனின் உடலோடு தன் உடலை இறுக இணைத்து, அவன் உடல் நடுங்கிய ஒரு நிமிடத்தில் அவள் அவனை முழுமையாக தனக்குள் வாங்கிக் கொண்டாள்.
வின்சென்ட் அந்தக் கணத்தில் எதைப் பற்றிய எண்ணமும் இல்லாமல், நிம்மதியாக உறங்கினான்.
¤ ¤ ¤
தூக்கம் கலைந்து எழுந்தபோது, வின்சென்ட் மட்டும் தனியே இருந்தான். சூரியன் முழுவதுமாக மறைந்து விட்டிருந்தான். வியர்வை அரும்பியிருந்த முகம் மண்ணில் பட்டதால், அதில் சேறு அப்பி விட்டிருந்தது. மண்ணில் நல்ல ஒரு மணம் பரவி விட்டிருந்தது. கோட்டையும், தொப்பியையும் எடுத்து அணிந்தான் வின்சென்ட். ஈஸலை எடுத்து தோளில் வைத்தான். கான்வாஸை எடுத்து கக்கத்தில் இடுக்கியவாறு, வீடு நோக்கி அவன் நடக்க ஆரம்பித்தான். வீட்டை அடைந்ததும் ஈஸலையும், கான்வாஸையும் அறையில் இருந்த படுக்கையில் எறிந்தான். காப்பி குடிப்பதற்காக வெளியே நடந்தான்.
காப்பி கடையில் குளிர்ந்து போயிருந்த மேஜைக்குப் பக்கத்தில் அமர்ந்தான். நடந்த நிகழ்ச்சியை மனதில் அசை போட்டான்.
“மாயா... மாயா... அந்தப் பேரை நான் எங்கே கேட்டேன்? அது... அது... அதோட அர்த்தம் என்ன?”
ஒரு கப் காப்பி குடித்து முடித்து, இன்னொரு கப் காப்பியும் குடித்தான். ஒரு மணி நேரம் கழித்து அறைக்குத் திரும்பி வந்தான். குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. காற்றில் புது மழையின் மணம் கலந்திருந்தது.
வின்சென்ட் விளக்கை எரிய விட்டான். அதை மேஜை மேல் வைத்தான். மஞ்சள் வெளிச்சம் அறைக்குள் நிறைந்தது. படுக்கை விரிப்பில் நிறங்களின் ஒரு மின்னலாட்டம்! திடுக்கிட்டுப் போனான் வின்சென்ட். படுக்கையில் இருந்த கான்வாஸைக் கையில் அவன் எடுத்தான்.
அந்த கான்வாஸில் வெயில் காய்ந்து கொண்டிருந்த பகல் பொழுது ஒளிமயமாக இருந்தது. பிரகாசித்துக் கொண்டிருந்த பச்சை நிறத்தில் கண்ணாடிக் குப்பிகள் போல ஸைப்ரஸ் மரங்கள்! புகையிலை ஆரஞ்சு நிற இலைகளைக் கொண்ட இரண்டு செஸ்ட் நட் மரங்கள். வயலட் வர்ணத்தில் தடியைக் கொண்ட யூ மரம். இரத்த சிவப்பு இலைகளைக் கொண்ட செடிகள். முன்னால் கொஞ்சம் புல். கொஞ்சம் மணல். மேலே நீல வானம்.
தான் வரைந்த ஓவியத்தையே உற்றுப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான் வின்சென்ட். படத்தை சுவரோடு சாய்த்து வைத்தான். படுக்கையில் கால்களைப் பிணைத்து உட்கார்ந்து,மீண்டும் ஓவியத்தைப் பார்த்தான், மனதில் ஒரு திருப்தி உண்டானது.
“ஓவியம் நல்லாவே வந்திருக்கு. என்னோட உழைப்பிற்கு பலன் கிடைச்சிருக்கு!” வின்சென்ட் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
¤ ¤ ¤
ஆர்ள், மழை காலத்தின்பிடியில் சிக்கிக்கொண்டது. வின்சென்ட் வெளியே எங்கேயும் போகாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். காகினை வரவேற்பதற்காக அறையைச் சுத்தம் செய்து அழகுபடுத்தினான். தான் இதுவரை இருந்த அறையே இப்போது புதிதாக இருப்பதுபோல் அவனுக்குப்பட்டது.
சுவருக்கு இளம் வயலட் நிறம் பூசினான். தரையில் சிவப்பு செங்கல். எலுமிச்சம் பழ நிறத்தில் உள்ள படுக்கை விரிப்பு. அடர்த்தியான சிவப்பு நிறத்தில் தலையணை உறைகள். வெள்ளை நிறத்தில் மரத்தால் ஆன மேஜைகளும், நாற்காலிகளும். கை கழுவும் பேஸினை நீல நிறத்திலும், வாசலுக்கு மாந்தளிர் நிறத்தையும் அமைத்தான். சுவரில் தான் வரைந்த சில ஓவியங்களைத் தொங்க விட்டான். தன் அறையின் இப்போதைய தோற்றத்தை ஓவியமாகத் தீட்டி, தியோவிற்கு அனுப்பி வைத்தான்.