வான்கா - Page 78
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
காதில் பழக்கமில்லாத ஒலிகள் கேட்டன.
கண்ணுக்கும் கண்ணாடிக்குமிடையில் ஒரு பிரகாச ரேகை தெரிந்தது.
கத்தியை உயர்த்தி தனது வலது காதை அறுத்தெடுத்தான் வின்சென்ட்.
சிறிய ஒரு துண்டு மட்டும் எஞ்சியிருந்தது.
கத்தியைக் கீழே போட்டான். தலையை ஒரு துணியால் மூடி கட்டினான். இரத்தத் துளிகள் கீழே சொட்டுச் சொட்டாக விழுந்தன.
அறுத்த காதை நீரில் கழுவி சுத்தமாக்கி படம் வரையும் தாளில் பொட்டலமாகக் கட்டி, அதன் மேல் இன்னொரு பேப்பரைச் சுற்றினான்.
தலையில் கட்டியிருந்த துணிக்குமேல் ஒரு தொப்பியை எடுத்து அணிந்தான். லெமார்ட்டினைக் கடந்து, லூயியின் நிறுவனத்தை அடைந்து, கதவைத் தட்டினான்.
ஒரு வேலைக்காரி வந்து கதவைத் திறந்தாள்.
“ரக்கேலை வரச் சொல்...”
ரக்கேல் வந்தாள்.
“ஏய் கிறுக்கா... என்ன இந்த நேரத்துல? என்ன வேணும் உனக்கு?”
“நான் உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கேன்.”
“எனக்கா? பரிசா?”
“ஆமா...”
“ஓ... ஃபுரூ! நீ எவ்வளவு நல்ல மனிதன் தெரியுமா?”
“இதைப் பத்திரமா வச்சிரு – என்னோட ஞாபகமா”
“என்ன இது?”
“திறந்து பாரேன்...”
ரக்கேல் பொட்டலத்தை அவிழ்த்தாள். அறுக்கப்பட்ட காது! ஒரு நிமிடம்தான் பார்த்தாள். அடுத்த நிமிடம் – மயக்கமடைந்து கீழே விழுந்தாள்.
வின்சென்ட் திரும்ப நடந்தான். அறைக்குச் சென்று கதவை அடைத்தான். படுக்கையில் போய் விழுந்தான்.
¤ ¤ ¤
காலையில் ஏழரை மணிக்கு காகின் திரும்ப வந்தபோது, வீட்டின் முன்னால் மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர். காகின் என்னவென்று தெரியாமல் திகைத்து நின்றார்.
“ம்ஸ்யெ... உங்களோட நண்பரை என்ன பண்ணினீங்க?”- கூட்டத்தில் பெரிய ஒரு தொப்பியை அணிந்த ஆள் உரத்த குரலில் கேட்டார்.
“எனக்கு என்னன்னே தெரியலியே! என்ன விஷயம்? ஏன் இங்கே கூடியிருக்கீங்க?”
“உங்களுக்கு நல்லாவே தெரியும். உங்க நண்பர் இறந்துட்டாரு...”
இதைக் கேட்டதும் ஆடிப்போனார் காகின். மீண்டும் அவர் சுய நினைவுக்கு வரவே சில நிமிடங்கள் பிடித்தன. தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தையே அவர் உற்றுப் பார்த்தார்.
“நாம மேலே போகலாம். அங்கே போய் பேசுவோம்”- காகின் பதறிய குரலில் சொன்னார்.
கீழே இருந்த அறைக்குள் நனைந்த துணிகள்! வின்சென்ட்டின் அறைக்குச் செல்லும் படிகளில் இரத்தத் துளிகள்!
படுக்கையில் துணிகளால் சுற்றப்பட்ட வின்சென்ட்டின் அசைவே இல்லாத உடல்! மெதுவாக அருகில் சென்ற காகின் வின்சென்ட்டின் உடம்பைத் தொட்டுப் பார்த்தார். சூடு இருந்தது. அப்பொழுதுதான் காகினுக்கு உயிரே வந்தது.
போலீஸ் சூப்பிரண்டிடம் மெதுவான குரலில் காகின் சொன்னார்: “இந்த ஆளை மெல்ல எழுப்புங்க. என்னைப் பத்தி ஏதாவது கேட்டா, நான் பாரீஸுக்குப் போயிட்டேன்னு சொல்லிடுங்க. என்னை இப்போ இந்த ஆள் பார்த்தான்னா நிலைமை இன்னும் மோசமாயிடும்...”
போலீஸ் சூப்பிரெண்ட் டாக்டருக்கு ஆளனுப்பினார். வண்டியில் வின்சென்ட்டை ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். வண்டிக்கு அருகில் ரூளின் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடினார்.
¤ ¤ ¤
மாலையில் ஆர்ளில் இருந்த மருத்துவமனையில் டாக்டர் ஃபெலிக்ஸ் ரே நாடித் துடிப்பை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது தான், வின்சென்ட்டுக்கு சுய உணர்வு வந்தது. கண்களைத் திறந்து உத்தரத்தையும், வெள்ளை அடித்த சுவரையும், ஜன்னல் வழியே தெரிந்த நீல வானத்தையும் பார்த்த அவன் கடைசியில் டாக்டர் ரேயைப் பார்த்தான். மெதுவான குரலில் முனகினான்: “ஹலோ...”
