வான்கா - Page 68
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
வயல்ல வேலை செஞ்சுக்கிட்டு இருந்தா, அதே காற்று கீழே ஆளை விழ வச்ச, சேத்துல புரட்டி எடுத்து ஒரு வழி பண்ணிடும். ஒவ்வொருத்தர் மனசும் நடுங்கிப் போகிற அளவுக்கு அந்தக் காற்று பாடாய் படுத்தும். ஜன்னல்களை ஓங்கி ஓங்கி அடிக்க வைக்கிறதும், மரங்களை வேரோட பிடுங்கி பூமியை விட்டு கீழே விழ வைக்கிறதும், வேலிகளை அப்படியே சாய வைக்கிறதும், மனிதர்களையும் மிருகங்களையும் சாட்டையை வச்சு அடிக்கிற மாதிரி, தாக்கி கீழே சாய்க்கிறதும் இந்தக் காற்றுதான். நான் இதை பலமுறை நேரிலேயே பார்த்திருக்கேன். நான் இங்கே வந்து மூணு மாசம்தான் ஆகுது. இப்பவே எனக்கு பாதி பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு. உடனே இந்த இடத்தை விட்டு ஓடி தப்பிச்சா நல்லதுன்னு முடிவெடுத்திருக்கேன்!”
“நீங்க சும்மா சொல்றீங்கன்னு நினைக்கிறேன்”- வின்சென்ட் சொன்னான்: “இந்த ஊரு ஆளுங்களைப் பார்க்குறப்போ அப்படியொரு பிரச்சினையில் அவங்க சிக்கிக்கிட்டிருக்கிற மாதிரியே தெரியலியே!”
“நீங்க இப்பத்தானே அவங்களைப் பார்த்திருக்கீங்க!”- அப்ஸிந்தைக் குடித்தவாறே பத்திரிகை நிருபர் சொன்னார்: “ஆர்ளைப் பற்றி அவ்வளவு சாதாரணமா எடை போட்டுடாதீங்க. இது ஒரு ஆளை ஒரு வழி பண்ணிட்டுத்தான் மறுவேலை பார்க்கும். மனிதனோட நரம்புகளையெல்லாம் சேர்த்து ஒரு பிடி பிடிச்சு, முறுக்கி, துண்டு துண்டா உடைச்சிடும். நான் சொல்றதெல்லாம் உண்மைதான்னு காலப்போக்குல நீங்க புரிஞ்சுக்குவீங்க. அவங்கவங்க உடம்புல இருக்கிற நரம்புகள் என்னைக்கு வெடிச்சு சிதறப் போகுதுன்னு யாருக்குத் தெரியும்?”
¤ ¤ ¤
வின்செட்டின் ப்ரஷ்ஷில் இருந்து ஓவியங்கள் கான்வாஸில் அடுத்தடுத்து பிரசவமாகிக் கொண்டிருந்தன.
கண்களைக் கவரும் அழகு ஓவியங்கள் அவனின் கை வண்ணத்தில் உருவாகிய வண்ணம் இருந்தன. எட்டு வருட கடின பயிற்சியின் பலனாக ஆக்கப்பூர்வமான – அதிசயிக்கத்தக்க உயிரோட்டத்துடன் ஓவியங்கள் அவனின் தூரிகையில் இருந்து உருவாகிக் கொண்டிருந்தன. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், வின்சென்ட் ஒரு இயந்திரத்தைப் போல ஓவியம் வரைவதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கு மேலான ஓவியத்தை பூரணமாக அவன் முடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். நிறங்களின் பங்கு, அவற்றின் பலம் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து எடைபோட்டு வைத்திருந்த வின்சென்ட்டிற்கு தான் வரைந்த ஓவியங்கள் நல்லவையா, கெட்டவையா என்பதெல்லாம் ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை.
அரக்கத்தனமாக காய்ந்து கொண்டிருந்த சூரியன் வின்சென்ட்டின் சிவப்பு தலைமுடியில் அவ்வப்போது விளையாட ஆரம்பித்தான். ஓவியம் வரைவதற்கு பயன்படுத்திய ஆற்றல் போக மீதமிருந்த சக்தியை அவன் மிஸ்ட்ரால் என்ற கொடுங்காற்றோடு போராட அவன் பயன்படுத்தினான். வாரத்தில் மூன்று முறையாவது பயங்கர சத்தத்துடன் வரும் கொடுங்காற்றின் போக்கில் பறந்து போய்விடக் கூடாது என்று தன் ஈஸலை செடியோடு சேர்ந்து கட்டி வைத்தான் வின்சென்ட். அப்படி இருந்தும் கூட, காயப்போட்ட துணியைப் போல, ஈஸல் வீசிய பேய்க்காற்றில் இப்படியும் அப்படியுமாய் வேகமாக ஆடியதென்னவோ உண்மை.
