வான்கா - Page 88
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8807
என் பின்னாடி வந்து பாருங்க. ஒரு சின்னப்பிள்ளை பக்குவமில்லாம கிறுக்கின மாதிரி ஆரம்பத்துல படம் வரைஞ்ச ஒரு மனிதன், பத்து வருட கடுமையான உழைப்பில் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கான்னு பாருங்க... நீங்கதான் நான் எந்த இடத்துல இருக்கேன்றதுக்கு பதில் சொல்லணும்!”
அவர்கள் ஒவ்வொரு அறையாக ஏறி இறங்கினார்கள். ஒரு ஓவியனின் படிப்படியான முன்னேற்றத்தை – வளர்ச்சியை அவர்களால் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆரம்ப கால தன்னம்பிக்கைக் குறைவு... பாரீஸில் உண்டான மிகப் பெரிய மாற்றம்... ஆர்ளில் வரைந்த ஓவியங்களில் இருக்கும் ஒரு ஜொலிப்பு... ஸெய்ன்ட்ரெமியில் வரைந்தவற்றில் ஒரு நிறைவு. அவர்கள் முன்னால் நின்று கொண்டிருந்த வின்சென்ட் ஒரு அசாதாரணமான மனிதனாகத் தெரிந்தான் அவர்களுக்கு. ஒரு அற்புதக் கலைஞனின் வாழ்க்கைப் பயணத்தில் அவன் சந்தித்த போராட்டங்களும், சந்தோஷமும், துக்கமும், ஏமாற்றங்களும் அவன் வரைந்த ஓவியங்களின் வரைவுகளிலும், நிறங்களிலும் தெளிவாகத் தெரிந்தன.
¤ ¤ ¤
ஜோஹன்னா அருமையான விருந்தொன்று வைத்தாள். டச் வகை உணவு கிடைத்ததில் வின்சென்ட்டிற்கு உண்மையாகவே ஏகப்பட்ட மகிழ்ச்சி. சாப்பிட்டு முடிந்ததும், சகோதரர்கள் இருவரும் பைப்பைப் புகைக்க ஆரம்பித்தார்கள்.
“டாக்டர் காஷெ சொல்றதைத் தட்டாம கேட்கணும் வின்சென்ட்.”
“நிச்சயமா தியோ...”
“அவர் ஒரு நரம்பு இயல் நிபுணர். அவர் சொல்றபடி நீ நடந்தா, சீக்கிரம் நீ குணமாயிடுவே!”
“அதுதான் சரின்னு நான் சொல்றேனே!”
“காஷெ ஒரு ஓவியருங்கூட.”
“அவர் வரைந்த ஓவியங்கள் நல்லா இருக்கா?”
“அப்படிச் சொல்ல முடியாது. ஆனா, அவருக்கு எல்லா பிரபல மனிதர்களையும் தெரியும். மருத்துவ சம்பந்தமாகப் படிப்பதற்காக பாரீஸூக்கு தன்னோட இருபதாவது வயசுல வந்த ஆளு. சொல்லப்போனா, பாரீஸ்ல இருக்குற எல்லா ஓவியர்களையும் அவருக்குத் தெரியும்.”
“உண்மையாகவா?”
“ஆமா... டாக்டரோட நண்பர்களா இல்லாத ஓவியர்கள் கொஞ்சம் பேர்தான் இருப்பாங்க.”
“அப்படியா? கொஞ்சம் நிறுத்து. நீ சொல்லச் சொல்ல எனக்கு பயம் வருது. அவரோட கூட்டத்துல நான் எப்படிச் சேர முடியும்? என்னோட ஓவியங்கள் எதையாவது அவர் பார்த்திருக்கிறாரா?”
“முட்டாள்! நீ ஒவேருக்கு வரணும்னு அவர் பிரியப்பட்டதுக்குக் காரணம் என்ன தெரியுமா?”
“எனக்குத் தெரியாதே!”
“நீ ஆர்ளில் வரைஞ்ச ஓவியங்கள் ரொம்பவும் பிரமாதமா இருக்குன்னு அவர் பாராட்டினாரு. உன்னோட ‘சூரியகாந்திப் பூக்க’ளையும், ‘மஞ்சள் வீடு’ ஓவியத்தையும் அவர்கிட்ட காட்டினப்போ, சத்தியமா சொல்றேன்- அவருக்கு கண்ணீர் வந்திடுச்சு.” என் பக்கம் திரும்பி அவர் என்ன சொன்னாரு தெரியுமா?
“ம்ஸ்யெ வான்கா, உங்களோட சகோதரர் ஒரு மிகப்பெரிய கலைஞன். இப்படிப்பட்ட ஓவியத்தை, ஓவியக் கலையோட சரித்திரத்திலேயே நான் இதுவரை பார்த்தது இல்லை... இந்த கான்வாஸ் ஒண்ணுபோதும் உங்களோட சகோதரரை மிகப்பெரிய மனிதராக்க!”ன்னார்.
இதைக் கேட்டதும் வின்சென்ட் தலையைச் சொறிந்தவாறு சிரித்தான்: “சரி... சரி... டாக்டர் காஷெ என்னோட ஓவியங்களை இந்த அளவுக்குப் புகழ்ந்தார்னா நிச்சயம் அவர் கூட பழக நான் சரியான ஆளாக இருப்பேன்!”
