வான்கா - Page 44
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“சின்ன பிள்ளையா இருக்குறப்போ...”
“அப்படின்னா எனக்கு மாடலா இருக்கியா? உனக்கு அதிகமா ஒண்ணும் என்னால காசு தர முடியாது. ரெண்டு ஃப்ராங்க் தர்றேன். என்ன இருந்தாலும், துணி துவைக்கிறதைவிட இது மேல்தானே!”
“அப்படி மாடலா இருக்கிறது எனக்கும் பிடிச்சிருக்கு”- கிறிஸ்டின் சொன்னாள்: “நான் என் பையனையும் அழைச்சிட்டு வர்றேன். அவனையும் ஓவியமா வரை. நீ ஒண்ணும் காசு தரவேண்டாம். அம்மாவையும் ஒருநாள் கூட்டிட்டு வர்றேன். அம்மாவுக்கும் ரெண்டு காசு கிடைச்ச மாதிரி இருக்கும்.”
கிறிஸ்டினின் சிறிய அறையின் தரை, மரத்தால் செய்யப்பட்டிருந்தது. சுவர் சாம்பல் நிறத்தில் இருந்தது. தரையில் சாயம்போன சிவப்பு விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. அறையின் நடுவில் ஒரு கட்டில் இருந்தது. மொத்தத்தில் ஒரு வேலைக்குப் போகும் பெண்ணின் அறை எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருந்தது.
மறுநாள் காலையில் வின்சென்ட் படுக்கையை விட்டு எழுந்தான். தன்னைச் சுற்றிலும் பார்த்தான். அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில் தன்னுடன் படுக்கையில் சேர்ந்து படுத்திருந்த கிறிஸ்டினைப் பார்த்தான். இதுவரை தான் அனுபவித்த தனிமையுணர்வு எங்கோ மறைந்து போனதுபோல் அவனுக்குப் பட்டது. ஆத்மாவை இறுக்கமாக்கியிருந்த சங்கிலிகள் தகர்ந்து போய்விட்டதை அவனால் உணர முடிந்தது. அவனின் மனதில் இனம் புரியாத ஒரு அமைதி நிலவிவிட்டிருந்தது.
¤ ¤ ¤
அன்புள்ள வான்கா,
நான் நாளை ஒரு மாடலை உன் ஸ்டுடியோவிற்கு அழைத்துக் கொண்டு வருகிறேன். நாம் இருவரும் ஒரே நேரத்தில் அங்கு அமர்ந்து ஓவியங்கள் வரைவோம்.
தெபோக்
மறுநாள் தெபோக் ஒரு பேரழகுப் பெண்ணுடன் வின்சென்ட்டின் ஸ்டுடியோவிற்கு வந்தான். அவளைப் போல ஒரு மாடலை தன்னால் பணம் கொடுத்து வாடகைக்குக் கொண்டு வர முடியாது என்பதை நன்குணர்ந்த வின்சென்ட், இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தான். இரண்டு பேரும் அவளைப் பல்வேறு கோணங்களில் ஓவியமாக தீட்டினார்கள். இடையில் தெபோக் கொண்டு வந்திருந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு வின்சென்ட் சொன்னான்: “நீங்க வரைஞ்ச ஓவியத்தை நான் கொஞ்சம் பார்க்கலாமா?”
தெபோக் அந்த இளம் பெண்ணின் முகத்தை அழகாக வரைந்திருந்தான். ஆனால், உடலமைப்பில் அவளின் தனித்துவம் அந்தப் படத்தில் சரியாகத் தெரியவில்லை. வழக்கமாக வரையும் ஏதோ ஒரு உடலைப்போல அது இருந்தது. அவ்வளவுதான்.
“டேய்...”- தெபோக் வின்சென்ட் வரைந்த ஓவியத்தை சற்று உற்றுப் பார்த்துவிட்டு கேட்டான்: “இவளோட முகத்துக்கு பதிலா நீ என்னடா வரைஞ்சு வச்சிருக்கே? இதுதான் நீ சொன்ன உணர்ச்சிகளின் வெளிப்பாடா?”
“நாம என்ன இப்போ முகத்தையா வரைய உட்கார்ந்திருக்கோம்! உடலமைப்பைத்தானே வரைய வந்திருக்கோம்!”- வின்சென்ட் பதில் கூறினான்.
“முகம் உடலோட பாகம் இல்லைன்னு வாழ்க்கையிலேயே இப்பத்தான் முதல் தடவையா நான் கேள்விப்படுறேன்”- தெபோக் சொன்னான்.
“நீங்க வரைஞ்சிருக்குற வயிறைப் பாருங்க”- வின்சென்ட் சொன்னான்.
“ஏன்... அதுல என்ன தப்பு இருக்கு?”
“சூடான காற்றை நிரப்பியிருக்கிற மாதிரி இருக்கு. ஒரு அங்குலம் குடலைக்கூட அங்கே காணோம்.”
“அதை ஏன் நான் வரையணும்? அப்படி ஒண்ணும் குடல் வெளியே தெரியிற மாதிரி அவள்கிட்ட நான் பார்க்கவே இல்லியே”
இவர்களின் பேச்சு பற்றி ஒரு சிறிதும் கவலையே படாமல் அந்த பெண் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். எல்லா கலைஞர்களுமே அரைப் பைத்தியங்கள்தாம் என்பது அவளின் எண்ணம்.
