Lekha Books

A+ A A-

வான்கா - Page 87

van gogh

“இல்ல தியோ... அதற்கான காலம் கடந்திடுச்சு...”

“உனக்கேத்த மாதிரி ஒரு பொண்ணை நான் பார்த்து வச்சிருக்கேன்.”

“அப்படியா? யார் அது?”

“ரஷ்யன் எழுத்தாளர் துர்கனேவ் எழுதிய ‘கன்னி நிலம்’ நாவல்ல வர்ற கதாநாயகியை ஞாபகம் இருக்கா?”

“அந்த சூன்யக்காரர்கள் கூட்டத்துல சேர்ந்துக்கிட்டு, அங்கேயுள்ள ரகசியங்களைக் கடத்திட்டுப் போவாளே அவள்தானே?”

“ஆமா... உனக்கு வரப்போற மனைவி அந்த மாதிரியான ஒருத்தியா இருக்கணும். எல்லாத்தையும் தெரிஞ்சவளா இருக்கணும்”

“அவளுக்கு என்கிட்ட இருந்து என்ன கிடைக்கும்? இந்த காது அறுந்து போன மனிதன்கிட்ட இருந்து அவள் என்னத்தைப் பெற முடியும்?”

குழந்தை தூக்கம் கலைந்து அவர்களைப் பார்த்து சிரித்தான். தியோ குழந்தையை தூக்கி வின்சென்ட்டின் கையில் தந்தான்.

“என்ன அழகா இருக்கான்! இளம் சூடு... ஒரு நாய்க் குட்டியைப் போல...”- குழந்தையை நெஞ்சோடு இறுகக் கட்டிக்கொண்டு வின்சென்ட் சொன்னான்.

“ஏய்... மடையா... குழந்தையை அப்படி வைக்கக்கூடாது”- தியோ குழந்தையைத் தன் கையில் வாங்கினான். தியோவின் தலை குழந்தையின் சுருள் முடியைத் தொட்டுக் கொண்டிருந்தது. இருவரும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் போல இருப்பதாக வின்சென்ட்டுக்குப்பட்டது.

“தியோ... ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு வழி... நீ உயிருள்ள ஒரு குழந்தையைப் படைச்சிருக்கே! நான் நிறங்கள் மூலம் ஓவியங்களை...”

“ஆமாம், வின்சென்ட், நீ சொல்றது ஒரு விதத்தில் சரிதான்!”

¤         ¤         ¤

துளுஸ் – லாத்ரெக் வின்சென்ட்டைக் காண வந்திருந்தான். பழைய அதே லாத்ரெக்தான். அதே உற்சாகம் அவனிடம் இப்போதும் இருந்தது. கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசும் பழக்கமும், ஆனால், படிகளில் ஏறி வந்ததால் இன்னும் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.

“வின்சென்ட்... கீழே ஒரு சுடுகாட்டு காவல்காரனைப் பார்த்தேன். அவன் என்னையோ உன்னையோ தேடிக் கிட்டிருக்கான்!”

“உங்களைத்தான் இருக்கும், லாத்ரெக். எனக்கும் அந்த ஆளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாதே!”

“பந்தயம் வைப்போமா? அவனோட புத்தகத்தில் என் பேருக்கு முன்னாடியே உன் பேரு கட்டாயம் இருக்கும்!”

“சரி... சம்மதிக்கிறேன். பந்தயம் என்ன?”

“கஃபே ஏதென்ஸில் சாப்பாடு... சாயங்காலம் ஓபரா...”

“ரெண்டு நண்பர்களும் வேற ஏதாவது நல்ல விஷயங்கள் பேசக் கூடாதா?”- தியோ சிரித்தவாறு சொன்னான்.

அறிமுகமே இல்லாத ஒருவர் அறைக்குள் வந்தார். மூலையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். எல்லோரும் லாத்ரெக் தன் நண்பரை அறிமுகப்படுத்தி வைப்பான் என்று எதிர்பார்த்தார்கள்.

“நண்பர் யார்னு சொல்லலியே!”- வின்சென்ட் கேட்டான்.

“இது என்னோட நண்பர் இல்ல... என்னைக் கூடவே இருந்து பாதுகாக்குற ஆளு...”- லாத்ரெக் சிரித்தவாறு சொன்னான்.

அறையில் அமைதி நிலவியது.

“நீ கேள்விப்பட்டியா வின்சென்ட்? கடந்த சில மாதங்களா எனக்கு உடல் நிலை சரியில்ல... நான் அதிகமா தண்ணி அடிச்சதுனாலதான் அப்படி ஆயிட்டேன்னு எல்லாரும் சொல்றாங்க. இப்போ நான் பால் மட்டும்தான் குடிக்கிறேன்.”

ஜோஹன்னா தின்பதற்காகப் பலகாரங்கள் கொண்டு வந்தாள். அறையில் புகையிலைப் புகை நிறைந்தது. வின்சென்ட்டிற்கு முன்பு தான் நண்பர்களுடன் செவழித்த பாரீஸ் நாட்கள் ஞாபகத்தில் வந்தன.

“ஸெரா எப்படி இருக்கிறார்?”- வின்சென்ட் கேட்டான்.

“ஸெராவா? உனக்குத் தெரியாதா?”

