வான்கா - Page 82
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8808
“நீங்க நினைக்கிற மாதிரி இடம் அதுதான். நான் ஏற்கெனவே இந்த விஷயத்தைப் பற்றி உங்க தம்பிக்கு கடிதம் எழுதிட்டேன். இப்போ இருக்குற உங்களோட உடல்நிலைக்கு தூரத்துல இருக்குற ஏதாவது ஒரு இடத்துக்கு பயணம் செஞ்சு போறதுன்றது சரியான ஒரு செயலா இருக்காதுன்றதை அவருக்குத் தெரிவிச்சிருக்கேன். குறிப்பா பாரீஸ் போறதெல்லாம் இப்ப சரியா இருக்காது. தியோவுக்கு நான் தெளிவா எழுதியிருக்கேன். என் மனசுக்கு சரியாப்படறது ஸெய்ன்ட்ரெமிதான் உங்களுக்கு இப்போ சரியான இடம்னு...”
“தியோ சம்மதிச்சா போதும்... இனிமேலும் அவனுக்கு தேவையில்லாம தொந்தரவுகள் தர நான் விரும்பல...”
“அவர்கிட்ட இருந்து எந்த நிமிடத்திலும் பதிலை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். பதில் கிடைச்சவுடனே நான் வர்றேன், வின்சென்ட்...”
தியோ எந்த மறுப்பும் சொல்லவில்லை. டாக்டர் ரே எழுதியிருந்த கடிதத்திற்கு, அவனும் சம்மதம் தந்திருந்தான். வின்சென்ட்டிற்கு தற்போது ஆனசெலவுகளுக்கு பணம் அனுப்பியிருந்தான். எல்லாவற்றிற்கும் பணத்தைக் கட்டிவிட்டு, டாக்டர் ரே அவனை ஒரு கேரேஜில் ஏற்றி புகைவண்டி நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கிருந்து அவர்கள் டாராஸ்கான் செல்லும் புகை வண்டியில் பயணம் செய்தார்கள். டாராஸ்கான் போனதும், அவர்கள் ஒரு அழகான – பச்சைப்பசேல் என இருந்த புல்வெளியைத் தாண்டி ஸெய்ன்ட்ரெமியை அடைந்தார்கள்.
அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் மலைமேலே பயணம் செய்து, அவர்கள் ஸெய்ன்ட் பால் டி மசோலை அடைய வேண்டும். அவர்கள் பயணம் செய்தது ஒரு வாடகை காரில். அழகான மலையைத் தாண்டி அவர்கள் சென்றார்கள். சற்று தூரத்தில் அந்த மடத்தின் உயர்ந்த சுவர்கள் தெரிவதை வின்சென்ட் பார்த்தான்.
அவர்கள் வந்த வண்டி நின்றது. வின்சென்ட்டும் டாக்டர் ரேயும் கீழே இறங்கினார்கள். சாலையின் வலது பக்கத்தில் இருந்த ஒரு வட்ட வடிவமான இடத்தில் வெஸ்டா தெய்வத்தின் ஆலயமும் ஒரு வெற்றியைக் குறிக்கும் வளைவும் இருந்தன.
“இவை எப்படி இங்கே வந்தன?”- ஆச்சரியத்துடன் கேட்டான் வின்சென்ட்.
“ஒரு காலத்தில் இது ரோமர்களின் பிடியில் இருந்தது”- டாக்டர் ரே சொன்னார்: “அவங்களோட ஞாபகார்த்தமா இவை இருக்கின்றன.”
“பார்க்கவே ரொம்பவும் அழகா இருக்கு!”
“வாங்க வின்சென்ட்... டாக்டர் பெய்ரோன் நமக்காகக் காத்திருப்பார்!”
டாக்டர் ரே மடத்தின் வாசலில் இருந்த மணியை அடித்தார். வாசல் கதவைத் திறந்து, டாக்டர் பெய்ரோன் வந்தார்.
“டாக்டர் பெய்ரோன், நலமா இருக்கீங்களா?- டாக்டர் ரே கேட்டார். அவரே தொடர்ந்தார்: “என்னோட நண்பர் வின்சென்ட்டை இங்கே அழைச்சிட்டு வந்திருக்கேன். இவரை நல்ல கவனமெடுத்து பார்த்துக்குவீங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு!”
“கட்டாயம் இவரை நல்ல முறையில் கவனிக்கிறேன்.”
“நான் உடனே போகணும். இல்லாட்டி வண்டி போயிடும்”
“சரி டாக்டர்.”
“வின்சென்ட், நான் வரட்டுமா? சந்தோஷமா இருங்க. சீக்கிரம் குணமாயிடும். நான் நேரம் கிடைக்கிறப்போ பார்க்க வர்றேன். ஒரு வருடத்துக்குள்ள நீங்க முழுமையா குணமாயிடுவீங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு!”
“நன்றி டாக்டர். உங்களை நான் எப்பவும் மறக்க மாட்டேன்... பை...”
“பை, வின்சென்ட்...”
டாக்டர் ரே திரும்ப நடந்தார்.டாக்டர் பெய்ரோன் உள்ளே நுழைந்தார்: “வாங்க... உள்ளே வாங்க வின்சென்ட்!”
வின்சென்ட் உள்ளே நடந்தான்.
