வான்கா - Page 89
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8807
நடக்கும்போதே மூச்சு விடாமல் என்னென்னவோ பேசிக்கொண்டே வந்தார். அவரின் தொடர் பேச்சிலிருந்து சிறிது விலகி இருக்க வேண்டும் என்பதற்காக சற்று அவருக்கு முன்னால் நடந்தான் வின்சென்ட்.
கீழே பசுமையான கரைகளுக்கு நடுவில் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது ஓஸ் நதி. ஆற்றின் வலது பக்கத்தில் வீடுகளின் மேற் கூரைகள் வரிசையாகத் தெரிந்தன. இன்னொரு மூலையில் ஒரு பெரிய மலை தெரிந்தது. மலையின் மேலே ஒரு பழைய அரண்மனை இருந்தது. பல வர்ண பூக்கள்... நல்ல சூரிய வெளிச்சம்... மேலே நிர்மலமான நீல வானம். மொத்தத்தில் – அழகும் அமைதியும் எங்கும் வியாபித்திருந்தது.
“டாக்டர் காஷெ, உங்களுக்குத் தெரியுமா?”- வின்சென்ட் சொன்னான்: “தெற்கு திசையில் இருந்த இடங்கள் எனக்கு வாழ்க்கையில் எவ்வளவோ நல்லது செய்திருக்கு. இப்போ வடக்குப் பக்கத்தைத் தேடி வந்திருக்கேன். இதோட அழகையும் இப்போ எனக்குப் பார்த்து மகிழ்ச்சியடைவதற்கான வாய்ப்புக் கிடைச்சிருக்கு. இந்த நதிக்கரையோர பச்சையை இன்னும் சூரிய வெளிச்சம் தொடாததால், அது எபபடி வயலட் நிறத்தில் இருக்கு பாருங்க!”
“ஆமா... வயலட் நிறம்தானே! நீங்க சொன்னது சரிதான்... வயலட் நிறம்தான்...”
“எவ்வளவு அமைதியா இருக்கு!”- மெதுவான குரலில் சொன்னான் வின்சென்ட்: “எது பற்றிய கவலையும் இல்லாமல் நதி எவ்வளவு நிசப்தமா ஓடிக்கிட்டு இருக்கு பாருங்க!”
காஷெ நதிக்கரையில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு வின்சென்ட்டை அழைத்துக் கொண்டு போனார். அங்கு நாளொன்றுக்கு உணவுடன் சேர்த்து ஆறு ஃப்ராங்க் வாடகை.
“கொஞ்சம் ஓய்வெடுங்க வின்சென்ட்.”- காஷே சொன்னார்: “சாப்பாட்டுக்கு ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்திடுங்க. ஈஸலைக் கையில் எடுத்துக்கோங்க. என்னை ஒரு படம் நீங்க வரையணும். நீங்க புதுசா வரைஞ்ச ஓவியங்களை நான் பார்க்கணும். நாம ரெண்டு பேரும் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு!”
காஷெ சென்ற பிறகு, வின்சென்ட் பொருட்களை எடுத்துக் கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறினான்.
“நீங்க எங்கே போறீங்க?” – ஹோட்டல் உரிமையாளர் கேட்டார்.
“நான் ஒரு சாதாரண மனிதன். ஒரு நாளைக்கு ஆறு ஃப்ராங் தர்ற அளவுக்கு நான் பணக்காரன் இல்ல...”
நாளொன்றுக்கு உணவையும் சேர்த்து மூன்று ஃப்ராங்க் வாடகை கட்டக்கூடிய ஒரு இடத்தைக் கண்டுபிடித்தான் வின்சென்ட்.
ஈஸலையும், பெயிண்ட், ப்ரஷ் ஆகியவற்றையும், முன்பு ஆர்ளில் தான் வரைந்த பெண்ணின் ஓவியத்தையும் எடுத்துக் கொண்டு காஷெயின் வீடு நோக்கி நடந்தான் வின்சென்ட்.
காஷெ படு உற்சாகத்தில் இருந்தார். கையை ஆர்வத்துடன் பற்றி வீட்டுக்குள் வின்சென்ட்டை அழைத்துக் கொண்டு போனார். வீட்டிற்குப் பின்னால் வாத்தும், கோழியும், துருக்கி கோழியும், மயிலும், கூட்டமாக பூனைகளும் உலாவிக் கொண்டிருந்தன.
தான் வளர்த்துக் கொண்டிருக்கும் பிராணிகளைப் பற்றி ஒரு நீண்ட சொற்பொழிவே ஆற்றினார் காஷெ. சொற்பொழிவு முடிந்ததும், மீண்டும் வீட்டுக்குள் வின்சென்ட்டை அழைத்துக் கொண்டு போனார்.
அறை முழுக்க பொருட்கள்தான். “இதோ... இது தெலாக்ரா படம் வரைவதற்காக மாடலாக உபயோகிச்ச பூப்பாத்திரம். இந்த இடத்துலதான் குர்பெ உட்கார்ந்து படம் வரைஞ்சார். இங்க இருக்குற பாத்திரங்கள் தெமூலின் படம் வரைவதற்காக ஜப்பான்ல இருந்து கொண்டு வந்தவை. இங்க உட்கார்ந்து மோனே படம் வரைஞ்சிருக்கார்”- காஷெ நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனார்.
சாப்பாட்டு நேரத்தில் தன் மகனை டாக்டர் காஷெ வின்சென்ட்டிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தப் பதினைந்து வயது பையன் பார்க்க அழகாக இருந்தான். பல்வகை சுவையும் நிறைந்த அருமையான உணவு. இப்போது சாப்பிட்டுக் கொண்டிருப்பதையும் ஸெய்ன்ட்ரெமியில் சாப்பிடாமல் தான் இருந்த பல நாட்களையும் நினைத்துப் பார்த்தான் வின்சென்ட்.
சாப்பிட்டு முடிந்ததும், காஷெ சொன்னார்: “இனி வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். என்னைப் படமா வரையிங்க வின்சென்ட். நான் இங்கே உட்கார்ந்தா போதுமா?”
“ஆனா... டாக்டர்... உங்ககூட இன்னும் கொஞ்சம் அதிகமா பழகினாத்தான் என்னால உங்களைப் படமா வரைய முடியும்!”
“நீங்க சொல்றதும் சரிதான். அப்படின்னா, வேற எதையாவது வரையிங்க. வேற என்ன வரையப் போறீங்க?”
“ஒரு பூந்தோட்டத்தை வரையலாம்னு பாக்குறேன்!”
“நல்ல விஷயம்தான். ஈஸலை நான் சரியான இடத்துல எடுத்து வைக்கிறேன்.”
வின்சென்ட் படம் வரைய உட்கார்ந்தபோது, காஷெ கைகளை இப்படியும் அப்படியுமாய் ஆட்டியவாறு அவனைச் சுற்றி நடந்து கொண்டிருந்தார். அவர் கண்களில் ஆச்சரியம்! வின்சென்ட்டுக்குப் பின்னால் நின்று கொண்டு, அவன் வரைந்து கொண்டிருக்கும் படத்தைப் பார்த்தவாறு, வாய் வலிக்கும் அளவிற்கு என்னென்னவோ சொல்லிக்கொண்டே இருந்தார் காஷெ.
“ஆமா... அப்படித்தான்... ம்... இப்போ சரியா இருக்கு. கொஞ்சம் கவனம்... அந்த பூவுல கொஞ்சம் கவனம்... அந்த மரம் நல்லா வரலியே! ம்... இப்போ சரியாயிடுச்சு. ம்... அப்படி இல்ல... பார்த்து... பார்த்து... அந்தப் பூவுல கொஞ்சம் மஞ்சள் நிறத்தைக் கலந்துவிடுங்க...”
டாக்டர் காஷெயின் இந்தப் போக்கைச் சில நிமிடங்கள் பொறுமையாகச் சகித்துக் கொண்ட வின்சென்ட் சொன்னான்: “நண்பரே, இப்படி உணர்ச்சி வசப்படுறது உடல் நலத்துக்கு நல்லது இல்ல. ஒரு டாக்டரான உங்களுக்கு எப்பவும் மனசை அமைதியா வச்சிருக்கணும்னு நான் அறிவுரை சொல்லணுமா என்ன?”
ஆனால், காஷெயின் குணமே இதுதான். ஒரு ஆள் படம் வரைய ஆரம்பித்து, அதை அவர் பார்க்க நேர்ந்தால், அவரால் வெறுமனே எதுவும் பேசாமல் உட்கார்ந்திருக்க முடியாது.
ஆர்ளில் தான் வரைந்த பெண்ணின் ஓவியத்தை டாக்டர் காஷெக்குப் பரிசாகத் தந்தான் வின்சென்ட். அன்று மாலை முழுவதும் காஷெ அந்த ஓவியத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அதையே மீண்டும் மீண்டும் பார்த்தார். ஓவியத்தை விரலால் நீட்டி என்னவோ சொன்னார். அந்த ஓவியத்தில் இருந்த பெண்ணுடன் என்னவோ மெதுவான குரலில் பேசினார். படத்தைக் கையில் வைத்துக் கொண்டு தன்னைத் தானே ஏதோ கேள்விகள் கேட்டார். இரவு ஆன போது, ஆர்ளில் இருந்த அந்தப் பெண் முழுமையாக காஷெயை ஆக்கிரமித்து விட்டிருந்தாள்.
கொடுங்காற்றுக்குப் பிறகு நிலவும் அமைதியான குரலில் ஓவியத்தின் முன் அமர்ந்திருந்த காஷெ சொன்னார்:
“இப்படி ஒரு அழகில் இந்த அளவிற்கு ஒரு எளிமையா!”
“ஆமா...”
“உண்மையிலேயே இவள் ஒரு பேரழகிதான். இவளோட முகத்தில் இருக்கும் உணர்ச்சிகளைப் பாருங்க. இதைப்போல ஒரு உணர்ச்சி நிறைந்த ஒரு ஓவியத்தை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை...”