“தியோ ஒண்ணும் எழுதலியே!”

“ஸெரா காச நோய் பிடிச்சு சாகுற நிலைமையில கிடக்குறார். முப்பத்தொன்னாவது பிறந்த நாளை அவர் பாக்குறது கஷ்டம்னு டாக்டர்கள் எல்லாரும் சொல்றாங்க!”

“காச நோயா?... ஸெரா நல்ல ஆரோக்கியமா இருந்தாரே! இதெப்படி அவருக்கு வந்துச்சு?”

“கடுமையான உழைப்பு, வின்சென்ட்... அவர் ஒரு பிசாசைப் போல வேலை செய்வார். சரியா சாப்பிடுறது இல்ல... ஒழுங்கா தூங்குறது இல்ல... அவரோட தாயால் கூட அவனைக் காப்பாத்த முடியல...”

“அப்ப அவர் நம்மளை விட்டு போறது நிச்சயம்தான், இல்ல...?”- கண்கள் கலங்க கேட்டான் வின்சென்ட்.

ரூஸோவும் தான்குய்யும் வந்தார்கள். தான்குய் ஒரு ஜப்பானிய ஓவியத்தை வின்சென்ட்டிற்குப் பரிசாகத் தந்தார். வின்சென்ட் வெளியே போய் ஆலிவ் பழங்கள் வாங்கிக் கொண்டு வந்தான். எல்லோருக்கும் அவற்றைக் கொடுத்தான்.

“ப்ராவின்ஸில் உள்ள ஆலிவ் மரத் தோட்டங்களை மட்டும் நீங்க பார்த்திருந்தா, வாழ்க்கையில் ஆலிவ் பழங்களைத் தவிர, வேற எதையும் நீங்க தின்னவே மாட்டீங்க”- வின்சென்ட் சொன்னான்.

“நீ ஆலிவ் தோட்டங்களைப் பற்றி சொல்றப்பத்தான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துல வருது. ஆர்ளில் இருக்கும் பெண்கள் எப்படி...?” லாத்ரெக் கேட்டான்.

மறுநாள் ஜோஹன்னா குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே காலாற நடக்கக் கிளம்பியபோது, வின்சென்ட் வீட்டை ஆராய்ந்தான். என்ன ஆச்சரியம்! தான் இதுவரை வரைந்த எல்லா ஓவியங்களையும், தியோ பத்திரமாக வைத்திருந்தான். எல்லா அறைகளிலும் சுவர் முழுக்க வின்சென்ட் வரைந்த ஓவியங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கட்டிலுக்கு கீழேயும், ஸோஃபாவுக்கு அடியிலும் ஃப்ரேம் போடாத அவனின் ஓவியங்கள்!

தியோ தன் மேஜை மேல் வின்சென்ட் எழுதிய எல்லா கடிதங்களையும் ஒரு கட்டாகக் கட்டி வைத்திருந்தான். மேஜையின் ஒரு மூலையில் வின்சென்ட் வரைந்த சில ஓவியங்கள்!

“நான் வரைந்த ஓவியங்களை வச்சு ஒரு கண்காட்சி நடத்தப் போறேன்” – வின்சென்ட் உற்சாகத்துடன் சொன்னான்.

தான் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் சேகரித்தான் வின்சென்ட். தான் ஆரம்பத்தில் படம் வரைய ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு கால கட்டத்திலும் வரைந்த ஓவியங்களைக் கால வாரியாகப் பிரித்து ஒவ்வொரு அறையிலும் தொங்கவிட்டான். அவன் வரைந்த ஓவியங்கள் வரிசையாக- அதே நேரத்தில், கம்பீரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு ஓவியனின் பல வருட உழைப்பு அதில் தெரிந்தது. ஓவியங்களைத் தொங்க விட்டபிறகு, அறைகளைச் சுத்தம் செய்ய வின்சென்ட் கீழே சென்றான். ஜோஹன்னாவுடன் சேர்ந்து குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடினான்.

தியோ திரும்பி வந்தபோது வின்சென்ட் வாசற்படியில் போய் நின்றான்: “நான் உங்க எல்லோருக்கும் ஒரு வான்காவோட ஓவியக் கண்காட்சியைக் காண்பிக்கப் போறேன். பாக்குறதுக்கு தயாராயிருங்க...”

 “ஓவியக் கண்காட்சியா?” – தியோ கேட்டான்: “எங்கே?”

“முதல்ல கண்களை மூடிக்குங்க!”

வின்சென்ட் வாசல் கதவைத் தள்ளித் திறந்தான். மூன்று பேரும் உள்ளே நுழைந்தார்கள். கண்களைத் திறந்து தியோவும் ஜோஹன்னாவும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

“நான் எற்றனில் இருக்குறப்போ அப்பா அடிக்கடி சொல்வாரு கெட்டதில் இருந்து நல்லது உருவாகாதுன்னு”- வின்சென்ட் சொன்னான்: “அவர் அப்படி சொல்றப்போ அப்படி இல்லைன்னு நான் எதிர்ப்பேன். காலையில் அது நடக்கும்னு அடித்துச் சொல்லுவேன். என் அன்புத் தம்பி தியோ, ஜோஹன்னா...

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel