வான்கா - Page 90
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8806
“உங்களுக்கு இந்தப் பெண்ணைப் பிடிச்சிருந்தா, நீங்களே வச்சுக்கங்க டாக்டர். நான் இப்ப வரையிற பூந்தோட்டத்தோட ஓவியத்தையும் உங்களுக்கே தர்றேன்!”
“ஆனா... எனக்கு எதற்கு இவற்றைத் தரணும், வின்சென்ட்? இந்த ஓவியங்கள் எவ்வளவு பெரிய பொக்கிஷங்கள் தெரியுமா?”
“ஒருவேளை எனக்கு நீங்க சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். உங்களுக்குத் தர்றதுக்கு என்கிட்ட பணம் கிடையாது. அதற்காக இப்பவே பணத்துக்குப் பதிலா இந்த ஓவியங்களை உங்களுக்குத் தர்றேன்.”
“ஆனா, நான் உங்களை பார்த்துக்கிறது பணத்துக்காக இல்லியே! நட்புக்காகத்தானே!”
“அப்படின்னா நட்புக்காக நான் தந்ததா இருக்கட்டும் இந்த ஓவியங்கள்!”
ஒவேரில் டாக்டர் காஷெ வின்சென்ட்டின் நெருங்கிய நண்பராக ஆனார். காஷெ பகல் முழுவதும் பாரீஸில் இருக்கும் தன் அறையில் நோயாளிகளைப் பார்ப்பார். இரவில் வின்சென்ட்டின் அறைக்கு வந்துவிடுவார். காஷெயின் கண்களில் நிழலாடிக் கொண்டிருக்கும் சோகத்தைப் பார்த்த வின்சென்ட் சிந்தனையில் ஆழ்ந்தான்.
“உங்கள் மனசுல என்ன கவலை மறைஞ்சிருக்கு டாக்டர் காஷெ?- ஒருநாள் வின்சென்ட் கேட்டான்.”
“வின்சென்ட், நான் எவ்வளவு வருஷமா வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன்! ஆனா, உருப்படியா நான் எதுவும் பண்ணினதா எனக்குத் தெரியல. ஒரு டாக்டர் தன் வாழ்க்கை முழுவதும் சந்திச்சிக்கிட்டு இருக்கிறது வேதனைகளைத் தவிர, வேற எதையுமே இல்ல... காலையில இருந்து ராத்திரி வரைக்கும் ஒரு டாக்டர் பாக்குறது, வேதனை... வேதனை... வேதனை... இது மட்டுமே.”
“நான் இப்போ பார்த்துக்கிட்டு இருக்கிற வேலையை விட்டுட்டு உங்களோட வேலைக்கு வந்துடலாமான்னு பாக்குறேன்!”
காஷெயின் கண்களில் இதைக் கேட்டதும் ஒரு பிரகாசம் உண்டானது. அவர் சொன்னார்: “அது நிச்சயம் முடியவே முடியாது, வின்சென்ட். ஒரு ஓவியனா இருக்குறதுன்றது உலகத்திலேயே எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? வாழ்க்கையில நான் பெரிசா ஆசைப்பட்டதே ஒரு நல்ல ஓவியனா வரணும்னுதான். ஆனா, அதற்கான நேரம் எனக்குக் கிடைக்க மாட்டேன்குது. என்னை எதிர்பார்த்து எத்தனையோ நோயாளிகள் இருக்காங்க. பிறகு எப்படி நான் ஓவியம் வரைய முடியும்?”
காஷெ வின்சென்ட் அமர்ந்திருந்த கட்டிலுக்குக் கீழே இருந்து சில ஓவியங்களை எடுத்தார். சூரிய வெளிச்சத்தில் சிரித்துக் கொண்டிருந்த சூரியகாந்திப்பூக்கள் உள்ள ஓவியத்தை எடுத்து முன்னால் வைத்தார்.
“இதைப் போல ஒரு ஓவியத்தை நான் வரையலைன்னா, வாழ்க்கையில நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம்? நான் இத்தனை வருடங்களும் மனிதர்களோட வேதனைகளை மாற்றுவதற்காக முயற்சி பண்ணினேன். ஆனால், அதனால என்ன பலன்? அவர்கள் என்னைக்காவது ஒருநாள் இந்த உலகத்தைவிட்டு போயிடுவாங்க. அப்படின்னா, நான் செய்துக்கிட்டு இருக்கிற வேலைக்கும், பாடுபடுறதுக்கும் என்ன அர்த்தம்? ஆனால், நீங்க வரைஞ்ச இந்த ‘சூரியகாந்திப்பூக்கள்’ ஓவியம்...! இது எத்தனை வருஷங்கள் கடந்தாலும், காலங்களை எல்லாம் தாண்டி நிலைத்து நிற்கும். மனிதர்களோட இதய வேதனைகளுக்கு என்றைக்குமே ஆறுதல் தரக்கூடிய ஒண்ணா இந்த ஓவியம் நிலை பெற்று நிற்கும். அவர்களுக்கு இதைப் பார்க்கிற கணத்திலும், இதை நினைச்சு அசை போடுற நேரத்திலும் இனம்புரியாத ஒரு பெரிய சந்தோஷத்தை இந்த ஓவியம் கட்டாயம் கொடுக்கும். அதனால்தான் நான் சொல்றேன் உங்களோட வாழ்க்கை வெற்றிகரமான ஒண்ணுன்னு. நீங்க எப்பவும் மகிழ்ச்சியான மனிதனா இருக்கணும்- அதுதான் என்னோட ஆசை!”
