வான்கா - Page 71
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“எனக்கு சந்தோஷம் தர்ற விஷயம்தான் அது, ம்ஸ்யெ...! ஆனா, என்னை எதுக்கு ஓவியமா வரையணும், நான் ஒரு அவலட்சணமான மனிதன் ஆயிற்றே!”
“ரூளின்... தெய்வம்னு ஒண்ணு இருந்தா, அதுக்கும் உங்கக்கிட்ட இருக்கிற தாடியும், கண்களும் போலத்தான் இருக்கும்.”
“சும்மா விளையாட்டுக்காகப் பேசாதீங்க, ம்ஸ்யெ!”
“இல்ல... நான் சீரியஸாத்தான் பேசுறேன்”
¤ ¤ ¤
பணம் கையில் அதிகம் இல்லாத சமயங்களில் போகக்கூடிய ரெஸ்ட்டாரெண்டைப் பல்வேறு வகைகளில் படங்களாக வின்சென்ட் வரைந்து வைத்திருந்தான். அடுத்து இரவு முழுவதும் திறந்திருக்கும் கஃபேயின் படங்கள் நிறைய இருந்தன. கஃபேயின் உட்பகுதி சிவப்பும், அடர்த்தியான மஞ்சள் வர்ணமும் கொண்டு வரையப்பட்டிருந்தது. அறையின் நடுவில் இருந்த பில்லியர்ட்ஸ் மேஜை பச்சை நிறத்தில் இருந்தது. நான்கு விளக்குகள். அதைச் சுற்றிலும் ஆரஞ்சு, பச்சை வர்ணங்களில் ஒளி வெள்ளம். அங்கே அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்த இரவு நேர உல்லாச மனிதர்கள் சிவப்பு, பச்சை நிறங்களில்... இருள் கவிந்திருந்த இந்த கஃபேயில் ஒருவன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளலாம். பைத்தியமாகலாம். குற்றச் செயல்கள் ஏதாவது செய்யலாம்.
ஆர்ளில் இருக்கும் மக்களுக்கு தங்களின் கிறுக்கனான ஓவியன் தெருவில் இருந்தவாறு இரவு முழுக்க படங்கள் வரைவதும், பகலில் உறங்குவதும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு வினோதமான விஷயமாக இருந்தது.
¤ ¤ ¤
ரூளின்னின் உதவியுடன் வின்சென்ட் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தான். மஞ்சள் வர்ணம் பூசிய பெரிய வீடு. அங்கே தன் வாழ்க்கையை வின்சென்ட் ஆரம்பித்த மறுநாள் பிரிட்டனில் ஒரு கஃபேயில் தங்கியிருந்த காகின் எழுதிய கடிதம் ஒன்று அவனுக்கு வந்தது. “இந்த நாசமாய்ப்போன குகையில் இருந்து தப்பித்துச் செல்ல வழியெதுவும் தெரியவில்லை. வாடகை சரியாகக் கொடுக்காததால், வீட்டு உரிமையாளர் என் ஓவியங்கள் அனைத்தையும் எடுத்து வீட்டுக்குள் பூட்டி வைத்திருக்கிறார். தேவைக்குப் பணம் இல்லாமல் இருப்பதுதான் மனிதர்களுக்கு இருக்கும் கஷ்டங்களிலேயே மிக மிக துயரமானது. வறுமையில் நான் வாட வேண்டும் என்பது எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் சாபக்கேடாக இருக்கும்போல...”
பாவம் காகின்... எவ்வளவு பெரிய ஓவியர்! எவ்வளவு பெரிய மனிதர்! காகினுக்கு ஏதாவது நேர்ந்தால், கலை உலகிற்கு அது எவ்வளவு பெரிய இழப்பு!
தன் வீட்டில்தான் நிறைய இடம் இருக்கிறதே! பேசாமல் காகினை இங்கேயே வரச் சொல்ல வேண்டியதுதான் என்ற தீர்மானத்திற்கு வந்தான் வின்சென்ட். தான் பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் தன்னந்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவல நிலையை அப்போதுதான் உணர்ந்தான் அவன். ஒருவேளை காகினின் படங்களுக்குப் பதிலாக தியோ கொஞ்சம் பணம் அதிகமாகச் சேர்த்துக்கூட அனுப்பி வைக்கலாம். “ஓ... பால், நீங்க என்கூட வந்து இருந்தா, எனக்கு எவ்வளவு நல்லா இருக்கும்!” – வின்சென்ட் தனக்குத்தானே கூறிக்கொண்டான்.
¤ ¤ ¤
ஒரு மாலைப் பொழுதில் கஃபே லமார்ட்டினில் அமர்ந்திருந்த போது ரூளின் சொன்னார்: “நாளைக்கு வெயில் மண்டையைப் பிளக்கிற அளவுக்கு இருக்கும். அதுக்குப் பிறகு மழைக்காலம்தான்...”
“ஆர்ளில் மழைக்காலம் எப்படி இருக்கும்?” – வின்சென்ட் கேட்டான்.
“ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கும் ம்ஸ்யெ. விடாமல் மழை பெய்ஞ்சுக்கிட்டே இருக்கும். காற்று வேற பேய்த்தனமா வீசி ஒரு வழி பண்ணும். குளிர் உடலை வாட்டி எடுத்திடும். ஆனா, மழைக்காலம் கொஞ்ச நாட்களுக்குத்தான். கிட்டத்தட்ட ரெண்டு மாசம்...”
“அப்படியா விஷயம்? நம்மளோட நல்ல நாட்கள் முடியப் போகுது இல்லியா? அப்போ என்ன படம் வரையணும்னு எனக்குத் தெரியும். கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க, ரூளின். ஒரு மழைக்கால நாள். பச்சை நிறத்துல ரெண்டு சைப்ரஸ் மரங்கள். புகையிலை. ஆரஞ்சு நிறத்துல இலைகள் உள்ள ரெண்டு செஸ்ட்நட் மரங்கள். வயலட் நிற தடியைக் கொண்ட யு மரங்கள்... பிறகு இரத்த சிவப்பு வர்ணத்தில் இலைகளைக் கொண்ட ரெண்டு அடர்த்தியான செடிகள். கொஞ்சம் மணல்... கொஞ்சம் புல்... நீல வானம்!”
“நீங்க இப்படி வர்ணிக்கிறப்போ, வாழ்க்கை முழுவதுமே நான் குருடனாகவே இருந்துட்டதுக்காக வருத்தப்படுறேன், ம்ஸ்யெ...”
¤ ¤ ¤
மறுநாள் காலையில் என்றுமில்லாத மாதிரி வெகு சீக்கிரமே- சூரியன் உதிக்கிறபோதே வின்சென்ட் படுக்கையை விட்டு எழுந்தான். எழுந்ததும் கத்தரியை எடுத்து தாடியை வெட்டிச் சரிப்படுத்தினான். ஆர்ளின் கொடுமையான வெயிலில் இன்னும் கருகிப் போகாமல் எஞ்சி இருந்த தலைமுடியை வாரினான். இதுவரை காய்ந்து பாடாய் படுத்திய சூரியனை வழியனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னிடம் இருப்பதிலேயே நல்ல சூட்டை எடுத்து அணிந்தான். முயல் ரோமத்தில் ஆன தொப்பியையும் தலையில் அணிந்தான்.
ரூளின் சொன்னது சரிதான். அக்னி குண்டத்தைப் போல வானத்தில் இருந்த சூரியன் கொடுமையாக தன் கதிர்களை உலகின் மேல் பரப்பி சுட்டெரித்துக் கொண்டிருந்தான். ஆர்ளில் இருந்து இரண்டு மணி நேரம் நடந்துசென்றால், ரூளின்னிடம் அவன் சொன்ன தோட்டம், தாராஸ்கோன் போகிற பாதைக்கு அருகில் ஒரு மலைச்சரிவில் அமைந்திருக்கிறது. வின்சென்ட் தோட்டத்திற்குப் பின்னால் உழுத சோள வயலில், ஒரு இடத்தில் தான் கொண்டு வந்த ஈஸலை வைத்தான். தொப்பியைக் கழற்றிவிட்டு, கோட்டைத் தரையில் போட்டான். கான்வாஸை ஈஸலின் மேல் வைத்தான்.
அதிகாலை நேரமே ஆயிருந்தாலும் சூரியன் தலையைச் சுட்டு எரித்துக் கொண்டிருந்தான். குன்றின்மேல் அக்னி ஜ்வாலைகள் பயங்கரமாக நடனமாடிக் கொண்டிருந்தன.
வின்சென்ட் தனக்கு முன்னால் இருந்த காட்சிகளைப் பார்த்தான். என்னென்ன வர்ணங்களைச் சேர்க்கலாம் என்று மனதிற்குள் ஒருமுறை யோசித்தான். மனதில் இப்போது வரைய இருக்கும் ஓவியத்தை ஒருமுறை அசை போட்டுப் பார்த்தான். கண்ணில் கண்ட காட்சி மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது என்று திடமாக நம்பிய மறுகணம், ப்ரஷ்களை தயார் செய்து நிறக் குப்பிகளைத் திறந்தான். நிறங்களை கான்வாஸில் கட்டியாக உபயோகிக்கக் கூடிய கத்தியை எடுத்து கழுவினான். மனதில் எல்லாம் சரியான அளவில் இருக்கின்றன என்று பட்டவுடன் மீண்டும் முன்னால் இருந்த காட்சிகளைப் பார்த்தான். மனதிற்குள் அதை அசை போட்டவாறு- பாலெற்றில் நிறங்களைக் கலந்தான். ப்ரஷ் எடுத்து அடுத்த நிமிடம் வரையத் தொடங்கினான்.
“இப்பவே படம் வரைய ஆரம்பிச்சிட்டியா, வின்சென்ட்?”- அவனுக்குப் பின்னால் ஒரு இனிய குரல் கேட்டது.
வின்சென்ட் திடுக்கிட்டு பின்னால் திரும்பிப் பார்த்தான்.
“பிரிய வின்சென்ட்... அவசரம் எதற்கு? இன்னைக்கு முழுவதும் பாக்கி இருக்குல்ல...?”