வான்கா - Page 55
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
அவர்கள் இருவரும் புல்வார் க்ளிச்சியின் வழியே நடந்தனர். லாத்ரெக் இடது பக்கம் இருந்த ஊன்று கோலில் சாய்ந்தவாறு சுற்றிலுமிருந்த காட்சிகளை வின்சென்ட்டிற்குக் காட்டினான். மெளலின் ரோக் கடந்து புத்தே மோன்மார்த்ரியிலுள்ள குன்றை அடைந்தபோது லாத்ரெக் மூச்சு வாங்க சொன்னான்: “என் கால்களுக்கு என்ன ஆச்சுன்னு நீ சிந்திச்சுக்கிட்டு இருக்கலாம். எல்லாருமே என்னைக் கண்டவுடன் அதைத்தான் நினைப்பாங்க. நான் சொல்றேன்.”
“வேண்டாம், தயவுசெய்து அதைப்பத்தி...”
“நீ தெரிஞ்சிக்கிறதுனால தப்பொண்ணும் இல்ல”- ஊன்று கோலில் சாய்ந்தவாறு லாத்ரெக் சொன்னான்: “பிறக்குறப்பவே என்னோட உடம்புல இருந்த எலும்புகளுக்கு பலம் கிடையாது. பன்னிரண்டு வயசுல நான் தவறி கீழே விழுந்து, வலது கால் எலும்பு உடைஞ்சு போச்சு. அடுத்த வருடம் ஒரு குழியில விழுந்துட்டேன். அப்போ இடது கால் எலும்பு உடைஞ்சிருச்சு. அதுக்குப் பிறகு கால்கள் ஒரு அங்குலம்கூட வளரவே இல்ல...”
“அதுனால உங்களுக்கு வருத்தம் இருக்கா?”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல... சாதாரண முறையில வளர்ந்திருந்தா, நான் ஒரு காலத்திலும் ஓவியனா ஆயிருக்கவே மாட்டேன். என்னோட தந்தை துளுஸ்ல ஒரு மிகப் பெரிய பணக்காரர். அவருக்கு வாரிசு நான்தான். அவரோட சொத்து முழுவதும் எனக்குத்தான். அந்த வாழ்க்கையே போதும்னா, கிரீடத்தைச் சூட்டிக்கிட்டு, மார்ஷலோட பேட்டனைக் கையில ஏந்திக்கிட்டு மகாராஜா மாதிரி குதிரையில போய்க்கிட்டு இருக்கலாம்”- லாத்ரெக் சிரித்தவாறு சொன்னான்! “அட கடவுளே... ஒரு ஓவியனா ஒருத்தனால ஆக முடியும்னா, அவன் ஒரு பிரபு ஆக, என்னைக்காவது ஆசைப்படுவானா...? சொல்லு...”
மீண்டும் அவர்கள் நடையைத் தொடர்ந்தார்கள். லாத்ரெக் பேச்சைத் பேச்சைத் தொடர்ந்தான்: “தெகாவுக்குச் சொந்தமான ஸ்டுடியோ பக்கத்துலதான் இருக்கு. நான் தெகாவைப் பின்பற்றி வரையிறதா பலரும் சொல்றாங்க. அவங்க ஏன் அப்படிச் சொல்றாங்கன்னா தெகா பாலே நடனம் ஆடுற பெண்களைப் படம் வரையிறாரு. நான் மெளலின் ரோக்ல இருக்குற பெண்களை ஓவியமா வரையிறேன். இதோ... என்னோட இடம் வந்திடுச்சு!”
கீழே உள்ள தளத்தில் ஒரு அறை. கான்வாஸும் ஈஸலும் மற்ற பொருட்களும் அங்கு இருந்தன. ஒரு மேஜை மேல் நிறைய மது குப்பிகள். மற்றொரு மேஜை மீது செருப்பு, புத்தகங்கள், பெண்களின் ஆடைகள், ஆபாசப் புகைப் படங்கள், ஜப்பான் நாட்டு ஓவியங்கள்! உட்காருவதற்கு- சொல்லப்போனால் இடமே இல்லை.
“என்னடா... உட்கார்றதுக்கு இடம் இல்லையேன்னு பாக்குறியா? அங்கே இருக்குற பொருள்களை எடுத்து தரையில வை. அந்த நாற்காலியை எடுத்து ஜன்னலுக்குப் பக்கத்துல போடு. இங்கே இருபத்தேழு பெண்கள் இருந்தாங்க. எல்லார்கூடவும் நான் படுத்திருக்கேன். ஒரு பெண்ணை முழுமையா தெரிஞ்சுக்கணும்னா, அவகூட நாம படுக்கணும். என்ன... நான் சொல்றது சரிதானே?”
“ஆமா...”
“இதோ நான் வரைஞ்ச ஓவியங்கள். இவற்றைப் பார்த்து ஒருத்தன் என்ன சொன்னான் தெரியுமா? ‘லாத்ரெக், உங்களுக்கு அசிங்கமும், ஆபாசமும் மட்டும்தான் பிடிக்குமா? எப்போ பார்த்தாலும் நாம வெறுத்து ஒதுக்குகிற கேவலமான பெண்களையே படமா வரையிறீங்களே! இவங்க மூஞ்சியைப் பாருங்க. முகத்துல ஏதாவது களை இருக்கான்னு பாருங்க. இதுதான் புதுமைன்றதா? அசிங்கத்தையும், சுத்தமில்லாதவங்களையும் ஓவியம் வரையிறது தான் நவநாகரீக ஓவியக் கலைன்றது உங்க நினைப்பா? உங்கள மாதிரி ஓவியர்களுக்கு அழகை எங்கே பார்க்குறதுன்னே தெரியாமப் போச்சு? அந்தப் பார்வையையே நீங்க இழந்துட்டீங்களோ என்னவோ?” அவன் அப்படிச் சொன்னதற்கு வான்கா, என்னோட பதிலா என்ன சொன்னேன் தெரியுமா? “மன்னிக்கணும். எனக்கு வாந்தி வருது. உன்னோட இந்த விரிப்புல வாந்தி எடுத்தா நல்லா இருக்காதுல்ல?”