பிறகு ஒருநாள் வின்சென்ட், டாக்டர் காஷெயின் ஓவியத்தை வரைந்தான். நீல நிறக்கோட்டும். வெள்ளை தொப்பியும் அணிந்து ஒரு சிவப்பு மேஜை மேல் கையூன்றி நிற்கும் டாக்டர் காஷெ. மேஜை மேல் சிவப்பு மலர்கள் நிறைந்த ஒரு ஃபாக்ஸ் க்ளவ் செடி. கைக்கும் தலைக்கும் பொருத்தமான நிறங்களை இட்டான் வின்சென்ட். பின்புலத்திற்கு அடர்த்தியான நீலநிறம்.
தன்னுடைய ஓவியத்தைப் பார்த்ததும் டாக்டர் காஷெ அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வின்சென்ட்டைப் புகழோ புகழ் என்ற புகழ்ந்து தள்ளிவிட்டார்.
¤ ¤ ¤
மே மாதம், ஜூன் மாதத்திற்கு வழி ஒதுக்கிக் கொடுத்தது. பல ஓவியங்களை வின்சென்ட் வரைந்தாலும், அவன் மனதில் இருந்த நெருப்பு கொஞ்சம் அணைந்து போயிருந்தது. உடலும், மனமும் அதிகமாகவே தளர்ச்சி அடைந்து விட்டிருந்தன. உடலில் சக்தியே இல்லை என்பது மாதிரி உணர்ந்தான் வின்சென்ட். இருந்தாலும் அன்றாடச் செயல் என்பதால், அவன் படம் வரைவதை நிறுத்தாமல் தொடர்ந்தான்.
கணக்குப்படி பார்த்தால், ஜூலை மாதத்தில் அந்த நோயின் பாதிப்பு வின்சென்ட்டிற்கு உண்டாக வேண்டும். அதை நினைத்துப் பார்த்தபோது வின்சென்ட் உண்மையிலேயே பயந்தான். நல்ல சுயநினைவுடன் இருக்கிறபோது தான் ஏதாவது தாறுமாறாக செய்துவிடுவோமோ என்று கூட நினைத்தான் அவன்.
இது ஒரு பக்கம் இருக்க, வேறு இரண்டு சம்பவங்களும் வின்சென்ட்டின் மனதில் கவலையை உண்டாக்கின. அவற்றில் ஒன்று தியோவின் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இன்னொன்று – தியோ தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை இழக்கப் போகும் செய்தி. நவீன ஓவியக் கலைக்கு தியோ நீட்டி வரும் ஆதரவுக்கரப் போக்கை, காலரி உரிமையாளர்கள் விரும்பவில்லை. விளைவு – தியோவை வேலையில் இருந்து தூக்குவது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.
வின்சென்ட் மனதில் ஒரே கவலை மயம். குழந்தையின் உடல்நிலை என்னவாகும்? தியோ தன்னுடைய வேலையை இழந்தால், அதற்குப் பிறகு அவன் என்ன செய்வான்?
ஜூலை மாதத்தின் பாதி நாட்கள் ஓடி மறைந்தன. வழக்கமாக வரும் நோய் கடைசி கடைசியாக தன்னிடம் என்ன பாதிப்பை உண்டாக்கும் என்ற கவலை வேறு வின்சென்ட்டை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. இப்போது வின்சென்ட்டைப் பொறுத்தவரையில், அவன் ஒரு சுதந்திரமான மனிதன். அவன் எப்படி விருப்பப்படுகிறானோ, அப்படி தன் வாழ்க்கையை அவன் அமைத்துக் கொள்ளலாம். ஆனால், நோய் ஒருவேளை தன்னை ஒரு முழுமையான பைத்தியமாக மாற்றிவிட்டால்...? அந்த பயமும் வின்சென்ட்டின் மனதின் ஒரு மூலையில் இருக்கவே செய்தது. “நோயின் பாதிப்பால் என் அறிவு தடுமாறிப் போய் விடுமா? மனதில் தோன்றுவதை எல்லாம் பேசித் திரியும் ஒரு கிறுக்கனாக நான் மாறி விடுவேனா? அப்படி நான் ஆகிவிட்டால், தியோ என்ன பண்ணுவான்? பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் என்னைக் கொண்டு போய் அடைக்கச் சொல்வானா? டாக்டர் காஷெயிடம் எல்லாவற்றையும் பேச வேண்டும்”- இப்படி மூளையைப் போட்டு கசக்கிக் கொண்டிருந்தான் வின்சென்ட்.
காஷெயைப் பார்த்து தன் மனதில் உள்ள கேள்விகளை எல்லாம் கேட்டு, அவரின் விளக்கத்தை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான் வின்சென்ட்.