வின்சென்ட் இரண்டு ஓவியங்களையும் அடுத்தடுத்து வைத்துக்கொண்டு தெபோக்கிடம் சொன்னான்: “இங்க பாருங்க... நான் வயிறை எப்படி வரைஞ்சிருக்கேன்றதை. நான் வரைஞ்ச வயிறு முழுக்க குடல்கள்தாம். நல்லா உற்றுப்பார்த்தா,வளைந்த குடல் வழியே உணவுப் பொருட்கள் கடந்து போவதைக்கூட நம்மால உணர முடியும்.”
“அதுக்கும் ஓவியத்திற்கும் என்ன சம்பந்தம்?”- தெபோக் கோட்டான்: “நாம ஒண்ணும் குடலைப் பத்தி பெரிசா ஆராய்ச்சி பண்ற மனிதர்கள் இல்லை. என்னோட ஓவியத்தைப் பார்க்கிறவங்க மரங்களுக்கிடையே தெரியிற பனிப் படலத்தையும், மேகங்களுக்குப் பின்னால மறைஞ்சுக்கிட்டு இருக்குற சூரியனையும் பார்த்து ரசிக்கணும்ன்றதுதான் என்னோட எண்ணம். குடலை அவங்க பார்க்கணும்ன்ற எண்ணமெல்லாம் என்கிட்ட கிடையாது.”
¤ ¤ ¤
மவ் மிகவும் பொறுமையுடன்- அதே நேரத்தில் மிகுந்த அக்கறையுடன் ஓவியக்கலை பற்றிய பல விஷயங்களையும் வின்சென்ட்டிற்குச் சொல்லிக் கொடுத்தான். எல்லா நாட்களிலும் மாலை நேரங்களில் வின்சென்ட் மவ்வின் ஸ்டுடியோவிற்கு வந்துவிடுவான். சில நேரங்களில் தான் வாட்டர் கலர் கொண்டு வரைந்த படங்கள் நினைத்த அளவிற்கு நன்றாக வராமல் போய்விட்டால், மிகவும் வருத்தப்படுவான் வின்சென்ட். ஆனால், மவ் சிரித்தவாறே ஏதாவது சொல்லி அவனின் விரக்தியடைந்து போயிருக்கும் மனதை அடுத்த நிமிடமே மாற்றி விடுவான்.
“இப்போ நீ வரைஞ்சது சரியா இல்லன்றது உண்மைதான். இப்போ வரையிறது சரின்னு தோண்றது, சில வருடங்கள் கழிச்சு நல்லா இல்லைன்றது மாதிரி தோணலாம். இப்போ கொஞ்சம் சிரமப்பட்டா, எதிர்காலத்துல நீ வரையிறது ஒவ்வொண்ணும் பிரமாதம்னு எல்லாரும் சொல்ற மாதிரி இருக்கும்.”
“ஆனா, படம் வரையிறப்பவே பணம் சம்பாதிக்கவும் செய்யணும்னா என்ன செய்யலாம்?”
“வின்சென்ட், நான் சொல்றதை நம்பு. ஒரு கலைஞன் தான் அடைய வேண்டிய இடத்தை மிகவும் சீக்கிரமாவே போய் அடைஞ்சான்னு வச்சுக்கோ, அவனோட கலை அதே மாதிரி சீக்கிரமே அழிஞ்சிடும். தற்காலிக வசதிக்காகவும்- புகழுக்காகவும் முயற்சி பண்றவனோட கலை, தற்காலிகமா மட்டுமே அவன்கிட்ட இருக்கும். உண்மையிலேயே ஒரு கலைஞனுக்கு அவசியம் வேண்டியது என்ன தெரியுமா? உண்மை, நேர்மை, மனசாட்சிக்கு விரோதமில்லாம நடத்தல், நாலு போராட கை தட்டலையும், பாராட்டையும் பெறணும்ன்றதுக்காக சாலையில் போற கண்ட புழு, பூச்சி பின்னாடி எல்லாம் ஓடாம, ஒழுங்கா கத்துக்க வேண்டிய விஷயங்களைக் கத்து உன்னோட கலை பற்றிய அறிவை வளர்த்துக்கிறதுக்கு வழியைப் பாரு.”
“நான் நேர்மையாவும், உண்மையாவும்தான் இருக்கேன். வாழ்க்கையில நாம் சந்திக்கிற யதார்த்தத்தை கலை வடிவமா கொண்டு வரத்தான் முயற்சிக்கிறேன். அதே நேரத்துல, வாழ்க்கையையும் வாழ வேண்டி இருக்கே!... நான் கொஞ்சம் வரைஞ்சு வச்சிருக்கேன். ஒரு வேளை தெர்ஸ்டீக்கிடம் அவற்றைக் காண்பிச்சா...”
வின்சென்ட் வரைந்த வாட்டர் கலர் ஓவியங்களை மவ் பார்த்தான். அடுத்த நிமிடம்- எல்லாவற்றையும் கிழித்து காற்றில் எறிந்தான். தொடர்ந்து சொன்னான்: “உனக்குன்னு ஒரு பாணி இருக்கே! அதுலயே வரைய நினை. அதுதான் உண்மையிலேயே பொருத்தமானது.