வான்கா - Page 84
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8807
நடுங்கிக் கொண்டிருந்த விரலைச் சூப்பிக் கொண்டிருந்த அந்த ஆள் சொன்னார்: “இங்க வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் இந்த ஆளு தற்கொலை பண்ணிக்க முயற்சிப்பான்!”
“அவன் மத்தவங்களுக்குத் தெரியாம அதைப் பண்ணலாமே?”
“ஒருவேளை அவனுக்குச் சாகணும்ன்ற ஆசை இல்லாமலே இருக்கலாம்ல, ம்ஸ்யெ!”
¤ ¤ ¤
மறுநாள் காலையில் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, விளையாடிக் கொண்டிருந்த ஆட்களில் ஒருவன் திடீரென்று மண்ணில் விழுந்து காலையும் கையையும் ஆட்டத் தொடங்கினான்.
“இவனை நல்லா பிடிச்சுக்கோங்க” – யாரோ உரத்த குரலில் சொன்னார்கள்.
“காலையும் கையையும் பிடிங்க...”
நான்கு பேர் இறுக்கமாகப் பிடித்தும், அவன் திமிறினான். இளைஞனான வக்கீல் ஒரு ஸ்பூனை எடுத்து கீழே கிடந்தவனின் வாய்க்குள் வைத்தான்.
“தலையைப் பிடிச்சுக்கோங்க” வின்சென்ட் சொன்னான்.
அந்த நோயாளி இப்படியும் அப்படியுமாய் நெளிந்தான். கண்கள் நாலா பக்கங்களிலும் வெறித்துப் பார்த்தன. அவன் வாயில் இருந்து நுரை வழிந்தது.
“எதற்கு இந்த ஆள் வாயில் ஸ்பூனைக் கொண்டு போய் வச்சே?” வின்சென்ட் பெருமூச்சு விட்டவாறு கேட்டான்.
“அவன் நாக்கைக் கடிச்சு துண்டாக்கிடக் கூடாது பாருங்க.”
அரை மணி நேரம் சென்றதும் அவனின் ஆர்ப்பாட்டம் குறைந்தது. ஆனால், மயக்கத்தில் இருந்தான். வின்சென்ட்டும் மற்றவர்களும் சேர்ந்து அவனை தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் போட்டார்கள்.
அடுத்த இரண்டு வாரங்களும் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் மன நோயின் தாக்கத்தால் பல்வேறு பிரச்சினைகள் உண்டாயின. ஒவ்வொரு ஆளுக்கும் வேறு வேறு முறையில் நோய் தன்னை வெளிப்படுத்தியது. நோயின் வரவைத்தான் எப்படித் தெரிந்து கொள்வது? அணிந்திருந்த ஆடையைக் கிழித்தெறிந்துவிட்டு, சுற்றியிருந்த பொருட்களை எல்லாம் மிதித்து நசுக்கி எறிகிறான் ஒரு மனிதன். இன்னொருவன் மிருகங்களைப் போல கத்துகிறான். வேறொருவனுக்கு நான் போகும் இடங்களுக்கெல்லாம் ரகசிய போலீஸ் தன்னை பின் தொடர்ந்து வருவதாக சந்தேகம். இப்படி எல்லோருமே மன ரீதியாக பாதிக்கப்பட்டு அங்கே அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தனர்.
இன்னும் சொல்லப் போனால் உடல் நலக்கேடு வராத ஒரு நாள்கூட அங்கு இல்லை என்றே சொல்லாம். அப்படிப்பட்ட நேரங்களில் அங்குள்ள நோயாளிகளே ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்கள். ஒரு ஆளுக்கு உடல் நலக்கேடு வந்தால், மற்ற எல்லோரும் ஓடி வந்து உதவுவார்கள். ஒவ்வொருவத்தருக்கும் தங்களக்கு எப்போது உடல் நல பாதிப்பு ஏற்படும் என்பது கூட ஓரளவு தெரிந்தே இருந்தது. அந்த மாதிரியான நேரங்களில் மற்றவர்கள் ஒன்று சேர்ந்து தங்களின் கடமையைச் செய்வார்கள்.
மொத்தத்தில்-
அது ஒரு பைத்தியக்காரர்களின் கூட்டுறவு நிலையம்.
¤ ¤ ¤
பைத்தியம் என்ற விஷயத்தைப் பற்றி வின்சென்ட்டின் மனதில் இருந்த பயம் சற்றே நீங்கியது என்று கூடச் சொல்லலாம். பைத்தியம் கூட மற்ற நோய்களைப் போலத்தான் என்று அவன் உணர்ந்தான். நோயாளிகள் வெறுமனே அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு டாக்டர் பெய்ரோன் சொன்னார்: “படிக்கவோ அல்லது வேறு ஏதாவதோ அவர்கள் செய்தால் அதிகமான உணர்ச்சிவசப்பட வாய்ப்புண்டு. அதன் மூலம் நோய் இன்னும் தீவிரமாகும். அதிகமா கவலைப்படத் தேவையில்லை, வின்சென்ட். ட்ரைடன் (அங்கிலக் கவிஞர்) என்ன சொல்லி இருக்கார்னு உங்களுக்குத் தெரியும்ல- ‘பைத்தியமா இருக்கிறதுல கிடைக்கிற சுகம் பைத்தியக்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும்’.”
