வான்கா - Page 59
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
வின்சென்ட் ஸெராவைப் பார்த்து சொன்னான்: “என்னை மன்னிக்கணும். சமீப காலமா நான் பார்த்த சில சம்பவங்கள் என் மனசை பலமா பாதிச்சிருக்கு. நான் டச் பாணியில தான் படம் வரையத் தொடங்கினேன். இம்ப்ரஸனிஸம்னா என்னன்னே எனக்குத் தெரியாது. நான் இதுவரை கொண்ட நம்பிக்கைகளெல்லாம் அடியோட தரை மட்டமா ஆனதா நான் உணர்றேன்.”
“உங்க மனசுல உள்ளதை என்னால புரிஞ்சுக்க முடியுது”- ஸெரா சொன்னார்: “நான் வரையிற பாணி ஓவியக் கலையில புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டிருப்பது உண்மை. அதை ஒரே நோட்டத்தில பார்த்து புரிஞ்சுக்க முடியாது. இதுவரை, ஓவியக் கலைன்றது ஒரு ஆளோட தனிப்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடாக இருந்தது. அதை விஞ்ஞான பூர்வமான ஆக்கமா காட்டுறது தான் என்னோட குறிக்கோள். உன் மனசுல உண்டாகுற உணர்வுகளை தனித்தனியா மனதின் மூலமா பிரிச்செடுத்து சரியாகக் கணக்கிட்டு நுண்ணிய உணர்வுகளா மாற்றி ஒரு இடத்தில் போய் குவிய நாம் படிக்கணும். ஒவ்வொரு உணர்வையும், அனுபவத்தையும் நிறங்களாவும், கோடுகளாவும் மாற்றி மிக மிக நுணுக்கமாக ஓவியக் கலையில கொண்டு வரணும்... இந்தச் சாயப் பாத்திரங்களைப் பார்த்தீங்களா?”
“நான் அவற்றை முன்பே கவனித்தேன்”- வின்சென்ட் சொன்னான்.
“இந்தப் பாத்திரங்கள் ஒவ்வொண்ணும் ஒரு தனித்தனி மனித உணர்வை வெளிப்படுத்துது”- ஸெரா தொடர்ந்தார்: “என்னோட ஃபார்முலாவைச் சரியா தெரிஞ்சுக்கிட்டு இவற்றை தொழிற்சாலைகள்ல உண்டாக்கி, சாதாரண மருந்துக் கடைகள்ல விற்கலாம். சும்மா வெறுமனே நிறங்களை மனம் போன படி கலந்து படம் வரையிறதுன்றது பழைய பாணி. இது விஞ்ஞான யுகம். நான் ஓவியக் கலையை விஞ்ஞானமாக்குறேன். தனித்துவம் அங்கு மறைஞ்சு போகணும். நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா?”
“இல்ல... எனக்குப் புரியவே இல்ல...”- வின்சென்ட் சொன்னான்.
“ஜார்ஜ்...”- வின்சென்ட்டை ஒருமுறை பார்த்து விட்டு காகின் சொன்னார்: “இந்த பாணி உங்களுடையதுன்னு எப்படி சொல்றீங்க? நீங்க பிறக்குறதுக்கு முன்னாடியே பிஸ்ஸாரோ இதே காரியத்தைச் செய்திருக்கிறாரே!”
“அது சுத்தப் பொய்”- ஸெராவின் முகம் இருண்டு விட்டது. முக்காலியை விட்டு கீழே இறங்கிய ஸெரா, கோபம் மேலோங்க இப்படியும் அப்படியுமாய் அறைக்குள் உலாவினார்.
“பிஸ்ஸாரோ இதை எங்கே செஞ்சிருக்கார்? நான் சொல்றேன் – இது என்னோட, நான் மட்டும் கையாள்ற பாணி. இந்த முறையை முதன்முதலா கண்டு பிடிச்சதே நான்தான். பிஸ்ஸாரோ ‘பாய்ன்டிலிஸம் (தனி நிறங்களை சிறு சிறு பொட்டுகளாக ஓவியத்தில் வரைவது. படத்தைப் பார்க்கும் ரசிகன் தான் பார்க்கும் பார்வையைக் கொண்டு வர்ணங்களின் சேர்க்கை நிகழ்கிறது) என்கிட்ட இருந்துதான் படிச்சதே. ஓவியக்கலையோட வரலாறை நான் படிச்சிருக்கேன். எனக்கு முன்னாடி ஒரு ஆள்கூட இந்த வழியைச் சிந்திச்சுப் பார்த்தது இல்லை. உங்களுக்கு எப்படி இந்த மாதிரி சொல்ல தைரியம் வந்துச்சு?”
உதடுகளை பலமாகக் கடித்தவாறு ஸெரா, வின்சென்ட்டிற்கும் காகினுக்கும் முன்னால், பின்பக்கமாய் திரும்பி நின்றிருந்தார்.
ஸெராவிடம் உண்டான மாற்றத்தை ஆச்சரியத்துடன் பார்த்தான் வின்சென்ட். கான்வாஸின் முன்னால் நின்றபோது எப்படி சாதாரணமாக சோதனைச் சாலையில் நிற்கிற விஞ்ஞானியைப் போல இருந்தார் இந்த மனிதர்! ஆனால், அதே ஸெரா இப்போது தடித்துப் போய் சிவந்திருக்கும் உதட்டை கோபத்தில் கடித்து மேலும் சிவப்பாக்கி சுருண்ட தலைமுடியை அவிழ்த்துவிட்டு படு கோபத்துடன் நின்றிருக்கும் காட்சியை நினைத்துப் பார்த்தான் வின்சென்ட்...
