வான்கா - Page 49
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
வின்சென்ட்டின் செயல்கள் எதையும் கிறிஸ்டினால் புரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டு வேலைகள் என்றால் அவளுக்கு பிரச்சினையே இல்லை. எதையும் அவளால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், வின்சென்ட்டைப் போல உள்ள ஒரு மனிதனுக்கு பொதுவாக வீட்டு விஷயங்களில் அக்கறையும் கவனமும் குறைவாகத்தானே இருக்கும்! பெரிய விஷயங்கள் எதுவும் அவனின் மூளையிலேயே ஏறாது.
“வின்சென்ட்...”- கிறிஸ்டின் ஒருநாள் கேட்டாள்: “இந்த ஓவியங்களை உன்னால எப்படி இந்த அளவுக்கு பிரமாதமா வரைய முடியுது?”
“எப்படி அதை வரையிறேன்னு எனக்கே தெரியாது”- வின்சென்ட் அவளுக்கு விளக்க முற்பட்டான்: “வெற்று கான்வாஸோட நான் எங்காவது ஒரு இடத்துல உட்கார்ந்திருப்பேன். மனசுக்குள்ள நானே சொல்லிக்குவேன்- இந்த இடங்களை எல்லாம் ஓவியமா வரையணும். ரொம்ப நேரம் உட்கார்ந்து வரைவேன். வீட்டுக்குத் திரும்பி வந்தபிறகும், மனசுல திருப்தி உண்டாகி இருக்காது. மனசுல இருக்கிற ஓவியத்திற்கும் நான் வரைஞ்சிருக்கிற ஓவியத்திற்கும் ஒரு வேறுபாடு தெரியும். ஆனா, மனசுல இருக்குற ஓவியத்தோட ஏதோ ஒரு சாயல் இதுல இருக்கும்ன்றது உண்மை. இயற்கை என்னோட உள் மனசுக்குச் சொன்ன ரகசியங்களை நான் தூரிகையால் ஓவியமா வரைய முற்படுறேன். இதுல தவறுகள் நேரலாம். சின்ன சின்ன குறைபாடுகள் இருக்கலாம். ஆனா, இந்த ஓவியங்கள்ல மரங்களும், கடலலைகளும், மனிதர்களும் என்கிட்ட ரகசியமாகச் சொன்னது நிச்சயம் உயிரோட்டத்துடன் படைக்கப்பட்டிருக்கும், அது மட்டும் உண்மை. இப்போ நான் சொன்னதை உன்னால புரிஞ்சுக்க முடியுதா?”
“புரிஞ்சுக்க முடியல...”
¤ ¤ ¤
வின்சென்ட் கையிலிருந்த பணம் முழுவதையும் கிறிஸ்டினின் பிரசவத்திற்காகச் செலவழித்தான். பிரசவம் சற்று சிரமப்பட்டே நடந்தது. வின்சென்ட்டின் தலையில் புதிய குடும்பத்தின் முழுச் சுமையும் விழுந்தது.
பிரசவத்திற்குப் பிறகு, கிறிஸ்டினின் நடவடிக்கைகளிலும் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. அவளின் பழைய பழக்கங்களை அவள் மீண்டும் தொடர்வது மாதிரி தெரிந்தது. வின்சென்ட் படம் வரைவதற்கு மாடலாக இப்போது அவள் நிற்பதில்லை. தான் இப்போது மாடலொன்றும் கிடையாது. அவனின் மனைவி என்கிறாள்- கேட்டால். இதனால் வின்செட்டிற்கு அவள்மீது கோபம் வந்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? இடையில் சில நாட்கள் அவள் தன் தாயின் வீட்டிற்குப் போவாள். மீண்டும் சுருட்டு பிடிக்க தொடங்கினாள். மது அருந்தவும் ஆரம்பித்தாள். குடிக்க ஆரம்பித்தது தெரிந்தவுடன் வின்சென்ட் சொன்னான்: “டாக்டர் உன்னை பீர் குடிக்கச் சொன்னது உடம்பு நல்லா இருக்கணும்ன்றதுக்காகத்தான்.”
“உடம்பை நல்லாக்க...”- கிறிஸ்டின் வேண்டுமென்றே ஆண் குரலில் பேசினாள்: “நீ என்ன ஆம்பிளை!”
வின்சென்ட் கடனாளியானான். சரியாக உணவு சாப்பிடாததால் வயிற்றில் கோளாறு உண்டானது. கிறிஸ்டினின் தாய் அடிக்கொரு தரம் வீட்டுக்கு வந்தாள்.
“அம்மா இங்கே இருந்து என்னை வரச் சொல்றாங்க”- கிறிஸ்டின் சொன்னாள்: “இங்கே பட்டினியா ஏன் இருக்கணும்ன்றாங்க.”
“சரி... நீ எங்கே போகப் போறே?”
“வீட்டுக்குத்தான் – வேற எங்கே?”
“குழந்தைகளையும் அங்கே கூட்டிட்டுப் போறயா?”
“ஆமா... பட்டினி கிடந்து சாகுறதைவிட ஏதாவது வேலை பார்த்து சம்பாதிக்கலாமே!”
“என்ன வேலை செய்வே?”