தியோவையும், வின்சென்ட்டையும் எதிர்பார்த்து டாக்டர் காஷெ ஸ்டேஷனில் நின்றிருந்தார். ஒவ்வொரு மணித் துளியையும் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனிதர் அவர். அவரின் கண்களில் ஏதோ துக்கத்தின் நிழலாட்டம் தெரிந்தது. வின்சென்ட்டின் கையைப் பிடித்துகுலுக்கிய டாக்டர் காஷெ சொன்னார்:
“சொல்லப்போனால், இந்த ஊரையே ஒரு ஓவியர்களோட கிராமம்னே சொல்லலாம். உங்களுக்கு இந்த இடத்தை நிச்சயம் பிடிக்கும். கையில ஈஸல் எடுத்துட்டு வந்திருக்கீங்கல்ல? சாயமும் மற்றவைகளும் தேவைக்கு இருக்குல்ல? உடனே நீங்க படம் வரைய ஆரம்பிங்க. முன்னாடி நீங்க வரைஞ்ச ஓவியங்களைக் கொண்டு வந்திருக்கீங்களா? ஆர்ளில் இருக்கும் மஞ்சள் நிறம் இங்கே கிடையாது. ஆனால், அங்க இல்லாத பலதும் இங்கே இருக்கு. தாபினி முதல் லாத்ரெக் வரை ஓவியம் வரைய பயன்படுத்திய பூப்பாத்திரங்களும், மேஜைகளும் இங்கே இருக்கு. அவற்றை நான் காட்டுறேன். இப்போ உங்க உடல் நிலை எப்படி இருக்கு? பார்க்குறதுக்கு ஆரோக்கியமா இருக்குறது மாதிரிதான் தெரியுது.... சரி... சரி... நாங்க எல்லோரும் சேர்ந்து உங்களை முழுமையா குணமடைய வச்சிடுவோம்!”
வாய் வலிக்க பேசிக் கொண்டே இருந்தார் டாக்டர் காஷெ. இடையில் தியோ மெதுவான குரலில் சொன்னான்: “டாக்டர்... என்னோட அண்ணனை நல்ல முறையில் பார்த்துக்கணும். வின்சென்ட்டோட உடல் நிலை பாதிக்கப்படுறது மாதிரி ஏதாவது தெரிஞ்சதுன்னா, உடனடியா எனக்குத் தந்தி அடிச்சிடுங்க. அப்படிப்பட்ட நேரத்துல நான் கூட இருக்கணும்னு நினைக்கிறேன்!”
டாக்டர் காஷெ தன் சுண்டு விரலால் சிறிதாக வளர்ந்திருந்த தாடியைத் தடவினார். ஒருகாலின் மேல் போட்டிருந்த மற்றொரு காலை மாற்றிப் போட்டவாறு பேசினார்: “வின்சென்ட்டுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கலாம். அதனால என்ன? சொல்லப்போனா, கலையோட சம்பந்தப்பட்ட எல்லோருமே பைத்தியக்காரங்கதான். அவங்கக்கிட்ட இருக்கிறதுலயே நல்ல விஷயம் அதுவாகத்தான் இருக்க முடியும். அப்படி பைத்தியக்காரர்களா அவங்கள பார்ப்பதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். சில நேரங்கள்ல நினைப்பேன்- நமக்கும் இந்த மாதிரி கொஞ்சமாவது பைத்தியம் பிடிக்காதான்னு. ஒரு நல்ல ஆத்மாவால் பைத்தியக்காரத்தனத்தை விட்டு விலகி இருக்க முடியாது”- அப்படின்னு யார் சொல்லியிருக்கிறது தெரியுமா? அரிஸ்டாட்டில்தான் அப்படிச் சொல்லி இருக்காரு.
“எனக்கு அது தெரியும், டாக்டர்” – தியோ சொன்னான்: “ஆனா, இவனுக்கு இப்போ முப்பத்தேழு வயசுதான் ஆகுது. வாழ்க்கையின் மிகச் சிறந்த காலமே இனிமேல்தான் இவனுக்கு இருக்கு.”
டாக்டர் தன் தலையில் இருந்த தொப்பியைக் கழற்றி கையில் வைத்தவாறு, தலை முடியைக் கை விரலால் கோதிக் கொண்டே இருந்தார்.
“உங்களோட சகோதரரோட விஷயத்தை என்கிட்ட விட்டுருங்க. அதை நான் பார்த்துக்குறேன். பொதுவா ஓவியர்களை எப்படி நடத்துறதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். இன்னைக்கே வின்சென்ட்டைப் படம் வரையச் சொல்லிட்டேன். மனசுல உடல் நிலைக்கேடைப் பற்றி ஏதாவது நினைப்பு இருந்தால்கூட, இருந்த இடம் தெரியாம ஓடிடும்.”
வின்சென்ட் அந்த கிராமத்தின் சுத்தமான காற்றை மகிழ்ச்சியுடன் சுவாசித்தான். அந்தக் காற்று நாசித்துவாரத்தின் வழியே உள்ளுக்குள் சென்றபோது, இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி அவனுக்கு உண்டானது.
தியோ அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான். டாக்டர் காஷெ வின்சென்ட்டின் கையைத் தன் கையால் பற்றியவாறு முன்னால் நடத்திக் கொண்டு போனார்.