வான்கா - Page 80
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8808
வின்சென்ட் மீண்டும் தொப்பி அணியாமல் வயல்களில் அலைந்து திரிந்தான். நிஜங்களின் வனப்பில் தன்னை இழந்து நின்றான். கொடுங்காற்றின் உக்கிரத்தில் சிக்கினான். இருண்டு போயிருக்கும் ஆகாயத்தின் பாதிப்பால் மூச்சுவிட முடியாமல் நின்றான். சூரியகாந்திப் பூக்களின் அழகில் தன்னை இழந்து சிலை என நின்றிருந்தான். உணர்ச்சி வசப்பட்டதால், பல நேரங்களில் அவனின் நரம்புகள் முறுக்கேறி புடைத்து நின்றன. ஒழுங்காக சாப்பிடாமல் இருந்தான். காப்பியும், அப்ஸிந்த்தும், புகையிலையும் அவனுக்குள் போய்க் கொண்டிருந்தன. இரவில் உறக்கமே இல்லை என்றாகிவிட்டது. சிவந்து போயிருந்த கண்களில் பல்வேறு வர்ணங்களும், தாண்டவமாடின. ஈஸலைத் தன்தோளில் வைத்துக் கொண்டு வயல் வெளிகளில் சுற்றித் திரிந்தான். முப்பத்தேழு ஓவியங்கள் வரைந்து முடித்தான்.
ஒருநாள் அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. எதுவுமே பேசாமல் மவுனமாக அமர்ந்தவாறு எதிரில் இருந்த சுவரையே வெறித்துப் பார்த்தான். அவன் காதில் மீண்டும் பழக்கமே இல்லாத ஒலிகள் கேட்டன. ரெஸ்ட்டாரெண்டுக்குப் போய், ‘சூப்’ கேட்டான். பரிசாரகன் சூப் கொண்டு வந்து வின்சென்ட்டுக்கு முன்னால் வைத்தான். திடீரென்று வின்சென்ட் என்ன நி்னைத்தானோ, வேகமாக எழுந்து சூப் இருந்த கிண்ணத்தைக் காலால் எட்டி உதைத்தான்.
அந்த கிண்ணம் துண்டு துண்டாகிச் சிதறியது.
“நீங்க எனக்கு விஷம் தரப் பாக்குறீங்க”- வின்சென்ட் அலறினான்: “இந்த சூப்ல விஷம் கலந்திருக்குது!”
துள்ளிக் குதித்த வின்சென்ட் மேஜையைத் தட்டிவிட்டான். அறையில் அமர்ந்திருந்த சிலர் உயிருக்குப் பயந்து ஓடினார்கள். வேறு சிலர் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் செயலற்று நின்றுவிட்டனர்.
“நீங்க எனக்கு விஷத்தை ஊற்றிக் கொடுத்து கொல்லப் பாக்குறீங்க. இந்த சூப்ல விஷம் கலந்திருக்கு.”
அடுத்த சில நிமிடங்களில் இரண்டு போலீஸ்காரர்கள் வந்து வின்சென்ட்டை மருத்துவமனைக்கு இழுத்துக் கொண்டு போனார்கள்.
இருபத்து நான்கு மணி நேரம் கழித்து வின்சென்ட் சாதாரண நிலைக்கு வந்தான். டாக்டர் ரேயுடன் தனக்கு நேர்ந்த மாற்றத்தைப் பற்றி விவாதித்தான். ஒவ்வொரு நாளும் வெளியே கொஞ்சம் சுற்றிய பிறகு, சாப்பிடவும் உறங்கவும் மருத்துவமனைக்கு அவன் திரும்புவான். இடையில் மனதில் என்னவெல்லாமோ வேதனை தோன்றும். இடையில் சில நேரங்களில் காலத்தைக் கடந்து உண்மையைத் தான் எட்டிப்பிடித்திருப்பதுபோல் அவன் மனதில் தோற்றம் கிடைக்கும்.
டாக்டர் ரே அவனை ஓவியம் வரைய அனுமதித்தார். ஒரு பீச் மரத்தோட்டத்தையும், ஆலிவ் மரத்தோட்டத்தையும் வின்சென்ட் ஓவியங்களாக வரைந்தான்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு அவன் வீடு திரும்பினான். வீட்டுக்குப் பக்கத்தில் வசிப்பவர்கள் எல்லோரும் அவனுக்கு எதிராகத் திரும்பினார்கள். ஓவியக்கலை, மனிதனைப் பைத்தியம் பிடிக்கச் செய்துவிடும் என்ற கருத்தை அவர்கள் எல்லோரும் கொண்டிருந்தனர். வின்சென்ட் தெருவில் நடந்து செல்கிறபோது, அவனையே முறைத்துப் பார்க்கும் அவர்கள், அவனை விட்டு விலகி நின்றார்கள்.
ஒரு ஹோட்டலுக்குள்ளும் வின்சென்ட்டால் நுழைய முடியவில்லை.
ஆர்ளில் இருக்கும் குறும்புத்தனமான பையன்கள் வின்சென்ட்டின் வீட்டைச் சுற்றி நின்று கொண்டு கூவினார்கள்.
“ஃபுரு... ஃபுரு... இன்னொரு காதும் அறுபடப் போகுது...”
வின்சென்ட் வாசல் கதவை இறுக அடைத்தான்.
மூடப்பட்ட கதவு இடுக்கு வழியே பையன்களின் குரல்கள் உள்ளே வந்தன.
