வான்கா - Page 67
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“அவங்க அந்த அளவுக்கு அழகிகளா என்ன?”
“நிச்சயமா... பிறகு... மிஸ்ட்ரால் கூட கட்டாயம் அனுபவிக்க வேண்டிய ஒண்ணு”
“மிஸ்ட்ராலா? அப்படின்னா?...”
“அது அங்கே போன பிறகு உனக்கே தெரியும்”- லாத்ரெக் சிரித்தவாறு சொன்னான்.
“அங்கே உள்ள வாழ்க்கை நிலை எப்படி?”
“உணவுக்கும், தங்குற இடத்துக்கும் மட்டும்தான் பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். சாப்பாட்டுக்கு அப்படி ஒண்ணும் அதிகமா செலவு வராது. பாரீஸைவிட்டு போறதுன்னு முடிவு பண்ணி இருந்தா, ஏன் நீ ஆர்ளுக்குப் போகக் கூடாது?”
பாரீஸின் உல்லாச வாழ்க்கை ஒருவிதத்தில் வின்சென்ட்டுக்கு வித்தியாசமாகவும் – பிடித்தமானதாகவும் இருந்தது. வின்சென்ட் எத்தனை அப்ஸிந்த் குடித்திருப்பான்! எத்தனை பைப் புகையிலை புகைத்திருப்பான்! என்னென்ன வேலைகள் எல்லாம் பார்த்தான்! ஆனால், இப்போது இவற்றை எல்லாம் விட்டுவிட்டு தன் உள்மனதில் எழுந்திருக்கிற புது ஆவலை நிறைவு செய்யும் எண்ணத்தில், புதிய ஒரு இடத்தைத் தேடிப் போகத் தீர்மானித்திருக்கிறான் அவன். இத்தனை காலமாய் தான் எதை அடைய கடுமையாகப் போராடினானோ, அதை அடைவதற்கான தருணம் தனக்கு மிகவும் அருகிலேயே இருக்கிறது என்பதைத் திடமாக நம்பினான் வின்சென்ட். மான்டிஸெல்லி சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் அப்போது வலம் வந்தன: “பத்து வருடங்களாவது ஒருவன் கடினமாக உழைத்தால்தான், அவனால் ஒன்றோ இரண்டோ யதார்த்த ஓவியங்கள் வரைய முடியும்.”
¤ ¤ ¤
அடுத்த நாள் தியோ குபில்ஸில் இருந்து திரும்பி வந்த போது, அறையே முழுவதுமாக மாறிவிட்டிருந்தது. எப்போதும் இல்லாத அமைதி அங்கு நிலவிக் கொண்டிருந்தது. சுவரில் வின்சென்ட் வரைந்த சில ஓவியங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மேஜை மேல் ஒரு குறிப்பு இருந்தது.
“பிரிய தியோ,
நான் ஆர்ளை நோக்கி போகிறேன். அங்கே போய்ச் சேர்ந்த பிறகு, நான் கடிதம் எழுதுகிறேன். என்னுடைய சில ஓசியங்களை சுவரில் தொங்க விட்டுச் செல்கிறேன்- ஞாபகத்திற்காக!
மனதில் நன்றிப் பெருக்குடன்,
வின்சென்ட்”
¤ ¤ ¤
ஆர்ள்
ஆர்ளில் நீல வானத்தில் தீப்பந்தமென எரிந்து கொண்டிருந்தது சூரியன். அதிலிருந்து கிளம்பி வந்த உஷ்ண ரேகைகள் வின்சென்ட்டின் உடல்மேல் பட்டு அவனை ‘சுள்’ என்று சுட்டேரித்தன. கண்களையே திறக்க முடியாத அளவிற்கு அந்த ஊரெங்கும் அக்னி வெள்ளம். தெளிந்த ஆகாயமும், தீ என பற்றிக் கொண்டிருந்த வெயிலும் சேர்ந்து, இதற்கு முன் வேறெங்கும் பார்த்திராத ஒரு புதிய உலகத்தை அங்கு படைத்துக் கொண்டிருந்தன.
குன்றின் சரிவுகளில் ரோம் நாட்டினரின் நினைவுச் சின்னங்கள் சிதிலமடைந்து ஆங்காங்கே இருந்தன. அவற்றின் மேல் கால் நீட்டி அமர்ந்திருந்தான் வின்சென்ட். மலைச்சரிவில் ஆர்ள் இருந்தது. ரோன் நதி, தூரத்தில் கோடு போல ஓடிக்கொண்டிருந்தது. ஒரு காலத்தில் சிவப்பு நிறத்தில் இருந்த கட்டிடங்களின் மேல் கூறைகள் தாங்க முடியாத கடுமையான வெயில் பட்டு பல்வேறு வர்ணங்களில் இப்போது காட்சி தந்து கொண்டிருந்தன – தவிட்டு நிறம், சிவப்பு, இளம் மஞ்சள் என்று. நதிக்கு இரு பக்கங்களிலும் கல்லால் ஆன மதில்கள். வின்சென்ட்டிற்குப் பின்னால் ஆகாயத்தையே எட்டிப்பிடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் மலைச்சிகரங்கள். கீழே உழுத நிலங்களும், பூந்தோட்டங்களும், மோன்மாஜீர் மலையும் இயற்கையின் பொக்கிஷங்கள் தாங்கள் என பறைசாற்றிக் கொண்டிருந்தன.
