வான்கா - Page 70
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
ரக்கேல் ஒயின் இருந்த டம்ளரை கீழே வைத்தாள். வின்சென்ட்டின் கழுத்தைத் தன் இரு கைகளாலும் சுற்றி வளைத்தாள். அவளின் மென்மையான வயிறு அவன் மேல் இடித்தது. அப்போதுதான் மெல்ல எழும்பிக் கொண்டிருந்த மார்பகத்தின் காம்புகள் இரண்டும் ஈட்டி போல அவன் நெஞ்சைக் குத்தின. ரக்கேல் வின்சென்ட்டின் உதட்டில் தன் உதடுகளைப் பொருத்தி முத்தம் தந்தாள்: “நாம அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவோம்!”
ஒரு மணி நேரம் கழித்து அந்த இடத்தைவிட்டு வின்சென்ட் புறப்படுகிறபோது, தன் தாகத்தை தீர்ப்பதற்காக அவன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டி வந்தது.
¤ ¤ ¤
வின்சென்ட் தன் மனம் கூறியபடி நிறங்களை ஓவியத்தில் கலந்தான். ஓவியத்தில் தனக்கு என்னவெல்லாம் சரி என்று படுகிறதோ, அவற்றை எல்லாம் கொண்டு வந்தான். ஓவியத்தின் எல்லையை அவனே தீர்மானித்தான். பிஸ்ஸாரோ பாரீஸில் இருக்கும்போது தன்னிடம் கூறியதை வின்சென்ட் நினைத்துப் பார்த்தான்: “பொருத்தத்தையும் பொருத்தமில்லாமையையும் ஓவியத்தில் சித்தரிக்கிறபோது, அந்த வித்தியாசத்தைக் காண்போர் உணரும்படி செய்ய வேண்டியது அவசியம். மாப்பஸான் தன் புத்தகம் ஒன்றின் முன்னுரையில் எழுதிய வாசகங்களையும் வின்சென்ட் ஞாபகத்தில் கொண்டு வந்தான்: ‘ஒரு கலைஞன் தான் என்ன கூற விரும்புகிறானோ, அதைச் சொல்வதற்கான முழு உரிமையும் உண்டு. தன் படைப்புகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தைவிட மாறுபட்ட, இதைவிட அழகான, அமைதியான, பிரச்னைகள் இல்லாத, நல்ல உலகத்தைப் படைப்பதற்கான முழு சுதந்திரம் ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது! இருக்கும் உலகத்தை அப்படியே தன் படைப்பில் படைப்பது ஒரு கலைஞனின் வேலை இல்லை. தன் கலைத்திறமையால் தான் காணும் உலகத்தை, காண விரும்பும் உலகத்தை தான் படைக்கும் படைப்பில் அவன் தாராளமாகக் கொண்டு வரலாம் – கொண்டு வர வேண்டும்.”
மிஸ்ட்ரால் வந்தது. இயற்கையில் ஒரு பெரிய மாற்றம் உண்டானது. வின்சென்ட் அறைக்குள் இருந்தவாறே ஒரு ஓவியம் வரைந்தான். நீல நிறத்தில் ஒரு காப்பி பாத்திரம். பொன்நிறத்தில் ஒரு கப். இளம் நீலம், வெளுப்பு நிறங்களில் பால் பாத்திரம், நீலம், சிவப்பு, பச்சை, தவிட்டு நிறங்களில் கண்ணாடிப் பாத்திரங்கள். கடைசியில் சில எலுமிச்சம் பழங்கள். இதுதான் அந்த ஓவியம்.
ரோன் நதிக்கரையில் உள்ள பாலம். காற்று அடங்கிய பிறகு நிறமே மாறிப்போன நதியும் வானமும். மாந்தளிர் நிறத்தில் இருந்த படகுத் துறை. சுவரில் கை ஊன்றி நின்று கொண்டிருக்கும் இருண்ட உருவங்கள். தெளிவில்லாத ஆரஞ்சு, நீல பின்புலத்தில் அடர்த்தியான நீல நிறத்தில் இருக்கும் இரும்பு பாலம். அதைப் பார்க்கும்போதே, மனதில் இனம் புரியாத ஒரு அழகுணர்வு மனதில் தோன்றும்.
சாயங்கால நேரத்தில் மோன்மாஜூர் ரோட்டில் கூட்டத்துக்கு மத்தியில் நடந்து கொண்டிருந்தபோது, வின்சென்ட் ரூளின்னைப் பார்த்தான். அந்த ஆள் தான் ஆர்ளின் பால்காரர்.
ரூளின் தன் மகனுடன் நடந்து கொண்டிருந்தார்.
“சீதோஷ்ண நிலை இப்போ ரொம்ப நல்லா இருக்கே!”
“பாழாய்ப் போன மிஸ்ட்ரால் இல்லாம இருந்தாலே நல்லாத்தான் இருக்கும். ஏதாவது படம் சமீபத்துல வரைஞ்சீங்களா?”
“ம்...”
“எனக்கொண்ணும் தெரியாது, ம்ஸ்யெ. கலையைப் பற்றிய அறிவு எனக்குக் கொஞ்சமும் கிடையாது. இருந்தாலும் நீங்க வரைஞ்ச ஒரு படத்தை எனக்குக் கொஞ்சம் காட்டினா, நான் பெருமைப்படுவேன்.”
