வான்கா - Page 47
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8811
“என் ஆருயிர் நண்பனே... இவளைப் பார்க்கவே சகிக்கல. இவள மாதிரி பொம்பளைங்களை காசுக்கு எட்டு பேரை வாங்கலாம். நீ மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே? தெர்ஸ்டீக் உன்னைப் பத்தி சொன்னதுல தப்பே இல்ல. உனக்கு ஒருத்தி தேவைப்பட்டா டவுன்ல எவ்வளவு அழகான மாடல்கள் இருக்காங்க! இங்கேதான் எவ்வளவு பேர் வேணும்னாலும் கி்டைப்பாளுங்களே!”
“தெபோக், நான்தான் சொன்னேன்ல இவ என் வைப்பாட்டி இல்லன்னு...!”
“பிறகு யார் இவ?”
“என்னோட பொண்டாட்டி”
அடுத்த நிமிடம் உதடுகளைக் குவித்தவாறு கிண்டல் குரலில் தெபோக் கேட்டான்: “என்ன? உன்னோட பொண்டாட்டியா?”
“ஆமா... நான் இவளைக் கல்யாணம் பண்ணப் போறேன்.”
“என் தெய்வமே!”- தெபோக் நம்பிக்கை வராமல் மீண்டும் ஒருமுறை கிறிஸ்டினைப் பார்த்தான். ஒரு வார்த்தை கூட அதற்கு மேல் பேசாமல் வெளியே ஓடினான்.
அவர்கள் இருவரும் ஆங்கிலத்தில் பேசியதால் எதுவுமே புரியாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் கிறிஸ்டின்.
“நீ என்னைப் பத்தி என்ன சொன்னே?”- அவர்களின் பேச்சு தன்னைப் பற்றித்தான் இருந்திருக்கும் என்பதாக நினைத்துக் கொண்ட கிறிஸ்டின் கேட்டாள்.
“நீ சீக்கிரம் என்னோட மனைவியாகப் போறேன்னு நான் சொன்னேன்.”
சில நிமிட மவுனத்திற்குப் பிறகு கிறிஸ்டின் கேட்டாள்: “நீ என்னை உண்மையாவே கல்யாணம் பண்ணப் போறியா, வின்சென்ட்?”
“நிச்சயமா ஸீன். விரக்தியடைஞ்சு போயிருந்த என்னோட மனசுக்கு புத்துணர்ச்சி கொடுத்தவ நீதான்.”
“ஆனா, நான் எப்படி? முடியாதே...! எனக்கு குழந்தைகள் இருக்காங்களே! உன் தம்பிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா பணம் அனுப்புவதையே நிறுத்திடுவான்.”
“ஒரு தாயா இருக்குற பெண்ணை எனக்கு உண்மையாவே பிடிக்கும். குழந்தைகளை நாம பார்த்துக்குவோம். தியோக்கிட்ட விஷயத்தை விளக்கிச் சொன்னா புரிஞ்சுக்குவான்.”
வின்சென்ட், கிறிஸ்டினின் காலுக்குக் கீழே தரையில் அமர்ந்தான். கிறிஸ்டின்தான் எந்த அளவுக்கு மாறிப் போய்விட்டாள்! முன்பு கவலை தோய்ந்த அவளின் கண்களில் இப்போது மகிழ்ச்சியின் ரேகைகள் தெரிகின்றன. தனக்கு ஒரு புது வாழ்வு கிடைத்திருப்பது குறித்து, அவளின் மனதில் நிலவும் இனம்புரியாத ஆனந்த நர்த்தனத்தை அவனால் உணர முடிந்தது. அவளின் முகத்தைச் சற்று உற்று நோக்கிக் கொண்டிருந்த வின்சென்ட்டின் மனதில் மீண்டும் மிச்லெயின் வரிகள் ஞாபகத்தில் வந்தன.
வின்சென்ட்டுக்குப் பக்கத்தில் தரையில் அமர்ந்து, காதல் மேலோங்க அவன் கழுத்தில் தன் கைகளைக் கோர்த்து, அவன் தோள் மேல் தன் தலையைச் சாய்த்தவாறு கிறிஸ்டின் சொன்னாள்:
“நான் உன்கூட இருந்தா போதும், வின்சென்ட். அதுக்கு மேல உன்கிட்ட நான் எதுவும் கேக்கல. உன்மேல நான் எந்த குறையும் சொல்ல மாட்டேன். நான் உன்னைக் காதலிக்கிறேன், வின்சென்ட். வாழ்க்கையிலேயே என்மேல அன்பையும் காதலையும் காட்டின முதல் ஆம்பளையே நீதான். எனக்கு எதுவுமே வேண்டாம். உன்கிட்ட என்ன இருக்குதோ, அதை எனக்கும் பங்கு போட்டுக் கொடு. அதுல நான் சந்தோஷப்பட்டுக்குவேன்.”
வின்சென்ட் அவளை இறுக அணைத்து முத்தம் கொடுத்தான். அவளின் விரிந்து கிடந்த தலைமுடியை தன் விரல்களால் கோதினான். கிறிஸ்டின் வின்சென்ட்டின் தாடியில் தன் கன்னத்தை வைத்து தடவினாள்.