“அது... ஏதாவது செய்ய வேண்டியதுதான்.”
“துணி துவைக்கிற வேலையா?”
“இருக்கலாம்.”
அவள் பொய் சொல்கிறாள் என்பதை வின்சென்ட் அறியாமல் இல்லை.
“அதுதான் விஷயம். உன்னைப் பழைய மாதிரி தெருப் பொறுக்கியா ஆக்க உன்னோட தாய் திட்டம் போட்டிருக்கா.”
“அது ஒண்ணும் அவ்வளவு கேவலமானது இல்ல. வாழணும்னா எல்லாம் செய்ய வேண்டியதுதான்.”
“ஸீன்... திரும்பப் போறேன்னு வச்சுக்கோ, அதோட நீ அழிஞ்ச மாதிரிதான். டாக்டர் சொன்னது ஞாபகத்துல இல்லியா?”
அவ்வளவுதான்-
கிறிஸ்டின் திடீரென்று மாறிப் பேசினாள்: “யார் இப்போ போறேன்னு சொன்னது? நீ என்னை போன்னு கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளினாத்தான் நான் போவேன்.”
¤ ¤ ¤
வெயில் காலம் வந்தது. வின்சென்ட்டுக்கு கடன் சுமை கூடிக் கொண்டே வந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கடையில் வீட்டு சாமான்களைக் கடனுக்கு அவன் வாங்கியிருந்தான். திடீரென்று அந்த ஆள் வந்து கதவைத் தட்டினான்.
“பணம் தர்றேன்னு சொல்லிட்டு இன்னும் தரலியே? பணம் எனக்கு வந்தாகணும்.”
“இப்போ என் கையில பணம் இல்ல. வந்த உடனே நிச்சயம் தர்றேன்.”
“பணம் வரலைன்னு பொய் சொல்லாதே. செருப்பு கடைக்காரனுக்கு மட்டும் பணம் எப்படி தந்தே?”
“நான் இப்போ வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன். இப்போ என்னைத் தொந்தரவு செய்யாதே. பணம் கைக்கு வந்தவுடன் நான் உனக்குத் தர்றேன். தயவுசெஞ்சு போ போ.”
“பணம் இப்ப கைக்கு வந்தாத்தான் நான் இந்த இடத்தைவிட்டே போவேன்.”
அவ்வளவுதான்-
அடுத்த நிமிடம் வின்சென்ட் அந்த ஆளைக் கோபத்துடன் பிடித்து தள்ளினான்: “இப்போ வெளியே போறியா இல்லியா?”
அந்த ஆள் அப்படிப்பட்ட சூழ்நிலைக்காகவே காத்திருப்பான் போலிருக்கிறது. வின்சென்ட் அவன் உடலில் கை வைத்ததுதான் தாமதம்- முஷ்டியைச் சுருட்டியவாறு வின்சென்ட்டின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். வின்சென்ட், அடித்த வேகத்தில் எதிரில் இருந்த சுவரில் போய் மோதினான். வின்சென்ட்டுக்கு இன்னொரு அடியை பலமாகக் கொடுத்த அந்த ஆள், அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறினான். வின்சென்ட் செயலற்று தரையில் போய் விழுந்தான்.
வெளியே போயிருந்த கிறிஸ்டின் திரும்பி வந்தபோது, வின்சென்ட் படுக்கையில் கிடந்தான்.
“என்ன ஆச்சு?”
கஷ்டப்பட்டு தலையைத் திருப்பி வின்சென்ட் சொன்னான்: “ஸீன், நான் தி ஹேக்கை விட்டு போயாகணும்.”
“எனக்கு அது தெரியும்.”
“இங்கே இருந்து வேற எங்கே போனாலும் சரிதான். ட்ரென்த்க்கோ இல்லாட்டி வேற எங்காவது ஒரு இடத்துக்கோன்னாலும் சரிதான். அதிகம் செலவில்லாத ஒரு இடத்தைத் தேடிப்போய் வாழணும்.”
“நான் கூட வரணுமா? ட்ரென்த் ஒரு மூலையில கிடக்கிற ஒரு ஊரு. அங்கே போய் வாழ வழி இல்லைன்னா என்ன பண்றது?”
“இதுக்கு நான் என்ன பதில் சொல்றதுன்னே தெரியல ஸீன்...”
“ஒரு காரியம் செய்... உன்னோட தம்பி அனுப்பி வைக்கிற பணத்தை வீட்டுச் செலவுக்கு மட்டும்தான் செலவழிப்பேன்னு எனக்கு சத்தியம் செஞ்சு தரணும். இந்தக் காசுல பெயிண்ட் அது இதுன்னு வாங்க மாட்டேன்னு இப்பவே உறுதி தரணும்.”
“அது என்னால முடியாது ஸீன். எனக்கு அதுதான் ரொம்பவும் முக்கியம்.”
“அதாவது உனக்கு...”
“உனக்கு கிடையாதா?”
“என்னைப் பொறுத்தவரை நான் வாழணும். வின்சென்ட். சாப்பிடாம உயிர் வாழ முடியுமா?”
“ஓவியம் வரையாம என்னால வாழ முடியாது.”