வான்கா - Page 85
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8806
பழைய எகிப்து நாட்டு தூண்களைப் போல சூரிய ஒளிக்கு எதிராக தலை உயர்த்தி நிற்கின்ற கம்பீரமான மரங்கள்! தன்னுடைய சூரியகாந்திப் பூக்களைப் போல இவற்றுக்கும் கான்வாஸில் உயிர் தர நினைத்தான் வின்சென்ட்.
வயலட் நிறத்தில் இருக்கும் குன்றும், இலேசான மஞ்சளும் சிவப்பும் கலந்து ஆகாயத்தையும், பின்புலமாக வைத்து தலை உயர்த்தி நிற்கும் ஸைப்ரஸ் மரங்கள்! முன்னால் இருக்கின்ற புதர்களில் மஞ்சள், பச்சை, வயலட் நிறங்களில் மலர்கள்! படத்தை முழுமையாக வரைந்து முடித்தபோது, அவனின் மனத்திற்கு ஒரு நிம்மதி வந்தது. பெரிய கண்டத்திலிருந்து தான் தப்பித்து விட்டதாக அவனுக்கு உண்மையாகவே பட்டது.
தியோ வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே பணம் அனுப்பி இருந்தான். தன்னுடைய பொருட்களை எடுப்பதற்காக வின்சென்ட் பழைய மஞ்சள் வீட்டிற்குச் சென்றிருந்தான். ஆட்கள் அவனைக் கண்டதும் பவ்யமாக ஒதுங்கினார்கள். ஆனால், அந்த வீட்டைப் பார்த்ததும் வின்சென்ட்டின் மனதில் ஒரு மாற்றம். அவனின் தலைசுற்றுவது போல இருந்தது. வீட்டு உரிமையாளரைப் பார்க்கப் போன வின்சென்ட் அன்று இரவு மருத்துவமனைக்குத் திரும்பி வரவில்லை. மறுநாள் தெருவோரத்தில் இருந்த ஒரு குழியில் வின்சென்ட் தலை குப்புற விழுந்து கிடந்ததை மக்கள் எல்லோரும் பார்த்தார்கள்.
அடுத்த மூன்று வாரங்களுக்கு ஜுரத்தின் பிடியில் சிக்கி நினைவே இல்லாமல் கிடந்தான் வின்சென்ட். அவனுடன் இருந்த மற்ற நோயாளிகள் அவன் மீது பரிவு கொண்டு அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்கள். நாளடைவில் ஜுரம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது. சுயநினைவு முழுமையாக வந்தபிறகு கூட தனக்குத்தானே என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான் வின்சென்ட்.
மருத்துவமனையின் சூழ்நிலையைப் பார்த்த வின்சென்ட் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான். அவனை ஓவியம் வரைய அனுமதிப்பதில் டாக்டருக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. கடைசியில் தியோ சொன்னான் என்பதற்காக வின்சென்ட்டின் தொடர் நச்சரிப்புக்குத் தலையாட்டினார் டாக்டர்.
தியோ தந்தை ஆகப் போகிறான். என்ற செய்தி தெரிந்ததும் வின்சென்ட்டிற்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“உனக்குத் தெரியுமா, தியோ”- வின்சென்ட் கடிதம் எழுதினான்: “எனக்கு இயற்கைக் காட்சிகள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் உனக்குக் குடும்பம். ஜோஹன்னாவின் வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தையின் பிறப்பை ஆவலுடன் நான் எதிர்பார்க்கிறேன்.”
கோடை காலம் முடிந்தது. வின்சென்ட் முன்பைவிட இப்போது கொஞ்சம் அதிகம் உற்சாகம் கொண்டவனாக இருந்தான். தியோ எப்போது கடிதம் எழுதினாலும் ஜோஹான்னாவின் சுவையான சமையலைப் பற்றியும் வின்சென்ட்டின் உடல்நிலையைப் பற்றியும் எழுத மறக்கவே மாட்டான்.
இடையில் மீண்டும் வின்சென்ட்டிற்கு உடல் நிலை பாதிப்பு உண்டானது. மருத்துவமனை ஊழியர்கள் சில மைல் தூரத்தில் வயலில் ஒரு ஸைப்ரஸ் மரத்தைக் கட்டிப்பிடித்தவாறு மயங்கிக் கிடந்த வின்சென்ட்டைப் பார்த்து மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு வந்தார்கள்.
நிறம் மங்கிப் போன நாட்களாகவே எல்லா நாட்களும் இருந்தன. வின்சென்ட்டின் மனம், சொல்லப் போனால் முழுமையாக மரத்துப் போனது. மருத்துவமனையின் ஒவ்வொரு அசைவும் நன்கு பழகிப் போன ஒன்று மாதிரி அவனுக்கு ஆனது.
மீண்டும் ஓவியம் வரைய அனுமதி கேட்டபோது, டாக்டர் பெய்ரோன் திடமான குரலில் சொன்னார்: “அது வேண்டாம்னு நான் நினைக்கிறேன்!”
