வான்கா - Page 77
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
காகின் வின்சென்ட்டை ஓவியமாக வரைந்தார். அந்த ஓவியத்தைப் பார்த்த வின்சென்ட்டுக்கு, காகின் தன்னிடம் எதைக் காண்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. “இது நான்தான். ஆனால், பைத்தியமான நான்” – தனக்குள் வின்சென்ட் கூறிக்கொண்டான்.
அன்று மாலை நேரத்தில் இருவரும் கஃபேயைத் தேடிப் போனார்கள். திடீரென்று என்ன நினைத்தானோ, வின்சென்ட் தன் கையிலிருந்த அப்ஸிந்தை எடுத்து காகினின் தலையில் ஊற்றினான். காகின் குனிந்து நிமிர்ந்து வின்சென்ட்டைத் தோள் மேல் தூக்கியவாறு வேகமாக நடக்க ஆரம்பித்தார். கட்டிலில் ‘பொத்’தென்று அவனைப் போட்டார். அடுத்த நிமிடம் – எது பற்றிய நினைவும் இல்லாமல் வின்சென்ட் உறங்கிப் போனான்.
மறுநாள் காலையில் வின்சென்ட் சொன்னான்: “நேத்து ராத்திரி உங்களை ஏதோ தொந்தரவு பண்ணிட்டேன்றது மாதிரி ஒரு ஞாபகம். என்னை மன்னிச்சிடுங்க.”
“மன்னிக்கிறேன். ஆனா, அப்படி ஒரு சம்பவம் இனி ஒரு தடவை நடக்கக் கூடாது. சில நேரங்கள்ல என்னையே என்னால கட்டுப்படுத்த முடியாது. நான் திரும்பப் போகப் போறேன்னு தியோவுக்கு கடிதம் எழுதப் போறேன்!”
“முடியாது... முடியாது... நிச்சயம் போக முடியாது. நம்மளோட மஞ்சள் நிற வீட்டை விட்டு நீங்க போறதா? இங்கே இருக்கிற எல்லாமே உங்களுக்காக நான் தயார் பண்ணி வச்சது...”
காகினைப் பொறுத்தவரை அவர் கட்டாயம் போக வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். ஆனால், வின்சென்ட்டோ காகினைப் போக விடுவதாக இல்லை. போகக் கூடாது என்று அவரைப் பார்த்து கெஞ்ச ஆரம்பித்து விட்டான் வின்சென்ட். அவரிடம் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சினான். புகழ்ந்தான், கோபத்துடன் திட்டினான், சபித்தான், பயமுறுத்தினான், அழுதான்! இரவு வந்தபோது, காகின் உண்மையிலேயே களைப்பாகி விட்டார். தற்சமயத்திற்கு வின்சென்ட்டிற்கு அவர் கீழ்படிந்தார்.
நண்பர்கள் இருவர்களுக்குமிடையே மனரீதியான போராட்டம் – இரவு முழுக்க காகினால் உறங்கவே முடியவில்லை. பொழுது புலரும் நேரத்தில் இலேசாக அவர் கண்ணயர்ந்தார்.
அதை ஏதோ சாதாரணமாக உணர்ந்த காகின் திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்தார். அப்போது கட்டிலுக்குப் பக்கத்தில் நெருப்பு பறக்கும் விழிகளுடன் குனிந்து நின்றிருந்தான் வின்சென்ட்.
“வின்சென்ட்... உனக்கு என்ன ஆச்சு?”- காகின் மிகவும் அக்கறையுடன் கேட்டார்.
ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல் திரும்ப நடந்தான் வின்சென்ட். போன வேகத்தில் படுக்கையில் விழுந்தான். உறங்கினான்.
அடுத்த நாளும் இதே சம்பவம் தொடர்ந்தது. காகின் உறங்கிக் கொண்டிருந்தபோது, கட்டிலுக்கு அருகில் நின்றிருந்தான் வின்சென்ட்.
“வின்சென்ட், போய் படு...”
வின்சென்ட் திரும்ப நடந்தான்.
நான்காம் நாள் மாலையில் காகினிடம் வின்சென்ட், “நாம பார்க் வரை நடந்து போயிட்டு வரலாம். சில விஷயங்கள் உங்கக்கிட்ட நான் பேச வேண்டியதிருக்கு” என்றான்.
“இங்கேயே நீ சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லலாமே!”
“சரியா வராது. எனக்கு ஒரு இடத்துல உட்கார்ந்துக்கிட்டு விஷயங்கள் பேச வராது. நடந்துக்கிட்டே பேசணும்.”
“சரி அப்படியே ஆகட்டும்.”
பார்க்கில் ஸைப்ரஸ் மரங்களின் உச்சி கொடுங்காற்றின் ஆக்கிரமிப்பில் சிக்கி வளைத்து நிலத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது.
“என்ன நீ சொல்லப்போறே?”- காகின் கேட்டார்.