“ஜார்ஜ்...” காகின் வின்சென்ட்டிடம் கண்களைச் சிமிட்டியவாறு சொன்னார்: “நான் சும்மா விளையாட்டுக்காகச் சொன்னேன். இது உங்களோட பாணிதான்னு யாருக்குத்தான் தெரியாது?”
“ம்ஸ்யெ ஸெரா”- வின்சென்ட் கேட்டான்: “ஓவியக் கலை எப்படி விஞ்ஞானத்துல சேரும்? அது தனிப்பட்ட ஒருவரோட அனுபவ வெளிப்பாடு ஆச்சே!”
அடுத்த நிமிடம் சாந்த நிலைக்கு வந்துவிட்டார் ஸெரா: “வாங்க... நான் காண்பித்து தர்றேன்” கலர் பென்சில்கள் அடங்கிய ஒரு பெட்டியைக் கையில் எடுத்த ஸெரா தரையில் அமர்ந்தார். வின்சென்ட் ஸெராவின் ஒரு பக்கத்திலும், இன்னொரு பக்கத்தில் காகினும் அமர்ந்தார்கள். அவர்களுக்கு மேலே கேஸ் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. வெளியே நிசப்தமான இரவு.
“என்னோட அபிப்ராயப்படி ஓவியக்கலையோட பலன்களை விஞ்ஞான ரீதியான ஃபார்முலாக்களா மாத்த முடியும். ஒரு சர்க்கஸ் காட்சியை வரையிறோம்னு வச்சுக்குவோம்”- ஸெரா தரையில் படம் வரையத் தொடங்கினார்: “இங்கே குதிரை சவாரி செய்றவன், இங்கே பயிற்சி சொல்லித் தருபவன்... இதோ இங்கே காலரியும், காட்சியைப் பார்க்க வந்த மக்களும்... ஓவியக் கலையோட மூணு முக்கிய விஷயங்கள் என்னென்ன? கோடுகள், நிறம், உணர்ச்சிகள்- அதாவது, பாவம்... இப்போ... மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை வெளிப்படுத்தணும்னு வச்சுக்குவோம். ஓவியமா இதை வரையிறப்போ என்ன செய்யணும்? இதோ... இப்படி கோடுகளை மேலே கொண்டு வரணும். பளிச்னு தெரியும் நிறங்களுக்கு முக்கியத்துவம் தரணும். சந்தோஷமான நிமிடத்தைக் காட்டுற மாதிரி வர்ணத்தில் கொண்டு வரணும். இப்ப பாருங்க... அந்த உணர்வு படத்தைப் பார்க்குறப்போ கிடைக்குதா இல்லியா?”
“அது...” – வின்சென்ட் சொன்னான்: “மகிழ்ச்சியான தருணத்தைக் கோடிட்டு வேணும்னா அதைக் காட்டலாம். ஆனா, அதுல உண்மையான மகிழ்ச்சி பிரதிபலிக்குதுன்னு சொல்ல முடியலியே!”
ஸெரா வின்சென்ட்டிற்கு நேராக தலையை உயர்த்தினார். அவர் முகம் இப்போதும் இருண்டுதான் இருந்தது. “இப்படி ஒரு வினோதமான மனிதரா!”- வின்சென்ட் மனதிற்குள் கூறினான்.
“நான் மகிழ்ச்சிக்கு – அதாவது உல்லாசத்திற்குப் பின்னாடி போறவன் இல்ல. உல்லாசத்தோட அம்சத்தைக் காட்டக் கூடியவன். அவ்வளவுதான்”- ஸெரா தொடர்ந்தார்: “நீங்க ப்ளேட்டோவைப் படிச்சிருக்கீங்களா நண்பரே?”
“ம்...”
“ஓவியர்கள் ஒரு பொருளைப் படைக்க வேண்டியதில்லை. பொருளோட அம்சத்தை ஓவியமா தீட்ட படிச்சாப் போதும். ஒரு குதிரையைப் படமா வரையணும்னா தெருவுல நாம அன்றாடம் பார்க்குற ஒரு குதிரையை வரையணும்னு அவசியமில்ல. கேமராவே இந்தக் காரியத்தை அருமையா செஞ்சிடும். நாம அதுல இருந்து மேலே உயரணும். ஒரு குதிரையை ஓவியமாத் தீட்டணும்னா, ம்ஸ்யெ வான்கா, ப்ளேட்டோ சொன்னதுபோல அந்தக் குதிரையோட ‘குதிரைத் தன்மை’- அதாவது, குதிரையோட அம்சத்தை ஓவியத்துல கொண்டு வரணும். ஒரு மனிதனைப் படமா வரையனும்னா மூக்கு ஓரத்துல மரு இருக்கிற ஒரு தொழிலாளியை இல்ல... அவனோட – எல்லா மனிதர்களோட – சுயத்தையும் ஓவியத்துல கொண்டு வரணும். நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா?”
“எனக்குப் புரியுது”- வின்சென்ட் சொன்னான்: “ஆனா, உங்களோட கருத்தோடு நான் உடன்படல...”