வான்கா - Page 72
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
குழப்பம் மேலோங்க மனதில் நூறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டு தன் முன்னால் நின்றிருந்த அந்த மோகினியையே பார்த்தான் வின்சென்ட். யார் இவள்? கண்களில் ஆர்ளின் நீல வானத்தையும், பரந்து கிடக்கும் தலைமுடியில் சூரியனின் கதிர் வீச்சையும் கொண்டிருக்கும் இந்த அழகு தேவதை யார்?
மென்மையான மலரென நின்றிருந்த அந்த அழகுக் கொடியின் முக ஜாடையில் தெற்கு தேச சாயல் இருந்தது. அவள் நன்றாகக் காய்ச்சிய பொன்னின் நிறத்தைக் கொண்டிருந்தாள். சிவப்பு முந்திரிக் கொடிகளுக்கிடையே மறைந்தவாறு எட்டிப்பார்க்கும் அரளிப்பூக்கள் போல் இருந்தன அவளின் வரிசையான பற்கள்! இடுப்பில் ஒரு வெள்ளை நிற சங்கிலி கொண்டு இறுக்கி கட்டப்பட்ட நீளம் சற்று அதிகமான வெள்ளை ஆடை அவள் உடம்போடு ஒட்டிக்கிடந்து அவளின் உடல் வனப்பையும் – வளைவுகளையும் நன்றாக வெளியே காட்டியது. காலில் காலணிகள். மொத்தத்தில் – பார்ப்போரைக் கிறங்க வைக்கும் அழகு சுந்தரி!
“நான் எவ்வளவு காலமா உன்னைவிட்டு விலகியே நிற்கிறேன். வின்சென்ட்! உனக்கு இது தெரியுமா?”
அவள் வின்சென்ட்டுக்கும் ஈஸலுக்கும் நடுவில் கான்வாஸ் மீது சாய்ந்தவாறு பேசினாள். சூரிய ஒளி அவளின் பொன்னிற தலை முடியில் பட்டு இன்னும் அதிகப் பிரகாசத்தை வெளிப்படுத்தி ஜொலித்துக் கொண்டிருந்தது. அவளின் உதட்டில் காதலை வெளிப்படுத்தும் அழகான புன்னகை! வின்சென்ட் ஒன்றையுமே புரிந்து கொள்ள முடியாமல் இறுக தன் கண்களை மூடிக் கொண்டான்.
“உனக்கு என்னை எப்படித் தெரியும்? என் பிரியப்பட்டவனே, நான் இதுவரை உன்கிட்ட இருந்து மறைந்தேல்ல இருந்தேன்!”
“நீ யார்?”
“உன்னோட சினேகிதி – ஆத்ம சினேகிதி.”
“உனக்கு எப்படி என் பேர் தெரிஞ்சது? நான் உன்னை இதற்கு முன்னாடி பார்த்திருக்கேனா?”
“இல்ல... ஆனா, நான் பல தடவை உன்னைப் பார்த்திருக்கேன்.”
“உன் பேர் என்ன?”
“மாயா...”
“அவ்வளவுதானா? வெறும் மாயாவா?”
“ஆமா வின்சென்ட். நீ அவ்வளவு தெரிஞ்சா போதும்.”
“நீ எதற்கு என்னைப் பின் தொடர்ந்து இந்த வயலுக்கு வரணும்?”
“நான் ஐரோப்பா முழுவதும் உன்னை எதற்காகப் பின் தொடர்ந்தேனோ, அதே காரணத்துக்குத்தான்!”
“நீ என்னை வேற யாரோன்னு தப்பா புரிஞ்சிருக்கேன்னு நினைக்கிறேன். நீ நினைக்கிற ஆள் நான் இல்ல...”
அவளின் வசீகரமான வெளுத்த கைகள் வின்சென்ட்டின் வெயிலில் கரிந்து போயிருக்கும் சிவப்பு தலை முடியை வருடின. அந்த மிருதுவான கைகளும், இனிய அவளின் குரலும் அவன் மனதில் இனம் புரியாத ஒரு உணர்வை உண்டாக்கிக் கொண்டிருந்ததென்னவோ உண்மை. எனினும், ஆழமான கிணற்றின் அடியில் கிடக்கும் தண்ணீரைப் போல அமைதியாகவே இருந்தான் அவன்.
“வின்சென்ட் வான்கான்னு இருக்குறது உலகத்துலேயே ஒரே ஒரு ஆள்தான். நிச்சயம் என்கிட்ட எந்தத் தப்பும் நடக்கல...”
“என்னை உனக்கு எவ்வளவு நாட்களா தெரியும்?”
“எட்டு வருஷமா வின்சென்ட்”
“என்ன? எட்டு வருஷத்துக்கு முன்னாடி நான்...”
“ஆமா... போரினேஜில் இருந்தே...”
“என்னை உனக்கு அப்பவே தெரியுமா?”
“ஒரு மாலை நேரத்துல மார்க்காஸ் சுரங்கத்திற்கு முன்னாடி இரும்பு சக்கரத்தின் மேல் நீ உட்கார்ந்திருந்தே! அப்போதான் உன்னை முதல் தடவையா நான் பாக்குறேன்!”
