வான்கா - Page 92
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8807
வின்சென்ட் சூரியனை அண்ணாந்து பார்த்தான். கைத் துப்பாக்கியின் வாயை உடலோடு சேர்ந்து வைத்து, பலத்தை முழுவதையும் செலுத்தி விசையை இழுத்தான். கால் இடறியது. கீழே தடுமாறி, விழுந்தான். மண்ணின் மார்பில் அதன் அன்பு மகனின் முகம் முத்தமிட்டது.
¤ ¤ ¤
நான்கு மணி நேரத்திற்குப் பிறகு வின்சென்ட் ஆடியவாறு, அறையைத் தேடி வந்தான். அவனுக்குப் பின்னால் வந்த மேடம் ரவூ அவனின் ஆடையில் இருந்த இரத்தத்தைப் பார்த்து டாக்டர் காஷெயை அழைப்பதற்காக ஓடினாள்.
“ஓ... என் அன்பு வின்சென்ட்டே! என்ன பண்ணினீங்க!”- அறைக்குள் வந்த காஷெ பதைபதைப்புடன் கேட்டார்.
“இதுலயும் நான் கொஞ்சம் கோட்டை விட்டுட்டேனே டாக்டர்!”- வின்சென்ட் மெதுவான குரலில் சொன்னான்.
காஷெ வின்சென்ட்டின் காயத்தைப் பார்த்தார்.
“என் வின்சென்ட்டே.... இப்படி ஒரு முடிவை எடுக்குற அளவுக்கு உங்களுக்கு என்ன ஆச்சு? கடவுளே, இது எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! நாங்க எல்லோரும் உங்க மேல் உயிரையே வச்சிருக்கோம். உங்க மேல எந்த அளவுக்கு அன்பும், பாசமும் வச்சிருக்கோம்ன்றது உங்களுக்கே தெரியும். எங்களை விட்டு நீங்க போகணும்னு நினைச்சா எப்படி? இனியும் பல ஓவியங்களை நீங்க வரையணும் வின்சென்ட்.”
“டாக்டர்... தயவு செய்து என்னோட பைப்பையும், புகையிலையையும் எடுத்துத் தர்றீங்களா?”
“நிச்சயமா நண்பரே! இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைன்றதுனால உங்களோட சகோதரர் வேலை செய்ற இடத்துல இல்ல... அவரோட வீட்டு அட்ரஸ் என்ன?”
“அதை மட்டும் நான் தரவே மாட்டேன். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாள். அவனுக்கு நாம தொந்தரவு தரக் கூடாது.”
டாக்டர் காஷெ எவ்வளவு வற்புறுத்தியும், தியோவின் முகவரியைத் தரவே முடியாது என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான் வின்சென்ட். இரவு நேரம் ஆகியும் கூட, அவனுடனே இருந்தார் டாக்டர். பாதி இரவு கழிந்த பிறகு, தன் மகனை வின்சென்ட்டின் அருகில் இருக்கச் சொல்லிவிட்டு, சிறிது நேரம் தூங்கலாம் என்று வீட்டை நோக்கி போனார் காஷெ.
வின்சென்ட் இரவு முழுவதும் ஒரு பொட்டு கூட தூங்கவில்லை. தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டே இருந்தான்.
காலையில் காலரிக்கு வந்ததும், தியோவின் கண்ணில் பட்டது காஷெ அனுப்பியிருந்த தந்திதான். அடுத்த வண்டியிலேயே ஒவேருக்கு அவன் வந்தான்.
“தியோ, நீயா?”- வின்சென்ட் கேட்டான்.
தியோ கட்டிலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வின்சென்ட்டை ஒரு சிறு குழந்தையைப் போல் தன் கைக்குள் அடக்கி அணைத்தான். அவனால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை.
டாக்டர் வந்ததும், தியோ அவருடன் வெளியே வந்தான். அவர் முகத்தில் ஒரே கவலையின் ரேகைகள்!
“நண்பரே, உள்ளே இருக்கும் குண்டை எடுக்க அறுவை சிகிச்சை இப்போ செய்ய முடியாது. உடலோட நிலை ரொம்பவும் மோசம். உருக்கு போல உடம்பு இல்லாமல் போயிருந்தா, அந்த வயல்லயே உயிர் போயிருக்கும்!”
நாள் முழுவதும் தியோ வின்சென்ட்டின் அருகிலேயே அமர்ந்திருந்தான். இரவு வந்தது. சகோதரர்கள் இருவர் மட்டுமே அறையில் இருந்தனர். தங்களின் இளமைக் காலத்தை அவர்கள் அசை போட்டனர்.
“ரிஸ்விக்கில் இருந்த அந்த மில்லை ஞாபகம் இருக்கா, வின்சென்ட்?”
“அது ஒரு நல்ல மில். இல்லியா தியோ?”
“நாம அந்த நதிக்கரை வழியே நடந்து போவோம்.”