பூத்து நிற்கின்ற பழத்தோட்டத்தின் மீது வின்சென்ட் கொண்டிருந்த காதல் அவன் வரைந்த ஓவியங்களில் தெளிவாகத் தெரிந்தது. மாந்தளிர் நிறத்தில் இருந்த மண்ணும், சிவப்பு நிற வேலியும், நீல வானமும் பின்புறமாக இருக்க, சூரிய ஒளியில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பீச் மரங்களை ஓவியமாகத் தீட்டினான் வின்சென்ட். மற்றொரு ஓவியத்தில் பலமான காற்றில் இப்படியும் அப்படியுமாய் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் ப்ளம் மரங்களைத் தீட்டினான். வெள்ளை வெளேர் என்று சிரித்துக் கொண்டிருந்த பூக்கள்! இலைகளுக்குப் பின்னால் மறைந்தும் மறையாமலும் சின்னப் பிள்ளை மாதிரி விளையாடிக் கொண்டிருந்த சூரியன்! இயற்கை பல்வேறு மாற்றங்களுடன் அங்கு உயிர்பெற்று விளங்கிக் கொண்டிருந்தது. “நான் இதை வரையிறப்போ மது அருந்திவிட்டு வரைஞ்சிருப்பேன்னு இதைப் பார்க்குறவங்க சொன்னாலும் சொல்லுவாங்க”- வின்சென்ட் தனக்குள் கூறிக் கொண்டான்.
ஆர்ளில் இருந்த மக்களுக்கு வின்சென்ட் ஒரு வேடிக்கைப் பொருள் மாதிரி ஆகிவிட்டான். காலையில் ஈஸலை எடுத்துக் கொண்டு பைத்தியக்காரனைப்போல படுவேகமாக, படம் வரைவதற்காக நடந்து செல்லும் வின்சென்ட், மாலையில் சிவந்து போன கண்களுடன், வெயிலில் சூடாகிப் போன தலையுடன், கைகளை ஆட்டியவாறு இன்னும் ஈரம் காயாத கான்வாஸைக் கை இடுக்கில் வைத்தவாறு திரும்பி நடந்துவருவான். வின்சென்ட்டைப் பார்த்ததும், தெருக்களில் நடந்து செல்லும் மக்கள் ஓரத்தில் ஒதுங்கி நிற்பார்கள். அவனுக்கு அவர்கள் ஒரு பட்டப் பெயரும் வைத்தார்கள். அது - “ஃபுரு”. அதாவது - “சிவப்பு பைத்தியக்காரன்” என்று இதற்கு அர்த்தம்.
தான் வரையும் ஓவியங்கள் விற்பனை ஆக வேண்டும் என்றோ, ஓவியம் வரைவதில் மிகப்பெரிய வெற்றிகள் பலவற்றைச் சந்திக்க வேண்டும் என்றோ இப்போதெல்லாம் வின்சென்ட் நினைப்பதே இல்லை. வீடு, மனைவி, மக்கள், காதல், நட்பு, உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு, சுக சவுகரியங்கள், உணவு, தெய்வம் – எதுவுமே தனக்கு தற்போது தேவையில்லை என்ற நினைப்பில் இருந்தான் அவன். இப்போது தான் செய்து கொண்டிருந்த காரியத்தில் அவனுக்குப் பரம திருப்தி. எந்தவித பிரச்னையும் இல்லாமல் தான் படம் வரைந்து கொண்டிருக்கும் செயல் தொடர்ந்து கொண்டிருப்பதில் அவனுக்கு அளவிட முடியாத ஆனந்தம். உள்ளுணர்விலிருந்து மேலெழும்பி வரும் தன் எண்ணங்கள், ஓவியமாகப் பிறப்பெடுப்பதை பூரிப்புடன் பார்த்து அதில் உலகையே மறந்து திரித்நதான் வின்சென்ட்.
வெயிலின் தாக்கத்தால் பூமியில் இருந்த ஒவ்வொன்றுமே சுட்ட பழங்கள் மாதிரி ஆயின. பொன்னும், வெள்ளை ஓடும், செம்பும் உருகிக் கலந்ததுபோல நீல வானத்தில் ஒரு தோற்றம்! சூரிய ஒளிபட்ட இடத்தில் எல்லாம் ஒரு வகையான மஞ்சள் நிறம்! வின்சென்ட்டின் கான்வாஸுகள் அந்த சூரிய வெளிச்சத்தில் ஜொலித்தன. புதிய அலை ஓவிய உலகில் வீச ஆரம்பித்த பிறகு, பொதுவாக ஓவியர்கள் யாருமே மஞ்சள் வர்ணத்தை ஓவியம் வரைய பயன்படுத்துவதில்லை என்பதை நன்றாகவே அறிந்திருந்தான் வின்சென்ட். ஆனால், அவன் அது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படவில்லை. கலர் ட்யூபில் இருந்து மஞ்சள் நிறம் இஷ்டம்போல அவன் கான்வாஸில் படரந்து கொண்டிருந்தது. சூரியனின் வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்த ஓவியங்கள்! மஞ்சள் நிறம் பட்டு `தகதக’ என மின்னிக் கொண்டிருந்த இயற்கையின் படைப்புகள்!