“எனக்கு ஒரு பெரிய ஆசை”
“உனக்கு அப்படி என்ன பெரிய ஆசை? எங்கே சொல்லு... பார்ப்போம்!”
“ஓவிய நண்பர்களான நாம எல்லோரும் ஒண்ணு சேர்ந்து கான்வாஸில் வரையணும். ஒரே ஒரு ஓவியம். ஸெரா வெட்ட வெளியை – காகின் இயற்கைப் பின்புலத்தை – ஸெஸான் அருகில் இருக்குற பல விஷயங்களை – லாத்ரெக் மனித உருவங்களை – நான் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும். எல்லாரும் ஒண்ணு சேர்ந்து ஒரு மகத்தான கலைக்கு உருவம் கொடுக்குறோம். என்னோட ஆசையைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”
இதைக் கேட்டதும் காகின் உரத்த குரலில் சிரித்தார்.
“பிரிகேடியர், இதுவரை நான் கேள்விப்பட்ட ஆசைகளிலேயே பெரிய ஆசை இதுதான். நான் கொஞ்சம் சிரிச்சிக்கட்டா?”
காகின் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தார். சிரித்து முடித்ததும் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
வின்சென்ட் சிலை என நின்றிருந்தான்.
ஆகாயத்தில் இருந்து ஒரே சமயத்தில் ஆயிரம் கறுப்பு நிற பறவைகள் கீழே பறந்து வந்து வின்சென்ட்டைச் சுற்றின. அவற்றின் கரகரப்பான சத்தத்தை அவனால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. முடியிலும், மூக்கிலும், காதுகளிலும், கண்ணிலும், வாயிலும் கூட அவை பறந்தன. அந்தப் பறவைகளின் சிறகடிக்குள் அவனே மூழ்கிப் போனான்.
காகின் திரும்பி வந்தார்: “நாம ரெண்டு பேரும் லூயியோட இடத்துக்கு போகலாம். உன்னோட இந்த பிரமாதமான ஆசையை நாம கொண்டாட வேண்டாமா?”
வின்சென்ட் காகினுக்குப் பின்னால் எதுவுமே பேசாமல் நடந்தான்.
காகின் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு மேல் அறைக்குள் நுழைந்தார்.
ரக்கேல் வின்சென்ட்டின் மடியில் வந்து அமர்ந்தாள்.
“என் கூட வர்றியா கிறுக்கா?”
“இல்ல”
“ஏன்?”
“பணமில்ல...”
“உன்னோட காதைக் கொடுத்தாக்கூட போதும்”
“சரி...”
சிறிது நேரம் சென்ற பிறகு காகின் திரும்பி வந்தார். இரண்டு பேரும் வீட்டிற்குத் திரும்பினார்கள். அப்போது ஒருவரை ஒருவர் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. இரவு உணவை படுவேகமாகச் சாப்பிட்டுவிட்டு, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் காகின் வெளியே புறப்பட்டார்.
¤ ¤ ¤
லெமார்ட்டின் தெருவில் காகின் நடந்து செல்லும்போது, வேகமாக ஒரு ஆள் ஓடி வரும் காலடி சத்தம் கேட்டது.
அவ்வளவுதான்-
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் காகின்.
கையில் நன்கு கூர்மையாக தீட்டிய ஒரு சவரக் கத்தியுடன் நின்றிருந்த வின்சென்ட், காகினுக்கு நேராகக் குதித்தான்.
காகின் அசையாமல் நின்றவாறு, வின்சென்ட்டின் கண்களையே பார்த்தார்.
இரண்டடி முன்னால் வந்து வின்சென்ட் நின்றான். அவன் கண்களில் நெருப்பு!
பின் என்ன நினைத்தானோ, அடுத்த நிமிடம் தலையைக் குனிந்து கொண்ட வின்சென்ட், திரும்பி வீட்டை நோக்கி ஓடினான்.
காகின் ஒரு ஹோட்டலில் வாடகைக்கு அறை எடுத்தார். கதவை நன்றாக உள்ளே பூட்டிவிட்டு, நிம்மதியாக உறங்கத் தொடங்கினார்.
வின்சென்ட் வீட்டை அடைந்தான். சிவப்பு வர்ண படிகளில் ஏறி படுக்கை அறைக்குள் நுழைந்தான். பெரிய கண்ணாடியை எடுத்து டாய்லெட் மேஜைமேல் சுவரில் சாய்த்து வைத்தான்.
கண்ணாடியில் அவனின் சிவந்த கண்கள் தெரிந்தன.
முடிந்துவிட்டது. வாழ்க்கை முடிந்துவிட்டது. கண்ணாடியில் இருந்த முகத்தில் அது தெரிந்தது.
தப்பிப்பதே நல்லது.
கையில் இருந்த சவரக் கத்தியை உயர்த்தினான். தொண்டையில் கத்தியின் முனை பட்டபோது, ரோமங்கள் சிலிர்த்து நின்றன.