“ஃபுரு... ஃபுரு... பைத்தியம்... பைத்தியம்...”
வின்சென்ட்டைப் பற்றி அவர்கள் ஒரு பாட்டு தயார் பண்ணி, ஜன்னலுக்குக் கீழே நின்று உரத்த குரலில் பாடினார்கள்.
“ஃபுரு, ஃபுரு, ஃபுரு, ஃபுரு
அறுந்த காது! அறுந்த காது!
அறுந்த காதை வச்சிக்கிட்டு
எப்படிக் கேட்ப சத்தத்தை”
அந்தப் பையன்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்றெண்ணிய வின்சென்ட், வெளியே பார்த்தான்.
ஆனால், போக வழியே இல்லை. அந்தக் குறும்புக்காரப் பையன்கள் கூக்குரலிட்டுக் கொண்டு வெளியிலேயே நின்றிருந்தார்கள்.
நாட்கள் ஆக ஆக பையன்கள் கூட்டம் அதிகரித்தது. வின்சென்ட் காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டான். ஏற்கனவே வரைந்த ஓவியங்களைப் பார்த்து வரைய முற்பட்டான். பையன்களின் சத்தம் அறைக்குள் நுழைந்து, அவனின் தலைக்குள் புகுந்து அவனை என்னவோ செய்தது.
பையன்களுக்கு இன்னும் அதிக தைரியம் வந்தது. சில சிறுவர்கள் குரங்குகளைப் போல ஜன்னலில் ஏறி வின்சென்ட்டைப் பார்த்துக் கூறினார்கள்.
“ஃபுரு, இன்னொரு காதை அறுத்து எங்களுக்குத் தா”
அவர்கள் கல்லையும், மண்ணையும் எடுத்து அவன் மேல் எறிந்தார்கள். கீழே கூடிய கூட்டம் அவர்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தந்தது.
“ஃபுரு, ஃபுரு, ஃபுரு, ஃபுரு
அறுந்த காது! அறுந்த காது!
அறுந்த காதை வச்சிக்கிட்டு
எப்படி கேட்ப சத்தத்தை”
வின்சென்ட் ஈஸலின் முன்னால் வந்து ஆடியவாறு நின்றான். மூன்று குரங்குச் சேட்டை பையன்கள் ஐன்னலில் அமர்ந்து பாட்டுப் பாடினார்கள். வின்சென்ட் அவர்களை அடிக்க கையை ஓங்கினான். அவர்கள் பயந்துபோய் கீழே இறங்கினார்கள். மக்கள் கூட்டம் அவனைப் பார்த்து கூக்குரலிட்டது. வின்சென்ட் ஜன்னல் அருகில் வந்து அவர்களைப் பார்த்தான்.
ஒரு ஆயிரம் கறுப்பு பறவைகள் ஆகாயத்தில் இருந்து கீழே இறங்கின. அவற்றின் இருண்டுபோன சிறகடியில் வின்சென்ட்டால் மூச்சுவிட முடியவில்லை.
வேகமாக ஓடிய வின்சென்ட் ஜன்னல் மேல் ஏறி நின்றான்.
“போங்க இங்கிருந்து...” – வின்சென்ட் அலறினான்: “பிசாசுகளே, போங்க. தெய்வமே, என்னை அமைதியா இருக்க விடு...!”
“ஃபுரு, ஃபுரு...!”
கீழே ஒரே ஆரவாரம். நேரம் செல்லச் செல்ல அது கூடியது.
“ஃபுரு, காதை அறுத்து கீழே எறி!”
“போறீங்களா இல்லியா? நான் சொல்றது கேட்கல...? என்னை தயவு செய்து தொந்தரவு செய்யாதீங்க...”
வின்சென்ட் கைகழுவும் பீங்கான் பாத்திரத்தை மேஜையிலிருந்து எடுத்து அவர்கள் மேல் கோபத்துடன் எறிந்தான். அது கீழே இருந்த கற்களில் மோதி துண்டு துண்டாக உடைந்தது. அதற்குப் பிறகு அவன் கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் கண் மண் தெரியாமல் வீசத் தொடங்கினான். அந்தக் கட்டிடத்தின் சுவர்களில் அந்தப் பொருட்கள் மோதி சுவர்கள் அலங்கோலமாயின. தன்னுடைய நாற்காலி, ஈஸல், கண்ணாடி, மேஜை, பெட்ஷீட், சுவரில் தொங்கவிட்டிருந்த சூரியகாந்தி ஓவியங்கள் எல்லாவற்றையும் தன்னைக் கிண்டல் பண்ணிய பையன்கள் மீது வீசி எறிந்தான். அவன் வீசி எறிந்த ஒவ்வொரு பொருளையும் ஒன்றன்பின் ஒன்றாக வாங்குவதற்கு அவன் எவ்வளவு கஷ்டப்பட வேண்டி வந்தது! இதற்காக அவன் எவ்வளவு தியாகம் பண்ணினான்! இந்தப் பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து அவன் தன் வாழ்க்கையை அமைக்க எவ்வளவு சிரமப்பட்டான்!
எல்லாப் பொருட்களையும் வீசி எறிந்தபிறகு அறை காலியாக கிடந்தது. வின்சென்ட் ஜன்னலின் அருகில் போய் நின்றான். அவனின் உடலில் இருந்த ஒவ்வொரு நரம்பும் துடித்தது. அப்படியே மயங்கி கீழே சாய்ந்தான். அவனின் தலை, அருகில் இருந்த திண்டில்போய் மோதியது.