வான்கா - Page 86
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8807
“பார்த்தீங்களா, மேடம் தெனி... என்னை அவங்க ஏத்துக்கிட்டாங்க...” மார்க்காஸின் நினைவு அவன் மனதில் வலம் வந்தது: “நான் அவங்கள்ல ஒரு ஆளுன்னு அவங்களுக்குத் தெரியும். அவங்க முன்னாடி என்னை நம்பல. ஆனா, இப்போ நானும் அவங்க எல்லோரையும்போல ஒரு கரிக்கட்டை மனிதனாயிட்டேன். இனிமேல் தெய்வ வசனங்களை அவங்கக்கிட்ட நான் சொல்ல, அவங்க எளிதா என்னை அனுமதிப்பாங்க!”
மருத்துவமனை ஊழியர்கள் காலையில் வின்சென்ட்டைப் பார்த்தார்கள். அவன் பிரார்த்தனை மொழிகளையும், பைபிளில் இருந்த வரிகளையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு, தன் காதில் கேட்கும் ஏதோ சில ஒலிகளுக்கு பதில் கூறிக்கொண்டு, பைத்தியத்தின் நிலையில் அமர்ந்திருந்தான்.
மீண்டும் சுயநினைவு வந்தபோது, வின்சென்ட் டாக்டர் பெய்ரோனிடம் சொன்னான்: “இனியொரு முறை இந்த நோய் வந்து தாக்கினால், என்னை இங்க இருந்து என் தம்பி வெளியே கொண்ட போக உடனே அவனுக்கு நான் கடிதம் எழுதணும்.”
“உங்க விருப்பப்படி செய்யுங்க, வின்சென்ட்”- டாக்டர் பெய்ரோன் சொன்னார்:
“தியோ...” – வின்சென்ட் எழுதினான்: “நான் இந்த இடத்தை விட்டு உடனே புறப்படுவது நல்லது என்று நினைக்கிறேன். நிறைய ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்ய வேண்டி இருக்கின்றன. மீண்டும் என் உடல் நிலை பாதிக்கப்பட்டால், அதற்குக் காரணம் என்னுடைய நரம்புகளாக இருக்காது. இந்த மருத்துவமனையும், இதன் சூழ்நிலையும்தான். இங்கிருக்கும்போது மூச்சு விடவே கஷ்டமாக இருக்கிறது. இனியும் இரண்டோ மூன்றோ முறை இந்த நோய் வந்து என்னை தாக்கினால், நிச்சயம் அதுதான் என் வாழ்க்கையின் இறுதி ஆக இருக்கும்.”
“நீ சொன்ன டாக்டர் காஷெ எப்படி இருக்கிறார்? என்னை கவனிக்க அவரால் முடியுமா?”
டாக்டர் காஷெயைப் பார்த்ததாகவும், வின்சென்ட்டை ஏற்றுக்கொள்ள அவர் சந்தோஷத்துடன் சம்மதித்தார் என்றும் தியோ பதில் கடிதம் எழுதி இருந்தான். “அவர் ஒரு பெரிய திறமைசாலி, வின்சென்ட். அவர் மன நோய் மருத்துவர் மட்டுமல்ல- ஓவியம் போன்ற விஷயங்களிலும் நல்ல ஆர்வம் உள்ளவர். நீ அவரைப் பார்த்தால், நல்ல ஒரு மனிதரின் நேரடி மேற்பார்வையில் நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கும். வருவதற்கு தயார் நிலையில் நீ இருந்தால் உடனடியாக தந்தி மூலம் தெரியப்படுத்து. நான் அடுத்த வண்டியிலேயே ஸெய்ன்ட்ரெமிக்கு வருகிறேன்.”
இளவேனிற் காலம் வந்தது. தோட்டத்தில் பறவைகளின் ‘கீச் கீச்’ ஒலி கேட்க ஆரம்பித்தன. வின்சென்ட் கண்ணாடியைப் பார்த்தவாறு தன்னைத்தானே ஓவியமாகத் தீட்டினான். அவனின் ஒரு கண், கண்ணாடியிலும் இன்னொரு கண் காலண்டரிலும் இருந்தது.
அடுத்த பாதிப்பு மே மாதத்தில் உண்டானது. மீண்டும் அவன் காதில் இதற்கு முன்பு பழக்கமே இல்லாத சப்தங்கள் கேட்கத் தொடங்கின. இந்தத் தடவை ஒரு சர்ச்சில் மயக்கமடைந்து கீழே விழுந்து கிடந்தான் வின்சென்ட். மே மாதத்தில் பாதி நாட்கள் சென்றபிறகு, அவனின் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது.
வின்சென்ட்டை ஸெய்ன்ட்ரெமிக்கு வந்து நேரில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது தியோவின் விருப்பம். ஆனால், மருத்துவமனை ஊழியர் ஒருவரின் உதவியுடன் பயணம் செய்ய தீர்மானித்திருந்தான் வின்சென்ட். அவன் தியோவிற்கு கடிதம் எழுதினான்.