வின்சென்ட் அவர்களில் ஒருவனாய் ஆகிவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான். என்றாவதொரு நாள் மீண்டும் ஓவியம் வரைவதற்கான சக்தி தனக்கு மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. உணவு விஷயத்தில் அக்கறையுடன் இருந்தான். தியோ தபாலில் அனுப்பியிருந்த ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் படித்தான். அவற்றைப் படிக்கும்போதே பழைய வரலாற்று காலத்திற்கும், பல்வேறு நாடுகளுக்கும் தானே பயணம் செய்து போகிற மாதிரி அவனுக்கு இருந்தது. சதுப்பு நிலத்தின் நீர்போல அவன் மனதில் பெருகிக் கிடந்த கவலைகளுக்கெதிராக அவன் போராடத் தயாரானான்.
தியோவின் திருமணம் முடிந்துவிட்டிருந்தது. தியோவும், அவன் மனைவியும் வின்சென்ட்டிற்குக் கடிதம் எழுதி இருந்தார்கள். தியோவின் ஆரோக்கியத்தைப் பற்றி வின்சென்ட்டுக்கு எப்போதுமே ஒரு அக்கறை உண்டு. நல்ல டச் உணவு தயாராக்கித் தரும்படி ஜோஹன்னாவுக்கு அவன் கடிதம் எழுதினான்.
ஆறு வாரங்கள் கழிந்த பிறகு டாக்டர் பெய்ரோன் வின்சென்ட்டிற்கு உட்கார்ந்து வரையும் வண்ணம் ஒரு சிறு அறையை ஒதுக்கிக் கொடுத்தார். ஜன்னல் வழியே தான் கண்ட காட்சிகளை வரைந்த வின்சென்ட், அவற்றிற்கு நிறம் கொடுத்தான். அவன் மனதில் மகிழ்ச்சி தோன்ற ஆரம்பித்தது. தன்னுடைய ஓவியம் வரையும் ஆற்றலை தான் இழக்கவில்லை என்பதை அவன் உணர்ந்தான். இந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியால் தன் திறமைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து கொண்டபோது, அவனுக்கு உண்டான சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இன்னும் சில நாட்களில் நிச்சயம் இந்த இடத்தை விட்டு நாம் போய்விடுவோம் என்ற நம்பிக்கை அவனுக்கு வந்தது. சாயம், கான்வாஸ், ப்ரஷ், புத்தகங்கள் ஆகியவை உடனே வேண்டும் என்று தியோவிற்குக் கடிதம் எழுதினான் வின்சென்ட்.
வின்சென்ட் ஓவியம் வரைகிறபோது மற்றவர்கள் அவனுக்குப் பின்னால் அமைதியாக நின்றுகொண்டு அவன் படம் வரைவதையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
“ஆர்ளில் உள்ள மக்களை விட இவங்க எவ்வளவோ பரவாயில்லை”- என்று மனதிற்குள் கூறிக் கொண்டான் வின்சென்ட்.
அன்று மாலையில் வெளியே சென்று ஓவியம் வரைவதற்காக டாக்டர் பெய்ரோனிடம் அனுமதி கேட்டான்.
“ஏதாவது பிரச்சினை வந்திடுச்சின்னா...?”
“பிரச்சினையா? என்ன பிரச்சினை டாக்டர்?”
“இல்ல... பழைய மாதிரி ஏதாவது உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ நீங்க பாதிக்கப்பட்டுட்டீங்கன்னா...?”
இதைக் கேட்டதும் வின்சென்ட் சிரித்தான். “உடல் நலம் பாதிக்கப்படுவதா? இனி நிச்சயம் நான் பாதிக்கப்பட மாட்டேன் டாக்டர். எனக்கு எந்தப் பிரச்னையும் இருக்கிற மாதிரி தெரியல. நான் நல்ல உற்சாகமாகவே இருக்கேன்.”
“ஆனா, வின்சென்ட்...!”
“டாக்டர்... ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சுக்கோங்க. நான் விருப்பப்படுற இடத்துக்குப் போகவும் இஷ்டப்படி படம் வரையவும் மட்டும் முடிஞ்சுதுன்னா நான் எவ்வளவு சந்தோஷப்படுவேன் தெரியுமா? இது உங்களுக்குத் தெரியாதா டாக்டர்?”
டாக்டர் பெய்ரோன் வின்சென்ட்டிற்கு அனுமதி கொடுத்தார். ஈஸலைச் சுமந்து கொண்டு முன்பு மாதிரியே மலைச் சரிவுகளைத் தேடிப்போக ஆரம்பித்தான் வின்சென்ட். ஸைப்ரஸ் மரங்களை ஓவியமாகத் தீட்ட எண்ணினான்.