ஆகாயம் கடும் நீல நிறத்தில் ஒருவித குரூரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. சாதாரணமாக நாம் பார்க்கும் நீல வானம் அல்ல அது. அந்தக் கடுமையான நீலம் பல புதிர்களை அடக்கியிருந்தது போல் இருந்தது. வயல்கள் அடர்பச்சை நிறத்தில் கண்களை உறுத்தியது. சூரியன் தங்க நிறத்தில் `தகதக’வென்று எரிந்து கொண்டிருந்தது. மோன்மாஜீர் மலைக்கு மேலே மேகங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. அந்த மேகங்களுக்குள் ஒரு பிரகாசம் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. பழத்தோட்டங்களில் பல்வேறு வகைப்பட்ட பழங்கள். நம்மால் நம்ப முடியாத அளவிற்கு அங்கு என்னென்னவோ நிறங்களின் ஆக்கிரமிப்பு. நிறங்களின் இந்த மாயாஜாலம் பூமியின் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் யாரும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள். ஆனால், அதுதான் உண்மை. இதை எப்படி வார்த்தைகளால் விவரித்துக் காட்டுவது? பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என்று இயற்கை பல்வேறு நிறங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அற்புதத்தைத் தான் என்னென்பது?
பாதாம் மரங்கள் மலர்கள் சகிதமாக நின்று கொண்டிருக்கும் ரோன் நதிக்கரை. நீரில் சூரியனின் கதிர்கள் பட்டு, கண்களே கூசிப் போகிற அளவிற்கு பிரகாச ரேகைகளின் பிரதிபலிப்பு. எரிந்து கொண்டிருந்த சூரியன் வின்சென்ட்டின் சிவப்பு தலைமுடிகளுக்குள் நுழைந்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான். அந்த வெயிலில் பாரீஸில் இருந்து பயணம் செய்துவந்த களைப்பை மறக்க முயற்சித்தான் வின்சென்ட்.
ஸெரா, காகின், ஸெஸான், லாத்ரெக் ஆகியோரை விட்டு எவ்வளவோ தூரம் வந்துவிட்டான் வின்சென்ட். இங்கு இப்போது இருப்பது வின்சென்ட் மட்டுமே. தன்னந்தனி மனிதனாக அமர்ந்து தனது கடந்த காலங்களையும், இப்போதைய தருணத்தையும் மனதில் அசை போட்டுப் பார்த்தான் அவன்.
அன்று மாலையில் ஹோட்டலில் ஒரு பத்திரிகை நிருபரைப் பார்த்தான் வின்சென்ட். அவர் மூலம் ஆர்ளைப் பற்றிய பல விஷயங்களையும் அவன் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த ஊரின் இயற்கைச் சூழ்நிலைகளையும், மக்களின் வாழ்க்கை முறையையும் மிஸ்ட்ராலைப் பற்றியும் நன்றாகவே அவரை வைத்துத் தெரிந்து கொண்டான் அவன்.
“இந்த ஊர்ல சொந்த புத்தியுள்ள ஒரு மனிதனைக் கூடப் பார்க்க முடியாது ம்ஸ்யெ”- அந்த ஆள் சொன்னார்: “இங்கு பூமிக்கும் மக்களுக்கும் பைத்தியம் பிடிச்ச மாதிரிதான். இங்கே உள்ள ஜனங்களோட கண்களை உத்துப் பார்த்திருக்கீங்களா? அசாதாரணமா ஏதோ ஒண்ணு அங்கே தெரியும். இங்க இருக்குற சூரிய வெளிச்சம் இவங்களோட மூளையை ரொம்பவும் பாதிச்சிருக்கு. நீங்க எப்பவாவது மிஸ்ட்ரால்ல சிக்கியிருக்கீங்களா? இங்கே வீசுற அந்த கொடுமையான காற்றை அனுபவிச்சிருக்கீங்களா? இல்லைன்னா, கொஞ்ச நாட்கள் காத்திருங்க. வரும். அனுபவியுங்க. வருஷத்துல இருநூறு நாட்கள் அந்தக் கொடுங்காற்று வீசோ வீசுன்னு வீசி இங்க இருக்குற மக்களைச் சொல்லப்போனா பைத்தியம் பிடிக்கிற நிலைக்குக் கொண்டு போயிடுது. தெருவுல நீங்க பாட்டுக்குச் சாதாரணமா நடந்து போய்க் கொண்டிருப்பீங்க. அந்த காற்று வந்து உங்களை அலாக்காத்தூக்கி எடுத்துக்கிட்டு போய் சுவரோடு சேர்த்து வச்சு அடிக்கும்.