¤ ¤ ¤
குபில் அன்ட் கம்பெனியின் பாரீஸிலிருக்கும் காலரியை புஸோ, வாலடன் ஆகியோருக்கு விற்று விட்டிருந்தார்கள். புதிதாக வந்த உரிமையாளர்களுக்கு பணம் சம்பாதிப்பதில் மட்டுமே கண். புகழ்பெற்ற – பிரபலமான ஓவியர்களின் படைப்புகளை மட்டுமே அவர்கள் வரவேற்றார்கள். எந்த ஓவியமாக இருந்தாலும் அதன் அருமை, பெருமை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அது தரம் தாழ்ந்ததாக இருந்தால் கூட யார் அதிகமாகப் பணம் தருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஓவியத்தை விற்று விடுவார்கள். இதுதான் அவர்களின் குணம், வான்கா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, இப்படியெல்லாம் நிச்சயமாக இல்லை. ஓவியர்களுக்கு உற்சாகமூட்டி, ஆதரவு தருவதில் அவர்கள் எப்போதும் முன்னால் நின்றார்கள். நல்ல ரசனை கொண்ட இளம் ஓவியர்களான மானே, மோனே, பிஸ்ஸாரோ, சிஸ்லி, ரெனார், மொரிஸோ, ஸெஸான், தெகா, கிலாமின், துளுஸ்- லாத்ரெக், காகின், ஸெரா, ஸினாக் எல்லாரும் ஒன்று சேர்ந்து புகரே (ப்ரெஞ்ச் அக்காடெமிக் ஓவியர்)யின் பழைய பாணிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய காலம். அவர்களுக்கு குபில் அன்ட் கம்பெனி தந்த ஆதரவை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தியோ புதிய உரிமையாளர்களுக்குக் கீழேயும் மேனேஜராக தன் வேலையைத் தொடர்ந்தான். புதிய ஓவியர்களுக்கு என்றுமே ஆதரவுக்கரம் நீட்டக் கூடியவன் தியோ. புதிய ஓவியர்களின் கலைப்படைப்புகளை காலரியில் வைக்க வேண்டும் என்று உரிமையாளர்களிடம் பலமாக வாதாடினான் தியோ. புதிய ஓவியர்கள் கிறுக்குத்தனமானவர்கள் என்றும், அவர்களின் ஓவியத்திற்கு எந்தவித மதிப்பும் கிடையாது என்றும் ஆணித்தரமாக அடித்து பதில் கூறினார்கள் அவர்கள். அப்போதும் தியோ விடவில்லை. என்றாவது ஒருநாள் நிச்சயம் இவர்களும்பெரிய ஆளாக வருவார்கள். எதிர்காலத்தில் இவர்களும் புகழ்க்குன்றின் உச்சியில் பொன்னொளி வீசுவார்கள் என்று வளர்ந்து வரும் கலைஞர்களுக்காக உயிரைக் கொடுத்து போராடினான் தியோ.
தியோ ஒருநாள் வின்சென்ட்டைப் பார்க்க வந்தான். கிறிஸ்டினுடன் தனக்கு ஏற்பட்டிருக்கும் புதிய உறவை தன் தம்பியிடம் மனம் திறந்து கூறினான் வின்சென்ட்: “சொந்தக் கால்ல என்னைக்கு என்னால நிற்க முடியுதோ, அன்னைக்கு நான் இவளைத் திருமணம் செஞ்சுக்குவேன். அதுவரைக்கும் இருக்குறதை இவளுக்கும் பங்குபோட்டு கொடுத்துட்டு வாழ வேண்டியதுதான். இவளை ஒரு வைப்பாட்டியா மட்டும் வச்சுக்க எனக்கு என்னைக்குமே விருப்பமில்ல.”
பேசிக்கொண்டிருந்த தியோ கேட்டான்: “ஆயில் பெயிண்டிங் வரைய ஆரம்பிக்கலாமே! எதுக்காக இன்னும் அதைப் பண்ணாம இருக்கே?”
“நான் வரையிறது சரியா இருக்கா இல்லையான்னு எனக்கே இன்னும் சரியா புரிபடல. மவ்வும், தெர்ஸ்டீக்கும் சொல்றாங்க நான் வரையிறது...”
“ஆனா, வெய்ஸன்ப்ரூக் உன்னைப் பத்தி நல்ல அபிப்பிராயம் சொன்னாரே! இங்க பாரு... நீதான் உன்னைப் பத்தி முடிவெடுக்கணும். நீ என்ன நினைக்கிறியோ அதை ஆயில் பெயிண்டிங்க்ல காண்பிக்கணும்னு நினைச்சா உடனே அதுல இறங்கிடு. தேவையில்லாம யோசிச்சு யோசிச்சு நேரத்தை வீணாக்காதே.”
“ஆனா... தியோ... அதுக்கான செலவுக்கு நான் என்ன பண்றது? பெயிண்ட் வாங்குறதுக்கே எவ்வளவு செலவாகும் தெரியுமா?”
“நாளைக்கு காலையில பத்துமணிக்கு ஹோட்டலுக்கு வா. நீ வேகமா செயல்பட ஆரம்பிச்சா எனக்கும் போட்ட முதலீடை சீக்கிரம் எடுத்த மாதிரி இருக்கும்.”