பைத்தியக்கார ஆஸ்பத்திரியின் வாசல் கதவுகள் வின்சென்ட்டுக்குப் பின்னால் அடைக்கப்பட்டன.
¤ ¤ ¤
ஸெய்ன்ட் ரெமி
கிராமப்புறத்தில் ஒரு மூன்றாம் வகுப்பு வெயிட்டிங் ரூம் மாதிரி இருக்கும் அறை. உள்ளே பலரும் எங்கோ வெளியே கிளம்புகிற மாதிரி ஆடைகள் அணிந்து ஒன்றுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்குள் எதுவுமே வாய் திறந்து பேசிக்கொள்ளாமல் – ஒருவரையொருவர் கிண்டல் பண்ணி விளையாடாமல் தங்களுக்கு முன்னால் இருக்கும் இரும்பு அடுப்பில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தவாறு அவர்கள் அமர்ந்திருந்தனர்.
“வின்சென்ட்...” டாக்டர் பெய்ரோங் சொன்னார்:
“முன்னாடி நான் ஆட்களோட உடம்பைப் பாதுகாக்குற ஆளா இருந்தேன். இப்போ மனசையும் பாதுகாக்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு விதத்துல பார்ததா ரெண்டுமே ஒண்ணுதான்.”
“டாக்டர்... உங்களுக்கு மன ரீதியான நோய்களைப் பற்றி நல்லா தெரியும்ல? நான் ஏன் என்னோட காதை கத்தியால அறுத்தேன்?”
“இது ஒரு வகையான நோய், வின்சென்ட். நானே அந்த மாதிரியான நோயால பாதிக்கப்பட்ட ரெண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்திருக்கேன். காதுகள்ல இருக்கும் நரம்புகள் தீவிர உணர்ச்சி நிரம்பியவை. நோயாளி நினைக்கலாம், காதை அறுத்துட்டா தன்னோட மனக் குழப்பங்கள் உடனடியா தீர்ந்திடும்னு...”
“ஓ... அப்படியா? அப்போ எனக்கு என்ன மாதிரியான சிகிச்சை செய்யப் போறீங்க?”
“சிகிச்சையா? வாரத்துல கட்டாயம் ரெண்டு நாட்கள் குளிக்கணும். தண்ணீர்ல ரெண்டு மணி நேரமாவது மூழ்கிக் கிடக்கணும். அப்படி கிடந்தா, மனசுல கொஞ்சம் அமைதி உண்டாகும்.”
“வேற என்ன செய்யணும் டாக்டர்?”
“உணர்ச்சிவசப்படக் கூடாது. அமைதியா இருக்கணும். வேலை எதுவும் செய்யக் கூடாது. படிக்கக் கூடாது. வாக்குவாதம் செய்யக் கூடாது.”
“எனக்குத் தெரியும்... வேலை செய்றதுக்கு என்கிட்ட சக்தியே இல்ல...”
¤ ¤ ¤
உணவு முடிந்தது. அங்கு தங்கியிருந்த பதினொரு பேரும் திரும்பி தங்கள் அறைக்கே வந்தார்கள். அதே அமைதி. அவர்கள் ஒவ்வொருவரும் எழுந்து தங்களின் உடைகளை மாற்றி படுக்கையில் போய் படுத்தார்கள்.
சூரியன் மறைந்து கொண்டிருந்தான். பொன் நிறத்தில் காட்சியளித்த வானத்தில் கறுப்பு நிழல்போல் பைன் மரங்கள் தெரிந்தன. ஆனால், வின்சென்ட்டின் மனம் நிர்மலமாக இருந்தது. ஓவியம் வரையும் எண்ணம் அவனுக்கு உண்டாகவே இல்லை.
நன்கு இருட்டும் வரை வின்சென்ட் ஜன்னலுக்குப் பக்கத்திலேயே இருந்தான். படுக்கையில் போய் படுத்த பிறகும், அவனுக்கு உறக்கம் வரவில்லை. மேலே இருக்கும் உத்தரத்தையே பார்த்தவாறு படுத்துக் கிடந்தான். தெலாக்ரா எழுதிய புத்தகத்தை மார்போடு சேர்த்து பிடித்திருந்தான் அவன். அந்தப் புத்தகம் நெஞ்சின் மேல் இருந்தது அவனுக்கு ஒரு வகை நிம்மதியைத் தந்தது. ‘நான் இந்த பைத்தியக்காரர்கள் கூட்டத்தில் ஒருவன் அல்ல’ என்பதை அவன் மனம் நன்றாகவே உணர்ந்திருந்தது. அந்தப் பெரிய கலைஞன் அந்தப் புத்தகத்தில் கூறியிருந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் வேதனையில் சிக்கிக் கிடக்கும் மனதிற்கு ஆறுதல் தருவது போல் இருந்தது.
சிறிது நேரத்தில் வின்சென்ட் உறங்கிப் போனான். திடீரென்று அடுத்த படுக்கையில் இருந்து வந்த ஒரு கூக்குரலைக்கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் அவன். பக்கத்துப் படுக்கையில் படுத்திருந்த மனிதன் உரத்த குரலில் சொன்னான்: “போ... என்னைப் பின் தொடர்ந்து வராதே... என்னை ஏன் பின் தொடர்ற? நான் அவனைக் கொல்லல.