“நான் தற்கொலை பண்ணிடுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா டாக்டர்?”
டாக்டர் கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமல் பாதி மனதுடன் ஸ்டுடியோவில் இருந்து ஓவியம் வரைய வின்சென்ட்டை அனுமதித்தார்.
ஒருநாள் தியோவின் கடிதமும் அவன் அனுப்பியிருந்த நானூறு ஃப்ராங்கிற்கான காசோலையும் வந்தன.
வின்சென்ட் கடிதத்தைப் பிரித்தான்:
“பிரிய வின்சென்ட்,
கடைசியில் உன்னுடைய ஒரு கான்வாஸை நானூறு ஃப்ராங்க் கொடுத்து ஒரு ஆள் விலைக்கு வாங்கி இருக்கிறார். டச் ஓவியர் போக்கின் சகோதரி அன்னா உன்னுடைய ‘சிவப்பு முந்திரித் தோட்டம்’ என்ற ஓவியத்தை வாங்கியிருக்கிறார். பாராட்டுக்கள்! இனி ஐரோப்பா முழுவதும் உன்னுடைய ஓவியஙகள் விற்கப்படும். இந்தப் பணத்தை பாரீஸுக்கு வருவதற்கு பயன்படுத்திக் கொள்ளவும்- டாக்டர் பெய்ரோன் இதற்குச் சம்மதம் தந்தால்.
நான் சமீபத்தில் அருமையான ரசனை கொண்ட ஒரு மனிதருடன் அறிமுகமானேன். அவர் பெயர்- டாக்டர் காஷே. பாரீஸுக்கு அருகில் உள்ள ஒவேரில் அவர் வீடு இருக்கிறது. தாபினிக்குப் பின்னால் வந்த எல்லா ஓவியர்களும் அவரின் வீட்டில் தங்கி ஓவியம் வரைந்திருக்கிறார்கள். உன்னைப் பற்றி அவரிடம் சொன்னேன். உனக்கு உண்டாகியிருக்கும் உடல் நலக்கேட்டை அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். ஒவேருக்கு வந்தால், உன்னுடைய உடல் நலத்தை தான் அக்கறையுடன் கவனிப்பதாகவும் சொன்னார்.
நாளை மீண்டும் கடிதம் எழுதுகிறேன்.
-தியோ”
¤ ¤ ¤
வின்சென்ட்டின் மனதில் மீண்டும் புத்துணர்ச்சி உண்டானது. அதிகமான ஓவியங்களை அவன் வரைந்தான். உறங்கும் நோயாளிகளையும், மருத்துவமனை சூப்பிரண்டையும், அவரின் மனைவியையும் ஓவியமாக வரைந்தான். மில்லே, தெலாக்ரா ஆகியோரின் ஓவியங்களைப் பார்த்து அவன் அவற்றைத் தன் கைப்பட வரைந்தான்.
தனக்கு உண்டான நோயின் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டபோது, வின்சென்ட்டிற்கு ஒரு உண்மை புரிந்தது. இந்த நோய் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வரக்கூடியது. அப்படி என்றால் இந்த நோய் பாதிப்பதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த முறை நோய் உடலைப் பாதிப்பதற்கு முன்பே வேலை செய்வதை நிறுத்திவிட வேண்டும் – வாழ்க்கையின் அன்றாடச் செயல்களை நிறுத்திவிட்டு, நோயை எதிர்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் சில நாட்கள் கழித்து மீண்டும் பழைய மாதிரி படம் வரைவதில் ஈடுபடலாம். சொல்லப் போனால், அவ்வப்போது ஜலதோஷம் வருவதைப் போல் இதைக் கருதிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அடுத்தமுறை நோய் தாக்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வின்சென்ட் முன்னெச்சரிக்கையாக படுக்கையில் போய் படுத்துக்கொண்டான். நோய் தாக்கக்கூடிய அந்த நாள் வந்தது. ஒன்றுமே நடக்கவில்லை. இன்னொரு நாளும் வந்தது. அப்பொழுதும் அவனிடம் எந்த மாற்றமும் நிகழவில்லை. மூன்றாம் நாள் வந்த பிறகும் எதுவும் நடக்கவில்லை என்பது தெரிந்தபோது, வின்சென்ட் விழுந்து விழுந்து சிரித்தான்: “உண்மையிலேயே நான் ஒரு முட்டாள்தான். நான் நல்ல உடல் நலத்தோடதான் இருக்கேன். என்னுடைய சுகக் கேடு முழுசா மாறிடுச்சு. தேவையில்லாம இந்தப் படுக்கையில இங்கே படுத்துக் கிடக்கேன். நாளைக்குக் காலையில இருந்து நம்ம வேலையைப் பார்க்க வேண்டியதுதான்”- தனக்குள் அவன் சொல்லிக் கொண்டான்.
நள்ளிரவு நேரத்தில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, வின்சென்ட் எழுந்தான். மெதுவாக கீழே அடுப்புக்கரி வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தான். கரியை எடுத்து தன் முகத்தில் தேய்த்தான்.