“பிரிய தியோ,
நான் ஒரு பெரிய நோயாளியோ, மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மிருகமோ அல்ல. அப்படி இல்லை என்பதைக் காட்ட கொஞ்சம் எனக்கு கால அவகாசம் கொடு. இங்கிருந்து புறப்பட்டு வந்து, ஒவேரில் ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சொல்லப்போனால் என்னை நானே சோதித்துப் பார்த்துக் கொள்கிறேன். அதாவது – இன்னொரு வாய்ப்புக்கு என்னை நானே உட்படுத்திக் கொள்கிறேன். இந்தப் பைத்தியக்கார மருத்துவமனையை விட்டு வெளியே வந்தால், ஒரு சாதாரண மனிதனாக என்னால் இருக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் கடிதத்தை வைத்து ஒவேர் ஒரு அமைதியான- அதே சமயம் அழகான இடம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டாக்டர் காஷெயின் உதவியுடன் என் முயற்சியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். தாராஸ்கான் தாண்டியதும் தந்தி அடிக்கிறேன். எனக்காக கார்தெல்யோனில் காத்திருக்கவும். அனேகமாக சனிக்கிழமை இங்கிருந்து புறப்படுவேன். ஞாயிற்றுக்கிழமை உன்னுடனும், ஜோஹன்னாவுடனும், குழந்தையுடனும் நான் இருப்பேன்.”
¤ ¤ ¤
ஓவேர்
வின்சென்ட் வீட்டிற்கு வரும்வரை தியோவிற்கும் ஜோஹன்னாவிற்கும் மனதில் அமைதியே இல்லை. வண்டியை விட்டு இறங்கிய வின்சென்ட் துள்ளிக் குதித்தவாறு படிகளில் ஏறினான். தியோ அவனுக்குப் பிறகு நடந்தான். ஜோஹன்னா ஒரு நோயாளியைத்தான் உண்மையிலேயே எதிர்பார்த்தாள். ஆனால், தன்னை அன்புடன் கட்டிப் பிடித்தவன் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்ட மனிதன் என்பது தெரிந்தபோது அவளுக்கே ஆச்சரியம் உண்டானது. வின்சென்ட் நல்ல சுறுசுறுப்புடன் இருந்தான். அவனின் உதட்டில் தவழும் புன்னகை, தெளிவான சிந்தனை கொண்ட முகபாவம் – இவற்றைப் பார்த்தபோது வின்சென்ட்டைப் பற்றி அவள் மனதில் கற்பனை பண்ணி வைத்திருந்த கருத்தே முற்றிலுமாக மாறிப்போனது.
“இவருக்கு எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியலியே! நல்லாத்தானே இருக்காரு!”- ஜோஹன்னா சொன்னாள்: ஆனால், அவளுக்கு அந்தக் காதைப் பார்க்க தைரியம் இல்லை.
ஜோஹன்னாவின் கையைப் பற்றிக் கொண்டு வின்சென்ட் சொன்னான்: “தியோ நீ ஒரு அருமையான மனைவியைத் தேர்ந்தெடுத்திருக்கே!”
“நன்றி, வின்சென்ட்...”- தியோ சிரித்தான்.
ஜோஹன்னாவிற்கு அன்னா கார்ணீலியாவின் முகச்சாடை இருந்தது. அதே அமைதியே வடிவமான முகம். அதே கண்கள். சாதாரணமாக இருந்தால்கூட வசீகரமான தோற்றம். இளம் தவிட்டு நிறத்தில் தலைமுடி. அது நெற்றிப் பக்கத்திலிருந்து பின்னோக்கி ஒழுங்காக வாரப்பட்டிருந்தது.
தியோ குழந்தை படுத்திருந்த அறைக்குள் வின்சென்ட்டை அழைத்துப் போனான்.
தியோ வின்சென்ட்டைப் பார்த்தான். வின்சென்ட்டும் தியோவையே பார்த்தான். இரண்டு பேர் கண்களிலும் கண்ணீர், ஜோஹன்னா எந்த பதிலும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
“ஜோஹன்னா... இவனை இப்படி வலை வச்சு மூடக்கூடாது...”- தொட்டிலுக்கு நேராக விரலை நீட்டி வின்சென்ட் சொன்னான். ஜோஹன்னா மெதுவாக கதவை அடைத்தாள். வின்செட்டின் மனதில் இனம் புரியாத வேதனை. இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறபோது தன்னுடையது என்று கூற இந்த உலகில் யாரும் இல்லையே!
வின்சென்ட் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை தியோவால் புரிந்து கொள்ள முடிந்தது: “இப்பக்கூட ஒண்ணும் இல்ல, வின்சென்ட். உன்னோட நல்லது, கெட்டது, சுகம், துக்கம் எல்லாத்தையும் பங்கு போட்டுக்கிறதுக்கு உனக்கும் ஒரு மனைவி வரத்தான் போறா, பாரு...”