வான்கா - Page 91
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8807
“இனிமேல் உங்களுக்கு நோயோட பாதிப்பு இருக்காது, வின்சென்ட்”- காஷெ சொன்னார்: “ஆனால், இந்த மாதிரியான நோய் பாதிக்கப்பட்ட வேறு பலரும் உங்களை மாதிரி பாக்கியசாலி இல்லை!”
“அவர்களுக்கு என்ன நடக்கும் டாக்டர்?”
“அறிவு முழுமையா வேலை செய்யாது!”
“அதுல இருந்து அவங்க தப்பிக்க முடியாதா?”
“இல்ல... அதோட அவங்க கதை முடிஞ்ச மாதிரிதான்.”
“அடுத்த முறை நோய் பாதிக்கிறப்போ, நாம தப்பிச்சிடலாம்னு அவங்களால சொல்ல முடியுமா? நோய் வந்திட்டுப் போன பிறகு, மீண்டும் சாதாரண நிலைக்கு நாம வந்திடுவோம்னு உறுதியா அவங்களால கூற முடியுமா?”
“அப்படி எல்லாம் சொல்ல முடியாது, வின்சென்ட். அது சரி... எதற்கு தேவையில்லாத இந்தக் கேள்விகள்? வாங்க... நம்ம வேலையைப் பார்ப்போம்.”
அடுத்த நான்கு நாட்கள் வின்சென்ட் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. ஹோட்டல் உரிமையாளரின் மனைவி மேடம் ரவூ ஒரு ஆள் மூலம் உணவை அவனுடைய அறைக்கே அனுப்பி வைத்தாள்.
“எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நல்லாவே இருக்கேன்”- வின்சென்ட் தனக்குத்தானே கூறிக் கொண்டான்: “இப்போ விதியோட கட்டுப்பாடு என் கையில இருக்கு. ஆனால், அடுத்த முறை நோய் வந்து பாதிச்சால்... அறிவு வேலை செய்யலைன்னா... தற்கொலை கூட பண்ண முடியாதே! நான் ஒரேயடியா அழிஞ்சு போவேனே! தியோ... தியோ... நான் என்ன செய்றது?”
நான்காம் நாள் மாலையில் வின்சென்ட் டாக்டர் காஷெயைப் பார்க்கப் போனான். ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கிலாமின்னின் ஓவியத்தைக் குனிந்து எடுத்தான்.
“இதை ஃப்ரேம் போட்டு வைக்கணும்னு நான் முன்னாடியே சொன்னேன்ல?”- உரத்த குரலில் சொன்னான் வின்சென்ட்.
“இப்பவே செய்யணும். இன்னைக்கு... இந்த நிமிஷத்திலேயே!”
“வின்சென்ட்... என்ன முட்டாள்தனமா பேசுறீங்க!”
வின்சென்ட் டாக்டரையே வெறித்துப் பார்த்தான். அவன் கண்களில் ஒரு மாறுதல் தெரிந்தது. ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தான். அவனின் கை கோட் பாக்கெட்டிற்குள் நுழைந்தது. பாக்கெட்டினுள் இருந்த ஒரு ரிவால்வரை எடுத்து தனக்கு நேராக வின்சென்ட் நீட்டுவது போல் டாக்டருக்குத் தோன்றியது.
“வின்சென்ட்!”- டாக்டர் உரத்த குரலில் கத்தினார்.
வின்சென்ட் அவரின் அலறலைக் கேட்டதும், நடுங்கிப் போனான். அவனின் பார்வை தரையை நோக்கி கவிந்தது. கையைப் பாக்கெட்டை விட்டு வெளியே எடுத்தான் வின்சென்ட். அடுத்த நிமிடம் எதுவுமே பேசாமல் வெளியே ஓடினான்.
அடுத்த நாள் ஈஸலையும் கான்வாஸையும் எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் ரோடு வழியாக சர்ச்சைத் தாண்டி மலைச்சரிவை நோக்கி வின்சென்ட் நடந்தான். கல்லறையைத் தாண்டி இருக்கும் சோள வயலில் போய் உட்கார்ந்தான்.
மதிய நேரம் வந்தது. சூரியனின் கதிர்கள் தலைமேல் ‘சுள்’ என்று விழுந்தன. திடீரென்று ஆகாயத்தில் இருந்து கூட்டமாக கறுப்பு பறவைகள் கீழ்நோக்கி பறந்து வந்தன. ஆகாயத்தையும் சூரியனையும் மறைத்து வின்செட்டைக் கூட்டமாக அவை வந்து சூழ்ந்து கொண்டன. அவனின் தலை முடியிலும், கண்களிலும், காதிலும், வாயிலும் கூட அவை பறந்து ஏறின. அவற்றின் இருண்ட சிறகடி ஓசையில் வின்சென்ட்டால் சரியாக மூச்சுவிடக் கூட முடியவில்லை.
