வான்கா - Page 66
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
உள்ளே தன்னிடம் யாரோ மெதுவான குரலில் கேள்வி கேட்பதாக உணர்ந்தான் வின்சென்ட். ஒரே ஒரு நிமிடம்தான் - “நீ ஒரு ஓவியனா? இல்லாவிட்டால், ஒரு போராளியா?”
ஸ்டுடியோவில் தன்னுடையதல்லாத மற்றவர்களின் கான்வாஸ்களை எல்லாம் தியோவின் அறைக்கு மாற்றினான். தான் வரைந்த ஓவியங்களை ஒவ்வொன்றாக ஈஸலின் மேல் வைத்தாசு. ஒவ்வொன்றையும் வைக்கும்போது, கை நகத்தைக் கடித்துக் கொண்டே இருந்தான்.
நிச்சயமாக தான் வளர்ச்சி அடைந்திருப்பதை அவனால் உணர முடிந்தது. அவன் வரைந்த ஓவியங்களுக்கு உன்னத இடம் இருக்கிறது என்பதை அவன் மனதே சொல்லியது. இது நிச்சயமாக யாரையும் பார்த்து நகல் எடுத்தது அல்ல. தன் நண்பர்களின் பாணி தன்னுடைய எந்த ஓவியத்திலும் தப்பித் தவறிக்கூட வரவில்லை என்பதை உறுதியாக அறிந்திருந்தான் வின்சென்ட். தான் ஒரு தனி பாணியை உருவாக்கியிருப்பதாகவே வின்சென்ட் உணர்ந்தான். நிச்சயமாக தன் ஓவியத்தைப் போல மற்றவர்கள் ஓவியம் இல்லை. இது எப்படி நடந்தது? இதற்குப் பதில் கூற அவனால் முடியவில்லை. இம்ப்ரஸனிஸத்தை தன் ஆத்மாவுக்குள் செலுத்தி, தான் ஒரு புதிய பாணியைத் தன் ஓவியத்தில் கொண்டு வந்திருப்பதை அவன் மனப்பூர்வமாக உணர்ந்தான்.
கடைசியாக வரைந்த ஓவியத்தை ஈஸலின் மேல் வைத்தான். ஒருநாள் தன் திறமைக் குறைவை நினைத்து எப்படி எல்லாம் துவண்டு போய் உட்கார்ந்திருந்தான் வின்சென்ட்! ஆனால்... இங்கு... தான் நிச்சயம் ஏதோ ஒரு இடத்தை அடைந்துவிட்டோம் என்பதை அவன் புரிந்து கொண்டான். அதற்கு அத்தாட்சி – புதுமை பறைசாற்றும் இந்த அவனின் ஓவியம்!
ஓவியம் வரைவதில் இருந்து சில நாட்கள் அவன் விலகி இருந்தது கூட ஒருவிதத்தில் நல்லதாகவே ஆயிற்று! இந்த இடைவெளி அவனின் ஓவியம் குறித்த பார்வையில் ஒரு கூர்மைத் தன்மையை உண்டாக்கி இருந்தது. தான் ஒரு புது வகை இம்ப்ரஸனிஸ்ட் பாணியை ஓவியக் கலையில் கொண்டு வந்திருப்பதாக அவன் திடமாக நம்பினான்.
¤ ¤ ¤
ஆர்ட் ஷாப் ஆரம்பிப்பது என்ற தீர்மானத்தை வின்சென்ட் காற்றில் பறக்க விட்டு விட்டான். தியோவிற்கு இதில் ஆச்சரியமே உண்டாகவில்லை. வின்சென்ட்டின் குணத்தைத்தான் தியோ நன்கு அறிந்தவன் ஆயிற்றே!
“பாரீஸைப் பொறுத்தவரை உனக்கு ஒரு பயிற்சிக்கூடம். அவ்வளவுதான். இங்கே தங்கி இருக்குற காலம் வரையில் நீ ஒரு பள்ளிக்கூட மாணவன்.”- தியோ சொன்னான்: “நாம படிச்ச பள்ளிக்கூடம் உனக்கு ஞாபகத்தில் இருக்குல்ல...? மத்தவங்க எதை, எப்படிச் செய்தாங்கன்றதைத்தானே நாம அங்கே படிச்சோம்! சொந்தமா ஒண்ணும் செய்ய அங்கே நாம படிக்கலியே! நீ என் கூட இல்லைன்னா நான் மட்டும் தனியா இருக்க வேண்டியிருக்கும். அதனால பரவாயில்லை. இந்த உலகத்துல ஏதாவதொரு இடம் உனக்காகக் காத்திருக்கும். அந்த இடம் எதுன்னுதான் தெரியல. நீதான் அந்த இடம் எதுன்னு கண்டுபிடிக்கணும்.”
“நான் சமீப காலமா எந்த இடத்தைப் பத்தி சிந்திச்சுக்கிட்டு இருக்கேன் தெரியுமா, தம்பி?”- வின்சென்ட் கேட்டான்.
“இல்ல...”
“ஆஃப்ரிக்கா”
“ஆஃப்ரிக்காவா?”- தியோ கேட்டான்.
“ஆனா... தெலாக்ரா வர்ணங்கள் கண்டுபிடிச்ச இடம். இந்த குளிர்காலத்துல நான் வெயிலை கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்.”
“ஆஃப்ரிக்கா ரொம்ப தூரத்துல இல்ல இருக்கு”- தியோ ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான்.
