வான்கா - Page 75
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
காகின் இருக்கப்போகிற அறையை இன்னும் கூட அழகாக வைக்க நினைத்தான் வின்சென்ட். ஃபர்னிச்சர்கள் வாங்க பணம் இல்லை. தியோவிற்கு எல்லா விவரங்களையும் எழுதினான்.
ரக்கேலும், ரூளின்னின் மனைவியும், ஆர்ளில் உள்ள வேறு சிலரும் வின்சென்ட் படம் வரைவதற்காக போஸ் கொடுத்தார்கள்.
வசந்தம், இயற்கையில் அற்புதமான பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. முற்றத்தில் அரளிப் பூக்கள் பூத்துக் குலுங்கின.
வின்சென்ட் வயல் பக்கம் சூரியகாந்திப் பூக்களைத் தேடி நடந்தான். ஆகாயத்தில் மேகங்கள் வெள்ளைப் புள்ளிகளென ஆங்காங்கே நின்றிருந்தன. நிலம் புதுமையான தவிட்டு நிறத்தில் இருந்தது. பன்னிரெண்டு ஓவியங்களில் சூரியகாந்திப் பூக்கள் அழகு காட்டி சிரித்தன!
எரிந்து கொண்டிருக்கும் சூரியனும், கொடுங்காற்றும் மீண்டும் வந்தன. ஊரே வெயிலின் உஷ்ணம் தாங்காமல் தகித்தது. கோடை காலத்தின் கொடுமை தாங்காமல் மக்கள் புழுவாய் துடித்தார்கள்.
கோடையுடன் சேர்ந்து காகினும் வந்தார்.
¤ ¤ ¤
இரவு நேரத்தில் ஆர்ளுக்கு வந்த காகின் பொழுது விடியும் வரை கஃபேயில் தங்கினார். கஃபேயின் உரிமையாளர் காகினையே உற்றுப் பார்த்துவிட்டு, ஆச்சரியம் கலந்த குரலில் சொன்னார்: “நீங்க அவரோட நண்பர்தானே! எனக்கு நல்லாத் தெரியும்”
“ஏய்... என்னடா புலம்புறே?- காகின் கேட்டார்.”
“ம்ஸ்யெ வான்கா உங்களோட படத்தை ஏற்கனவே என்கிட்ட காட்சி இருக்கார். நிச்சயமா அது நீங்கதான்...”
காலையில் காகின் வின்சென்ட்டை எழுப்பினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு காகினைப் பார்த்ததும் வின்சென்ட்டுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தன் வீட்டில் இருந்த ஒவ்வொரு விஷயத்தையும் வின்சென்ட் அவருக்கு ஆர்வத்துடன் காட்டினான். பாரீஸில் உள்ள விசேஷங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் அவன் காகினிடம் கேட்டான். மணிக்கணக்கில் நேரம் போவதே தெரியாமல் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
“இன்னைக்கு ஏதாவது படம் வரையிறீங்களா காகின்?”- வின்சென்ட் கேட்டான்.
“நான் என்ன காரலஸ் ட்யூரனா (ஃப்ரெஞ்ச் ஓவியர்)- வண்டியில் இருந்து இறங்கின உடனே பாலெற்றெடுத்து படம் வரையிறதுக்கு?”- காகின் சொன்னார்.
“இல்ல... சும்மா கேட்டேன்!”
“முட்டாள்தனமான கேள்விகளை எல்லாம் கேட்காதே!”
அன்று இரவு வின்சென்ட் ‘சூப்’ தயாரித்தான்.
“த்தூ...”- காகின் துப்பினார்: “தண்ணியைக் கலந்து விட்டு என்ன பண்ணி இருக்கே! உன்னோட ஓவியங்கள்ல இருக்கிற நிறங்களைப் போலவே ஒரே அலங்கோலமா இருக்குது இதுவும். சூப்பாம் சூப்பு...”
“என்னோட ஓவியங்கள்ல இருக்கிற நிறங்கள் சரியில்லன்னு சொல்றீங்களா?”
“டேய்... நீ இப்பவும் நியோ இம்ப்ரஸனிஸத்துல சிக்கிக்கிட்டு வெளியே வரமாட்டேங்குற. இப்போ நீ வரைஞ்சிக்கிட்டு இருக்கிற பாணியைத் தூக்கி எறி. உனக்கு அது சரியா சேரல...”
வின்சென்ட் சூப் பாத்திரத்தை ஒரு பக்கம் தள்ளி வைத்தான்: “நீங்க ஏன் பேச மாட்டீங்க? அடடா... என்ன விமர்சனம்!”
“நீயே நல்லா பார்த்துட்டு சொல்லேன்” – காகின் விடுவதாக இல்லை: “உனக்கு கண்ணே தெரியலியா? இந்த கடும் மஞ்சள் நிறம் உன்கிட்ட சிக்கிக்கிட்டு பாடாய்ப்படுது!”
வின்சென்ட் தான் வரைந்த ‘சூரியகாந்திப் பூக்கள்’ ஓவியத்தைப் பார்த்தவாறு கேட்டான்: “இதைப் பார்த்துட்டுக் கூட அதையேதான் சொல்றீங்களா?”
