வான்கா - Page 57
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
வின்சென்ட்டிற்கு காய்ன் ட்ரியுவை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. “வேற என்ன குடிக்கிறதுக்கு இருக்கு?” என்று தியோவிடம் கேட்டான்.
“அப்ஸிந்த் வேணும்னா குடிச்சு பார், ம்ஸ்யெ வான்கா. கலைஞர்களோட மதுபானம் அதுதான்.”
“பால், இன்னைக்கு நீங்க மிகவும் மகிழ்ச்சியா இருக்கிறது மாதிரி இருக்கே! என்ன காரணம்?”
“ஓ... அதுவா? இன்னைக்கு ஒரு விஷயம் நடந்துச்சு. நான் நல்லா தூங்கிக்கிட்டிருந்தேன். அதிகாலை அஞ்சு மணி இருக்கும். அந்த வண்டிக்காரனோட பொண்டாட்டி இருக்கால்ல...? அந்த அம்மா `ஓ’ன்னு கூப்பாடு போடுது. ‘அய்யோ... உதவுங்க... என்னோட புருஷன் தூக்குல மாட்டி செத்துட்டார்’னு- ஒரே அழுகைக்குரல். அவ்வளவுதான். நான் படுக்கைவிட்டு எழுந்தேன். நீயே யோசிச்சுப் பாரு... காலை நேரத்துல இது எவ்வளவு பெரிய தொந்தரவுன்னு. நான் ஒரு கத்தியைக் கையில எடுத்துக்கிட்டு கீழே ஓடினேன். கத்தியை வச்சு கயிறை அறுத்தேன். அந்த ஆளோட உடம்புல இன்னும் சூடு இறங்கல. படுக்கையில, செத்துப்போன அந்த ஆளைக் கிடத்தலாம்னு பார்த்தா அந்த அம்மா சத்தம் போடுறா. ‘நில்லுங்க... போலீஸ் வரட்டும்’னு. எல்லாம் முடிஞ்சு என்னோட அறைக்கு வந்த நான் மதுவை உள்ளே தள்ள ஆரம்பிச்சிட்டேன். அதுக்குப் பிறகு தூக்குப் போட்டுச் செத்த அந்த ஆளைப் பத்தி நான் நினைக்கவே இல்ல. வாழ்க்கையில நினைச்சுப் பாக்குற அளவுக்கு இன்னும் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்குறப்போ அந்த ஆளைப் பத்தி ஏன் நினைக்கணும்? ஒவ்வொரு விஷயத்துக்கும் அதோட மறுபக்கம்னு ஒண்ணு இருக்கல்ல. மத்தியான சாப்பாட்டுக்கு நண்பர்கள் சிலரைக் கூப்பிட்டிருந்தேன். தூக்குப் போட்டு செத்துப் போன ஆளோட கதையைக் கேட்ட அவங்களுக்கு ஒரே உற்சாகம்... எல்லோருக்கும், அந்த ஆளு தூக்குப் போட்ட கயிறோட சின்ன துண்டுப் பகுதியாவது வேணுமாம். இது எப்படி இருக்கு?”
வின்சென்ட் காகினைப் பார்த்தான். பெரிய தலை. இடது கண்ணின் கீழே இருந்து வாயின் வலது பக்கம் வரை இருக்கும் பெரிய மூக்கு. கூர்மையாக இருக்கும் பெரிய கண்களில் இனம் புரியாத ஒரு சோகம் தெரிந்தது. கண்களுக்கு மேலேயும், கீழேயும், தாடிக்குக் குறுக்கேயும் முன் பக்கமாய் தள்ளிக் கொண்டிருக்கும் எலும்புகள். வலிமையான உடலில் ததும்பி நிற்கும் காட்டுத் தனமான வீரம்!
“பால்... நீங்க பேசுறதைப் பார்த்தா நீங்க ஒரு சேடிஸ்ட்டா இருப்பீங்க போலிருக்கே!”- சிரித்தவாறு கேட்டான் தியோ. தொடர்ந்து அவன் சொன்னான்: “வின்சென்ட்... என்னை ஒரு விருந்துக்குக் கூப்பிட்டு இருக்காங்க. நீ வர்றியா?”
“ஏய்... இந்த ஆளு என் கூட இருக்கட்டும், தியோ. உன்னோட அண்ணன் கூட நான் கொஞ்சம் பேசிக்கிட்டு இருக்கேன்!”
“சரிதான்... ஆனா, அவனுக்கு அதிகமா அப்ஸிந்த்தை ஊத்திக் கொடுத்துடாதீங்க. அவனுக்கு இதுல அதிக பழக்கம் கிடையாது.”
¤ ¤ ¤
“வின்சென்ட், உன்னோட தம்பியை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஆனா, இளம் ஓவியர்களின் ஓவியங்களை கண் காட்சியில வைக்கிறதுக்கு அந்த ஆளுக்கு பயம்னு நினைக்கிறேன்!”
“அப்படிச் சொல்ல முடியாது. மோனே, மானே, பிஸ்ஸாரோ- இவங்க வரைஞ்ச ஓவியங்களை அங்கே வச்சிருக்கானே!”
“சரிதான்... ஆனால் ஸெராவோட ஓவியங்கள் எங்கே? காகின், துளுஸ் – லாத்ரெக், ஸெஸான்- இவங்களோட ஓவியங்களையும் வைக்கணும்ல...?”
