வான்கா - Page 81
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8808
வின்சென்ட்டிற்கு எதிராக ஒரு புகார் மது தயார் செய்யப்பட்டது. அதில் லெமார்ட்டின் பகுதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாய் தொண்ணூறு பேர் சேர்ந்து கையெழுத்துப் போட்டிருந்தனர்.
அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது-
“திரு.மேயர் அவர்களுக்கு
கீழே கையெழுத்துப் போட்டிருக்கும் நாங்கள் அனைவரும் ஆர்ள் நகரத்தில் வசிப்பவர்கள். எண்:2, லெமார்ட்டின் பகுதியில் வசிக்கும் வின்சென்ட் வான்கா, ஒரு ஆபத்தான- பைத்தியம் பிடித்த மனிதன் என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். இனிமேலும் அந்த ஆள் இங்கு வசிப்பதை நாங்கள் விரும்பவில்லை.
உடனடியாக நீங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த பைத்தியம் பிடித்த மனிதனை அதற்காக இருக்கும் இடத்தில் அடைத்து வைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.”
ஆர்ளில் மிக விரைவில் தேர்தல் வருவதாக இருந்தது. ஆதலால், வாக்களிக்க இருக்கும் மக்களின் ஆணையை, நிராகரிக்க மேயர் விரும்பவில்லை. புகார் மனு கிடைத்த அடுத்த நிமிடமே போலீஸ் சூப்பிரெண்டை அழைத்து வின்சென்டைக் கைது செய்யும்படி உத்தரவிட்டார்.
காவல்துறை அதிகாரிகள் சென்றபோது வின்சென்ட் ஜன்னலுக்கு கீழே தரையில் விழுந்து கிடந்தான். அவனை அப்படியே அள்ளிப்போட்டு சிறைக்குக் கொண்டு போனார்கள். அவனை அங்குள்ள ஒரு அறைக்குள் அடைத்து பூட்டுப் போட்டார்கள். அந்த அறை வாசலில் ஒரு காவலாளியும் போடப்பட்டான்.
வின்சென்ட் சுய உணர்வுக்கு வந்தபோது, டாக்டர் ரேயை தான் பார்க்க விரும்புவதாக சொன்னான். ஆனால், அவனின் கோரிக்கையை பூர்த்தி செய்ய அவர்கள் மறுத்துவிட்டார்கள். தியோவிற்குக் கடிதம் எழுதுவதற்காக பென்சிலும் பேப்பரும் கேட்டான். அதையும் தர அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.
கடைசியில் டாக்டர் ரேயே ஒரு நாள் சிறைக்கு வந்தார்.
“வின்சென்ட்... கொஞ்சம் பொறுமையா இருங்க...”- அவர் சொன்னார். “இல்லாட்டி, நீங்க ஒரு பயங்கரமான பைத்தியம் அது இதுன்னு குற்றம் சுமத்தி உங்களை ஒரு வழி பண்ணிடுவாங்க... அதோட உங்க வாழ்க்கையே முடிஞ்சிடும். உணர்ச்சிவசப்பட்டு நீங்க ஏதாவது பண்ணினா நிலைமை இன்னும் மோசமாயிடும். நான் உங்க தம்பிக்கு கடிதம் எழுதுறேன். எவ்வளவு சீக்கிரம் இங்கேயிருந்து உங்களை வெளியேத்த முடியுமோ, பார்க்குறேன்...”
“டாக்டர்... நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். தியோவை இங்க வரவைக்க வேண்டாம். அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்குறதா இருக்கு. தேவையில்லாம அவன் மனசு கஷ்டப்படக் கூடாது.”
“தியோவை நான் வரவேண்டாம்னு சொல்லிடுறேன். நான் உங்களுக்காக ஒரு திட்டம் வச்சிருக்கேன், வின்சென்ட்...”
இரண்டு நாட்களுக்குப் பிறகு டாக்டர் ரே திரும்பவும் வந்தார். வின்சென்ட் இருந்த சிறைக் கூடத்திற்கு வெளியே அப்போதும் காவலாளி இருந்தான்.
“இங்க பாருங்க, வின்சென்ட்...”- டாக்டர் ரே சொன்னார். “மஞ்சள் வீட்டைவிட்டு உங்களை வெளியேத்துறதா முடிவு பண்ணிட்டாங்க. வீட்டு உரிமையாளர் உங்களோட நாற்காலிகளை கீழே உள்ள ஒரு அறையில் போட்டு வச்சிருக்கார். உங்களோட ஓவியங்களை ஒரு அறைக்குள் பூட்டு போட்டு வச்சிருக்கார். மீதி இருக்குற வாடகைப் பணத்தை கொடுத்தா தான் அந்த ஓவியங்களைத் தருவாராம்...”
வின்சென்ட் பதில் ஏதும் பேசாமல் மவுனமாக இருந்தான்.