ரூளின்னும் வின்சென்ட்டும் ஒன்றாகவே நடந்தார்கள். ரூளின்னின் தலையில் தபால்காரர்கள் அணியும் நீலத் தொப்பி இருந்தது. அப்பாவித்தனமான, மென்மையான கண்கள். கழுத்தைத் தாண்டி கோட் வரை வளர்ந்திருக்கும் சதுர தாடி. தான்குய்யைப் போல ஏதோ சிந்தனையில் ரூளின் ஆழ்ந்திருப்பதை உணர்ந்தான் வின்சென்ட்.
வின்சென்ட் வரைந்த இயற்கை பற்றிய ஓவியத்தைப் பார்த்த ரூளின் சொன்னார்: “எனக்கு இதைப் பற்றி சரியான அறிவு கிடையாது, ம்ஸ்யெ. உங்களோட இந்தச் சோள வயல்களுக்கு உயிர் இருக்கே!”
“உங்களுக்கு அது பிடிச்சிருக்கா?”
“அதை எப்படி சொல்றதுன்னே எனக்குத் தெரியல. ஆனா, இதைப் பார்க்கிறப்போ, இதோ இங்கே என்னவோ செய்யிற மாதிரி இருக்கு!”- ரூளின் தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்தார்.
அவர்கள் மோன்மாஜூருக்குக் கீழே இருந்தார்கள். மாலை நேர சூரியனின் சிவந்த கதிர்கள், பாறைகளுக்கிடையே வளர்ந்திருந்த பைன் மரங்கள்மேல் ‘சுள்’ என்று விழுந்து கொண்டிருந்தன. நீல வானத்திற்குக் கீழே நீல நிறத்தில் வரிசையாக பைன் மரங்கள். வெள்ளை மணல். வெளுப்பான பாறைகள்.
“இதற்கும் உயிர் இருக்குல்ல, ம்ஸ்யெ?”- ரூளின் கேட்டார்.
“நாம இறந்துபோன பிறகும், இவை எல்லாமே இங்கேயே இருக்கும் ரூளின்!”
“சின்னப் பிள்ளையா இருக்குறப்ப நான் கடவுளைப் பத்தி நிறைய சிந்திச்சிருக்கேன், ம்ஸ்யெ”- ரூளின் சொன்னார்: “அவர் வறண்டு போன சோள வயல்கள்லயும், மோன்மாஜூரின் சூரிய அஸ்தமனத்திலயும் இருக்கார். ஆனா, இந்த மனிதர்களைப் பத்திச் சிந்திக்கிறப்போ... இவங்க உண்டாக்கி இருக்கிற உலகத்தைப் பத்திச் சிந்திக்கறப்போ... என்னவோ...”
“எனக்கு அது தெரியும், ரூளின். ஆனா, கடவுளைப் பத்தி நாமே ஒரு முடிவுக்கு வந்துடக்கூடாது. இந்த உலகத்தைப் பொறுத்தவரை, அது தெய்வத்தோட முழுமை அடையாத ஒரு ஓவியம்னுதான் சொல்லணும். ஒரு ஓவியன் மேல நமக்கு மரியாதை இருக்கும் பட்சம், அவன் வரையிற ஓவியம் மோசமா இருந்தாக்கூட நாம அதை விமர்சனம் செய்ய மாட்டோம் இல்லியா? ஆனா, இதைவிட சிறப்பா இருந்தா நல்லா இருக்கும்னு நாம ஆசைப்படுறது தப்பு இல்லியே!”
“அதைத்தான் நான் சொல்றேன்- இன்னும் நல்லதா ஏதாவது...!”
“ஒரு கலைஞனோட மத்த படைப்புகளைப் பார்த்தாத்தான் அவனைப் பத்தி ஒரு தீர்மானம் செய்ய முடியும்!”
“அப்போ நீங்க வேற உலகங்கள் இருக்குன்னு சொல்றீங்களா, ம்ஸ்யெ?”
“எனக்கு அதைப்பத்தி தெரியாது, ரூளின். இப்படிப்பட்ட சிந்தனைகளை நான் எப்பவோ விட்டுட்டேன். ஆனா, ஒண்ணு தோணுது- நம்மோட இந்த வாழ்க்கை எந்த அளவுக்கு நிரந்தரமில்லாத ஒண்ணுன்னு. ஒரு இடத்தை விட்டு நம்மளை இன்னொரு இடத்துக்கு எப்படி ஒரு புகை வண்டியோ இல்லாட்டி வேற ஏதாவது ஒண்ணோ கொண்டு போய் சேர்க்குதோ, அதே மாதிரித்தான் டைஃபாய்டும், சயரோகமும், மத்த நோய்களும் ஒரு உலகத்தை விட்டு இன்னொரு உலகத்துக்கு மனிதனைக் கொண்டு போற வாகனங்களா இருக்கு...!”
“உங்களைப் போல உள்ள கலைஞர்கள்தான் எப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க?”
“ரூளின்... நான் உங்களை ஓவியமா வரையட்டா?”