வான்கா - Page 76
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“நான் சூரியனை ஓவியமா வரையிறப்போ, அது பயங்கர வேகத்தோட சுத்துறதா, அந்த ஓவியத்தைப் பாக்குறவங்க உணரணும்”- வின்சென்ட் சொன்னான்: “சூரியனோட உஷ்ணத்தையும், வெளிச்சத்தையும் அவங்க உணரணும். தானிய வயல்களைப் படமா வரையிறப்போ, ஒவ்வொரு தானியத்திலும் இருக்கிற சின்னச் சின்ன அணுக்கள் கூட உத்வேகத்தோட பொங்கி நிக்கணும். நான் வரைஞ்ச ஆப்பிளைப் பாக்குறப்போ தோலுக்குள் நிறைஞ்சு இருக்கிற இனிப்பு கலந்த சத்தும், அதற்குள் தெளிவாத் தெரியணும்.”
“வின்சென்ட்... நான் எத்தனை தடவை உன்கிட்ட சொல்லி இருக்கேன். ஒரு ஓவியனுக்கு தத்துவங்கள்லாம் தேவையில்லைன்னு...!”
“இந்த முந்திரித் தோட்டத்தைப் பாருங்க, காகின். இந்த முந்திரி பழங்கள் வெடிச்சு அதற்குள் இருக்கிற இனிப்பான தண்ணி கண்ணில் வந்து விழுகிற மாதிரி உங்களுக்குப் படுதா, இந்த மலை இடுக்கைப் பாருங்க. இது வழியா தண்ணீர் ஓடி வர்றதை உங்களால பார்க்க முடியுதா? ஒரு மனிதனைப் படமா வரையிறப்போ, அவனோட முழு வாழ்க்கை ஓட்டத்தையே – அவன் கண்டவை, செய்த காரியங்கள் அவனின் அனுபவங்கள் எல்லாவற்றையும் ஓவியத்துல கொண்டு வரணும்!”
“நீ என்னதான் சொல்ல வர்றே?”
“வாழ்க்கையை உயிர்த் துடிப்போட வச்சிருக்கிற இந்த உலகம் – ஒவ்வொரு நிமிடமும் இயங்கிக் கொண்டிருக்கிற வாழ்க்கைன்ற மகாநதியின் ஓட்டம் – இங்கிருக்குற இனிமையான, அழகான பல விஷயங்கள்- மனிதர்களின் கனவுகள், எண்ணங்கள் – எல்லாமே ஒண்ணுதான். ஒரே உயிரின் தாளலயங்கள்தான். அந்தத் தாளத்திற்கேற்றபடிதான் மனிதனும், மிருகமும், மரமும், மண்ணும், ஆறும், வானமும் இயங்கிக்கிட்டிருக்கு. உங்களுக்குள்ள உன்ன உயிர்த்துடிப்பு இருக்குதோ, அந்த உயிர்த்துடிப்புதான் ஒரு முந்திரிப் பழத்துக்குள்ள இருக்கு, காகின். ஒரு விவசாயி இருக்குற ஓவியத்தைப் பார்க்குறப்போ, அதைப் பார்க்குறவங்க மனசுல வயல்ல இருக்கிற கதிர்கள் மட்டும் தெரியக்கூடாது. வயலோடு இரண்டறக் கலந்திருக்கும் அந்த விவசாயியின் உருவமும் மனமும் அடித்தளத்தில் வலம் வரணும். சூரிய ஒளி மனிதனிலும், மண்ணிலும், கதிரிலும், கலப்பையிலும், குதிரையிலும், நிறைஞ்சிருக்கிறது தெரியணும். எல்லா இடங்களிலும் பாகுபாடு இல்லாம நிறைஞ்சு இருக்குற அந்தத் தாளம் தான் உயிர்ப்பு. அதுதான் கடவுள்!”
“பிரிகேடியர், நீ சொல்றதுதான் சரி!”
காகின் இப்படிச் சொன்னதும் அறிவுபூர்வமான விஷயங்களை அலசிக் கொண்டு உயர்நிலையில் சிந்தித்துக் கொண்டு இருந்த வின்சென்ட், சாதாரண நிலைக்குத் தன்னைக் கொண்டு வந்தான். காகின் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னது, தன் கன்னத்தை யாரோ அடித்தது போல் அவன் உணர்ந்தான். வாயை அகலப் பிளந்து காகினையே உற்றுப் பார்த்தான். சில நிமிடங்கள் கழித்து காகின் கேட்டார். “பிரிகேடியர், நீ சொன்னது சரிதான்... இது மூலம் நீ என்ன சொல்ல வர்ற?”
“இப்போதைக்கு இந்தப் பேச்சை நிறுத்தி வைப்போம், மொதல்ல ஏதாவது குடிப்போம்!”
¤ ¤ ¤
வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் ஆர்ள் மக்கள் துடித்துக் கொண்டிருந்தனர். ரோன் நதிக்கரை உஷ்ணத்தால் தகித்துக் கொண்டிருந்தது. சூரியன் இரண்டு ஓவியர்களையும் வாட்டி எடுத்து, பாடாய்ப் படுத்தியது. மிஸ்ட்ராலின் கொடூரத் தன்மையால் பாதிக்கப்பட்ட அவர்களின் நரம்புகள் புடைத்து நின்றன.