“துளுஸ்- லாத்ரெக்கை உங்களுக்குப் பழக்கம் உண்டா?”
“அவனை யாருக்குத் தெரியாது? அருமையான ஓவியன் அவன். ஆனா, கிறுக்குப் பய. குறைந்தபட்சம் அய்யாயிரம் பெண்களுடனாவது படுத்தாத்தான் தன்னோட அங்கக் குறைவுக்கு அது பரிகாரமா இருக்கும்னு அவன் நினைச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கான். தன்னோட கால்களைப் பத்தின குற்ற உணர்வோடதான் அவன் படுக்கையை விட்டே எழுந்திருக்கிறான். எல்லா ராத்திரியிலும் இந்தக் குற்ற உணர்வை மறைக்கிறதுக்கு ஒயினையும், பெண்ணையும் தேடுவான். மறுநாளும் இதே கதைதான். இந்தக் கிறுக்குத்தனம் மட்டும் அவன்கிட்ட இல்லாம இருந்தால், நம்பக்கிட்டே இருக்குற திறமைசாலிகளான ஓவியர்கள்ல அவனும் ஒருத்தனா இருப்பான்!”
காகினின் ஸ்டுடியோ சுத்தமே இல்லாத ஒரு ஒதுக்குப் புறத்தில் இருந்தது. ஒரு ஈஸல், படுக்கை, மேஜை, நாற்காலி- அறைக்குள் இருந்தவை இவை மட்டுமே. சுவரில் சில ஆபாசப் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.
“இங்க இருக்குற படங்களைப் பாக்குறப்போ காதலைப்பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் இருக்குறது மாதிரி தெரியலியே!”- வின்சென்ட் சுற்றிலும் பார்த்தவாறு கேட்டான்.
“அப்படிச் சொல்ல முடியாது. பொதுவா எனக்கு பெண்களை ரொம்பவும் பிடிக்கும். குறிப்பாச் சொன்னா, தடிமனா இருக்கும் பெண்களை... முரட்டுத்தனமான பெண்களை... மாப்பஸான் (ஃப்ரெஞ்ச் நாவலாசிரியர்) எழுதுன ஒரு கதை படிச்சிருக்கியா? ஸோலாவோட சீடர் அவர். தடிமனான பெண்களை விரும்பக் கூடிய ஒருத்தன், ரெண்டு பேருக்கு ஒரு கிறிஸ்துமஸ் நாளன்னைக்கு சாப்பாடு தயார் பண்ணி வெச்சிட்டு, ஒருத்தியைத்தேடி வெளியே போனான். கடைசியில அவனுக்குப் பிடிச்ச ஒரு தடிமனான பெண்ணோட திரும்பி வந்தான். ஆனா, அங்கே நடந்தது என்ன தெரியுமா? சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு இருக்குறப்பவே, அவ அங்கேயே பிரசவம் ஆயிட்டா... ஹா... ஹா... ஹா...”
“காகின்... நீங்க சொல்ற இந்த விஷயங்களுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்?”
“அழகுன்னா எனக்குப் பிடிக்காது அப்படின்னு நான் சொல்றதுக்கில்ல. ஆனா, காதல்ன்றது! ‘நான் உன்னை காதலிக்கிறேன்’னு ஒருத்திக்கிட்ட என்னால வாய்திறந்து கூற முடியாது. எனக்கு அதுனால வருத்தமெல்லாம் கிடையாது. ஏசுவே சொல்லியிருக்காரே- ‘உடம்பு உடம்புதான், ஆத்மா ஆதமாதான்’னு கொஞ்சம் பணத்தைக் கொடுத்தா என் உடம்போட பசியை என்னால தீர்த்துவிட முடியும். அதுனால ஆத்மாவுக்கு சுதந்திரம் கிடைச்ச மாதிரியும் இருக்கும். ஆனா, ஒரு காலத்திலும் காதல் விஷயத்துல நான் மாட்டிக்கவே மாட்டேன். அது என்னால முடியவும் முடியாது. என்னோட எல்லா உணர்வுகளையும் ஓவியம் வரையிறதுக்காக மட்டுமே ஒதுக்கி வச்சிருக்கேன்.”
“எனக்கும் சமீப காலமா இப்படித்தான் மனசுல தோணிக்கிட்டு இருக்கு!”
வின்சென்ட் கேட்கிறான் என்பதற்காக தான் வரைந்த சில ஓவியங்களை காகின் அவனிடம் எடுத்து காட்டினார். காகினின் ஓவியத்தைப் பார்ப்பதற்கு முன்பு, அவற்றில் அசாதாரணமாக ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்த வின்சென்ட், அவற்றைப் பார்த்த பிறகு உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு நின்று விட்டான். எல்லாமே சூரிய வெளிச்சத்தில் வரையப்பட்ட ஓவியங்கள். ஒரு தாவர ஆராய்ச்சி விஞ்ஞானி கூட கண்டுபிடித்திராத மரங்கள்! குவியே (ஃப்ரெஞ்ச் உயிரியல் விஞ்ஞானி)கூட கற்பனை பண்ணியிராத மிருகங்கள்! காகினால் மட்டுமே படைக்க முடிகிற மனிதர்கள்!