“சுரங்கத் தொழிலாளர்கள் போவதை நான் பார்த்துக்கிட்டு இருந்தேன்!”
“ஆமா... நான் உன்னை பாக்குறப்போ நீ வெறுமனே உட்கார்ந்திருந்தே! சரி... போகலாம்னு நினைக்கிறப்போ, நீ ஒரு பென்சிலையும், பழைய ஒரு பேப்பரையும் எடுத்து படம் வரைய ஆரம்பிச்சே. உனக்குப் பின்னால் நின்னு நீ என்ன செய்யிறேன்னு நான் மறைஞ்சு பார்த்தேன். நீ படம் வரையிறதை நான் பார்த்தேன். அப்பவே உன்னை நான் காதலிக்கத் தொடங்கிட்டேன்.”
“நீ என்னைக் காதலிக்கத் தொடங்கினியா? என்னையா நீ காதலிக்க ஆரம்பிச்சேன்ற?”
“ஆமா வின்சென்ட்.”
“ஒரு வேளை நான் அப்ப இவ்வளவு அசிங்கமா இருந்திருக்க மாட்டேன்...”
“இப்ப உனக்கு இருக்குற அழகுல பாதி கூட இப்ப இல்ல... இதுதான் உண்மை...”
“உன்னோட குரல்... மாயா... அசாதாரணமான ஒண்ணா இருக்கே! வாழ்க்கையில் ஒருமுறை ஒரே ஒரு பெண் என்கிட்ட உன்னை மாதிரியே பேசியிருக்கா....”
“மார்கோவைத்தானே சொல்ற? நான் எப்படி உன்னை காதலிக்கிறேனோ, அவளும் இந்த மாதிரியே உன்னை உண்மையாவே காதலிச்சா...”
“உனக்கு மார்கோவைத் தெரியுமா?”
“ப்ரபாண்டில் நான் ரெண்டு வருஷம் இருந்தேன். உன் கூடவே ஒவ்வொரு நாளும் வயல்வெளிகள்ல அலைஞ்சு திரிஞ்சேன். சமையலறைக்குப் பின்னால இருந்த அறையில இருந்து நீ படம் வரைவே. நான் அதை மறைஞ்சு நின்னு பார்ப்பேன். மார்கோ உன்னைக் காதலிச்சதைப் பார்த்து உண்மையிலேயே நான் சந்தோஷப்பட்டேன்!”
“அதுக்குப் பிறகு நீ என்னைக் காதலிச்சிருக்க மாட்டே! நிறுத்தி இருப்பே!”
அதைக் கேட்டதும் அவள் சிரித்தாள். அவள் முகத்தில் இதற்கு முன் அவன் காணாத ஒரு சோகமும், ஏக்கமும் தெரிந்தது.
“அப்படி இல்ல... மார்கோவைப் பார்த்து நான் உண்மையிலேயே பொறாமைப்படல. அவள் உன்னைக் காதலிச்சதுனால, உனக்கு நல்லதுதான் நடந்துச்சு. ஆனா, கேகூட நீ நெருங்கிப் பழகினது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கல... அது உன்னை எந்த அளவுக்குப் பாதிச்சுச்சு தெரியுமா? அந்த விஷயத்துல நீ பயங்கரமா காயப்பட்டுட்டே...”
“நான் ஊர்ஸுலாவைக் காதலிக்கிறப்போ, என்னை உனக்குத் தெரியுமா?”
“நான் உன்னைப் பார்க்குறதுக்கு முன்னாடி நடந்ததா இருக்கும் அது!”
“அப்போதைய என்னை உனக்குப் பிடிக்கல...”
“இல்ல...”
“அப்போ நான் ஒரு முட்டாளா இருந்தேன்!”
“சில நேரங்கள்ல ஒரு ஆள் முட்டாளா இருக்க வேண்டி இருக்கும். அதுக்குப் பிறகுதான் அவனால் ஞானவானா ஆக முடியும்!”
“ப்ரபாண்டில் நீ என்னைக் காதலிச்சிருந்தா, என் முன்னாடி ஏன் வந்து நிக்கல?”
“அன்னைக்கு நீ அதுக்கு தயாரா இல்ல, வின்சென்ட்...”
“அப்போ இப்ப... நான் தயார்னா சொல்ற?”
“நிச்சயமா...”
“நீ இப்போ... இந்த நிமிஷம் என்னைக் காதலிக்கிறியா?”
“ஆமா... இப்போ... இந்த நிமிடம்... எந்தக் காலத்திலும்...”
“என்னை எப்படி நீ காதலிக்க முடியும்? நான் எந்த அளவுக்கு அசிங்கமா இருக்கேன் பார்த்தியா? என் உடம்பு, மனசு எல்லாமே தளர்ச்சி அடைஞ்சு போச்சு. உள்ளே விஷம் நிறைஞ்ச அசிங்கமான உள் மனம். அப்படி இருக்குற ஒரு ஆளை உன்னால எப்படி காதலிக்க முடியும்?”
“உட்காரு, வின்சென்ட்.”
வின்சென்ட் முக்காலியில் உட்கார்ந்தான். அவனுக்கு மிக அருகில் வயலில் – வெறும் மண்ணில் அவள் உட்கார்ந்தாள்.