வான்கா - Page 79
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8808
டாக்டர் நடந்து வந்தார்: “என்னோட நோயாளி இன்னைக்குக் காலையில எப்படி இருக்காரு?”
“டாக்டர்...” – வின்சென்ட் கேட்டான்: “என் தம்பி என்கிட்ட ஏதோ விஷயம் சொல்லணும்னு நினைக்கிறான், சொல்லலாம்ல?”
“தாராளமா... ஒரு நிமிஷம்... நான் ஒண்ணு பார்த்துக்குறேன்... நல்லது... நல்லது... காயம் வேகமா ஆறுது!”
டாக்டர் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பிறகு, என்ன விஷயம் என்பதைத் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் உடையவனாக இருந்தான் வின்சென்ட்.
“வின்சென்ட்...”- தியோ மெதுவான குரலில் சொன்னான்: “நான்... அதாவது... நான் ஒரு இளம் பெண்ணைப் பார்த்தேன்”
“என்ன சொல்ற தியோ?”
“ஆமா வின்சென்ட். அவள் ஒரு டச் பெண். பேரு ஜோஹன்னா பங்கர். பார்க்குறதுக்கு நம்ம அம்மாவைப் போலவே இருப்பா...”
“நீ அவளைக் காதலிக்கிறியா?”
“ஆமா... நீ இல்லாம நான் பாரீஸில் தனியாவே இருக்க வேண்டியதாப் போச்சு...”
“என்கூட இருந்ததுல உனக்குத்தான் எவ்வளவு கஷ்டங்கள்!”
“என் அன்பு வின்சென்ட்... நீ அங்கேயிருந்து வந்த பிறகு, ஒவ்வொரு முறையும் உன்னோட அறையைப் பார்க்குறப்போ உன்னோட செருப்பும் கான்வாஸ்களும் அறையில் சிதறிக்கிடக்கிற காட்சியைப் பார்க்க நான் ஏங்கி இருக்கேன் தெரியுமா? அது போகட்டும்... நீ நல்லா ஓய்வு எடு. நானும் இங்கேயே இருக்கேன்!”
தியோ ஆர்ளில் இரண்டு நாட்கள் தங்கினான். டாக்டர் ரே, வின்சென்ட் வெகு சீக்கிரமே குணமாகிடுவான் என்றும் அவனைத் தன் சொந்த சகோதரன் மாதிரியே பார்த்துக் கொள்வதாகவும் தியோவிடம் உறுதி அளித்தார். அதற்குப் பிறகுதான் திரும்பிப் போகவே சம்மதித்தான் தியோ.
¤ ¤ ¤
ரூ>ளின் ஒவ்வொரு நாள் மாலையிலும் பூக்களை எடுத்துக் கொண்டு வின்சென்ட்டைப் பார்க்க வந்து விடுவார். இரவு நேரம் என்றால் வின்சென்ட்டிற்குப் பொழுது போவது என்றாலே பெரிய பிரச்னையாக இருக்கும். டாக்டர் ரே உறக்கம் வராததற்குப் பரிகாரமாக அவனின் தலையணைக்குக் கீழே கற்பூரத்தை வைத்தார்.
“நான் எழுந்து போய் ஆடை அணியட்டா, டாக்டர்?”- வின்சென்ட் கேட்டான்.
“உடம்புல சக்தி இருக்குறதா நினைச்சா, ஒரு சுத்து சுத்திட்டு, காத்து வாங்கிட்டு என்னோட அறைக்கு வாங்க!”
மருத்துவமனையைச் சுற்றிலும் பூக்களும், செடிகளும் நிறையவே இருந்தன. சரளைக் கற்கள் பதித்த பாதைகள். சிறிது நேரம் சுற்றி நடந்த வின்சென்ட், டாக்டரின் அலுவலகத்தை அடைந்தான்.
“நடந்ததுல சந்தோஷம் கிடைச்சிருக்கா?”- டாக்டர் கேட்டார்.
“ஆமா... டாக்டர்”
“வின்சென்ட்... நீங்க ஏன் உங்க காதை அறுத்தீங்க?”
வின்சென்ட் சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் மவுனமாக இருந்தான்.
“எனக்கே தெரியல...”
“அதைச் செய்யிறப்போ என்ன நினைப்பு உங்களுக்கு இருந்துச்சு?”
“நான்... ஒண்ணும்... நினைக்கல டாக்டர்”
அடுத்த சில நாட்களிலேயே இழந்த சக்தியை மீண்டும் பெற்றுவிட்டான் வின்சென்ட். ஒரு நாள் காலையில் டாக்டரின் அறையில் பேசிக் கொண்டிருந்தபோது, வின்சென்ட் திடீரென்று ஒர சவரக் கத்தியைக் கையில் எடுத்து அதைத் திறந்தான்.
“உங்களுக்கு ஒரு ‘ஷேவ்’ இப்போ கட்டாயத் தேவை டாக்டர். நான் உங்களுக்கு ஷேவ் பண்ணி விடட்டுமா?”
டாக்டர் ரே சற்று பின்னால் நகர்ந்தார். முகத்திற்கு நேராக கையால் மறைத்தவாறு படபடப்பு மேலோங்க சொன்னார்: “வேண்டாம்... வேண்டாம்... அந்தக் கத்தியை முதல்ல கீழே வையிங்க...”