“ஹலோ...”- டாக்டர் திரும்பச் சொன்னார்.
“நான் இப்போ எங்கே இருக்கேன்?”
“ஆர்ளில் உள்ள மருத்துவமனையில்”
“அப்படியா?”
அவனின் முகத்தில் வேதனையின் நிழலாட்டம் தெரிந்தது. கையால் வலது காது இருந்த இடத்தைத் தடவினான். டாக்டர் ரே அதைத் தடுத்தார்.
“அங்கே தொடக்கூடாது...”
“ஆமா... நான்... இப்போ... எல்லாம் ஞாபகத்தில வருது...”
“பெரிய அளவு காயம்... கொஞ்ச நாட்கள் கழிச்சுதான் நடமாடணும்.”
“என்னோட நண்பர் எங்கே?”
“அவர் பாரீஸுக்குத் திரும்பப் போயிட்டாரு.”
“நான் புகைக்கலாம்ல...?”
“கூடாது...”
டாக்டர் ரே வின்சென்ட்டின் காயத்தைக் கழுவி சுத்தப்படுத்தினார்.
“இந்த விபத்தை நீங்க பெரிசா எடுக்க வேண்டாம். உன்ன இருந்தாலும் இந்தக் காதை வச்சுத்தானே மனிதன் எல்லாத்தையும் கேட்க வேண்டியிருக்கு! அதுபோனது மாதிரி உங்களுக்குத் தோணவே தோணாது...”
“உங்களோட உதவிக்கு நன்றி, டாக்டர்... இந்த அறையில என்ன ஒண்ணுமே இல்லாம, வெறிச்சோடிப் போய் கிடக்கு...?”
“உங்களைக் காப்பாத்துறதுக்காக எல்லாத்தையும் வெளியே அள்ளி போட்டிருக்கோம்.”
“யாருக்கிட்டே இருந்து என்னைக் காப்பாத்த?”
“உங்கக்கிட்ட இருந்துதான்.”
“ஓ... எனக்குப் புரியுது...”
“நான் இப்போ போறேன்” – டாக்டர் சொன்னார்: “சாப்பாடு எடுத்துட்டு ஒரு ஆள் வருவார். அசையாமப் படுத்திருங்க. நிறைய இரத்தம் உடம்புல இருந்து போயிட்டதுனால, உடம்புல பலம் ரொம்பவும் குறைஞ்சு போச்சு”
¤ ¤ ¤
காலையில் வின்சென்ட் படுக்கையை விட்டு எழுந்தபோது, படுக்கைக்குப் பக்கத்தில் தியோ உட்கார்ந்திருந்தான். அவனின் முகம் மிகவும் வாடிப் போயிருந்தது. கண்கள் சிவந்து கலங்கியிருந்தன.
“தியோ...”
தியோ தரையில் முழங்காலிட்டு அமர்ந்து வின்சென்ட்டின் கையைத் தன் கைக்குள் எடுத்து வைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான்.
“தியோ... எப்பவும் நான்... உன்னைத் தேடுறப்போ... நீ... என்னைத் தேடி வந்திர்றே!”
தியோவால் ஒன்றும் பேச முடியவில்லை.
“நீ இங்கே வர்றதுக்கு ரொம்பவும் கஷ்டப்பட்டிருப்பே! உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்?”
“காகின் தந்தியடிச்சி இருந்தார். நான் ராத்திரி வண்டியிலேயே புறப்பட்டுட்டேன்.”
“அந்த காகின் தேவையில்லாம உனக்குத் தொந்தரவு கொடுத்திருக்காரு. நீ ராத்திரி முழுவதும் தூங்கி இருக்க மாட்டியே!”
“ஆமா வின்சென்ட்.”
சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு தியோ சொன்னான்:
“நான் டாக்டர் ரே கூட பேசினேன், வின்சென்ட். இந்தச் சம்பவம் நடந்ததற்குக் காரணமே சூரியனோட பாதிப்புதான்னு அவர் சொல்றாரு. நீ தொப்பியே தலையில அணியாம வேலை செஞ்சிருப்பே... இல்லியா,”
“ஆமா...”
“அப்படின்னா இனிமேல் அப்படி நடக்காதே. எப்பவும் தலையில தொப்பி இருக்கணும். ஆர்ளிலே நிறையப் பேருக்கு சூரியனோட பாதிப்பு இருக்குதாம்....”
வின்சென்ட் மெல்ல தியோவின் கையைப் பற்றினான். தியோவின் தொண்டை அடைத்தது மாதிரி இருந்தது.
“எனக்குச் சில விஷயங்களை உன்கிட்ட சொல்ல வேண்டியதிருக்கு, வின்சென்ட்”- தியோ சொன்னான். பின் என்ன நினைத்தானோ, “பிறகு சொல்றேன்”- என்றான்.
“நல்ல செய்திதானே, தியோ?”
“உனக்குப் பிடிச்ச செய்திதான்.”