இதைச் சொல்லிவிட்டு லாத்ரெக் விழுந்து விழுந்து சிரித்தான். அறைக்குள் குதித்துக் குதித்து நடந்தான். குப்பியில் இருந்த ஒயினைக் கொஞ்சம் ஊற்றி வின்சென்ட்டிற்குக் கொடுத்தான். ஒயினைக் குடித்தவாறு வின்சென்ட் மோன்மார்த்ரியின் ‘விளையாட்டு வீட்டில்; இருந்த இருபத்தேழு விபச்சாரிகளின் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வின்சென்ட்டிற்கு அந்த ஓவியங்களை மிகவும் பிடித்திருந்தது. யாரோ போட்டு வைத்த சட்டதிட்டங்களைப் பற்றியெல்லாம் கவலையே படாமல் வாழ்க்கையின் யதார்த்தத்தை ஓவியமாகத் தீட்டியிருந்தான் லாத்ரெக். இந்த பாவப்பட்டவர்கள் முகத்தில் தெரியும் கவலையையும், குரூரத்தையும், முரட்டுத்தனத்தையும், தனிமையுணர்வையும், ஆதரவற்ற நிலையையும், வறுமையையும் லாத்ரெக் முழுமையாக தன் கலைமூலம் வெளிப்படுத்தியிருந்ததாக உணர்ந்தான் வின்சென்ட்.
‘இந்தப் பெண்கள் உடலின் தோட்டக்காரர்கள்’- வின்சென்ட் தன் கருத்தை லாத்ரெக்கிடம் வெளிப்படுத்துவதற்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தான்: “பூமியும் உடம்பும் ஒரே மூலத்தின் இரு முகங்கள் தானே? விவசாயிகளோட ஓவியங்களை நானும் வரைஞ்சிருக்கேன். சொல்லப்போனா, இவங்களும் விவசாயிகள் தானே! மனித சரீரம் வளமாக இருக்க, உழுகிறவங்க இவங்க. நீங்க இங்கே அர்த்தத்தோட தான் எல்லாத்தையும் வரைஞ்சிருக்கீங்க.”
“இதுல ஆபாசமோ, அசிங்கமோ ஒண்ணும் இல்லியே!” சந்தேகத்துடன் கேட்டான் லாத்ரெக்.
“அவங்க வாழ்க்கையில எப்படி இருக்காங்களோ, அதைக் காண்பிச்சிருக்கீங்க. அதாவது- இதுதான் அவங்களோட நிலைன்னு சொல்லாம சொல்லி இருக்கீங்க. இந்தப் பெண்களோட நிலையை ஆதரிச்சிருந்தாலோ அல்லது அவங்களை ஆபாசமா, அசிங்கமா வரைஞ்சிருந்தாலோ நீங்க ஒரு கோழைன்னோ கபடம் உள்ள ஆள்னோ பெயர் வாங்கி இருப்பீங்க. பாவம் அவங்க. உங்களைப் பொறுத்தவரை, கண்ட உண்மையை இந்த ஓவியங்கள்ல மனசாட்சிப்படி வெளிப்படுத்தி இருக்கீங்க. அந்த உண்மைதான்- நேர்மைதான் இங்கு அழகா எனக்குத் தெரியுது. நான் சொல்றதை ஒத்துக்கிறீங்களா?”
“கர்த்தாவே!”- லாத்ரெக் ஆச்சரியப்பட்டான்: “உன்னைப் போல ஆளுங்க உலகத்துல அதிகமா இல்லாமப் போனது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? இந்தா... இன்னும் கொஞ்சம் குடி... அந்த ஓவியங்களை நீ எடுத்துக்கோ!”
வின்சென்ட் ஒரு ஓவியத்தை எடுத்து சூரிய வெளிச்சத்திற்கு நேராக நீட்டினான். பின் என்ன நினைத்தானோ, அவன் சொன்னான்: “இந்த ஓவியங்கள் தாம்யே வரைந்த ஓவியங்களை ஞாபகப்படுத்துது!”
அவ்வளவுதான்-
லாத்ரெக்கின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. அவன் சொன்னான்: “தாம்யே எல்லாரையும்விட பெரிய மகான். அவர்கிட்டயிருந்துதான் நான் ஓவியக் கலையைப் பத்தி ஏராளமா தெரிஞ்சுக்கிட்டதே. ஆனா, அந்த ஆளை எனக்குப் பிடிக்கேவே பிடிக்காது!”
“அவரைப் பிடிக்காதுன்னா அவர் மாதிரியே ஏன் வரையணும்? எனக்கு எது பிடிக்குதோ, அதைத்தான் நான் எப்பவும் வரைவேன்.”
“மகத்தான எல்லா வரைவுமே வெறுப்புல இருந்துதான் ஆரம்பமாகுது, வான்கா.”
அங்கே இருந்த ஒரு பெண்ணின் ஓவியம் வின்சென்`ட்டுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப் பார்த்த லாத்ரெக் சொன்னான்: “உனக்கு காகினின் படம்னா ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன்.”
“யாருடையது?”