“ஆனா, நான் நல்லா ஷேவ் பண்ணுவேன் டாக்டர். என்னை நம்புங்க.”
“வின்சென்ட், அந்தக் கத்தியைக் கீழே வைக்கிறீங்களா இல்லியா?”
வின்சென்ட் குலுங்கி குலுங்கி சிரித்தான். கத்தியை மடக்கி, அது ஏற்கனவே இருந்த இடத்தில் வைத்தான்.
“பயப்பட வேண்டாம், நண்பரே! நான் சும்மா விளையாட்டுக்காக அப்படிச் சொன்னேன். என் உடம்பு இப்போ சரியாயிடுச்சு...”
¤ ¤ ¤
இரண்டு வாரங்களுக்குப் பிறகு டாக்டர் ரே, வின்சென்ட்டைப் படம் வரைய அனுமதித்தார். டாக்டரின் படம் ஒன்றை வரைந்து அவருக்குப் பரிசாகத் தந்தான் வின்சென்ட். அதை அவர் கையில் கொடுத்துவிட்டு அவன் சொன்னான்: “இதை என்னோட ஞாபகமா வச்சுக்கோங்க, டாக்டர். நீங்கள் செய்த உதவிக்கும், காட்டிய அன்பிற்கும் பிரதி உபகாரமாக என்னால இதைத்தான் செய்ய முடிஞ்சது...”
“நன்றி... வின்சென்ட். நான் அதற்காகப் பெருமைப்படுறேன்...”
தன் வீட்டின் சுவரில் இருந்த ஒரு ஓட்டையை அடைக்க, அந்த வின்சென்ட் வரைந்த ஓவியம் டாக்டருக்கு பயன்பட்டது.
மேலும் இரண்டு வாரங்கள் மருத்துவமனையிலேயே தங்கிய வின்சென்ட் மருத்துவமனையையும், அதைச் சுற்றியுள்ள தோட்டத்தையும் ஓவியங்களாக வரைந்தான்.
விடைபெறும் நேரத்தில் டாக்டர் ரே சொன்னார்: “இடையில் அவ்வப்போது என்னை வந்து பார்க்கணும், வின்சென்ட். அப்ஸிந்த் குடிக்கவே கூடாது. அதிகமா உணர்ச்சிவசப்படக் கூடாது. தொப்பி அணியாம வெளியே போகக் கூடாது!”
“நீங்க சொன்னபடி நான் நடக்குறேன். நன்றி டாக்டர்!”
“நான் உங்களோட சகோதரனுக்கு இப்போ உங்களுக்கு முழுமையா குணமாயிடுச்சுன்னு கடிதம் எழுதப் போறேன்.”
படிப்படியாக வின்சென்ட்டிற்கு இழந்த பலம் மீண்டும் கிடைத்தது. ரூளின்னும் ரக்கேலும் அவனை மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார்கள்.
“இதைப் பெரிசா எடுத்துக்காதே... ஃபுரு”- ரக்கேல் சொன்னாள்: “இங்கே இது சர்வசாதாரணமான ஒரு விஷயம்.”
ரூளின்னும் அதே கருத்து ஆமோதித்தார். “இங்கே இருக்குற எல்லாருக்குமே மூளை கொஞ்சம் லூஸ்தான்”
டாக்டர் ரே தன் கருத்தைத் தெளிவாகச் சொன்னார்: “நீங்க எந்தக் காலத்திலும் ஒரு சாதாரண மனிதனாக இல்ல... எப்பவும் அசாதாரணமான குணத்தோடதான் இருந்திருக்கீங்க. கலைஞர்கள் பொதுவாகவே அப்படித்தான் இருப்பாங்க. சாதாரண குணத்தைக் கொண்டவங்க கலையைப் படைக்க முடியாது. அவங்க நல்லா சாப்பிடுவாங்க. தூங்குவாங்க. சாதாரண வேலைகளைச் செய்வாங்க. ஒரு நாள் செத்துப்போவாங்க. அப்படி உங்களால இருக்க முடியாது. மத்தவங்கக்கிட்ட இல்லாத மூளை உழைப்பு உங்கக்கிட்ட இருக்கும். அதை வச்சு மத்தவங்களைத் தாண்டி உங்களால வாழ்க்கையில உயர்ந்த நிலைக்குப் போக முடியும். ஆனா, கொஞ்சம் கவனமா இல்லைன்னா இந்த மூளை உழைப்பே தவறான திசையை நோக்கியும், உங்களைக் கொண்டு போயிடும். இந்த மூளை உழைப்பு ஒரு எல்லையை மீறுச்சுன்னா, மன நோய்ல கொண்டு போய் விட்டுடும். எத்தனையோ கலைஞர்கள் மன நோயால பாதிக்கப்பட்டு அவங்க வாழ்க்கையே குட்டிச் சுவராப் போயிருக்கு!”
“ஒரு கலைஞன் தன் கடமையைச் செய்ய வேண்டியிருக்கே!”- வின்சென்ட் சொன்னான்: “நான் விருப்பப்படுற மாதிரி படம் வரைய முடியலைன்னா, பிறகு வாழ்ந்து என்ன பிரயோஜனம்? வாழ்றதே முட்டாள்தனமா இருக்குமே!”