வான்கா - Page 83
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8808
என்னை முட்டாளாக்கணும்னு நினைக்காதே. நீ யார்னு எனக்கு நல்லாவே தெரியும். ரகசிய போலீஸ்தானே! சரி... சரி... என்னை வேணும்னா சோதனை பண்ணிக்கோ, நான் அந்தப் பணத்தைத் திருடல. அந்த ஆள் அவனாவே செத்துப் போனான். போ... கடவுள் சத்தியமா சொல்றேன். நான் அந்தக் கொலையைச் செய்யல... என்னை பேசாம விட்டுடு...”
வின்சென்ட் வேகமாக எழுந்து திரைச் சீலையை நீக்கி பார்த்தான். சுமார் இருபத்து மூன்று வயது மதிக்கக் கூடிய ஒரு இளைஞன்!அணிந்திருந்த ஆடையைப் பற்களால் கடித்து கிழித்துக் கொண்டிருந்தான். வின்சென்ட்டைப் பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்து, அவனைப் பார்த்து கை கூப்பினான்.
“என்னைக் கொண்டு போகாதீங்க. நான் அதைச் செய்யல. நான் ஒரு வக்கீல்... உங்களோட கேஸை நான் பாக்குறேன். என்னைக் கைது பண்ணக் கூடாது. நான் கொலை செய்யல. என் கையில பணம் இல்லைன்னு நான்தான் சொன்னேனே! இந்தா பாருங்க...”
ஒரு வகையான ஆவேசத்துடன் அந்த இளைஞன் படுக்கையைக் கீறத் தொடங்கினான். அவன் வாய் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தது. வின்சென்ட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. மற்றவர்களெல்லாம் எந்தவிதக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
வின்சென்ட் அடுத்த அறைக்கு ஓடி, அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஆளைத் தட்டி எழுப்பினான்.
அந்த ஆள் மெதுவாகக் கண்ணைத் திறந்தான். அவன் வாயின் ஓரத்தில் எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது.
“சீக்கிரமா எழுந்திருங்க.” – வின்சென்ட் அவசரப்படுத்தினான். “அந்த ஆளைப் பிடிச்சு வைக்கிறதுக்கு ரெண்டு பேர் வேணும்.”
அவன் தோளை யாரோ தொட்டார்கள். வின்சென்ட் திடுக்கிட்டு பின்னால் திரும்பினான். வயதான ஒரு மனிதர் அங்கு நின்றிருந்தார்.
“இந்த ஆளை எழுப்பி ஒரு பிரயோஜனமும் இல்லை”- பின்னால் நின்றிருந்த வயதான ஆள் சொன்னார்: “இவனுக்கு மந்த புத்தி. இங்க வந்த பிறகு இவன் பேசினதே இல்ல... வா... நாம அவனை என்னன்னு பார்ப்போம்.”
படுக்கையில் ஒரு பெரிய குழியை உண்டாக்கி அதற்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான் அந்த இளைஞன். வின்சென்ட்டைப் பார்த்ததும் ஏதோ முணுமுணுக்க ஆரம்பித்தான். தன் கையால் வின்சென்ட்டின் நெஞ்சில் ஓங்கி இடித்தான்.
“ஆமா... நான்தான் கொன்னேன். அவன்கிட்ட இருந்த பணத்துக்காக. இங்க பார்... நான் பணப் பையை இதற்கு அடியிலதான் ஒளிச்சு வச்சிருக்கேன்... எடுத்துத் தர்றேன். அந்த ரகசிய போலீஸை என் பின்னாடி வரச் சொல்லாதீங்க. நான் கொன்னு இருந்தாக்கூட, நான் தப்பிச்சாகணும். இதைப் போல எத்தனையோ கேஸ்கள். இதோ நான் பணத்தை எடுத்துத் தர்றேன்...”
“இவனோட அந்தக் கையைப் பிடிச்சுக்கோ...” – வயதான ஆள் வின்சென்ட்டிடம் சொன்னார்.
இரண்டு பேரும் சேர்ந்து அந்த இளைஞனைப் படுக்கையில் படுக்க வைத்தார்கள். அவன் அதற்குப் பிறகும் ஒரு மணி நேரம் எண்னென்னவோ மனம் போனபடியெல்லாம் பேசிக் கொண்டிருந்தான் பேசிப் பேசி களைப்பாகிப் போனதாலோ என்னவோ, சில நிமிடங்களில் தூங்கியும் போனான்.
“இவன் சட்டம் படிச்சுக்கிட்டிருக்கான்”- வயதான ஆள் சொன்னார்: “அதிகம் படிச்சதால தலை சூடாயிடுச்சு. பத்து நாளுக்கு ஒரு முறை இவனுக்கு இப்படியொரு பிரச்னை. ஆனா, யாருக்கும் தொந்தரவு கொடுக்குறது இல்ல... குட் நைட் ம்ஸ்யெ...”