அந்த கோடை வெப்பம் மக்களின் நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கியது. ஆர்ளில் குற்றச் செயல்கள் அதிகமாயின. மக்களின் கண்களில் இனம் புரியாத ஒரு அச்சம் தெரிந்தது. யாரும் சிரிப்பதில்லை, பேசுவதில்லை. லெமார்ட்டினில் அடிபிடியும், கத்திக்குத்தும் சர்வ சாதாரணக் காட்சிகளாயின. ஏதோ ஒரு பெரிய ஆபத்தின் அறிகுறி காற்றில் கலந்திருந்தது. ரோன் நதி எப்போது பொங்கி ஊரையே அழிக்குமோ என்ற அளவிற்கு ஒரு கொந்தளிப்புடன் அது இருந்தது.
வின்சென்ட், பாரீஸில் இருந்தபோது பத்திரிகை நிருபர் சொன்ன வார்த்தைகளை அவன் ஞாபகப்படுத்திப் பார்த்தான்: “இது எதுல போய் முடியும்? ஒரு பூகம்பத்திலோ இல்லாட்டி ஒரு புரட்சியிலோ...!”
வின்சென்ட்டின் தலை ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் சூளைபோல படு உஷ்ணமாக இருந்தது. அதிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக அனல் பறக்கும் ஓவியங்கள் உருவாயின. உன்னதமான ஓவியங்கள் பல பிறவி எடுத்த அருமையான நாட்கள் அவை! தன்னுடைய கலை வாழ்க்கை ஒரு எல்லையில் போய் சேர்ந்திருக்கிறது என்பதை வின்சென்ட்டால் உணர முடிந்தது. ஆத்மா என்ற உறையில் இருந்து உருவான ஓவியங்களுக்கு உயிர் கொடுப்பதில் வெறித்தனமாக ஈடுபட்டிருந்தான் அவன்.
காகினும் வெறுமனே இருக்கவில்லை. இரண்டு பேரும் பகல் முழுக்க ஓவியம் வரைவதில் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். இரவு முழுவதும் உறங்காமல் பல விஷயங்களையும் பேசி, விவாதம் செய்து சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். உணவு சாப்பிடுவதைக் கூட மறந்து விடுவார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் பார்த்தது சூரிய வெளிச்சம், நிறங்கள், புகையிலை, அப்ஸிந்த் – இவைகளைத்தான். வெளியே கொடுமையான காற்று வீசிக் கொண்டிருந்தது. உள்ளேயும்தான். மனங்கள் ஸ்தம்பித்துப் போக, ஒன்றுமே பேசாமல் பல நிமிடங்கள் வெறுமனே இருவரும் அமர்ந்திருப்பார்கள்.
வெளியே கொடுங்காற்று கடுமையாக வீசிக் கொண்டிருந்தது. அறைக்குள் இன்னொரு கொடுங்காற்று வீச ஆரம்பித்தது. வெளியே போகாமல் உள்ளேயே அடைந்து கிடந்ததால், காகின் வின்சென்ட்டைத் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து துன்பப்படுத்திக் கொண்டிருந்தார். வின்சென்ட் அவரின் செயலால், உஷ்ணத்தின் எல்லைக்குப் போய் கிட்டத்தட்ட வெடித்துச் சிதறுகிற நிலையில் இருந்தான்.
“பேசாம இரு, வின்சென்ட்!”
“நீங்க பேசாம இருக்கலாமே!”
“என் கூட தங்கி சண்டை போட்டவங்கள்ள பலருக்குப் பைத்தியமே பிடிச்சிருக்கு. அந்த நிலைமை உனக்கு வேண்டாம்னு நினைக்கிறேன்”
“என்னை பயமுறுத்துறீங்களா?”
“இல்ல... எச்சரிக்கிறேன்...”
“அந்த எச்சரிக்கையை பேசாம நீங்களே வச்சுக்கோங்க”
“ஓ... அப்படியா? ஆனா, உனக்கு ஏதாவது பிறகு நடந்துச்சுன்னா, என்னைக் குற்றம் சொல்லாதே!”
“பால்... பால்... இந்தச் சண்டை நமக்குத் தேவையா? பேசாம சும்மா இருந்தா என்ன? நீங்கள் என்னைவிட பெரிய ஓவியர்ன்றது எனக்கு நல்லாவே தெரியும். எனக்குப் பல விஷயங்களையும் சொல்லித் தர்ற அளவுக்கு அறிவாளி நீங்க. அதுவும் எனக்கு நல்லா தெரியும். அதற்காக, என்னைக் கேவலமா நீங்க நடத்தணுமா? இதை இனிமேலும் என்னால பொறுத்துக்க முடியாது. ஒன்பது வருஷமா நான் இந்த அடிமை வேலையைச் செஞ்சிக்கிட்டு இருக்கேன். இந்த நாசமாப் போன நிறங்களை வச்சு என்னால சில விஷயங்களைச் சொல்ல முடியும்னு கடவுள் சத்தியமா நான் நம்புறேன். நான் சொல்றது சரிதானே! சொல்லுங்க, காகின்...”
“பிரிகேடியர், நீ சொன்னது சரிதான்.”