வின்சென்ட் படம் வரைவதைத் தொடர்ந்தான். சோள வயல்களுக்கு மேலே கறுப்பு பறவைகள். எவ்வளவு நேரம் அவன் வரைந்து கொண்டிருந்தானோ, அவனுக்கே தெரியாது. ஓவியத்தை வரைந்து முடித்து, அடியில் ஒரு இடத்தில் ‘சோளவயலுக்கு மேலே காகங்கள்’ என்று எழுதினான் வின்சென்ட். திரும்ப அறைக்குச் சென்றவன், ‘பொத்’ என்று படுக்கையில் விழுந்தான். நன்றாக உறங்கினான். அடுத்த நாளும் வெளியே சென்றான். அரண்மனைக்குப் பக்கத்தில் இருக்கும் குன்றின்மேல் ஏறினான். மரக்கொம்பின்மேல் அமர்ந்திருந்த வின்சென்ட்டைப் பார்த்த ஒரு விவசாயி தனக்குள் கூறினான்: “இது எப்படி முடியும்? இது எப்படி முடியும்?”
வின்சென்ட் மரத்தைவிட்டு கீழே இறங்கினான். அரண்மனைக்குப் பின்னால் இருந்த உழுத வயல்வெளியில் நடந்தான். இதுதான் தன் இறுதிக் கட்டம் என்பது அவனுக்கு நன்கு தெரிந்தது. ஆர்ளில் முதல் தடவையாக நோய் பாதித்தபோது, அதை அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தக் கொடுமையான நோயின் பிடியில் இருந்து தான் நிச்சயம் தப்பிக்க முடியாது என்பதையும் அவன் புரிந்து கொண்டான்.
விடைபெற வேண்டும் என்ற ஆசைப்பட்டான் வின்சென்ட். என்ன இருந்தாலும் தான் வாழ்ந்த இந்த பூமி நல்லதுதான் என்பதை அவன் உணராமல் இல்லை. காகின் என்ன சொன்னார்: “ஒவ்வொரு விஷத்திற்கும் அதற்கேற்ற மாற்று மருந்து இருக்கிறது.”
எல்லோரிடமிருந்தும் விடை பெற வேண்டும்! தன்னை வாழ்க்கையின் புறம்போக்கு நிலத்தில் தள்ளிவிட்ட ஊர்ஸுலா, ஒருநாள் தன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆகும் என்று முன்பே கூறிய தெகோஸ்தா, தன் மனதில் “இல்ல... ஒருபோதும் இல்ல...” என்ற வாக்கியத்தை அழுத்தமாக – அமிலத்தில் எழுதிய கே வோஸ், அன்பையும், பாசத்தையும் எங்கோ இருந்து வந்த தன்னிடம் அளவே இல்லாமல் கொட்டிய மேடம் தெனி, வெர்ணெ, தெக்ரூக், தன்னை உயிரென நேசித்த தாய் – தந்தை, தெய்வம் தனக்குத் தந்த மனைவி கிறிஸ்டின், சிறிது காலம் தனக்கு குருவாக இருந்த மவ், ஆரம்ப கால நண்பர்களான வெய்ஸன் ப்ரூக், தெபோக், தன்னிடம் அன்பு செலுத்திய மார்கோ, பாரீஸில் இருந்த ஒவிய நண்பர்கள், முப்பத்தொன்றாம் வயதில் கடுமையான உழைப்பால் இறந்துபோன ஸெரா, பிரிட்டனில் தெருத்தெருவாக பிச்சை எடுத்து அலையும் காகின், பேஸ்டீலில் குகையில் அழுகிப் போயிருக்கும் ரூஸோ, எக்ஸில் தனியாக இருக்கும் ஸெஸான், மண்ணின் மைந்தர்களான தான்குய், ரூளின், தன்னிடம் கருணை காட்டிய ரக்கேல், டாக்டர் ரே, தன்னை ஒரு பெரிய ஓவியன் என்று அங்கீகரித்த ஒரே ஒரு மனிதரான டாக்டர் காஷெ... கடைசியில் தன்னை உயிரை விட நேசித்த மற்ற யாரையும் விட, தான் அதிகம் நேசிக்கிற தன் அன்புத் தம்பி தியோ- இவர்கள் எல்லோரிடமிருந்தும் விடை பெற விரும்பினான் வின்சென்ட்.
ஆனால், வார்த்தைகள் அவனுக்கு எப்போதுமே கருவியாக இருக்கவில்லையே!
விடை பெறுவதற்கு நிறத்தைத்தான் தர வேண்டும்!
விடை பெறுவதற்கு நிறத்தைத் தர யாரால் முடியும்?