“தியோ, எனக்கு சூரியவெளிச்சம் வேணும். அதோட பயங்கரமான உஷ்ணமும், சக்தியும் வேணும். சூரிய வெளிச்சம் என்னைக் காந்தம்போல தெற்கே இருக்குற இடங்களை நோக்கி இழுக்குற மாதிரி உணர்றேன். எனக்குள்ள இருக்குற ஏதோ ஒண்ணு முழுமையை அடைய சூரிய வெளிச்சத்திற்காக தீவிரமா விருப்பப்பட்டுக்கிட்டு இருக்கு!”
“ம்... நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். நாம இந்த விஷயத்தைப் பற்றி சிந்திப்போம்!”
¤ ¤ ¤
ஸெஸான் எக்ஸிலுக்குக் குடி போவதற்கு முன்பு, தன்னுடைய நண்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தார்.
“பாரீஸ் நகரத்தை விட்டு வெளியேபோ, வின்சென்ட்”- ஸெஸான் சொன்னார்: “ப்ராவின்ஸுக்குப் போ. எக்ஸிலுக்கு வேண்டாம். ஏன்னா, அது என்னோட இடம். அதற்கடுத்து இருக்குற வேற ஏதாவது இடத்துல நீ போய் இருக்கலாம். ப்ராவின்ஸில் சூரிய வெளிச்சம் நல்லா இருக்கும். இடமும் சுத்தமா இருக்கும். நிறங்கள் எவ்வளவு பிரகாசமா இருக்கும் தெரியுமா? என்னோட பிற்கால வாழ்க்கையை நான் சாகுற வரை அங்கேதான் கழிக்கப் போறதா முடிவு பண்ணி இருக்கேன்.”
“நானும் பாரீஸை விட்டு சீக்கிரம் போகப்போறேன்”- காகின் சொன்னார்: “உஷ்ணப் பிரதேசத்திற்குப் போகப் போறேன். ஸெஸான் ப்ராவின்ஸ்ல இருக்கும் வெயிலைப்பத்திச் சொன்னார்ல? மார்கேஸாஸுக்கு வந்து பாருங்க சூரிய வெளிச்சம், நிறங்கள், மக்கள் எல்லோருமே ஒரே மாதிரி படு பிரகாசமா இருக்கக்கூடிய இடம் அது!”
“நீங்க சூரியனை ரொம்பவும் விரும்பக் கூடிய ஆளாச்சே!”- ஸெரா சொன்னார்.
“நான் ஆஃப்ரிக்காவுக்குப் போறதா இருக்கேன்”- வின்சென்ட் தன் மனதில் உள்ளதைச் சொன்னான்.
“ஓ... அப்படியா? நமக்கு மத்தியில் ஒரு சின்ன தெலாக்ரா”- லாத்ரெக் கிண்டல் பண்ணினான். “நீ உண்மையாவே ஆஃப்ரிக்காவுக்குப் போறதா இருக்கியா, வின்சென்ட்?”- காகின் கேட்டார். “ஆமா... ஒரு வேளை உடனே போக முடியாம இருக்கலாம். முதல்ல ப்ராவின்ஸுக்குப் போகலாம்ன்னு பாக்குறேன்!”
“மார்ஸெய்ல்ஸுக்குப் போக முடியாது. மான்டிஸெல்லி (ஃப்ரெஞ்ச் ஓவியர்)யோட ஊர் அது”- ஸெரா சொன்னார்.
“எக்ஸிலும் சரியா வராது. அது ஸெஸானோட இடம். ஆன்டிபேயை ஏற்கெனவே மோனே ஓவியத்துல கொண்டு வந்துட்டார். நான் எங்கே போறதுன்னு யாராவது கொஞ்சம் சொல்லக் கூடாதா?”
“ஆர்ள் எப்படி?” – லாத்ரெக் கேட்டான்.
“ஆர்ள்? அது ரோமர்கள் படை எடுத்த பழைய ஊராச்சே!”
“அதேதான். ரோன் நதிக்கரையில் – மார்ஸெய்ல்ஸில் இருந்து ரெண்டு மணி நேரம் பயணம் செஞ்சா போதும். ஆர்ள் போய்ச் சேர்ந்திடலாம். அங்கே இருக்குற இயற்கையோட வனப்பையும், நிறத்தையும் பாக்குறப்போ தெலாக்ராவோட ஓவியங்கள் உயிரே இல்லாத மாதிரி தோணும்.”
“உண்மையாவா?”- வின்சென்ட் ஆச்சரியத்துடன் கேட்டான்: “சூரிய பிரகாசம் எப்படி?”
லாத்ரெக் சொன்னான்: “சூரியன், பைத்தியம் பிடிக்கிற அளவுக்கு காயும். ஆர்ளில் உள்ள ஆளுங்க எப்படின்ற? உலகத்துல வேற எங்கேயும் அங்கே மாதிரி அழகான பெண்களைப் பார்க்க முடியாது. கிரேக்க பிதாமகர்களின் சுத்தமும், அழகான முகவெட்டும், ரோம வீரர்களின் சக்தியும், கவர்ச்சியும் கொண்டவங்க அவங்க. அவங்களோட உடம்புல ஒருவகை மணம் இருக்கும்! ஆஹா... அது ஒரு தனி விசேஷம்! ஆர்ளில்தான் வீனஸ்ஸுக்கு உயிர் கிடைச்சது. வீனஸ்ஸின் மாதிரிகள்தான் ஆர்ளில் இருக்கும் பெண்கள்.”