“நீங்க அங்க மறுபடியும் போய் இருக்க முடியாது. அதனால நான் சொல்றபடி செய்யுங்க... இந்த நரம்புத் தளர்ச்சி மறுபடியும் உங்களுக்கு எப்ப வரும்னு உறுதியா சொல்ல முடியாது. உங்களுக்கு இப்ப உடனடித் தேவை என்ன தெரியுமா? மன அமைதி, நல்ல சூழ்நிலை இவைதான். தேவையில்லாம உணர்ச்சிவசப்படக் கூடாது. உணர்ச்சிவசப்பட்டதுனால என்னவெல்லாம் பார்க்கணுமோ எல்லாத்தையும் பார்த்தாச்சு. இந்த நோய் திரும்பவும் உங்களுக்கு ஒண்ணு ரெண்டு மாசத்துல வரலாம். அதனால நீங்கதான் பாதுகாக்கணும். மத்தவங்க உங்களைப் பற்றி மனம் போனபடி பேசுறதுல இருந்தும் உங்களை நீங்களே காப்பாத்திக்கணும். நான் சொல்றது என்னன்னா, நீங்க உடனடியா...”
“சொல்லுங்க டாக்டர்... நான் என்ன செய்யணும்?”
“நான் சொல்றபடி நடப்பீங்களா?”
“நிச்சயமா...”
“வின்சென்ட்.... நான் சொல்றதை மிகவும் கவனமா கேட்டுக்கோங்க. இந்த நரம்புத் தளர்ச்சின்றது சாதாரண காய்ச்சல் மாதிரிதான். சில நேரங்களில் அது மனிதனை தாறுமாறா செயல்பட வச்சிடும். பொதுவா நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால், நீங்க என்ன பண்ணுறீங்கன்னு உங்களுக்கே தெரியாது. அதுனாலதான் நான் சொல்றேன், நீங்க ஒரு நல்ல மருத்துவமனையிலபோய்ச் சேரணும். அதாவது – உங்களை நல்ல கவனம் எடுத்து பார்த்துக்குற மருத்துமனையில...”
“அப்படியா?”
“அப்படியொரு அருமையான மருத்துவமனை ஸெய்ன்ட் ரெமியில் இருக்கு. அந்த ஊரு இங்கே இருந்து இருபத்தஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு. அதுக்கு பேரு செய்ன்ட் பால் டி மசோல். அங்கே முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு, மூணாம் வகுப்புன்னு – மூணு பிரிவா நோயாளிகளை அனுமதிக்கிறாங்க. மூணாம் வகுப்பு நோயாளிகளுக்கு மாசம் ஒண்ணுக்கு நூறு ஃப்ராங்க் கட்டணம் வசூலிக்கிறாங்க. உங்களுக்கு அது போதும்னு நினைக்கிறேன். அந்த இடம் முன்னாடி ஒரு மடமா இருந்துச்சு... மலை அடிவாரத்துல அது இருக்கு. வின்சென்ட்... அந்த இடம் ரொம்பவும் அழகானது... மிகவும் அமைதியா இருக்கும்... உங்களைப் பார்த்துக்கிறதுக்கு, அறிவுரை சொல்றதுக்கு ஒரு டாக்டர் இருப்பார். உங்களை கவனிக்கிறதுக்கு சிஸ்டர்கள் இருப்பாங்க. உணவு விஷயங்கள் நல்லதாகவும், ஆரோக்கியம் உள்ளதாகவும் இருக்கும். நிச்சயம் உங்கள் உடல்நலத்தை மீண்டும் அங்கே உங்களாலே பெற முடியும்.”
“அங்கே என்னைப் படம் வரைய அனுமதிப்பாங்களா?”
“நிச்சயமா. நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ, அதை எந்தவிதத் தடையும் இல்லாம அங்கே செய்யலாம். ஒரே ஒரு விஷயம்தான்- அது எந்த விதத்திலும் உங்களை பாதிச்சிடக்கூடாது. அந்த மருத்துவமனையைச் சுற்றி ஏகப்பட்ட இடம் இருக்கு. ஒரு வருஷம் அங்கே அமைதியா உங்களோட நாட்களை ஓட்டினா, முழுமையா நீங்க குணம் அடைஞ்சிருவீங்க...”
“சரி டாக்டர்... முதல்ல இந்த இடத்தைவிட்டு நான் எப்படி வெளியே போறது?”
“இது விஷயமா நான் போலீஸ் சூப்பிரெண்ட்கிட்ட ஏற்கெனவே பேசிட்டேன். நான் உங்களை அந்த மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போறதா இருந்தா, அவுங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க...”
“டாக்டர்... உண்மையாகவே அது ரொம்பவும் நல்ல இடமா?”
“மிக மிக அழகான இடம், வின்சென்ட். அங்கே போனவுடனே எத்தனையோ விஷயங்கள் இருக்கு உங்களுக்கு படம் வரைய!”
“கேக்கறதுக்கே ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு. மாசம் நூறு ஃப்ராங்க்ன்றது அப்படியொண்ணும் அதிகப்பணம் இல்ல. நானும் அப்படி அமைதியான சூழ்நிலையில இருக்கத்தான் விரும்புறேன்.”