“இல்ல... உதாரணத்துக்குச் சொன்னேன். சொல்லப்போனா... இன்னும் நிறைய உனக்குச் சொல்ல வேண்டியதிருக்கு. இங்க பாரு, வின்சென்ட். இங்கே நிறங்களோட சேர்க்கையில ஒரு முழுமை இருக்கா பாரு...”
“நீங்க சொல்றது சுத்தப் பொய்!”
“உட்காரு, வின்சென்ட்... என்னைக் கொல்லப்போறது மாதிரி பார்க்காதே. நான் உன்னைவிட வயசுல மூத்தவன். உன்னைவிட எனக்கு அனுபவமும் அதிகம். நீ இப்போதும் உன்கிட்ட என்ன திறமை இருக்குன்னு தேடிப்பார்த்துக்கிட்டு இருக்குற ஆளு. நான் சொல்றதைக் கேளு. உனக்கு பயன்படுற மாதிரி சில விஷயங்களை நான் சொல்லித் தர்றேன்...”
“நன்றி. எனக்கு யாரோட உதவியும் தேவை இல்ல...”
அவர்கள் சந்திப்பின் ஆரம்ப கணமே இப்படி படு சூடாக இருந்தது. வின்சென்ட்டுக்குப் பக்கத்தில் வந்து விட்டதாலோ என்னவோ, பாரீஸில் இருந்த காகினிடம் இருந்த பல பழக்க வழக்கங்களும் ரொம்பவும் மாறிவிட்டிருந்தன. சமயம் கிடைக்கும் போதெல்லாம் வின்சென்ட்டைக் கேலி பண்ணி விளையாடினார் காகின். இரண்டு பேரும் மாறுபட்ட கருத்துக்களை வைத்துக் கொண்டு இருவேறு முனைகளில் நின்றனர். வின்சென்ட்டுக்குப் பிடித்த ஓவியர்களை காகின் இஷ்டப்படாமல் இருந்தார். இரண்டு பேருமே தாங்கள் கொண்டிருக்கும் கருத்தை வலியுறுத்த பயங்கரமாகப் போராடினர். காகினின் மிருகத் தனமான உடல் வலிமைக்கு தன் மன ஆவேசத்தால் ஈடு கொடுத்தான் வின்சென்ட். ஒவ்வொரு முறை அவர்கள் பேசுகிறபோதும், அவர்களுக்கிடையே தீப்பொறி பறந்தது. ஒவ்வொரு முறை வாக்குவாதம் நடந்து முடிகிறபோதும், இரண்டு பேருமே களைத்துப் போய் விடுவார்கள்.
“இயற்கையைப் பார்த்தபிறகு, ஸ்டுடியோவில் போய் உட்கார்ந்து அந்தக் காட்சியை நீ வரையலைன்னா, ஒரு நாளும் ஓவியனா உன்னால வரவே முடியாது, வின்சென்ட்”- காகின் சொன்னார்.
“அப்படி என்னால எந்த உணர்ச்சியும் இல்லாமல்லாம் படம் வரைய முடியாது. உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்தான் என்னால் ஓவியம் வரைய முடியும். நான் ஆர்ளைத் தேடி வந்ததற்குக் காரணமே இதுதான்.”
“நீ வெறுமனே இயற்கையை அப்படியே காப்பி அடிக்கிறே! முன் தயாரெடுப்பு எதுவுமே இல்லாம வரையக் கத்துக்கணும்”
“முன் தயாரெடுப்பே இல்லாமலா? என் தெய்வமே...”
“இன்னொரு விஷயம்... ஸெரா சொன்னதை நீ ஞாபகத்தில் வச்சிக்கணும். ஓவியக் கலைன்றது உணர்வுப் பூர்வமானது. என் பையனே... அதுல கதைக்கோ, தார்மீக தத்துவங்களுக்கோ கொஞ்சம்கூட இடம் கிடையாது...”
“நான் சில இயல்புகளையும் குணங்களையும் ஓவியத்துல கோடிட்டுக் காட்டுறேன்றதுக்காக இப்படிச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஏதாவது கிறுக்கு பிடிச்சிருக்கா என்ன?”
“உனக்கு ஏதாவது பிரசங்கம் பண்ணனும்னு தோணிச்சுன்னா, முன்னாடி மாதிரி பாதிரியாராவே போயிடு. ஓவியக்கலைன்றது நிறம், வரைவு, உருவம் சம்பந்தப்பட்டது. ஓவியன், வேணும்னா இயற்கையோட அழகை அப்படியே ஓவியத்துல வெளிப்படுத்தலாம், அவ்வளவுதான்.”
“இயற்கையில நாம எடுத்துக்க வேண்டியது அதோட அழகு மட்டும்தானா? இதைச் செய்யிறதை விட நீங்க பேசாம முன்னாடி பார்த்த ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் வேலைக்கே போயிடலாம்!”
“அப்படின்னா நான் ஞாயிற்றுக்கிழமைகள்ல சர்ச் பிரசங்கம் கேட்பதற்காக வருவேன். பிரிகேடியர் (வின்சென்ட்டைக் கேலி பண்ணுவதற்கு காகின் கண்டுபிடித்த ஒரு வார்த்தை) நீ இயற்கையில் இருந்து என்னவெல்லாம் எடுப்பே?”
“இயற்கையின் அசைவு... துடிப்பு... வாழ்க்கையின் தாளம்...”
“இன்னும் சொல்லு...”