அந்த மனிதர் போய் படுத்தார். வின்சென்ட் ஜன்னல் அருகில் போய் நின்றான். பொழுது விடிய இன்னும் நேரம் இருந்தது. ஆகாயத்தின் ஒரு மூலையில் காலை நேர நட்சத்திரம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் தாபினி வரைந்த ஓவியம் ஞாபகத்தில் வந்தது. கம்பீரமும் அதே நேரத்தில் அமைதியும் நிறைந்த ஆகாயம். அதற்குக் கீழே வானத்தை வெறித்துப் பார்த்தவாறு இருக்கும் சாதாரண மனிதர்களின் இதய வேதனைகள்!
¤ ¤ ¤
மறுநாள் வின்சென்ட் தோட்டத்தில் இருந்த கல்பெஞ்சில் காட்டு ரோஜாப் பூக்களுக்குப் பக்கத்தில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தான். மனதில் பயங்கரமான விரக்தி வேரோடி விட்டிருந்தது. அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் மரக்கட்டை போல அமர்ந்திருந்தான் அவன்.
திரும்பி வேகமாக அறையை நோக்கி நடந்தான். உள்ளே ஒரு நாயின் ஓலம் கேட்டது! சில வினாடிகளில் அது ஓநாயின் ஓலமாக மாறியது!
வின்சென்ட் உள்ளே நுழைந்து பார்த்தான். ஒரு மூலையில் முதல் நாள் இரவில் பார்த்த வயதான மனிதர் சுவரைப் பார்த்து உட்கார்ந்திருந்தார். தலையை அவ்வப்போது உயர்த்தி மிருகம் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி அவர் நாயைப்போல ஓலமிட்டுக் கொண்டிருந்தார்.
ஓநாயைப் போல ஓலமிட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர் சில நிமிடங்களில் வேறு ஏதோ ஒரு காட்டு மிருகத்தைப் போல கத்த ஆரம்பித்தார்.
“நான் ஒரு மிருகக் காட்சி சாலைக்குள்ள வந்து மாட்டிக்கிட்டேனே!”- வின்சென்ட் தனக்குள் சிந்தித்தான்.
மற்ற ஆட்கள் அசைவே இல்லாமல் அமைதியாக இருந்தார்கள். அந்த மனிதரின் சத்தம் இன்னும் பலமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
“ஏதாவது செய்தே ஆகணும்...”
வின்சென்ட் மெதுவான குரலில் சொன்னான். முதல் நாள் இரவில் பார்த்த அந்த இளைஞன் வின்சென்ட்டைத் தடுத்தான். “அவரைச் சும்மாவிட்டுடுங்க. தொட்டா அவருக்குக் கோபம் வந்துடும். கொஞ்ச நேரத்துல அவரே சரியாயிடுவார்.”
அன்று இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, உடலின் இடது பக்கம் செயலிழந்து போன இன்னொரு இளைஞன் ஒரு கத்தியைக் கையில் எடுத்தவாறு துள்ளிக் குதித்தான். வலது கையால் கத்தி முனையைத் தனது நெஞ்சில் வைத்து அவன் சொன்னான்: “நேரமாயிடுச்சு... நான் சாகப்போறேன்...”
வலது பக்கத்தில் இருந்த இன்னொரு ஆள் மெதுவாக எழுந்து சென்று, அவனின் கையைப் பிடித்தார். “வேண்டாம் ரெய்மோன்... இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆச்சே!”
“இன்னைக்குத்தான் நான் சாகணும். எனக்கு வாழ விருப்பமில்லை... என் கையை விடுங்க, நான் சாகப்போறேன்.”
“நாளைக்கு... ரெய்மோன், நாளைக்குச் சாகலாம். இன்னைக்கு நாள் நல்லா இல்ல...”
“கையை விடுங்க. கத்தியை நான் கழுத்துக்குள்ள நுழைக்கப் போறேன். சங்கை அறுக்கப்போறேன். நான் செத்தே ஆகணும்.”
“எனக்குத் தெரியும். ஆனா, இன்னைக்கு வேண்டாம்... இப்ப வேண்டாம்”
ரெய்மோனின் கையில் இருந்த கத்தியைப் பிடுங்கிய அந்த ஆள் அவனை மேல்ல அறைக்குள் நடத்திக் கொண்டு போனார். ரெய்மோன் ‘ஆ ஊ’ என்று கத்தினான், அழுதான்.
அருகில் இருந்த ஆளிடம் வின்சென்ட் “என்ன விஷயம்?” என்று கேட்டான்.