“கோடை காலத்துல சோள வயல்ல நாம விளையாடுறப்போ, நீ இப்ப மாதிரியே என்னோட கையைப் பிடிச்சிக்கிருவே...”
“ஆமா... வின்சென்ட்.”
“நான் ஆர்ளில் மருத்துவமனையில் இருந்தப்போ, சுண்டர்ட்டைப் பற்றி நான் நினைச்சேன். நம்மோட இளமைக்காலம் எவ்வளவு நல்லா இருந்துச்சு, தியோ! நாம அடுக்களைக்குப் பின்னாடி தோட்டத்துல விளையாடுவோமே! அது உனக்கு ஞாபகத்துல இருக்கா? அம்மா நாம சாப்பிடுறதுக்கு சுவையா ஏதாவது பண்ணித்தருவாங்க!”
“அது நடந்து எவ்வளவு வருஷங்களாச்சு!”
“ஆமா... வாழ்க்கைப் பயணத்துல இது மாதிரி எத்தனை சம்பவங்கள்! அவற்றை எல்லாம் மறக்கத்தான் முடியுமா? தியோ, எனக்காக நீ ஒரு காரியம் செய்யணும். உன்னோட உடல் நலத்தை நீ பத்திரமா பார்த்துக்கணும். ஜோஹன்னாவையும் மகனையும் நகரத்துல இருந்து விலகி இருக்கிற அமைதியான கிராமப் பகுதிக்கு அழைச்சிட்டுப் போ. அங்கே போனா அவங்க உடல் நிலை இன்னும் நல்லா ஆகும்.”
“நான் சொந்தமா ஒரு காலரி அரம்பிக்கப் போறேன், வின்சென்ட். முதல்ல நான் ஒரே ஆளோட ஓவியக் கண்காட்சி நடத்தப் போறேன். அது- வின்சென்ட் வான்காவோடது. உன்னோட எல்லா ஓவியங்களையும் கண்காட்சியில வைக்கப் போறேன்.”
“என் படைப்புகள்... நான் வரைஞ்ச ஓவியங்கள்... நான் என்னோட வாழ்க்கையை – மனசோட சம நிலையைக் கூட அவற்றுக்காக இழந்திருக்கேன்.”
இரவின் அமைதி அறைக்குள் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
பின்னிரவு ஒருமணி ஆனபோது, வின்சென்ட் தலை மெல்ல ஒரு பக்கம் சாய்ந்தது. மெதுவான குரலில் அவன் சொன்னான்: “இப்போ நான் சாகலாம். தியோ...”
சில நிமிடங்களில் வின்சென்ட்டின் கண்கள் முழுமையாக மூடின.
தன் ஆருயிர் சகோதரன் நிரந்தரமாக தன்னை விட்டுப் போவதை கண்ணீர் பெருக பார்த்தவாறு அமர்ந்திருந்தான் தியோ.
¤ ¤ ¤
கஃபேயின் பில்லியர்ட்ஸ் அறையில் வின்சென்ட்டின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
தியோ, காஷெ, ரூஸோ, தான்குய், ஓரியே, பெர்னார், ரவூ – எல்லோரும் அமைதியே வடிவமாக நின்றிருந்தனர்.
வண்டிக்காரன் கதவைத் தட்டினான்: “நேரமாயிடுச்சு...”
“வின்சென்ட்டை இப்படி போக நாம விடக்கூடாது”- காஷெ சொன்னார்.
வின்சென்ட்டின் அறையில் இருந்தும், தன்னுடைய அறையில் இருந்தும் காஷெ, வின்சென்ட் வரைந்த ஓவியங்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்தார்.
தியோவைத் தவிர, அங்கு நின்றிருந்த எல்லோரும் ஓவியங்களை சுவரில் மாட்ட உதவினார்கள்.
வின்சென்ட்டின் ஒளிமயமான கான்வாஸ்கள் இருண்ட அறைக்குப் பிரகாசத்தை உண்டாக்கின. அந்த அறை ஒரு தேவாலயமாக மாறியது.
எல்லோரும் சுற்றிலும் நின்றார்கள். காஷெவால் மட்டுமே பேச முடிந்தது.
“வின்சென்ட்டின் நண்பர்களான நாம் நிராசை அடைஞ்சிடக் கூடாது. வின்சென்ட் சாகல. அவருக்கு ஒரு நாளும் மரணம்ன்றது கிடையாது. அவரோட அன்பும், கலைத் திறமையும், அவர் படைத்த அழகும் இந்த பூமியின் பொக்கிஷங்களாக – காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும். இந்த அவரோட ஓவியங்களைப் பார்த்து நிற்கிற ஒவ்வொரு நிமிஷத்திலும், வாழ்க்கையோட புதிய பரிமாணத்தை நான் பார்க்கிறேன். வின்சென்ட் வான்கா. ஒரு அபூர்வ மனிதர். மிகப் பெரிய ஓவிய மேதை. மிகப் பெரிய ரசிகர். கலைக்காக இரத்த சாட்சியான தியாக புருஷர்....”